சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சர்ப்பவெளிப் புணர்ச்சி

19 டிசம்பர், 2009

.....................................................
சித்தாந்தன்

இந்தப் பாம்புகள் புணர்கின்றன
கலவிக்கிறக்கத்தில்
ஓன்றையொன்று கடித்துப்புரள்கின்றன

தாழைமரங்களின் மணம்
பொழுதை கலவியின் ஆழத்துள் புதைக்கிறது
காலை மாலை இரவு சாமமென
பொழுதுகளை மறந்து
வீதியில் கடப்போர்
மறைவிற்காக ஒதுங்குவோர் எவர் கண்களிலும்
படும்படியாகப் புணர்கின்றன

சிறுவர்கள் கூடிக் கல்லெறிகிறார்கள்
வளர்ந்தவர்கள்
இது கடவுளின் புணர்ச்சியெனக் கண்டிக்கிறார்கள்
கடவுளர்களான பாம்புகள் புணர்கின்றன
தாழைமரங்கள் உணர்சிக்கலகப்பித்தேறி
வானில் எழுந்து பறக்கின்றன
நிர்வாண வெளியில் பாலிமை பெருகிக்
கடலாகக் கடலாகப் பாம்புகள் புணர்கின்றன

ஒரு துளி உயிரணுவிலிருந்து வளர்கிறது
பாம்புகளின் கோயில்
மூலஸ்தான விக்கிரங்களான பாம்புகள் புணர்கின்றன
கலவி மயக்கம் மிதக்க
களிப்பிலூறிய கண்களுடன்
பக்தர்கள் வணங்குகிறார்கள்
( நன்றி- கலைமுகம் )

பசியோடிருப்பவனின் அழைப்பு

06 டிசம்பர், 2009

சித்தாந்தன்
.........................................................
மலைகளைப் பகிர்ந்துண்ண
அழைத்தாய்
ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்
கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது
மீண்டும் மீண்டும் அழைத்தாய்
காற்று மர இலைகளில் ஒளித்துக்கிடந்தது
இரவு பனித்துளியாய்
புல்நுனிகளில் தேங்கி வழிந்தது
முதலில்
மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்
பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை
இசைத்துக் காட்டினாய்
மழைப் பொழிவுகளுக்குள்
மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்
மலைகள் தீர்ந்து போகும் ஒருநாள் வருமெனில்
அப்போது
மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்
நம்மையே பகிர்ந்துண்டு
பசியாறலாம் என்றாய்

(மறுபாதி-இதழ்-2,ஐப்பசி- மார்கழி-2009)

புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்

12 நவம்பர், 2009


சித்தாந்தன்
....................................................
வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளிலிருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்பவேண்டாம்

வாழ்வு குறித்த மெல்லிய கவிதையில்
புனைவுக்காலக் கதையாடல்கள்
வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன்
எந்த முகத்தின் வசீகரத்திலும்
உண்மை முகம் இல்லை என்பதை

புனைவுக்காலச் சொற்கள் முழுவதிலும்
எனது கண்ணீரும் குருதியும்

சாவின் இழைகளைப் பின்னியபடி
என் மீதான நிறங்களை
உரித்தெடுத்த நீங்களே
ஓரிரவில் என் நிர்வாணத்திற்காக
கண்ணீர் பெருக்கினீர்கள்

சூரியனின் ஒளியாய்
குருதி வழிந்தபோதும்
கனவுகளில் தேள்கள் குற்றி
வலியெடுத்த போதும்
கருகாத உங்கள் புன்னகையை
மலக் குழியினுள்ளோ
நாறும் கழிவோடையினுள்ளோ
கொட்டித் தீருங்கள்

நான் நிர்வாணமாக மட்டும் இருக்கிறேன்
உங்களின் புனைவுக் காலத்தில்

என் நிர்வாணம்
உங்களது நிர்வாணத்தின்
அடியிலிருந்தே துளிர்த்தது
நான் நிர்வாணமாக மட்டுமே இருக்கிறேன்

