சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

எழிலரசன் என்கிற சகுனி

17 ஜூன், 2012


-சித்தாந்தன்-

அந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். சகுனியோ என்னைவிட இரண்டு மடங்கு பெரியவன் போலிருந்தான். நான் அவனுடன் திரிவதை அவ்வப்போது எனக்கொரு பாதுகாப்பெனக் கருதிக் கொண்டேன்.
ஒரு நாள் இடைவேளையின் போது சகுனி என்னை வெளியே கூட்டிப் போனான். நான் இண்டைக்கு ஒரு விளையாட்டை உனக்குக் காட்டப் போகிறேன் என்றான். நானும் அவனுடன் வெளியே சென்றேன். அவனின் கையில் சில பிஸ்கட்டுக்களும் ஒரு பிளேட் துண்டுமிருந்தது. சகுனி அந்த பிளேட் துண்டை சின்னத் துண்டாக முறித்து அதில் ஒன்றை பாதி பிஸ்கட்டில் குத்தினான். பிறகு பிஸ்கட்டை மரத்திலிருந்த காகத்தை நோக்கி எறிந்தான்  அது லாவகமாக தன் அலகில் வாங்கிக் கொண்டது. காகத்தின் கழுத்துப் பகுதியிலிருந்து இரத்தம் பெருகியது. எனக்குப் பாவமாக இருந்தது. ஏன்டா இப்படிச் செய்தனி பாவமெல்லேடா என்றேன். அவனோ “இல்லையடா எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற சுதன் சொன்னவன் தான் இப்படிச் செய்தவனாம் காகத்தின்ர தொண்டையில இருந்து ரத்தம் பெருகினதாம். நான் நம்பேல புழுகிறான் எனறு நினைச்சனான். அதுதான் நான் இப்ப செய்து பார்த்தன்” என்றான்.
உனக்கு புண்வந்தால் மருந்து கட்டுவாய் காகத்திற்கு யாரிட்ட மருந்து கட்டுறது பாவமல்ல” என்று சொன்னேன்.
000
நான் க.பொ. உ தரத்தில் கலைப்பிரிவில் படித்துக் கொண்டிருந்தேன் சகுனி வர்த்தகப் பரிவில் படித்துக் கொண்டிருந்தான். பாடசாலை வேறுவேறாக இருந்தாலும் ரியூசன் ஒன்றாக இருந்ததால் சனி ஞாயிறு நாட்களில் தவறாது சந்திக்கக் கூடியதாக இருந்தது.
சகுனிக்கும் எனக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கமிருந்தது. எப்போதும் அவன் இடையறாது பேசிக் கொண்டேயிருப்பான். எல்லோர் கவனமும் தன்னில் விழுந்திருக்க வேண்டும் என்னும் விநோதமான விருப்பு அவனிடம் குடியிருந்தது. அதற்காகச் சில நேரங்களில் கோமாளி போல் எதையாவது பேசிக் கொண்டும் செய்து கொண்டுமிருப்பான். சகுனியென்ற தன் பெயர் குறித்து அவன் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இதிகாச காலச் சகுனியின் கதையை திரும்பத் திரும்ப யாரிடமாவது கேட்டுக் கொண்டேயிருப்பான். சகுனியைப் போலவே தானும் திட்டங்களை வகுப்பதிலும் தந்திரத்தால் பிறரைத் தோற்கடிப்பதிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்பதே தன் இலட்சியம் என பல தடவைகள் என்னிடம் சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம் நான் அவனுக்கு இப்படியான எண்ணங்களுடன் இருப்பது தவறு என்றும் அது சில வேளைகளில் உன் எதிர்காலத்தையே பாதித்து விடும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இலட்சியத்தின் குறைகளைப் பேசுவதை விட அதை எப்படி அடையவேண்டும் என்பதற்கான மார்க்கங்களைத்தான் பிறரிடம் தான் கற்றுக் கொள்ள விரும்புவதாகச் சொன்னான்.
அப்பபோது நாட்டை சந்திரிக்கா ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் இலங்கை வான் படை நவாலி தேவாலயத்தின் மீது குண்டு வீசி பல நூறு பொது மக்களைக் கொன்றிருந்தது. அநேகமாகத் தினமும் பொம்மர்கள் குண்டுகளைத் தமிழர் பகுதிகளில் வீசி மக்களைக் கொன்றுகொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில்தான் புலிகள் போராட்டத்துக்கு மக்களை தீவிரமாகச் சேர்த்துக்கொண்டிருந்தனர். வீதிகள் பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் பொதுசன நூல் நிலையங்கள் என பல இடங்களிலும் தங்களுடைய பிரச்சார நடவடிக்ககைகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தனர்.
