சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

உருச்சிதைந்திருந்த காலத்தின் கவிதைகள்

03 ஜூன், 2011

யாழ்ப்பாணம் மூடுண்டு போயிருந்த காலத்தில் ஒரு மாலைப்பொழுதில்த்தான் நான் தீபச்செல்வனைச் சந்தித்தேன். அதற்கு முன் அவரின் கவிதை ஒன்றைத் ‘திண்ணை’ இணையதளத்தில் படித்திருந்தேன். யாழ்ப்பாணம் பற்றிய யாழ்-நகரம் என்ற கவிதையது. வாசல்கள் யாவும் அடைக்கப்பட்டு; மரணத்தின் மொச்சை எப்பொழுதும் கவிந்திருந்த அந்த நாட்களில்; தீபச்செல்வனின் யாழ்-நகரம் கவிதை, யாழ்ப்பாணத்தை அதன் அன்றைய இயல்புகளோடு காட்டியிருந்தது. அதன் பின்னர் நான் அவருடன் பல விடயங்கள் பற்றியும் உரையாடியிருக்கின்றேன். மனிதர்களை வேட்டையாடும் காலத்தின் பயங்கரங்கள் எங்களை எப்போதும் துரத்திக்கொண்டேயிருந்தன. அச்சத்தை தரும் அந்த நாட்கள் மிகவும் கொடியவை. உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தன்னை யாராவது கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சத்துடனேயே உலாவந்து கொண்டிருந்தான். தடுப்புச் சுவர்களும் சோதனைச் சாவடிகளாலும் நிரம்பப் பெற்றிருந்தது அன்றைய யாழ்ப்பாணம்.

நான் பல தடவைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விடுதி வாயிலில் அவருக்காக காத்துக்கொண்டிருந்திருக்கின்றேன். துயரம் படிந்த முகத்துடன் சில சமயங்களில் மகிழ்ச்சியுடனும் என்னைச் சந்திக்க வருவார். அப்போதெல்லாம்; ஒருவிதமான பதட்டமனநிலை அவரிடம் குடிகொண்டிருந்தது. சமகாலம் தரும் அச்சமும் எதனையும் வெளிப்படுத்த முடியாத பெருந்துயரும் எங்களை வாட்டிக்கொண்டேயிருந்தன. தீபச்செல்வனின் “தீபம்” வலைப்பதிவு மூடுண்ட யாழ்ப்பாணத்தின் அன்றைய நிலையை வெகுவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. உணவுப் பொருட்களுக்காக மக்கள் அலைந்ததை, இனந்தெரியாத ஆயுததாரிகளால் நிகழ்த்தப்பட்ட எண்ணற்ற கொலைகளை, இராணுவ நெருக்கீடுகளை கைதுகளை ,காணமற்போதல்களை என பலவற்றையும் அவரின் கவிதைகளில் காணமுடியும்.

இராணுவ வாகனங்கள் செல்வதற்காக வீதிகள் பூட்டப்படும் பொழுதுகளில் சனங்கள் வீதிகளில் கொதிக்கும் வெயிலிலும் காத்துக்கொண்டிருந்தார்கள். நகரங்கள் இரவை அண்மிக்கும் முன்பே மூடிக்கொண்டன. வீதிகள் வெறிச்சோடிப் போயின. மக்கள் வீதிகளையும் பொழுதுகளையும் இராணுவத்தினருக்குக் கொடுத்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கிப்போயினர். காண்டாவனம் போல் தகித்திருந்த காலமது. யார் மீதும் குற்றம் சுமத்தவும் யாரிடமும் கேள்விகளைக் கேட்க முடியாமலும் அச்சுறுத்தல் மிக்க காலமாக அந்த நாட்கள் இருந்தன. நாங்கள்; பின்னரெல்லாம் எங்கள் சந்திப்புக்களைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

“பாழ் நகரத்தின் பொழுது” தீபச்செல்வனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் பெரும்பான்மையானவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை. யாழ்ப்பாணம் எப்போதும் அச்சப்பிராந்தியமாகவே இருந்து வந்திருக்கின்றது. அதன் பிரதான வாயிலான ஏ-9 வீதி நிரந்தரமற்ற கனவின் இழையில் தொங்கிக்கொண்டேயிருக்கின்றது. சமாதான காலத்தில் சொர்க்கத்தின் வாயிலாக இருந்த இந்த வழி, யுத்தப் பிரகடனத்திற்காக மூடப்பட்ட போது மரணத்தின் இரும்புத் திரையானது. யுத்தம் மீண்டும் ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்திற்கான உணவு விநியோகம் உட்படப் பலவும் பாதிக்கப்பட்டிருந்தன. முற்றிலும் இராணுவமயமான அன்றைய யாழ்ப்பாணத்தில் எப்போதும் மரணத்தின் நிழல் சதா அலைந்து கொண்டேயிருந்தது.