தெருநாயின் வீணீர் இழுபடும் மனித முகத்தின் சூனியம்

01 நவம்பர், 2009

சித்தாந்தன்
........................................................
சீழ் வடிந்த காயத்தின் உலரா முகத்தோடு
வீரிட்ட குழந்தையின் அழுகையில்
ஈக்கள் மொய்த்தன

ஏழு கடல்களையும் புரட்டியெடுத்து
இமைகளுக்குள் பொத்தி
தாகம் தணியாத உவர் நீரை
உள்ளிழுத்துப் பொருமிய
உதடுகளின் தெறிப்பில்
கண்களின் ஒளியுதிர்ந்து போனதெனக்கு

நீண்ட கால்களையும்
அதனது பருத்த தொடைகளையும்
பிடுங்கி எறிந்திடக்கிடந்த
பெண்ணின் மார்பிடுக்கின் வழியே
தாய்மையின் குருதி வழிந்தோடியது

நூற்றுக்கணக்கான ஜீவ பிரசவிப்பின்
பின்னான இரவொன்றில்
மூடக்கிழவியொருத்தி பிணமானாள்

துயில் தேவதைகளின் கரிய துகில்களினால்
மறைப்புண்டு
புழுக்கள் கெம்பி நெளிய
அவளது மரணம் நிகழ்ந்தேறியது

குழந்தைகளின் பாற்பற்களில் விஷமேற்றி
நடுநிசிகளில் அலையவிட்டு
தாலாட்டுப் பாடல்களைப் பாடிய
கொந்தளிக்கும் அலையில்
கடல் நடுங்கிச் செத்தது
(நட்சத்திரங்களும் பூக்களும் பிந்தித்தான் ஜனித்தன)

கருநீல நிறத்தையுருக்கி வளையமாக்கி
ஒளியூட்டி விழிகளுக்குள் சொருகிய கடவுள்
இருட்டில் அதன் ஓளியைப் பறித்தெடுத்து
தன் கபாலங்களுக்குள் ஊற்றி வைத்தான்

நிழல்களின் அசைவுகளில்
பச்சைக் குழந்தைகள் கோடுகள் வரைய
அவை பாம்புகளாகி அலைந்தன புவிவெளியில்

நரகமோ சுவர்க்கமோ
என்ற புரியாச் சொற்களின் இடைவெளிகளுக்கிடையில்
ஆதிக்கிழவி அழுத
ஏராளமான வார்தைகளின் ஈரம்
குருதிப் பிசுபிசுப்போடிருந்தது
கடவுளின் பெயரால்
சிதைவுகளிலிருந்து மீண்ட மனிதன்
அவற்றின் வலியிலிருந்து மீளாதவனாய்
கடவுளைச் சபித்தான்

சாபங்களின்கடவுளோ
வனதேவதைகளின்
இறுகிய மார்புக் குவடுகளுக்குள்
கண்களை மூடிக்கிடந்தான்

மனிதர்களின் குரல்
நிராதரவாய் காற்று வெளியில்
அலைகிறது அர்த்தமற்று

கடவுளரின் நகரங்களில் வாழுதல்

10 அக்டோபர், 2009

சித்தாந்தன்
........................................................
எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்

எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு

மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களைப் பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடைகளைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்

அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்துபோய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதறுகின்றன

கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகிறோம்
பகல்களை ஓட்டுகிறோம்

கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்

ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

நன்றி- எதுவரை, இதழ்-1(ஏப்பிரல்-மே)

வீரனாக்கப்பட்டவனின் மரணம்

24 செப்டம்பர், 2009


சித்தாந்தன்
.................................................................
துப்பாக்கிகளின் மீது நம்பிக்கையில்லாத உன்னை
யுத்தத்திற்கு இழுத்துச் சென்றார்கள்

உன் கழுத்தில் தொங்கிய சிலுவையை அறுத்தெறிந்துவிட்டு
சயனைட் குப்பியைத் தொங்கவிட்டனர்
உன்னை அவசர அவசரமாக வீரனாக்கியபடி
அவர்கள் கோழைகளாகிக் கொண்டிருந்தனர்