நாங்கள் கல்வி கற்ற நிறுவனத்திலும் ஒரு நாள் பிரச்சாரம் நடந்தது. பல புலியுறுப்பினர்கள் வகுப்பு வகுப்பாக வந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். யாராவது பிரச்சாரத்தில் அவர்களின் கருத்துக்களுக்கு சார்பாக கதைப்பது போலத் தெரிந்தால் தனியாக அழைத்துச் சென்று கதைப்பார்கள். பிரச்சாரத்தின் போது நவாலி தேவாலயப் படுகொலை போன்ற ஒளி நாடாக்களை தொலைக்காட்சியில் போட்டுக்காட்டி ‘இது மாதிரி நாளைக்கு உங்களுக்கும் நடக்கும்.இப்படி தொடர்ந்து நடக்கக் கூடாது என்றால் போராட வேண்டும் இது காலத்தின் கட்டாயம் நீங்கள் எல்லாம் போராட்டத்தில இணைய வேண்டும்.’ சில பொடியங்கள் அந்த வேகத்திலேயே போய்விடுவாங்கள். ஓராள் இரண்டாக்கள் போனால்தான் அன்றைய பிரச்சாரம் முடியும் இல்லை யென்றால் முடிய நேரமாகும். பொடி பெட்டைகளின்ர தாய் தகப்பனெல்லாம் வந்து வெளியில காவல் நிற்குங்கள்.
அன்றைக்கு வீரமான சில பொடியங்கள் போனதோட பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. பிரச்சாரம் முடிந்ததும் சகுனி என்னைத்தேடி வந்தான்
“மச்சான் என்ர பேர் கூடாதடா”
“ஏன் என்ன நடந்தது”
இயக்க அண்ணை பிரச்சாரம் செய்யேக்க “எங்களில சில சகுனிகள் இருக்கிறாங்கள் அவங்கள் தான் தந்திரங்கள் செய்து எங்கட போராட்டத்தை அழிக்கலாம் என்று நினைக்கிறாங்கள். அரசாங்கத்துக்கும் காட்டிக் கொடுக்குறாங்கள் அவங்கள் துரோகிகளாம் அவங்களைச் சுட வேணுமாம் என்று சொன்னவர்.  எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிச்சாங்களடா. எனக்கு கவலையாகிப் போச்சுது. அந்த அண்ணையும் ஏன் சிரிக்கிறீங்கள் எனக் கேட்டார். இவங்கள் என்னைப் பார்த்துச் என்ரை பேர் சகுனி என்றாங்கள். அந்த அண்ணை சிரிச்சுப் போட்டு சொறி சொல்லிப் போட்டு இந்தப் பெயரை மாத்த வேணும் என்றால் இயக்கத்துக்கு வாரும் நல்ல பெயராய் வைக்கலாம் என்றவர். நான் இயக்கத்துக்குப் போகப் போறனடா. என்ர பேரை ஸ்ராலின் என்றோ விக்டர் என்றோ மாத்தப் போறன் என்றான்.

“என்னடா விசர்க்கதை கதைக்கிறாய் பேரை மாத்துறத்துக்காக இயக்கத்துக்குப் போறதாடா. பேசாமல் வீட்டை போடா”
“பேரை மாத்துறத்துக்காக மட்டுமல்ல நாங்கள் விடுதலை அடைய வேண்டும் அந்த வீடியோக்களைப் பார்த்தனி தானே. எங்கட சனங்களை அரசாங்கப் படை கொல்லுறாங்கள் இப்படியே விடக்கூடாது எல்லாத்துக்கும் முடிவு கட்ட வேணும்.”
சகுனியின் வார்த்தைகளில் நாட்டுப் பற்று வெளிப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் தான் இயக்கத்துக்குப் போறதுக்கு புதிசா ஒரு காரணத்தை உருவாக்குகிறான் என்று. நான் சொன்னன் பேசாம வீட்டை போடா
“ஓம் மச்சான் நான் போறன்”; என்றிட்டுப் போனான்.
அன்று பின்நேரம் சகுனியின் அப்பா வீட்டுக்கு வந்தார். “தம்பி சகுனியை கண்டனியா? விடிய ரியூசன் போனவன் இன்னும் வரவில்லை” என்றார்.
“ஐயா, விடிய ரியூசன் வந்தவன். பிரச்சாரமும் நடந்தது. அது முடிய என்னட்ட வந்தவன் தன்ர பேர் சரியில்லையாம் அதால தன்ர பேரை மாத்த இயக்கத்துக்குப் போகப் போறன் என்றவன். நான் பேசினான். பிறகு தான் போகேலை வீட்டை போறன் என்றிட்டுத்தான் வந்தவன்.”
“ஏன் தம்பி உதை உடனச் சொல்லியிருக்கலாமே.” என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போயிட்டார்.
