சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சித்தாந்தன் கவிதைகள்

04 அக்டோபர், 2015



எப்போதுமே சலிப்பூட்டாத பறவையாக
இந்த நிழல்கள் இருந்ததில்லை.
பொய்மையின் அத்தனை அசைவுகளையும்
திரும்பத்திரும்ப நிகழ்த்திக் காட்டியபடி
தொடர்கின்றன.
திருப்பங்களில் பார்வைக்குத் தவறிச்செல்லும்
மனிதர்களைப் புறமொதுக்கிவிட்டு
நிழல்களின் புதர்க்காட்டில்
வீழ்ந்துகிடக்கிறது என் பால்யம்.
சூனியத்திலிருந்து நான் சிறகுகளை அவிழ்க்கிறேன்.
பறவைகளை பழி தீர்த்திடும்
வெறியுடன் கிளர்கின்றன நூறாயிரம்
நிழல்ச் சிறகுகள்.
பார்வைக்கு அகப்படாத
பெரு முற்றத்தில் காத்திருக்கிறது
முட்செடியென ஆகிவிட்ட அத்தனை
வனப்பொளிர்ந்த பொழுதுகளும்.
நானே மீளவும் மீளவும்
நிழல்களுக்கு என்னைப் பலியிடுகிறேன்.
செந்நிறம் படிந்த பலிபீடத்தில்
குறியுரைப்போனின்
வார்த்தை ஜாலங்களை
வாழ்க்கையென உரைக்கம் காலத்தில்
நானோ
பாதைகள் புரியாத பரதேசியாக நிற்கிறேன்.
இந்த நிழல்கள்
மேலும் மேலும் சலிப்பூட்டுகின்றன.
00
இந்த நகரத்தில் மீன்கள் இல்லை
ஒளியிறகுகளிலான அந்தியில்
செங்கடல் வரையும் வானத்திடம்
நான் மீன்களைக் கேட்டேன்
அது நட்சத்திரங்களை
கொட்டியிறைத்துவிட்டு கருங்கடலாயிற்று.
பின்னொருபோது
என் நகரத்தை அவசரமாக மடித்தெடுத்துக்கொண்டு
புறப்பட்டேன்.
காடுகளாலான பாதைகளில்
குறுக்கும் நெடுக்குமாக
மீன்களின் வடிவத்தில்
நூறாயிரம் சருகுகள்
காற்றின் தூண்டில் நுனியில்
துடித்தபடியிருந்தன.
அப்போதும்
என் நகரம் நீர்ப்பெருக்கற்றிருந்தது.
நான் அதை
பின்னும் சிறுசிறு மடிப்புக்களாக்கினேன்.
காற்றும் நுழையா தெருக்களாக
மடிப்பு ரேகைகள் நீண்டபடியிருந்தன.
பெருந்தருணத்தின்
சிற்றிழையென உருக்கொண்ட பொழுதுகளின்
கடைசி கணம்
வான் சிறுத்து நிலம் பருத்த
அந்தக் கணத்தில்
என் நகரத்தில் பெருமழை.
நான் வானத்திடம்
யாதொன்றும் யாசிக்காத போதும்
என் நகரம் ஈரத்தில் மிதந்தது.
சிற்றோடைகளில் நனைந்து நெளிந்தன
என் பாதங்கள்.
இரண்டிலும் மீன்களின் சாயல்கள்.
என் நகரத்தின்
முதல் மீன் நான்.
00
முற்றுப்பெறாத வானத்துக்குத்
தொலைவில்த்தான் நானிருக்கிறேன்.
சமரசங்கள் தீண்டாத என் ஒற்றை நட்சத்திரத்தை
ஒரு பறவையாய்க் காண நேர்கையில்
நான் பறவையாய் இருந்ததை மறந்துபோய்விடுகிறேன்.
இன்னும் நான் தொலைவில்த்தான்.
00
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.
//
சுடரழியும் சூரியனின் பொழுதில்
அவிந்தடங்கிய மெழுகுதிரியென இருந்தேன்.
அந்திகளின் மீது
தினம் அழுகிச் சிதையும்
செம்பழுப்புநிற முகில்களை
கடலின் கவிச்சை கவியும் காற்று
என் நாசியின் மீது கொட்டிச் சிந்துகையில்
சாமகானங்களின் பேதத்தை
முதல்முறை உணர்ந்தேன்.
பறவைகள் தீ பிடித்து வானெங்கும் அலைகின்றன.
எனது கானம்
மந்திரச் சொற்களாலானது.
அது மழையைப் போலவே ஈரம் கசிவது.
நான் யாருக்காக
இசைத்தேன் அதை.
எஞ்சிய காலத்தின் சிறகுகளை
அவை தரும் வலியை
இசைக்க முடியாதிருந்த காலத்தில்
சுடரழியாச் சூரியனே வானத்தை
முழுமையும் நிறைத்திருந்த காலத்தில்
வருடா மலரின் நறுமணத்துடன்
எனக்குள் புத்திருந்தன பாடல்கள்.
யாரையும் தீண்டாத வாா்த்தைகளின்
நீள் அடுக்குகளில்
மழை பொழிந்தது.
மழையின் கடைசி இறகும்
கனக்கும் படியாக
மவுனத்தில் விரிந்துகொண்டிருந்தன மலர்கள்.
யாரினதும் மனதையும் வருடாத மலர்கள்.
//
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.
00
கரிசனை நிரம்பிய முகத்துடன்
என் முற்றத்துக்குப் பறவைகள் வந்திருக்கின்றன.