உன் மனைவியின் முகத்தில்
சூரியன் குருதிச் சகதியில் மூழ்கிக்கிடந்தது
நம்பிக்கை தரும் எந்தச் சொற்களையும்
கடைசியிரவில் நீ அவளுடன் பரிமாறியிருக்கவில்லை
அதற்குள்
உன்னை இழுத்துச் சென்றுவிட்டனர்

யுத்தத்தின் தீவிரம் துரத்தத் துரத்த
அவர்கள் வீரர்களைத் தயாரித்துக்கொண்டேயிருந்தார்கள்
சவப்பொட்டிகளும்
புதைக்குமிடாங்களும் அருகிப்போயின

போரின் அதிர்வுகளால் சிதறடிக்கப்பட்டுக்கொண்டிருந்த
நாட்களின் ஒரு பொழுதில்
பொலித்தின் உறையால் முடிச்சிடப்பட்ட
உன் பிணத்தை
உன் மனைவியிடம் ஒப்படைத்தார்கள்

இறுதிப் பாடல் இசைக்கப்படாமலும்
மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படாமலும்
உன்னைப் புதைத்த மண்மேட்டிலிருந்து
கதறியழுதபடியிருந்த அவளின் மடியில்
கண்ணீரில் நனைந்துகொண்டிருந்தது குழந்தை

சிதைவுண்டுபோன வாழ்வின்
மீளவியலாத் துயரம் படிந்த நிலத்தில்
குழந்தைகளையும் வீரர்களாக்கிக் கொன்ற பின்
மகாவீரர்கள்
துப்பாக்கிகளை கடற்கரை மணலில் எறிந்துவிட்டு
சரணடைந்தனர்
உனது மரணமோ
அவர்களின் கோழை முகத்தின் மேல்
காறியுமிழ்ந்தபடியிருக்கிறது

#இறுதிப் போருக்காக புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பலியிடப்பட்ட நண்பன் அருள்தாஸின் நினைவாக.

கதை வியாபாரிகளின் நகரம்

23 செப்டம்பர், 2009

சித்தாந்தன்
.......................................................
உடலெல்லாம் பூசப்பட்ட மாய நறுமணப்பொடிகள்
நாறத்தொடங்கிய பின்
எந்தக் கூச்சமோ அருவருப்போவின்றி
கதைகள் வாசிக்கப்படுகின்றன தெருக்களில்

கதைகளில் உறங்குபவனின் தேகத்தில்
அச்சிடப்பட்டிருக்கின்றன எண்ணற்ற கதைகள்
உடல் பொசியும் மணத்துடன்
அலையும் கதைகளின் வியாபாரி
“கடனில்லை” என்ற அட்டையைக்
தூக்கிக் கொண்டு திரிகின்றான்

வாசிக்கப்படாத கதைகளுக்காய்
வாசித்தவற்றை மறந்துபோன மனிதர்கள்
மிதக்கும் ஓரிரு உரையாடல்களையும்
கதையென நம்பிக் கவ்வித் தின்கிறார்கள்

கணம் பிந்தி வந்த புதிய வியாபாரி
கதைகளை அவிழ்க்கிறான்
முண்டியடிக்கும் மனிதர்களிடையே
தன்குறியை உயர்திக் காட்டுகின்றான்

ஊனமும் சிதழும் வழியப் புழுக்கள் நெளியும்
அவன் குறி வழி பெருகும் கதைகளை
அவசர அவசரமாக் அள்ளிக் கொண்டு
கலைகின்றனர் மனிதர்

மேலும் ஒருவன் கதைகளைக் கூவி விற்றபடி
தெருவில் வருகின்றான்

விடுபட்டுப்போன காலத்தின் வார்த்தைகள்

12 செப்டம்பர், 2009

சித்தாந்தன்
............................................................
1
சட்டம் உடைந்த கண்ணாடியை
காவித்திரிகிறேன்
பிரதிபலிப்புக்களுக்குள்
மூழ்கடிக்கப்பட்டுவிடுகிறது அழகிய தருணங்கள்