வாழ்வு, எப்போதும் கனவுகளையும் நம்பிக்கைகளையும் பெருக்கிக்கொண்டேயிருக்கின்றது. வாழ்க்கைக்கான விருப்பும் நாட்டமும் இவற்றினால்த்தான் கட்டியமைக்கப்படுகின்றன. நம்பிக்கைகளுக்குப் பதிலாக நம்பிக்கையீனம் மேலெழுகின்றபோது மிதமிஞ்சியதான வெறுப்புணர்வு இயல்பாகவே வந்துவிடுகின்றது. இந்த வெறுப்புணர்வைப் படைப்பு மனநிலை இலகுவில் உட்கொள்கின்றது. தீபச்செல்வனின் கவிதைகள் நம்பிக்கையீனங்களையும் அவற்றினால் விளையும் ஏமாற்றங்களையும் சூட்சுமமாக நிறைத்துள்ளன. அதேவேளை துயரங்களிலிருந்து அகலாத அவரின் மனம் அவற்றையே எப்போதும் காவிக்கொண்டு அலைகின்றது. இதனால்த்தான் இந்தக் கவிதைகளில் வெற்றுக் கூச்சல்களோ களியாட்ட மனவுந்துதலோ இல்லாமற்போய் சாவுகளின் துயரம் படிந்துவிடுகின்றது.சகமனிதனிலும் தன் துயரத்தையே காணும் கவிமனம் பொதுமைத்துயரைத் தனக்கானதாகக் கொள்ளுகின்றது.

வாழ்ந்து கொண்டிருக்கும் நகரம் தரும் வலியை எழுதும் அவர். தான் வாழ்ந்த கிளிநொச்சி நகரம் பற்றிய பிரிவுணர்வையும் அது யுத்தத்தின் சந்நதத்தில் அழிந்து கொண்டிருந்ததையும் எழுதிச் செல்லுகின்றார். தினந்தினம் மனிதர்கள் காவு கொள்ளப்படுவதையும்; நிலங்களும் உடைமைகளும் இழக்கப்படுவதையும் எழுதுகின்றார். ‘திரும்ப முடியாத நகரம்’, ‘பதுங்குகுழியை விட்டு அலைகிற வெளி’போன்ற கவிதைகள் இத்தகையவை. இத்தொகுப்பில் வரும் இரண்டு நகரங்களுமே ஒரு நூலில் பிணைக்கப்பட்ட இரண்டு பட்டங்கள் போன்றவை. இதன் நூலான ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்ட போது இந்த இரண்டு பட்டங்களும் அறுந்து எங்கெங்கோ காற்றில் அலைக்களிக்கப்பட்டு கிழிந்து போயின. முழுமையும் ரணமும் நிணமுமான அநுபவங்கள்தான் இறுதியில் எஞ்சின. வன்முறையின் உச்சமான நிகழ்வுகளையும் வடுவையும் இந்த நகரங்கள் சந்தித்திருக்கின்றன.

உள்ளடங்கிப் பின் உருக்கொள்ளும் துயரத்தின் மொத்தத் திரட்சியாக தீபச்செல்வனின் இத்தொகுப்புக் கவிதைகளுள்ளன. உண்மையில் அவர் அகநிலை மனத்துக்கும் புறநிலையான இருப்புக்குமிடையில் தத்தளித்துக்கொண்டேயிருக்கின்றார். இத்தத்தளிப்பினால்த்தான் அவரின்; கவிதைகள் முற்றுப்பொறாத வெளியில் அந்தரித்தபடியிருக்கின்றன. காட்சிப் படிமமாக விரியும் அநேக கவிதைகளும் இருத்தலுக்கான, தன்னங்கிகாரத்துக்கான சாதாரணமனிதனின் கொந்தளிக்கும் குரலாய் ஒலிக்கின்றது. இது தீபச்செல்வனுக்கு மட்டும் நிகழ்வதல்ல பொதுவான ஈழக் கவிதைகளின் மையமே இதுவாகத்தானிருக்கின்றது. யுத்தம் தனிமனிதர்களின் மீதும் சமூகத்தின் மீதும் தன் தீராத வெறித்தனத்தை நிகழ்தியபடியேயிருந்தது. ஒவ்வொரு தனிமனிதனும் அச்சத்தின் கொடுநிழலின் கீழ்த்தான் உறங்க வேண்டியிருந்தது. இதனை தீபச்செல்வன் தன் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றார். பொழுதுகள் பயத்துடன் கழிவதையும் துப்பாக்கிகளால் கண்காணிக்கப்படுவதையும் தன்னுணர்வின் மொழியில்

“நாய்கள் இன்னும் குரைத்தபடியிருக்கின்றன
சலனமற்ற இரவில்
எல்லோரும் கொள்ளுகிற மரண தூக்கத்தில் கனவு
என்னைத் தின்று முடிக்கிறது”;
(விரட்டப்படுகிற தெருவில் அறுகிற செருப்பு)

“தொலைபேசி எங்கும்
துவக்குப் புகுந்து
அலறிக் கொண்டிருக்கிற இராத்திரியில்
எங்கும் செல்ல இயலாது
தோற்றுப்போன சொற்கள்
கட்டிலின் கீழாய்க் கிடந்து
முதுகைக் குத்திக் கொண்டிருக்கின்றன”

(பாழ் நகரத்தின் பொழுது) என எழுதுகின்றார்.

