சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

உடைந்து கிடக்கும் சமாதான நகரத்தின் கதவுகள்

06 பிப்ரவரி, 2009


சித்தாந்தன்

......................................................................................
அ.


நிலத்தின் மீது படர்ந்து வருகிறது
மாமிசம் தின்னும் புகை
வாலறுந்த ஒற்றைக்குருவியாய் காடுகளில் அலைகிறது
சூரியன்

சனங்கள்
புராதன நகரங்களிலிருந்து வெளியேறிவிட்டார்கள்
புதர்மூடிய பாதைகளில் உக்கி உதிர்கின்றன
மனித என்புகள்
பதுங்கு குழிகளுக்குள் தேங்கிக்கிடக்கிறது
கை விடப்பட்ட வாழ்க்கை

கடவுள் கைவிட்டார்
அனுதாபிகள் கைவிட்டார்கள்
திரும்ப முடியாத் தொலைவில் புதைகிறது
ஆதிக்குடியின் பாடல்

நகரங்கள் வீழ்கின்றன
வயல்களில் உலர்கின்றன வியர்வைத்துளிகள்
நெல்மணிகளைக் கொத்தித் தின்னும் குருவிகளும்
வெளியேறிவிட்டன
காற்றில் வீழ்கிறது ஒரு இரத்தத்துளி
காலத்தின் மிக மோசமான குறியீடாய்

வாழ்வு பற்றியதான கனவுகளை உடைத்துக் கொண்டு
கூடாரங்களில் தொங்குகின்றன ஒளியிழந்த லாம்புகள்
பசித்த வயிறுகளைத் துயரம் நிறைக்கிறது
இன்னும் கேட்கிறது வெறிகொண்ட வெற்றிக் கூச்சல்

அவர்கள் நகரங்களைக் கைப்பற்றினார்கள்
சனங்கள் அற்ற நகரங்களை
தங்கள் வெற்றியை கொண்டாடினார்கள்
பிணங்களின் மேல் குந்தியிருந்து கொண்டு
குடிசைச் சுவர்களில் வரையப்பட்டிருந்த குழந்தைகளின்
ஓவியங்களில் வெற்றிகளை எழுதினார்கள்

ஆ.


விருட்சங்கள் பெயர்ந்தலைகின்றன தெருக்களில்
சாவுகாலத்தின் கடல்
சனங்களின் முற்றங்களில் பெருகியோடுகின்றது

அனுதாபிகளின் கண்டனங்களுக்கிடையிலும்
கருனை மிதக்கும் சொற்களுக்கிடயிலும்
எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன

கபாலங்கள் பிளந்து இறந்த குழந்தைகளின்
கனவுகளை காகங்கள் கொத்தித் தின்னுகின்றன

நகரங்களை இழந்த மனிதர்களின் வாழ்வு
காற்றில் சிதறுகிறது வெறும் செய்தியாக
இரத்தத்தால் நிரம்பிய பதுங்கு குழிகளுக்குள் பகல்வானம்
முடங்கிக்கிடக்கிறது

அவர்கள் நகரங்களை கைப்பற்றுகிறார்கள்
சனங்களற்ற நகரங்களை
மிருகங்கள் வெருண்டோடிய காடுகளை
வாழ்வு தொலைந்து போன நிலங்களை

சூரியன் காடுகளில் அலைகிறது

இ.


உடைந்து சிதறிய விருந்தினர் விடுதியின்
விசாலமான மண்டபத்தில்
நெருங்கிக்கிடக்கின்றன
சொல்ஹைமின் உணவுக் கோப்பையும்
ஆகாசியின் சூப் கிண்ணமும்
இன்னும்
சமாதான காலங்களின் வரைபடங்களில்
அவர்கள் சிரித்துக்கொண்டேயிருக்கிறார்கள்

மலர்ந்த புன்னகையின் அடியில்
கத்தியாய் மின்னுகின்றன சமாதானகாலச் சொற்கள்
சனங்கள் வெளியேறிய நகரத்தில்
நாறிமணக்கின்ற
தொண்டு நிறுவனங்களின் கொடிகளின் கீழே
அவலமாய் காகங்கள் கரைகின்றன
அவர்கள் உறிஞ்சிய குளிர்பானக் குழாய்களை
எறும்புகள் காவிச்செல்கின்றன
காலியான மதுக்குவளைகளில் பாம்புகள்
அடைக்கலம் புகுந்திருக்கின்றன

நகரம் ஒற்றப்பனையாய்த் தனித்திருக்கிறது
வெறிச்சோடிய தெருக்களில்
ஊர் நீங்கிய மனிதர்களின் கால்தடங்கள்
அசைகின்றன
கைவிட்டு வந்த நிலங்களில்
காற்று இரைகிறது

ஈ.


மழை ஓயாத மழை
கூடாரங்களை இழுத்துச் செல்லும் மழை
சனங்களைத் துரத்தும் மழை

குளங்கள் நிரம்பி விட்டன
நெல் மணிகள் மிதக்கின்றன
வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் வீதிகளில்
அலக்கழிந்தபடி செல்கிறது ஒற்றைச் செருப்பு
புயலின் அசுரத்தாண்டவம் முறித்த மரங்களிலிருந்து
சிதறிக்கிடக்கின்றன காகக்கூடுகள்

மீதி வாழ்க்கையையையும் வெள்ளம் தின்கிறது
வானம் உடைந்து
சனங்களின் தலைகளில் வீழ்ந்திருக்கிறது
வெடித்துச்சிதறும் சன்னங்களையும்
எறிகணைகளையும்
மழை கொண்டுவருகிறது
கூடாரங்களின் கீழ் கனவுகளின்
ஆழ் வேர்களை இழந்து விட்டு
அகதிகளாயினர் சனங்கள்
மீளவும் அகதிகளாயினர்

உ.


நகரத்தை நோக்கி
மையங் கொண்டுள்ளது போர்
புயல் அள்ளிச் சென்ற கூடாரங்களை
சனங்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
விமானங்கள் துரத்துகின்றன
பதுங்கு குழிகளில் நிரவிப்பாய்கிறது வெள்ளம்

ஊ.


போர்
கனவுகளை உறிஞ்சும் போர்
போரின் தீரத்தில் எற்றுண்டுகிடக்கும் மனிதர்களை
காலம் மௌனமாகத் தாங்கிக்கொள்கிறது

கனவுகளை உறிஞ்சும் போர்
உடல் சிதறிப்பலியான குழந்தைகளை
தின்னுகின்றது

நிலங்களுக்குள் கடலாய் நுழைந்த போர்
ஊர்களைப் பருகுகிறது

எ.


நகரம் அதிர்கிறது
சமாதான நகரத்தின் கதவுகள்
உடைந்து கிடக்கின்றன
இறுதி யுத்தம் என்ற பிரகடனங்களுக்கிடையில்
நகரம் அதிர்கிறது
முற்றுகையிடப்பட்ட நகரத்தில் இருந்து
வெளியேறிய சனங்களின் கூடாரங்கள்
பெயர்ந்து கொண்டிருக்கின்றன

போர் தொடர்கிறது
கனவுகளை உறிஞ்சும் போர்
நிலங்களைத் தின்னும் போர்
சனங்களை விரட்டும் போர்
காடுகளில் அலைகிறது சூரியன்

ஏ.


கடைசியில் நகரம் வீழ்ந்து விட்டது
சமாதானத்தின் நெடுங்கதவுகள்
உடைந்து கிடக்கின்றன
ஊர்களைப் பறிகொடுத்த சனங்களை
விமானங்களும் எறிகணைகளும் துரத்துகின்றன

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்