ஏதிரெதிர்முகங்களிடையே
காற்று ஒரு பயணியைப் போலலைகிறது
2
வார்த்தைகளுக்கு வர்ணமிட்டு
வரையப்பட்ட ஓவியப்புதிரை
வழிபடும் மனிதர்களிடை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
நொந்த மனதுக்கு
இரவின் சிறகைக் கட்டியபடியிருந்தாயா
அல்லது மாயக் கனவுகளின்
சிறகுகளைக் கத்தரித்தபடியிருந்தாயா
3
பாதைகளற்ற நிலம் எப்படியிருக்கிறது
மந்தைகள் வெறுந்தரை தின்னுகையில்
மேய்ப்பனின் மந்தை ஓட்டும் தடியில்
எந்தக் களிப்பிற்காக கொடி பறந்துகொண்டிருந்தது
4
கடலின் அலைகளில்
மனிதர்கள் புதைகையில்
வீறிட்டுக் கதறிய குழந்தை
உடைந்து சிதறிய நட்சத்திரத் துண்டுளை
என்ன செய்தது அலைகளில் வீசிற்றா
தன் கனவின் வெளியில்
எறிந்து விளையாடியதா
5
கேள்விகளுக்கேதும்
இடமில்லாத நிலத்தில் அடவிகளில்
மூண்ட பெரு நெருப்பை ஊதி வளர்த்தவர்கள்
எங்குள்ளார்கள் அறிய ஆவல்

கைவிடப்பட்ட நிலத்தில்
கற்களாய் எஞ்சியவர்களின் தீபங்கள்
எப்படி அணைந்து போயின
6
கடைசியில் செய்யப்பட்டதெல்லாம்
பசித்த வயிறுகள்
பால் வற்றிய முலைகள்
கதறல்
கண்ணீர்
மௌனம்
ஏமாற்றம்
எப்போதும் நீங்காத அடர்ந்த இருள்
7
உன் சிலுவை எங்கே
தவிர
அவரவர் சிலுவைகளும்
8
உயிர் சுமந்து இடந்தேடி அலையும் போதும்
எதையுணர்ந்தாய்
வெறுமைமீது கரைந்து கொண்டிருக்கும்
ஒளிவட்டம் சூடிய மனிதரின்
சொற்களில் தெறித்த வன்மத்தின் நெடியையா
9
எரியும் நிலத்தின்
கடைசிப் பசுமைத்துளிரும் கருகியபின்
எதை எடுத்து வந்தாய்
எதை விட்டு வந்தாய்
உயிர் காவிச் சலிப்புற்று
நடை தளர்ந்த
உன் மனைவிக்கும் மகவுக்கும்
என்ன சொன்னாயோ
10
காலத்தின் ஈரம்
வற்றிக் காய்ந்த பிறகு
நீ எதைத்தான் எழுத முடியும்
(தானா. விஷ்ணுவுக்கு)

தெய்வங்கள் எறிந்த கத்திகள்

22 ஆகஸ்ட், 2009

சித்தாந்தன்
.......................................................................................

மிகத்தாமதமானது உனதழைப்பு
கண்ணாடிக் குவளைகள் சிதறியுடையவில்லை
சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களிலிருந்து
எமது விம்பங்கள் இறங்கி நடக்கவில்லை

நீர் வற்றிய நிலத்துப் பூஞ்செடியின்
அகால முகத்தல்
மழையின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது

வரிசையாச் செல்லும் எறும்புகளின்
உணர் முனைகளில்
புரியாத மொழியின் அரூப அசைவுகள்


எதன் பொருட்டு
உன் குரல் தாகத்தின் சுனைகளை மூடிவிட்டிருக்கிறது
உன் பிரார்த்தனைக் காலத்தில்
பெயரறியாத் தெய்வங்களும் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன
எம் படுக்கையிலிருந்தவாறே
வசிய மந்திரங்களை உச்சரிக்கின்றன

அதிதீகளாகவும்
அழையா விருந்தாளிகளாகவும் வரும் தெய்வங்களுக்கு
நீ படையலிட்டுப் பூஜிக்கும் நாட்களில்
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எமது புகைப்படத்தில் குத்தி நிற்கின்றன தெய்வங்கள் எறிந்த கத்திகள்

தெய்வங்களின்
புகைப்படங்களுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் புதையுண்டிருக்கிறது
எமது வாழ்வு பற்றிய இரண்டொரு சொற்களும்