௦௦௦
இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய காலம். ஒரு எல்லையில் புலிகள் சனங்கள் எல்ரோரையும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயரச் சொன்னார்கள். இரண்டொரு நாட்களிலோ இரண்டொரு கிழமைகளிலோ மீண்டும் திரும்பி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் சனங்கள் வெளியேறினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை பலிக்காமலே போயிற்று இராணுவம் ஒட்டு மொத்த யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. கடைசியில் பெரும்பாலான சனங்கள் மீண்டும் யாழ்ப்பாண இராணுவ கட்டுப்பாட்டுக்குள் போயினர். மீதமான சிலர் வன்னிக்கு செல்லத் தொடங்கினர். நானும் வன்னிக்குத்தான் போனேன். அப்போது கிளாலி கடல்நீரேரியைக் கடந்துதான் சனங்கள் வெளியேறினர். அதுவும் ஒன்றுடன் ஒன்று படகுகள் தொடுக்கப்பட்ட தொடுகையில். கடற்படையும் வான் படையும் மூர்க்கமான தாக்குதல்களை கடலிலும் கரையிலும் தொடுத்தது. தொடுகைப் படகுகள் சில தாக்குதலுக்கு இலக்காகி கடலில் தீப்பிடித்து எரிந்தபடியிருந்தன.கிபீர் விமானம் கடற்கரையில் குண்டுகளை வீசியது சனங்கள் தென்னைகளுக்கு கீழும் மணற்திட்டுகளுக்குள்ளும் விழுந்து கிடந்து தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர். கண்களின் முன்னாலையே சனங்கள் இறந்துகிடந்தனர். அந்த நேரத்தில் புலிகள் தமது இளம் போராளிகளை வன்னியை நோக்கி தொடுவைப்படகுகளில் அனுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் நான் சகுனியை ஏதேர்ச்சையாகச் சந்தித்தேன். தலைமயிரை ஓட்ட வெட்டியிருந்தான். கையில் ஏ.கே 47 இருந்தது. கொஞ்சம் கறுத்துப் போயிருந்தான். என்னைக் கண்டவன் திரும்பிப் பார்த்தான். ஆனால் அவனுடன் பேசக் கிடைக்கவில்லை. தொடுகைப்படகில் ஏறுவதற்காகச் சென்று ஏறினான். அவனின் தொடுகை சென்ற சில நிமிடத்தின் பின் உலாங்குவானூர்தி ஓன்று தாக்குதலை நடாத்தியது. சில படகுகள் கடலில் தீப்பிடித்து எரிந்தன. நான் சகுனிக்கு ஏதும் நிகழ்ந்திருக்கக் கூடாது என கடவுளைப் பிரார்த்தனை செய்தேன். பின் எங்களுக்கும் படகு கிடைத்தது வன்னிக்குச் சென்றேன்.
௦௦௦

வன்னியை நோக்கி  சென்ற சில மாதங்களில் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீது தாக்குதலை மேற் கொண்டனர். பெருமளவு இராணுவத்தினர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அப்போது புதுக்குடியிருப்புதான் புலிகளின் முக்கிய தளமாக இருந்தது. புதுக்குடியிருப்பே போர்க்கோலம் கொண்டிருப்பது போலிருந்தது. சனங்களும் புலிகளுமாக முல்லைத்தீவு வீதி நிறைந்திருந்தது. வெற்றிச் செய்திகளுக்காக சனங்கள் காத்திருந்தனர். இராணுவத்தின் உடல்களும் தளபாடங்களும் வீதியால் வந்துகொண்டிருந்தன. உழவு இயந்திரங்களில் இராணுவச் சடலங்கள் கொண்டுவரப்பட்டன. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலிருந்த ஒரு தென்னம் வளவில் இராணுவத்தினரின் சடலங்கள் அடுக்கப்பட்டிருந்தன. சனங்கள் அதைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அந்த பிணங்களின் நடுவில்தான் நான் சகுனியை மீண்டும் கண்டேன். அவன்தான் பிணங்களை சனங்கள் சிலரின் உதவியுடன் ஒழுங்குபடுத்தினான்.
நான் சகுனியை கூப்பிட்டேன்.
என்னைக் கண்டவன் புன்னகையுடன் வந்தான்.
“டேய் சகுனி என்று கூப்பிடாதே. எனக்கு இப்ப எழிலரசன். எழிலெண்டுதான் கூப்பிடுவாங்கள் ,நீயும் அப்படிக் கூப்பிடு. என்ர சொந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. தெரிஞ்சால் நக்கலடிப்பாங்கள்”; என்றான்.
“எப்படி மச்சான் இருக்கிற”
“பாக்கத் தெரியேலையே. வெற்றிக் களிப்பில இருக்கிறம். யாழ்ப்பாணத்தை புடிச்சவுடன் புலியை அழிச்சிட்டினும் எண்டிச்சினும் இப்ப பாத்திய அடிய. இனி இப்பிடித்தான் அடி விழும் பாரன்.”
“சரி நீயும் சண்டைக்குப் போனியா”
“சண்டையில் இருந்து இப்பதான் வந்தனான்.
“உனக்கு விக்டர் அல்லது ஸ்டாலின் எண்டு பேர் வைக்கப் போறன் என்றாய் இப்ப எழிலரசன் எண்டு பேரை வச்சிருக்கிறாய்.”
“ஓமச்சான். இப்ப இயக்கம் எல்லாருக்கும் தமிழ் பெயர்தான் வைக்குது. அதுதான் எனக்கும் எழிலரசன் எண்டு வைச்சிருக்கு.”
“உங்கட அம்மா அப்பா எங்கேயிருக்கினும் என்று தெரியுமோ?”
“ஓட்டுசுட்டானில் இருக்கினும் எண்டு அறிஞ்சனான். சண்டை முடிய பெரும்பாலும் லீவு தருவாங்கள். நான் அவையிட்ட போகலாம் என்று இருக்கிறன்.”
“ஓம் உன்ர அப்பாவை அண்டைக்கு புதுக்குடியிருப்புச் சந்தைக்குள்ள கண்டனான். உன்னை நினைச்சு சரியா கவலைப்பட்டவர். உனக்காகத்தான் இஞ்சால வந்தவையளாம். நீ கட்டாயம் அவையிட்ட போ. அறுதல்படுவினும்.”
“கட்டாயம் போவன்ரா, சண்டை முடியட்டும். வேற என்னடா. என்னை பொடிகளை இறக்கிப் போட்டு உடன வரச் சொன்னவங்கள்.நான்தான் ரக்ரர் கொண்டுவந்தனான். போறன் புதுக்குடியிருப்பிலதானே இருக்கிறாய் அடிக்கடி சந்திக்கலாம் வாறன்.”