நண்பர்களே!
எப்படியெல்லாம் 
ஒரு அற்பமான பண்டமாக புன்னகைகள்
மாறிவிட்டிருக்கின்றன பாருங்கள்.
முன்பு பல முறையும்
இந்தப் புன்னகைகளை நான் கண்டேன்
இதே வார்த்தைகளைக் கேட்டேன்
சலித்துப் போயிற்று என் முற்றம்.
கடவுளே!
வாயற்ற பறவைகளை என் முற்றத்துக்கு அனுப்பு
அல்லது காதற்ற பறவைகளை.
என் துயரங்களை இவைகள் மீளவும் மீளவும்
ஒப்புவிக்கின்றன.
என் சகோதரர்களின் சாவுக் காலத்தின் பாடலை
மீளவும் இசைக்கின்றன.
நான் எதையும் மறக்கவில்லை
இவை ஒப்புவிப்பதுதான்
என்னை எரிச்சலடையச் செய்கின்றன.
என் முற்றத்துக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது இவைகளின் வானம்.
இது பருவ காலம்
சிறகுகளின் ஈரத்தை உலர்த்த
தகிக்கும் என் முற்றத்துக்கு இவை வந்திருக்கின்றன.
நான் அறிவேன் கடவுளே
கைவிடப்பட்ட என் முற்றத்தைக்
கடந்து செல்வதைப் போலவே
இவை என் கனவுகளையும் கடந்து சென்றுவிடும்
இன்னும் சில நாளில்.
ஆனாலும் பருவகாலங்கள்
திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கும்
இதே புன்னகைகளோடும்
இதே வாா்த்தைகளோடும்
இன்னும் எண்ணற்ற இவை போன்ற பறவைகளோடும்.
00
தோற்றடங்கிய காலத்தின் நினைவுகளின் மீது
அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே! 
உன் விக்கிரகங்களின் மீது
அப்பிக் கடக்கும் பாசியினடியில்
இன்னும் உன் புன்னகை மீதமிருப்பதாக
நான் நம்புகின்றேன்.
வர்ணங்களால் ஒளியுட்டப்பட்ட அறைகளில்
போதையின் நாற்றத்துடன்
உனது புனிதம் பற்றிய கதைகளை
இன்னும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரானே!
நீர் அவசரப்பட்டு செத்துத்தொலைந்துவிட்டீர்
நீர் இல்லாக் காலத்தில்
எல்லோருமே புதிதாக வால் முளைக்க
தாவித்தாவி உம்புகழ் பாடுகின்றனர்.
பாத்தீரா கடைசியில்
காலம் அழகியதாக்கப்பட்ட
சிறுநீர்த்தொடடிகளில் மிதப்பதை.
நாய்களும் ஓலமிட அஞ்சிய நாட்களில்
மகிமை மாறாத உமது மந்திரங்களினாலான
ஒரு கீதத்தை மலம் நாறும் வெளியென
திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தனர்.
இன்று அவர்களின் வாய்களில்
அக்கீதங்கள் மலர்களாய் கிளைக்கின்றன.
போகட்டும் பிரானே!
உமது நாமத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புதிய பெயர்களுடன் உமது விம்பத்தின்
பிரதி விம்பங்களாக உலாவவருகின்றார்கள்.
பிரானே!
அவர்களை நீர் மன்னிப்பீராக
நீர் விட்டுச்சென்ற பாதையில்
அவர்கள் இன்னும் வழிப்போக்கர்களாகவே
இருந்துவிட்டுப் போகட்டும்.
நிச்சயமா
காலம் உம்மை ஒருபோதும் சாகவிடாது.
00
மலைகள் எழுந்து பறக்கும் ஒரு மாலையில்
கடைசியாக அவனைச் சந்திக்கின்றேன்.
மழைத்ததுளியைப் போலவே 
பார்வைகளால் ஈரம் சொட்டுகின்றான்.
நாவெழாத வார்த்தைகளால்
ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறான்.
கணங்கள்
செம்பழுப்பேறி உதிர்ந்துகொண்டிருக்கின்றன.
வானத்துக்கு இடப்படாத கதவு குறித்து
அவன் பலமுறை சொல்லக் கேட்டிருக்கின்றேன்
இக்கணம்
அவனே வானத்தின் மிகப்பெரிய கதவுபோலிருக்கிறான்.
மேகங்களைத் தருவிக்கின்றன
அவனது கண்ணீர்.
காரணம் காணும் ஆவல்
மேலெழுந்து பறக்கவில்லை என்னில்.
மவுனத்தின் சிறகுகளை
மேற்சட்டையாக அணிந்திருக்கிறேன்.
என் கண்களுக்கு ஒளியில்லை
சாபத்தின் கிடங்கில் வெந்துகொண்டிருக்கிறேன்.
கடைசிவரை
நான் பேசக் காத்திருந்தவற்றை
அவன் மவுனத்தால் பேசிக்களைக்கின்றான்.
மவுனத்தின் மொழியின் மீது
நத்தையாக ஊர்ந்து செல்லும் படகில்
நானும் அவனும் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்
எதிரெதிர்த் திசைகளில்த்தான்.
என்றாலும்
வானத்துக்குக் கதவுகளானவனின்
புட்டாகவும் சாவியாகவும்
நான் ஒருபோதுமிருக்க விரும்பவில்லை.
வானத்தை விடவும்
அழகாக இருக்கின்றது அவனது மவுனம்.
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்