உனதழைப்பு
தெய்வங்களை நோக்கி எனையீர்க்கும்
தந்திரமாய்க் கவிகிறது வீடெங்கும்

நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்

06 ஜூலை, 2009

...................................................................
சித்தாந்தன்

சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களின்
கனவுகளின் மீது
கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன

இவர்களின் சகோதரர்களை
அவர்கள் கொன்று புதைத்தபோதும்
இந்த நகரத்தின் மனிதர்கள்
மௌனமாகவே அழுதார்கள்

புதைக்கப்பட்ட மனிதர்களின் ஆன்மாக்கள்
தெருக்களில் அலையும் நாட்களில்
அவர்கள் “சுதந்திரம்” என எழுதப்பட்ட
பிரசுரங்களில் புன்னகை புரியும் தலைவர்களுக்கு
வாக்களித்துவிட்டு வீடு திரும்பினர்

இன்னும் அவர்கள்
இவர்களின் சகோதரர்களைக் கொன்று புதைக்கிறார்கள்
இவர்களால்
பதாதைகளை உயர்த்த முடியவில்லை
கதறியழ முடியவில்லை
மௌனங்களால் துயரை அழுது கரைக்கிறார்கள்

நகரத்தின் முகட்டில் பறந்தபடியிருக்கும்
சமாதானக் கொடியின் கீழ்
இவர்களின் சகோதரர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்
இவர்களின் நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்

நகரத்தின் தலைவர்கள்
சுவர்களில் எழுதியிருக்கும் பிரகடனங்களுக்குள்
மூடுண்டு கிடக்கின்றன
இவர்களின் சிரிப்புக்களும்
வசந்தம் பற்றிய கனவின் பசிய துளிரும்

இவர்களுக்கு
வீதிகளில்லை
பயணங்களுமில்லை

எப்போதும்
நகரத்தின் முகட்டில் காகங்கள் கூடிக் கரைகின்றன
வெள்ளை நிறம் பூசப்பட்ட வாகனங்களில்
பறக்கின்ற கொடிகளில்
அழகாக அச்சிடப்பட்டுள்ளன
குழந்தைகளின் முகங்கள்
பறவைகள்
மற்றும்
ஓன்றிணைந்திருக்கும் கைகள்
ஆயினும்
அவலமாய்க் கரையும் காகங்கள்
நகரத்தின் முகட்டில் காத்திருக்கின்றன

குழந்தையின் துண்டிக்கப்பட்ட கைவிரல்களாய்
விரிந்திருக்கும் நகரத்தினுள் வாழும்
சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களின்
நிர்வாணத்தின் மீது
கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன

அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

01 மே, 2009

சித்தாந்தன்
..........................................................................
மேசையின் கால்களுக்கிடையால்
கைகளைக்கோர்த்தபடி
வார்த்தைகளில் குரூரம் தெறிக்க
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நாங்கள் பார்த்தபடியே நின்றோம்


கிண்ணம் நிறைந்திருந்தது இரத்தம்
நீ சொன்னாய்
சூரியன் திசையற்று அலையும் நாள் இது என்று
நான் சொன்னேன்
உதடுகளை எரிக்கும் சிகரட்டின்
புகை நாறும்நாள் இது என்று


விடுதியின் முகடெங்கும் ஒட்டடைகள் தொங்கின
இரவு மதிலேறிக் குதித்து மதுக்கடையை அடைந்தோம்
அங்கும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நீயும் நானும்
மதுவை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தோம்
எங்களிடமிருந்து வார்த்தைகள் விடைபெறத்தொடங்கின
போதை விட்டத்தில் சூழலும் மின்விசிறியாய்
எம்மைச் சுழற்றியடித்தது


சிவப்புநிறமான மது
அவர்களின் இரத்தம் நிரம்பிய கிண்ணங்களை
ஞாபகமூட்டியது
நான் பிதற்றினேன்
இரத்தம் இரத்தம்
நீ மதுவை ஊற்றிக் கைகளைக் கழுவினாய்
தெருவில் தள்ளாடித்தள்ளாடி விடுதி திரும்பினோம்