“ஓம் மச்சான்.”
இப்ப சகுனி கொஞ்சம் நெடுத்திருப்பது போலிருந்தான். அவன் தீர்க்கமாக உரையாடவும் தெரிந்திருந்தான். முன்னைய கரகரப்பு குரலில் இருக்கவில்லை. ரக்ரரை ஸ்ராட் செய்து விட்டு புறப்படும் போது எனக்கு கையை அசைத்தான் நானும் கையை அசைத்தேன். பிணங்களைப் பார்ப்பதற்கு முண்டியத்துக் கொண்டிருந்த சனங்களை விலக்கி வருவது சிரமமாக இருந்தது. என் வாழ்க்கையில் அவ்வளவு சடலங்களை ஒன்றாகப் பார்த்தது அன்றுதான் .கிட்டத்தட்ட ஐந்நூறுக்கு மேற்பட்ட சடலங்கள். சடலங்களை மரணச்சடங்குகளில் பார்க்கும் போது பெண்கள் குழுமியிருந்து ஓப்பாரி வைப்பார்கள். அவர்களை விலக்கிக் கொண்டு சென்று பிணத்தை பார்க்கும் போது மனதுக்குள் சங்கடமாகவும் இனம்புரியாத கவலையாகவும் இருக்கும் ஆனால் இன்று சடலங்களை வேடிக்கை பார்க்கும் மனநிலைக்கு சனங்கள் வந்து விட்டார்களே என்னும் போது வேதனையாகவும் இருந்தது. இன்னும் சில காலத்தில் மரணச் சடங்குகளில் கூட சந்தோச கீதங்களை பாடி இரசிக்கும் நிலை வந்தால் கூட வியப்பில்லை.

௦௦௦
சமாதான காலம் வந்தது. நான் தொழில் நிமித்தமாக யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். எப்போதாவதுதான் கிளிநொச்சிக்கு நண்பர்களைச் சந்திப்பதற்காக சென்று வரவேண்டியிருந்தது. முல்லைத்தீவு சண்டைக் காலத்தில் சகுனியைச் சந்தித்ததிற்குப் பிறகு நான் சகுனியைச் சந்தித்ததில்லை. சகுனி இனி அடிக்கடிச் சந்திக்கலாம் என்று புதுக்குடியிருப்பில் சந்தித்தபோது சொன்னதைப் போல சந்திக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இடைக்காலத்தில் சகுனி எப்போதாவது இருந்திட்டுத்தான் என் நினைவில் வந்திருக்கின்றான். எப்போதாவது சகுனியின் தந்தையை அல்லது தாயை புதுக்குடியிருப்புச் சந்தையிலோ ஆஸ்பத்திரியிலோ வீதியிலோ சந்திக்கும் போது சகுனி பற்றிக் கேட்டிருக்கின்றேன். ஒரு முறை புதுக்குடியிருப்புச் சந்தியில் சந்தித்த போது அவனின் அப்பா சொன்னார். தம்பி போன மாதம் சகுனி லீவிலதான் வீட்டை வந்திருந்தவன், ஐஞ்சு நாள் நின்றவன். அதுக்குப் பிறகு அவனை சந்திக்கவில்லை. உன்னைப் பற்றிக் கேட்டவன். நான் சுகமாக இருக்கிறீர் என்று சொன்னன்.
“இப்ப என்ன பிரிவில் இருக்கிறானாம்”
“யாழ் செல்லும் படையணி என்ற புது படையணியில இருக்கிறானாம். அதுக்காக புதுசாப் பொடியங்களையும் சேக்கிறாங்களாம். இப்ப தான் மல்லாவியிலதான் பிரச்சாரத்தில நிற்கிறானம் என்றவன்.”
“சரி ஐயா நான் ஒருக்கா கிளிநொச்சிக்குப் போறன் சகுனி இனி வந்தால் நான் சந்திக்க ஆசைப்படுறன் எண்டு சொல்லுங்கோ. சரி போயிட்டு வாங்கோ அம்மாவையும் கேட்டதாய்ச் சொல்லுங்கோ.”
“ஓமப்பன் போயிட்டு வா. உன்ர அப்பா அம்மாவையும் கேட்டதாச் சொல்லு.”
“ஓம் ஐயா.”
அவர் போயிட்டார். அதன் பிறகு நான் சகுனியையும் அவன்ர அப்பா அம்மாவைம் சந்திக்கவில்லை.
௦௦௦௦௦
ஏ9 பாதை திறப்புடன் சமாதானத்தின் வாயில்கள் திறக்கப்பட்டதாக நம்பப்பட்ட காலத்தில் நானும் நண்பன் சங்கரும் வவுனியாவுக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் பரந்தன் சந்தியில் சகுனியைக் கண்டேன். சந்திக்கு கிட்டயிருந்த ஹாட்வெயார் கடையில நின்று யாரோடையோ கதைச்சுக் கொண்டிருந்தான். நான் தான் அவனைக் கூப்பிட்டேன். சகுனி என்றுதான் கூப்பிடத் தோன்றியது ஆனாலும் அவன் அதை விரும்பமாட்டான் என்பதால் எழில் என்றேன். திரும்பிப் பார்த்தவன். டேய் என்று சொல்லியவாறு கிட்ட வந்து என்னைக் கட்;டிக் கொண்டான்.
