
..............................................................................
கனவாய் உதிர்ந்த இரவு
யாரையுமே வருடாத உன் முகத்தை
அந்த இரவுகளுக்குப் பின் காணமுடிந்ததில்லை
நான் உனக்காகக் காத்திருந்தேன்;
நினைவுச் சுவர்ப்பாளங்களில் கண்ணீர் முகத்தோடு
துயரின் குறியீடாய் உறைந்து போயினாய்
எந்தப் பகலும் உன்னுடையதாயில்லை
மினுங்கும் கரிய பிசாசுகளைத் தோளில்
சுமந்து திரியும் மனிதர்களிடம் தோற்றிருந்தாய்
எந்த இரவும் உன்னுடையதாயில்லை
கனவுகள் குலைந்த நாளில் இரவுகளையும் பறிகொடுத்தாய்
நீ பேசாதிருந்த இரவு
கண்கள் முழுவதும் முட்கள்
உனது பார்வைகளிலிருந்து விலக்கப்படுவதை உணர்ந்தேன்
காற்றோ சருகுகளுக்கிடையில் செத்துக்கிடந்தது
ஒரு நாயின் ஊளையை இன்னொரு நாய் தின்று தொலைத்தது
உனது ஒரு சொல்லும் வெளிச்சம் பாய்ச்சுவதாயில்லை
மௌன இடிபாடுகளுக்குள் வார்த்தைகளில் புதர்மண்டிற்று
நான் தூங்காமலே விடிந்த இரவில்
கனவு கண்டு சிரித்தபடியிருந்தாய்
நான் வெளியேறிய இரவு
இதயத்தின் நாளங்கள் அறுந்துபோயின
கடலின் அலைகளில் உருவம் உடைந்த எனது முகம்
அலைந்தபடியிருந்தது
நீ நினைத்தேயிருக்கமுடியாத் தூரத்தில்
நான் பயணித்தபடியிருந்தேன்
முடிவில் நான் கண்டது காடுகளை
இருளில் முகம் தெரியாதவர்களின் வார்த்தைகளைக் கேட்டேன்
நள்ளிரவின் திகிலூட்டும் ஒலிகளுக்கிடையில்
கனவின் ஈரித்த நிறங்களில் ஒளிரும் நாய்களின் கண்கள் கண்டு
பலமுறையும் திடுக்குற்றுத் துயருற்றேன்
இரவின் கால்களுக்கிடையில் அன்று உடைந்து கிடந்த பகலின் ஒளித்துண்டுகளை அதன் பிறகு
ஒரு போதுமே நான் கண்டதில்லை
2 comments:
உங்கள் கவிதைகள் வாசிக்கையில்.. மனதை நெகிழச்செய்கிற ஏதோ ஒன்றிருப்பதாய் உணர்கிறேன்.. எனக்கு நெருக்கமாய்.. மிக நெருக்கமாய்..
23 அக்டோபர், 2008 அன்று PM 1:45நன்றி அகிலன்
30 ஜனவரி, 2009 அன்று PM 10:09தொடர்ந்தும் கருத்துக்களை எழுதுங்கள்
கருத்துரையிடுக