கவிதை என்பதற்கான மனப்பதிவுச் சட்டங்கள் அல்லது விமர்சன அளவுகோல்களுக்கப்பால் உணர்வின் பெருக்காயும் வடிகாலாயும் இத்தொகுப்பின் கவிதைகளுள்ளன. கவிதை, தன் எல்லையைக் கடந்த பாய்ச்சலை அல்லது வரிவை இங்கு பெறுகின்றது. மொழியின் இயல்பும் பரிமாணமும் மாறுகின்றன. காட்சிப் புலம் நோக்கிக் கவிதைகள் விரிகையில் அதீத சொற் சேர்க்கைத்தனம் கூடிவருகின்றது. இது கவிதை வாசிப்பை விபரணச்சித்தரிப்பாக மாற்றிவிடுவதோடு அர்த்தச்சிதைவுக்கும் காரணமாகிவிடுகின்றது. இந்தச் சிதைவை தீபச்செல்வனின் பல கவிதைகளிலும் காணக்கிடைக்கின்றது. இது சிதறுண்ட மனத்தின் இயைபற்ற தன்மையால் நிகழ்வதாக இருக்கலாம். எனினும் கவித்துவம் கூடிவரும் இடங்களையும் மிகவும் சாதாரணமாகவும் மலினமாகவும் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்தும் ஏற்பட்டுவிடுகின்றது. இது அவரின் கவிதைகளின் பலவீனமாகவுள்ளது.

ஈழக் கவிதைகள் அதிகமும் தனிமனித மனத்தின் உள்ளாந்த மறுதல்களையே சித்திரிக்கின்றன என்னும் பொதுப் பார்வை பலரிடம் காணப்படுகின்றது. இதை ஒற்றைப் பரிமாணத் தன்மை எனக் கூறுகட்டுவோரும் இருக்கின்றார்கள். இதனை இவ்வாறு சுட்டுவது எந்த விதத்தில் பொருத்தமுடையதாக இருக்கும் என்பது அவதானிக்கத்தக்கது. ஏனெனில் ஈழக் கவிஞர்கள் பலரும் யுத்தத்தை புற வாயிலூடாக தரிசிப்பதை விடவும் அகத் தரிசனமாகவே கண்டுடிருக்கின்றார்கள். ஆதலால் கவிதைகளும் அகநிலை அனுபவங்களின் திரட்சியாக அமைவது தவிர்க்க முடியாததாக அமைவதாகவே நினைக்கின்றேன். இதேவேளை இந்தக் கூறுகட்டல் முற்று முழுதாக நிராகரிக்கத் தக்கதுமல்ல.

தீபச்செல்வனின் கவிதைகளை வாசிக்கும் போது வெறுமனே கவிதைகள் என்பதற்கப்பாலும் ஒரு வரலாற்றுப்பதிவை வாசிக்கும் அனுபவமும் ஏற்படுகின்றது. ஈழத்தில் போர் மிக உச்சம் பெற்றிருந்த காலத்தில் எழுதப்பட்ட இவரின் கவிதைகளில் போரினால் உருக்குலைந்துபோன இளந்தலைமுறை ஒன்றினது யுத்தகால அனுபத்தினையும் வலியையும் கண்டுகொள்ள முடிகின்றது. தீபச்செல்வன் பிறந்த காலத்திலிருந்தே ஈழத்தில் யுத்தம் நடைபெற்றுவந்திருக்கின்றது. ஆதலினால் யுத்தத்தின் கோரத்தின் மீதான வெறுப்பும் விடுதலையின் மீதான பேராவும் இயல்பாகவே கவிதைகளில் பிரதிபலிக்கின்றன. தீபச்செல்வன் தான் வாழ்ந்த காலத்தின் சாட்சியமாகத் தன் கவிதைகளைத் தந்திருக்கின்றார். இது மிகவும் முக்கியமானதும் தேவையானதும் கூட.

அவரின் கவிதைகள் மேலும் பரவலான வாசிப்புக்குள்ளாவதை
விரும்புகின்றேன்.

மிக்க அன்புடன்

சித்தாந்தன்
யாழ்ப்பாணம்
12.05.2010

( தீபச்செல்வனின் “பாழ் நகரத்தின் பொழுது” க்கு எழுதிய முன்னுரை )

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்