“எப்படி மச்சான் இருக்கிற” என்றேன்
“பறவாயில்லை மச்சான் சமாதான காலம் தானே சண்டையும் இல்லை. சுகமா இருக்கிறேன். நீ எப்படி மச்சான் இப்ப என்ன செய்யுற.”
“நான் இப்ப படிப்பிக்கிறன”;
“ஓ நல்லது. வாடா ரீ குடிச்சுக்கொண்டு கதைப்பம்.”
“இல்லை மச்சான் நான் அவசரமா இவரோட வவுனியா போறன்”
“இல்லை கனகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறம் வா”
“சரி மச்சான்.”
“வா அப்படியே கிளிநொச்சிக்குப் போவம் அதில சேரனில குடிக்கலாம்.”
“கிளிநொச்சிக்குப் போனோம்.”
சேரன் உணவகம் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. ஏதோ வெளிநாட்டுக் கடை போல அழகாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. பரிமாறுபவர்கள் யூனிபோம் அணிந்திருந்தார்கள். கிளிநொச்சிக்கு இடையிடை போய் வந்தாலும் அண்டைக்குத்தான் சேரனுக்குப் போனேன். சகுனி மூன்று ரீக்கும் மிதிவெடிக்கும் சொன்னான்.
நான் சங்கரை அறிமுகம் செய்து வைத்தேன்.
சங்கருக்கு சகுனியை அறிமுகம் செய்து வைத்தேன். மறந்தும் சகுனியை சகுனி என்று அழைப்பதைத் தவிர்த்து எழில் என்றே அழைத்தேன்.
அதற்கிடையில் மிதிவெடிகள் வந்தது. மிதிவெடிகள் மிகவும் பெரிதாக இருந்தன. ஆளுக்கு ஒவ்வொன்றை எடுத்துச் சாப்பிட்டோம். இப்ப யாழ்ப்பாணத்தில் மிதிவெடி என்ற பேரில விக்கிறதின்ர ஐந்து மடங்கு பெரியதிது. உள்ளே பொரிச்ச இறைச்சியும் முழு முட்டையும் இருந்தது.
சங்கர் சொன்னான். “இனி மத்தியானம் சப்பிடத் தேவையில்லை.”
“ஓம் மச்சான் இதுவே போதும்.”
“எழில் இப்ப நீ என்ன வேலையாயிருக்கிற. பார்த்தா பெரிய வேலை போல மோட்ட பைக் கெல்லாம் தந்திருக்கிறாங்கள்.”
“ஓம் மச்சான் பெரிய வேலைதான். நான் உனக்கு பிறகு சந்திக்கிற போது சொல்லுறன்.”
சங்கர் அருகில் இருப்பதால்தான் அவன் சொல்லவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.
“சரி எழில் நீ சின்னனா இருக்கேக்க எங்கட பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில இருந்த நாற்சார் வீட்டை பாத்திட்டு அதைப் போல வீடு கட்டப் போறனீ எண்டாய் நினைவிருக்கா.”
“நீ அதை மறக்கேலை என்ன. ஓம் அது என்ர கனவுதான் நிச்சயம் நாற்சார் வீடு கட்டுவன். அதுக்கு நல்ல ஒரு காலம் வரட்டும்.”
“ஏன் இப்ப சமாதான காலந்தானே”
“இதில நம்பிக்கையில்லை. எப்பவும் திரும்பவும் சண்டை வரலாம். ஒரு தீர்வு வந்தால்தான் நான் வீட்டை வருவன் அப்பதான் வீடு கட்டுறது பற்றியெல்லாம் யோசிக்கலாம்.நான் இப்ப இயக்கம்தானே.”
உண்மையா சமாதானம் குளம்புமோடா.”
“ஓம் மச்சான் எங்களுக்கு இதில நம்பிக்கையில்லை. இவ்வளவு காலமும் சனங்கள் கஸ்ரப்பட்டுத்துகள். கொஞ்ச நாளைக்கு ஆறுதலா இருக்கட்டும்.”
“பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குது.”
“திம்புவில இருந்து எத்தன பேச்சு வார்த்தைகள் எல்லாம் காலம் கடத்தல்கள்தான்.  எங்களுக்கான தீர்வை நாங்கள்தான் கண்டடையவேணும் எந்த பேச்சுவார்த்தையும் பலனைத்தராது.”
“அப்படியென்றால் யுத்தந்தான் இறுதித் தீர்வைத் தேடித்தரும் என்றுதானே சொல்லுறாய”;
“ஓம் மச்சான் வேற வழியில்லை”
“எழில் நாங்கள் வெளிக்கிடப் போறம் 12 மணிக்கிடையில வவுனியா போனாலதான் இண்டைக்கே திரும்ப முடியும்.”
“சரி நீங்கள் வெளிக்கிடுங்கோ நான் காசை குடுத்திட்டு வாறன்”.
“இல்லை எழில் நான் குடுக்கிறன்.”
“சும்மா போடா” என்று சொல்லிக் கொண்டு காசை எடுத்தான்.
“நாங்கள் வெளியே வந்தோம் எழிலும் சிறிது நேரத்தில் வந்தான். போயிட்டு வாறம்;” என்று சொல்லிக் கொண்டு நாங்கள் வவுனியா நோக்கிச் சென்றோம். எழில் கறுப்பு பஷன் பிளஸில் மீண்டும் பரந்தனை நோக்கிப் பறந்து போனான்.
