
ஒளிக்குப் புறம்பாக
கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தை
சாத்திக் கொண்டிருக்கிறான்
இரவின் சூத்திரதாரி
மண்ணகழ்ந்து வெளியெடுத்த
பெருங்கோயிற் சிதைந்த சிற்பம்
அதன் மூலையில்
சிதிலங்களாகக் குவிக்கப்பட்டிருக்கிறது
முரண்கள் விருட்சங்களாய்
கிளை விரிக்கையில்
மண்டபச் சுவர்களில் மோதிக்
கலைகின்றன புறாக்கள்
மாமிசம் நாறும் வெளியில்
விக்கிரகப் புனைவு விதிகளைக்
கட்டவிழ்க்கிறான் சிற்பி
எல்லாச் சிலைகளிலும்
மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன
மந்திரங்களால் ஆக்கப்பட்ட
பெருங்கோயில்
புதையுண்ட காலச்சரிவில்
நிரைநிரையாக முளைக்கின்றன
புத்தம் புதிய விக்கிரகங்கள்
பாதி விழி மூடிய விக்கிரகங்களில்
சாவைச் சூடிய மகா வாக்கியங்கள்
எல்லாக் கதவுகளையும்
சாத்திவிடுங்கள்
புலன் மேய வந்திருக்கிறது
கற்களாலாய காலம்
பெருங்கோயில்
புதையுண்ட மணற்கரையில்
ஓயாப் பெருங்குரலில்
யாரோ கதறியழுகிறார்கள்
நிர்க்கதியாக்கப்பட்ட
கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்
நன்றி- மறுபாதி (சித்திரை-ஆனி,2010)
0 comments:
கருத்துரையிடுக