சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு

03 அக்டோபர், 2008

சித்தாந்தன்
.................................................................................................
அ.

தெருமரங்கள் சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன
வெளிறிப்போன வானத்தினடியிலிருந்து
நாங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
ஒளிரும் சொற்களால் குழந்தமையை நினைவு கூர்ந்தோம்
நட்பின் கதைகளை வரித்து வைத்தோம்
அவற்றில் அச்சமுற என்ன இருக்கிறது

ஆ.

வெளிவர முடியாப்பாதைகளில்
கனவுகள் குலைந்த விம்மலின் குரலை
பெருமூச்சுக்களால் எழுதவேண்டியிருக்கிறது
நம் சந்திப்புக்கான சந்தர்ப்பங்களை
தெருக்கள் அடைத்துள்ளன

வீட்டின் கதவையும் பூட்டி விட்டேன்
அதன் முன்னிருந்த குழந்தையின் பாதணிகளைக்கூட ஒளித்துவைத்துவிட்டேன்

இ.

இன்றைய மாலை சந்தித்தோம்
கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
மறுக்கப்பட்ட சொற்களின் வலியாய்
இதயத்தில் வெம்மை தகிப்பதாய்ச் சொன்னேன்
நீ பேசமுடியா ஒரு நூறு சொற்களை
என்முன் பரத்தினாய்
எல்லாம் எனது சொற்களாகவுமிருந்தன



சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித் தாண்டப் போகிறேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை
படபடப்புடன் விழிக்கும் மனைவியை அணைக்கிறேன்
ஓலங்கள் பின் தொடரதெருவைக் கடக்கும் வாகனத்தின்
நிறங்குறித்து அச்சமில்லை
அதில் திரிபவர்கள் பற்றிய பயமே நிறைந்திருக்கிறது

உ.

துயில் உரிக்கப்பட்ட எனது கண்களில் வழிவது பயமா
ஆற்றாமையின் வலியா
கையாலாகாத்தனத்தின் கண்ணீரா
புரியாமை என்னைச் சிலுவையில் அறைந்தருக்கிறது
காற்றில் பரவும் செய்திகள்
உருச்சிதைக்கப்பட்டகழுத்து வெட்டப்பட்ட மரணங்கள் பற்றியன
தாய்மையின் கண்ணீரின் வலியுணராதவர்கள்
மரணங்களை நிகழ்த்துகிறார்கள்
மரணத்தின் குறிப்பேடுகளுள் ஓலமாய் கசிகிறது குருதி
எத்தனை தடவைகள்தான்
இறந்திறந்து வாழ்வது

ஊ.

மாலைகள் ஏன் இரவுகளாகின்றன
சந்தடியில்லாத் தெருவின்தனித்த பயணியாகத் திரும்புகிறேன்
பேய்விழி மனிதர்களின் பார்வைகளுக்கு
என் முகத்தை அப்பாவித்தனமாக்குகிறேன்
முதுகை வளைத்து முதிர்ந்த பாவனை செய்கிறேன்
இடையில் வாகனங்கள் ஏதும்வரவேண்டாமென கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
புறப்படும் போது மனைவியிடம் சொன்னேன்
என் பயணத்தையோ வீடு திரும்புதலையோ
இப்போது தீர்மானிப்பது நானில்லை என

எ.

காத்திருப்பின் கணங்கள் நீண்டு
பாதங்களுக்கிடையில் நீரோடைகளாகின்றன
மறுக்கப்பட்ட உணவுப்பண்டங்களுக்காக
பிணத்தில் மொய்க்கும் ஈக்களாக மனிதர்கள்

கால்கள் கடுக்கின்றனசோர்வுற்றுத் திரும்பிவிடலாம்
பின் பசித்த வயிறுகளை எதைக் கொண்டு நிரப்புவது
குழந்தையின் குழல் மொழியை எப்படிக் கேட்பது
சற்றும் இளைப்பாற விடாமல் துரத்துகின்றன பசித்த வயிறுகள்
உயிரை தின்பவனிடம் உணவுக்காக மண்டியிடும் வேதனை

ஏ.

உன் தோள் மீறிய மகன் குறித்து நீயும்
இன்னும் தவளத்தொடங்காதகுழந்தை பற்றி நானும் கவலையுறுகிறோம்
காலம்ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
சுவாசிப்பை மறுதலிக்கிறது
கனவுகளை நாற வைக்கிறது
ஒரு கனியைஎம் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச்சிறகுகளை
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்

3 comments:

ஃபஹீமாஜஹான் சொன்னது…

வடக்கின் இன்றைய வாழ்வியல் அவலத்தைக் கவிதைகளினூடாக வெளிப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கிறீர்கள். எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையையும் ஒளியையும் குழந்தைகளுக்கு வழங்க முடியாத சூழலில்

"ஒரு கனியைஎம் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச்சிறகுகளை
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்"

காடுகள் பறவைகளை இழந்து கொண்டிருக்கையில் நம்புவோம் அதையாவது

15 அக்டோபர், 2008 அன்று AM 9:53
சித்தாந்தன் சொன்னது…

பஹீமா

நன்றி

மிகுந்த நெருக்கடிமிக்க காலத்தில் எழுதிய கவிதை.
வாழ்வு குறித்த அச்சங்களும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்களும் மிகுந்த வேதனையளிக்கின்றன.நண்பர்களுடன் உரையாடிய விடயங்கள்தான் இந்தக் கவிதை

17 அக்டோபர், 2008 அன்று PM 11:26
சித்தாந்தன் சொன்னது…

பஹீமா

நன்றி

மிகுந்த நெருக்கடிமிக்க காலத்தில் எழுதிய கவிதை.
வாழ்வு குறித்த அச்சங்களும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய எண்ணங்களும் மிகுந்த வேதனையளிக்கின்றன.நண்பர்களுடன் உரையாடிய விடயங்கள்தான் இந்தக் கவிதை

17 அக்டோபர், 2008 அன்று PM 11:27

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்