௦௦௦

நாலம் கட்ட ஈழப்போர் தொடங்கியது. சொர்க்கத்தின் வாயிலாக இருந்த ஏ9 பாதை பூட்டப்பட்டது. இந்த வழி எப்போதும் அறப் போகும் கயிற்றின் ஒற்றை இழையில்த்தான் தொங்கிக் கொண்டிருக்கும். புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் ஏதாவது யுத்த முனைப்புக்கள் தென்படுமாக இருந்தால் இராணுவம் முதலில் ஏ9 பாதையைத்தான் பூட்டும். இந்த நேரங்களில் ஏதேனும் அலுவலாக வன்னிக்கோ வவுனியா கொழும்புக்கோ சென்றவர்கள் மாட்டிக் கொண்டால் பாதை திறக்கும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.
நாலாம் கட்ட போர் தொடங்கிய பிறகு வன்னி மீதான மிகவும் பாரியளவிலான யுத்தத்தை மகிந்த அரசாங்கம் தொடுத்திருந்தது. அது இறுதி யுத்தம் என அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. யுத்தம் உருவேறி உருவேறி சனங்களைத் தின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பெருமளவு மக்கள் யுத்தப் பகுதியிலிருந்து வெளியேறி இராணுவ வலயங்களுக்குள் வந்தனர். சனங்கள் பற்றியதான அனுதாபங்கள் உலர்ந்து போயின. சர்வதேச நாடுகளின் கண்கள் குருடாக கிடந்தன. நாளுக்கு நாள் இணைய தளங்களில் வெளிவரும் செய்திகளும் படங்களும் உலகத்தமிழர்களை துயரத்தின் நிலைக்கு இட்டுச் சென்றாலும்.கையறு நிலைக் கதறலாக ஆதரவற்ற ஒரு இனத்தின் குரலாக மட்டுமே எல்லாம் போயின.
கடைசியில் யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் தன்னை முடித்துக் கொண்டது. சனங்கள் அகதி முகாம்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். சரணடைந்த போராளிகள் தடுப்பு முகாங்களுக்கு அனுப்பட்டார்கள். தாய் ஒரு முகாமில் தந்தை ஒரு முகாமில் பிள்ளை ஒரு முகாமில் என குடும்பங்கள் சிதைந்து போயின. அதிகளவு குழந்தைகள் அநாதைகளாக்கப் பட்டார்கள். யுத்தத்தின் வடுக்கள் பெரிய கருநிழலாக மக்கள் மீது படிந்திருந்தது. சில மாதங்களின் பின் மக்கள் முகாங்களிலிருந்து படிப்படியாக விடுவிக்கப் பட்டார்கள்.

யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களின் பின் சகுனியின் அப்பாவும் அம்மாவும் ஊருக்கு வந்தார்கள்.அவர்கள் வந்த செய்தியை அறிந்தவுடன் நான் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் மிகவும் வாடி வதங்கிப் போயிருந்தனர். நான் சகுனியைப் பற்றிக் கேட்டேன். அவனின் அம்மா அழுகையுடன் சொன்னார்.
“தம்பி சண்டை தீவிரமாக தொடங்கிய பிறகு நாங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல இடம் பெயர்ந்தனாங்கள். அதுக்குள் இந்த மனுசனுக்கும் பிறசர் கூடிப்போயிடுத்து. மருந்துகளும் இல்லை. எப்பவும் சகுனியை நினைச்சுத்தான் மனுசன் கவலைப்பட்டுச்சு. மருந்துகளும் இல்லை. நான் பட்டபாடு காணும்” . என்றவர் தன்ர கண்களைத் துடைத்துக் கொண்டார். அதுக்கு மேல் அவரால் பேச முடியவில்லை. சகுனியின் அப்பாதான் பேசினார்.
தம்பி நாங்கள் மகனுக்காத்தான் வன்னியில் இருந்தனாங்கள் கனசனம் இயக்க கட்டுப்பாட்டிலிருந்து களவாக வந்ததுகள். நாங்கள் எப்படி இவனை விட்டிட்டு வாறது. ஏன்னெண்டாலும் நடக்கட்டுமெண்டுதான் இருந்தனாங்கள். புதுக்குடியிருப்பிலதான் கடைசியா சகுனியைப் பாத்தனாங்கள் எங்களை தேடிப்பிடிச்சு வந்தவன். சின்னதா ஒரு வீட்டையும் மந்துவிலில கட்டித்தந்தவன். அதுக்குப்பிறகு அவனைச் சந்திக்கேல. பிறகு முகாமுக்கு வந்த பிறகுதான் தடுப்பு முகாமில இருக்கிறதா அறிஞ்சனாங்கள். பாவம் என்ன கஸ்ரப்படுறானோ?”
துயரத்தின் சுவடுகளால் அவரின் முகம் நிறைந்து கிடந்தது. அதற்கு மேலும் நான் சகுனியைப் பற்றி விசாரிக் விரும்பவில்லை.