ஏதும் பேசவில்லை
விடுதியின் நடுக்கூடத்திலிருந்து
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
நிழல்கள் ஒருவரையொருவர் தழுவிக்கிடக்க
வார்த்தைகளில் நிணமுருகி வழிந்தது

போதையின் உச்சத்தில் சூழன்ற நீ
வாந்தியெடுக்கத் தொடங்கினாய்
போதையின் நெடி மிக்க சொற்களை
உன் வாந்திச்சேற்றிலிருந்து நான் பொறுக்கினேன்
இப்போதும் நீ சொன்னாய
சூரியன் திசையற்று அலையும் நாள் இது என்று
என் உதடுகளில்புகைந்து
கொண்டிருந்தது சிகரெட்

உடைந்து கிடக்கும் சமாதான நகரத்தின் கதவுகள்

06 பிப்ரவரி, 2009


சித்தாந்தன்

......................................................................................
அ.


நிலத்தின் மீது படர்ந்து வருகிறது
மாமிசம் தின்னும் புகை
வாலறுந்த ஒற்றைக்குருவியாய் காடுகளில் அலைகிறது
சூரியன்

சனங்கள்
புராதன நகரங்களிலிருந்து வெளியேறிவிட்டார்கள்
புதர்மூடிய பாதைகளில் உக்கி உதிர்கின்றன
மனித என்புகள்
பதுங்கு குழிகளுக்குள் தேங்கிக்கிடக்கிறது
கை விடப்பட்ட வாழ்க்கை

கடவுள் கைவிட்டார்
அனுதாபிகள் கைவிட்டார்கள்
திரும்ப முடியாத் தொலைவில் புதைகிறது
ஆதிக்குடியின் பாடல்

நகரங்கள் வீழ்கின்றன
வயல்களில் உலர்கின்றன வியர்வைத்துளிகள்
நெல்மணிகளைக் கொத்தித் தின்னும் குருவிகளும்
வெளியேறிவிட்டன
காற்றில் வீழ்கிறது ஒரு இரத்தத்துளி
காலத்தின் மிக மோசமான குறியீடாய்

வாழ்வு பற்றியதான கனவுகளை உடைத்துக் கொண்டு
கூடாரங்களில் தொங்குகின்றன ஒளியிழந்த லாம்புகள்
பசித்த வயிறுகளைத் துயரம் நிறைக்கிறது
இன்னும் கேட்கிறது வெறிகொண்ட வெற்றிக் கூச்சல்

அவர்கள் நகரங்களைக் கைப்பற்றினார்கள்
சனங்கள் அற்ற நகரங்களை
தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள்
பிணங்களின் மேல் குந்தியிருந்து கொண்டு
குடிசைச் சுவர்களில் வரையப்பட்டிருந்த குழந்தைகளின்
ஓவியங்களில் வெற்றிகளை எழுதினார்கள்

ஆ.


விருட்சங்கள் பெயர்ந்தலைகின்றன தெருக்களில்
சாவுகாலத்தின் கடல்
சனங்களின் முற்றங்களில் பெருகியோடுகின்றது

அனுதாபிகளின் கண்டனங்களுக்கிடையிலும்
கருனை மிதக்கும் சொற்களுக்கிடயிலும்
எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன

கபாலங்கள் பிளந்து இறந்த குழந்தைகளின்
கனவுகளை காகங்கள் கொத்தித் தின்னுகின்றன

நகரங்களை இழந்த மனிதர்களின் வாழ்வு
காற்றில் சிதறுகிறது வெறும் செய்தியாக
இரத்தத்தால் நிரம்பிய பதுங்கு குழிகளுக்குள் பகல்வானம்
முடங்கிக்கிடக்கிறது

அவர்கள் நகரங்களை கைப்பற்றுகிறார்கள்
சனங்களற்ற நகரங்களை
மிருகங்கள் வெருண்டோடிய காடுகளை
வாழ்வு தொலைந்து போன நிலங்களை

சூரியன் காடுகளில் அலைகிறது

இ.


