
சித்தாந்தன்
விலக்கப்பட்டவனின் இரவு
முட்களில் வீழ்ந்துகிடக்கிறது
அவன்
தனது நூறாவது கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்
பறவைகளின் தாகம்
அதில் வற்றிப்போயிருக்கிறது
பிளவுண்ட ஆறுகளின் சுனைகள்
அடைபட்டிருக்கின்றன
அவன் எழுதிக்கொண்டேயிருக்கிறான்
பகலின் நிர்வானம்
கவிதையில் மிதக்கின்றது
ஆயிரக்கணக்கான பிணங்களை
இழுத்துக் கொண்டு
ஒரு காலம் ஊர்ந்து கடக்கிறது
அவனின் நூறாவது கவிதை
மௌனங்களைத் தின்று
ஒரு சொல்லடுக்காய் நீள்கின்றது
கருணைகூர மறந்த நாட்களை
இன்னும் நினைவுகளில் தேக்கிக்கொண்டு
ஒரு சருகைப் போல
வெளி முழுதும் படர்கிறது
கவிதையிலிருந்து தவறிய ஒற்றைச்சொல்
00
நன்றி-கலைமுகம்
0 comments:
கருத்துரையிடுக