சகுனி அவர்களுக்கு ஒரேயொரு மகன்தான். சரியான பாசமாக அவனை அவையள் வளர்த்ததுகள். அவனுக்கு ஒரு குறையும் இருக்கிற மாதிரி இருக்குறேலை. எப்பவும் அழகாகத்தான் பள்ளிக்கூடத்துக்கு வாறவன். அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்குங்கள். அவைகள் வன்னிக்குப் போனதே அவனுக்காகத்தான். இன்றைக்கு வெறும் வேதனைகளுடனும் நினைவுகளுடனும் தான் வாழுதுகள்.
“தம்பி என்ன யோசிக்கிறாய”
“ஓன்றுமில்லை ஐயா”
“நான் அடுத்த கிழமை வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமுக்குப் போகப் போறன். அங்கை போய் விசாரிச்சுப் பார்ப்பம். புள்ளையைப் பார்க்காமல் சாப்புடுற சாப்பாடும் தொண்டைக்க இறங்குதில்லை. அவன் ஒருத்தனைத்தானே நாங்கள் நம்பியிருக்கிறம். எங்கட ஏலாத காலத்திலும் எங்களோட அவனில்லை. என்ன பாவம் செய்தோமோ?”
“அழாதையுங்கோ ஐயா. எல்லாரையும் படிப்படியாக விடுறாங்கள் அவனையும் விடுவாங்கள்”
“அந்த நம்பிக்கையிலதான் உசிரோட இருக்கிறம் தம்பி” என்றார் சகுனியின் தாய்.
அதற்கு மேலும் அங்கயிருக்க எனக்கு வேதனையாக இருந்தது. நான் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.
௦௦௦
ஒரு நாள் மத்தியானம் எனக்கொரு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. சகுனியின் தந்தைதான் பேசினார்.
“தம்பி சகுனி உன்னோட கதைக்கப் போறானாம்”;
“எங்க நிற்கிறான் வவுனியா பூந்தோட்டம் தடுப்பு முகாமில”
“போனைக் கொடுங்கோ ஐயா”
“சகுனி பேசினான”;
“எப்படி மச்சான் இருக்கிற? எப்ப விடுவாங்களாம்”
“சுகமா இருக்கிறன். என்னை விசாரிச்சிட்டாங்கள். என்னில குற்றங்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அடுத்த மாதமளவில் விடுவாங்கள் என்று சொன்னவங்கள்”
“தொல்லை தந்தவங்களோ”
“இப்ப இல்லை மச்சான் பரவாயில்லை இருக்கிறம்.ஆனால் வீட்டை வந்தப் பிறகு என்ன செய்யுறதென்றுதான் தெரியேலை. எப்படி சனங்களை எதிர்கொள்ளுறது. நாங்கள் இருந்த நிலை தெரியுந்தானே. சனங்கள் எங்களை ஏற்குங்களோடா?”
அவனின் கேள்வி எனக்கு ஏதோ செய்வதுபோலிருந்தது. யுத்தத்தின் பின்னர் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைதான் இது. யுத்தத்தின் பெயரால் நிகழ்ந்தவை எல்லாவற்றையும் எந்தளவுக்கு நியாயப்படுத்த முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்றாலும் யுத்தத்தில் ஈடுபட்டவர்களை புறத்தியாக நோக்குவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதில்லை. யுத்தம் ஒரு காலத்தில் எல்லோருடைய தேவையாகவும் இருந்தது. ஆனால் யுத்தத்தின் தோல்வி என்பது அல்லது போராட்டத்தின் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். இழப்புக்களின் எல்லை அந்தளவிற்கு விரிந்திருக்கின்றது. பெறுமானம் மீண்டும் பூச்சியத்துக்குத் திரும்பியிருக்கின்றது. எனது நண்பர் ஒருவர் சொன்னது போல் ஒரு சின்ன இனம் தன் அளவுக்கு மீறி இழந்துபோயிருக்கின்றது.
நான் என்னை நிதானப்படுத்திக் கொண்டு “ஏன்ரா அப்படியெல்லாம் யோசிக்கிற. முதல்ல வீட்டை வா”
“சரிடா நேரம் முடிஞ்சுது அப்பாவை போகச் சொல்லுறாங்கள் நான் உன்னோட பிறகு கதைக்கிறன்”
“சரி”
௦௦௦
யாழ்பாண பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் வரைபடமே யுத்தத்தின் பின் மாறத் தொடங்கியிருக்கின்றது. விளம்பரத் தட்டிகளால் அலங்கரிக்கப்படும் நகரமாக அது தன்னை மாற்றிக் கொண்டிருக்கின்றது. கால மாற்றமோ என்னவோ? சனங்களின் பாதைகள் எல்லாம் சுருங்கத் தொடங்கியிருக்கின்றன. வர்ணங்களில் மிதக்கும் நகரமாக உருமாறிக் கொண்டிருக்கின்றது. இன்னும் சிறிது நேரத்தில் கொழும்புக்கான பேருந்து வண்டி புறப்பட்டுவிடும் என்று ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய அறிவிப்புக்களை கொழும்பு பஸ்நிலையத்தில்தான் நான் கேட்டிருக்கின்றேன். இப்போது யாழ்ப்பாணத்திலும். ஒரு இளைஞன் ஒருவன் றபானை அடித்தபடி ஒரு பஸ்சில் பாடிக்கொண்டிருக்கிறான். இன்றும் ஒன்றிரண்டு சிறுவர்கள் பிச்சை எடுத்தபடி திரிந்தபடிதானிருக்கிறார்கள்.