உடைந்து சிதறிய விருந்தினர் விடுதியின்
விசாலமான மண்டபத்தில்
நெருங்கிக்கிடக்கின்றன
சொல்ஹைமின் உணவுக் கோப்பையும்
ஆகாசியின் சூப் கிண்ணமும்
இன்னும்
சமாதான காலங்களின் வரைபடங்களில்
அவர்கள் சிரித்துக்கொண்டேயிருக்கிறார்கள்

மலர்ந்த புன்னகையின் அடியில்
கத்தியாய் மின்னுகின்றன சமாதானகாலச் சொற்கள்
சனங்கள் வெளியேறிய நகரத்தில்
நாறிமணக்கின்ற
தொண்டு நிறுவனங்களின் கொடிகளின் கீழே
அவலமாய் காகங்கள் கரைகின்றன
அவர்கள் உறிஞ்சிய குளிர்பானக் குழாய்களை
எறும்புகள் காவிச்செல்கின்றன
காலியான மதுக்குவளைகளில் பாம்புகள்
அடைக்கலம் புகுந்திருக்கின்றன

நகரம் ஒற்றப்பனையாய்த் தனித்திருக்கிறது
வெறிச்சோடிய தெருக்களில்
ஊர் நீங்கிய மனிதர்களின் கால்தடங்கள்
அசைகின்றன
கைவிட்டு வந்த நிலங்களில்
காற்று இரைகிறது

ஈ.


மழை ஓயாத மழை
கூடாரங்களை இழுத்துச் செல்லும் மழை
சனங்களைத் துரத்தும் மழை

குளங்கள் நிரம்பி விட்டன
நெல் மணிகள் மிதக்கின்றன
வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் வீதிகளில்
அலக்கழிந்தபடி செல்கிறது ஒற்றைச் செருப்பு
புயலின் அசுரத்தாண்டவம் முறித்த மரங்களிலிருந்து
சிதறிக்கிடக்கின்றன காகக்கூடுகள்

மீதி வாழ்க்கையையையும் வெள்ளம் தின்கிறது
வானம் உடைந்து
சனங்களின் தலைகளில் வீழ்ந்திருக்கிறது
வெடித்துச்சிதறும் சன்னங்களையும்
எறிகணைகளையும்
மழை கொண்டுவருகிறது
கூடாரங்களின் கீழ் கனவுகளின்
ஆழ் வேர்களை இழந்து விட்டு
அகதிகளாயினர் சனங்கள்
மீளவும் அகதிகளாயினர்

உ.


நகரத்தை நோக்கி
மையங் கொண்டுள்ளது போர்
புயல் அள்ளிச் சென்ற கூடாரங்களை
சனங்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
விமானங்கள் துரத்துகின்றன
பதுங்கு குழிகளில் நிரவிப்பாய்கிறது வெள்ளம்

ஊ.


போர்
கனவுகளை உறிஞ்சும் போர்
போரின் தீரத்தில் எற்றுண்டுகிடக்கும் மனிதர்களை
காலம் மௌனமாகத் தாங்கிக்கொள்கிறது

கனவுகளை உறிஞ்சும் போர்
உடல் சிதறிப்பலியான குழந்தைகளை
தின்னுகின்றது

நிலங்களுக்குள் கடலாய் நுழைந்த போர்
ஊர்களைப் பருகுகிறது

எ.


நகரம் அதிர்கிறது
சமாதான நகரத்தின் கதவுகள்
உடைந்து கிடக்கின்றன
இறுதி யுத்தம் என்ற பிரகடனங்களுக்கிடையில்
நகரம் அதிர்கிறது
முற்றுகையிடப்பட்ட நகரத்தில் இருந்து
வெளியேறிய சனங்களின் கூடாரங்கள்
பெயர்ந்து கொண்டிருக்கின்றன

போர் தொடர்கிறது
கனவுகளை உறிஞ்சும் போர்
நிலங்களைத் தின்னும் போர்
சனங்களை விரட்டும் போர்
காடுகளில் அலைகிறது சூரியன்

ஏ.


கடைசியில் நகரம் வீழ்ந்து விட்டது
சமாதானத்தின் நெடுங்கதவுகள்
உடைந்து கிடக்கின்றன
ஊர்களைப் பறிகொடுத்த சனங்களை
விமானங்களும் எறிகணைகளும் துரத்துகின்றன

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்