சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

21 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
............................................

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

08.08.2008 இரவு.9.49

5 comments:

ஃபஹீமாஜஹான் சொன்னது…

சிந்தாந்தன்

"விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி."

மிகச் சரியான வரிகள்.இது தான் அரசு நடத்திக் கொண்டிருக்கும் மனிதாபிமான யுத்தத்தின் உண்மை முகம்.

வலி நிரம்பிய வாழ்வைக் காவிக் கொண்டு வன்னி மக்கள் மர நிலழ்களில் விடப் பட்டிருக்கையில் யாழ்ப்பாணத்திலோ வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

வேறென்ன சொல்வது???

22 ஆகஸ்ட், 2008 அன்று AM 9:32
தமிழ்நதி சொன்னது…

"பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்"

இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை சித்தாந்தன்; அது புனைவில்லை ஆனபடியால். மனதை அசைக்கும் கவிதைகள்.

23 ஆகஸ்ட், 2008 அன்று PM 8:00
சித்தாந்தன் சொன்னது…

நட்புடன் தமிழ்நதி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
யுத்தத்தின் நெருக்கடி எம்மை எப்போதும் அலைக்களித்துக் காண்டே இருக்கிறது யுத்தத்திற்து அப்பால் ஒளிர்ந்து பொண்டிருக்கும் வாழ்வை தரிசிக்கும் கனவுகளுடன்தான வாழ முடிகின்றது.
உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுங்கள்

26 ஆகஸ்ட், 2008 அன்று PM 11:33
சித்தாந்தன் சொன்னது…

நன்றி பஹிமா
சிறைக்குள் அடைபட்டு வாழ்பவர்களின் குரலை எழுதியிருக்கிறேன்.குழந்தைகள் குதுகலங்களை இழந்து விட்டன .யுத்தம் வளர்ந்தவர்களை மட்டுமல்ல குழந்தைகளிலும் தன் விஷக்கால்களை ஊன்றிச் செல்கிறது.மிகக் கொடுமையான காலம் இது.

27 ஆகஸ்ட், 2008 அன்று PM 10:04
நிவேதா/Yalini சொன்னது…

கனத்த நீள் மௌனமொன்றை மட்டும் விட்டுச்செல்ல முடிகிறது உங்கள் கவிதையை வாசித்தபின்பு.

அந்தவிடத்தில் இல்லாமற்போன குற்றவுணர்வை மட்டும் எப்படிக் கடந்துபோவதென்று தெரிவதில்லை..

2 அக்டோபர், 2008 அன்று AM 10:37

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்