இந்தப் பரபரப்புக்குள்தான் நான் சகுனியைக் கண்டு கொண்டேன். அவனின் பார்வையும் மருட்சியும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. ஏதோ புதிய கிரகத்துக்கு வந்தவன் போல இருந்தான். ஒரு வேளை அவன் இந்த நகரத்தையும் இரைச்சலையும் அந்நியமானதாக உணர்ந்திருக்கக்கக் கூடும். ஒரு வரன் முறையான வாழ்கை முறைக்குள் தன் வாலிப வயதுகளைக் கடத்தியவன். அதிலிருந்து மீண்டு இன்னொருவிதமான வாழ்க்கை முறைக்குள் திரும்பும் போது தன்னை தயார்படுத்த வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கின்றது. போராட்ட காலத்தின் வாழ்க்கை பின்னர் தடுப்பு முகாமில் வாழ்ந்த வாழ்க்கை இரண்டும் இன்னொரு விதமானவை .அடுத்ததாக போராளியாக வலம்வந்த சமூகத்தில் கைதியாகி விடுவிக்கப்பட்டவனாக வாழ்வது இன்னொரு விதமான வாழ்க்கைதான்.நான் நினைத்துக் கொண்டேன் சகுனி எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துவிடுவான் என்று. ஆனால் அவனுடனான தொலைபேசி உரையாடலுக்குப்பின் எனக்கு மனதில் ஒரு விதமான பதட்டம் இருந்ததுதான்.
௦௦௦
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்தபின்தான் நான் சகுனியைச் சந்தித்தேன். உதட்டிலிருந்து வடிந்திறங்கிய புன்னகையுடன் என்னை  பார்த்தான். கடந்த காலம் பற்றிய கசப்பும் துயரும் அவனின் கண்களில் துலங்கியவாறிருந்தன. என்னை பார்ப்பதற்கிடையில் அவன் பல தடவைகள் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தபடியிருந்தான். நான் அவனை நீண்ட நேரமாக அவதானித்த போதும் ஏதோச்சையாக எங்கள் சந்திப்பு அமைய வேண்டும் என்பதற்காக சற்றுத் தாமதித்தேன். அவனின் போக்கு விசித்திரமாகவும் அதே நேரம் கவனத்தையீர்ப்பதாகவும் இருந்தது. அருகே செல்பவர்களில் தன் நிழல் கூட விழுந்துவிடக் கூடாது என்பதில் அவதானமாக இருந்தான். கைகளை பிசைந்து கொண்டான். தன் நாக்கின் நுனியால் மீசை மயிர்களைத் தடவிக் கொண்டும் தலையை நான்கு திசையும் திருப்பித் திருப்பி எதையோ தேடுபவன் போலவும் இருந்தான்.
நான் சகுனியின் முன்னே சென்றேன். அவன் எதையோ வெறித்தபடியாக இருந்தான். டேய் மச்சான் என்றேன். என்னைக் கண்டவன் எழுந்து வந்து என்னைக் கட்டிக்கொண்டான்.
“என்ன மச்சான் எப்ப வந்தனி”
“இப்பதான்”
“தனியாவாடா”
“இல்லை அப்பாவோட அவர் கடைக்குப் போட்டார். அதுதான் பார்த்துக்கொண்டு நிற்கிறன்”
“எப்படியடா இருக்கிற”
“அவனின் கண்கள் கலங்கின”
“இருக்கிறன்” அதற்குமேல் அவன் ஒன்றும் பேசவில்லை. அந்த இடைவெளியை மௌனப் பாறாங்கல் நிறைத்திருந்தது.
இப்போது இவனுடைய செயல்களைப் பார்க்கின்ற போது இன்னும் குழப்பமாக இருக்கின்றது. சகுனி நன்றாக மெலிந்துபோயிருநதான். கடைசியாக கிளிநொச்சியில் சந்தித்தபோது மிடுக்கானவனாக இருந்தான். ஒரு தளபதிக்குரியதான எடுப்பும் தோற்றமும் அவனுக்கு இருந்தது. இயக்கத்தில் பெரிய நிலையில் இருக்கின்றான் என்பதை உணரக்கூடியதாக அவனிருந்தான். கறுப்பு பஸன் பிளசில் அவன் சென்ற விதம் எனக்கு இன்னும் கண்களில் சிதையாத காட்சியாக இருக்கின்றது.
“சரி வீட்டை என்னத்திலயட போகப் போறீங்கள்”
“அப்பா ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வருவார் என்றுதான் நினைக்கிறன்”
“அங்க பாரடா எழில் அப்பா வாறார்”
இந்த முறை நான் யதார்த்தமாகத்தான் எழில் என்று அவனை விழித்தேன்.
“இனி என்னை எழிலெண்டு கூப்பிடாதையடா” என்றான் .
“ஏன்ரா”
“பேரில என்னடா இருக்குது” என்று சொல்லிவிட்டு அருகில் வந்து நின்ற ஆட்டோவில் ஏறினான். அவனின் அப்பாதான் கைகளை அசைத்து விட்டு “வீட்டைவா தம்பி” என்று சொன்னார். நான் தலையை அசைத்தேன். ஆட்டோ இரைந்தபடி புறப்பட்டது. நான் நின்றஇடத்திலிருந்தே தொலைதூரத்துக்கு பயணித்தபடி இருந்தேன்.
00௦௦
நன்றி-எதுவரை

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்