சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சித்தாந்தன் கவிதைகள்

04 அக்டோபர், 2015


என் நினைவுகளில்
நட்சத்திரங்களைப் பயிரிட்ட படி
கடந்துபோகிறது ஒரிரவு.
மின்னும் தாரகைகளின் நடுவில் யாரோ
கைவிட்டுச் சென்ற தனிமையின் கரியநிறத்தை
வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.
நிலவு பற்றிய நினைவுகளற்ற
இரவின் விசுவாசிகளின் கவிதைகள்
என்னை சலிப்படையச் செய்கின்றன.
இரத்தத்தின் வர்ணங்களை
காலைச் சூரியன் பெய்வதற்கிடையில்
நான் கடந்து போய்விட வேண்டும்
காயாத நினைவுகளின் வெளியை.

00
என்னை நீ நேரிய கோடுகளால் வரையலாம்
வளைந்த கோடுகளால் வரையலாம்
வட்டமாக சதுரமாக
நீள்வட்டமாக முக்கோணமாக
எப்படியும் வரைந்துவிட்டுப் போகலாம்.
நான் எப்போதும் கோடுகளாகவே இருக்கிறேன்.

இருத்தலுக்கும் இன்மைக்குமிடையில்
நீளும் வெளியில்
பறந்துகொண்டிருக்கும் பட்ஷியின் பாதை
என் கோடுகளால்த்தானானது.
அதிகாலையிலெழுந்து
அந்தியில் படும் சூரியனின் பாதையும்.
சில நேரங்களில் வண்ணங்களில் குழைகின்றேன்
பலபோதுகளில் கருமையில் நிரம்பித் ததும்புகின்றேன்.
அதோ ஒரு குழந்தை
என் கடந்த கால்த்தின் நினைவுகளை
தன் பிஞ்சுப் பாதங்களால் வரைந்து செல்கிறது.
அதோ காலத்தின் சாட்சியாக
யாசித்துக்கொண்டிருக்கும் முதியவனின் முகத்தில்
படர்ந்திருக்கும் கோடுகளில்
அதே யாசிப்பின் வார்த்தைகளோடு
நானேயிருக்கின்றேன்.
நான் கோடுகளில் லாவகமாக வசப்பட்டுவிடுகின்றேன்
நீ எப்படியாவது வரைந்துவிட்டுப் போ.
00
இந்த இரவை யன்னலாக்கி
திறந்து வைத்திருக்கின்றேன்.
என் இமைகளின் வழி நுழைகின்றன
நட்சத்திரப் பறவைகள்.
முன்பு பறவைகளைப் போலத்தான்
பறந்துகொண்டிருந்தது இந்த இரவும்
சற்றுமுன்புதான்
அதன் மீது சட்டங்களை அடுக்கி யன்னலாக்கி
உலராத காற்றின் வழியில்
திறந்து வைத்திருக்கின்றேன்.
அதன் மீது
உதிர்ந்த இறகுளை
திரைச் சீலைகளாய் நெய்கிறது காற்று.
தீராப் பகையாளியாய்
காற்று நுழையும் கணங்களில்
எதிர்கொள்ளத் தயங்கும் கடனாளியாக
நான் வெளியேறிவிடுகிறேன் இரவைவிட்டு.
இரவு என் மீதுதான்
தன் வலிநிரம்பிய கானத்தை இசைக்கிறது.
நானோ கானங்களைத் தின்னாச்
செவியுடையவனாகச் சபிக்கப்பட்டிருக்கின்றேன்
ஈரமற்ற காலத்தால்.
யன்னல்களே சிறகுகளாக விரிகின்றன
வானமோ தூர ஏகிச் செல்கின்றது.
தனித்தொலிக்கிறது
இரவின் கானம்.
00
என் சயனத்தின் நீர்ப்பரப்பில்
நீந்துகின்றன மீன்கள்.
நான் கணத்தில்
என்னை மீனாகப் பாவனை செய்தவனாய்
நீர்ப்பரப்பின் அடியாளம் வரை
மூழ்கியெழுகின்றேன்.
மீன்கள் என்னை ஏளனம் செய்கின்றன.
ஒரு சருகென மேலெழுந்து மிதக்கின்றேன்
கைகளைத் துடுப்பாக்கத் தெரியாத
என் கனவுகளில்
இன்னும் மீன்கள் நீந்தியபடிதானிருக்கின்றன.
ஓளிரும் அவற்றின் செதில்களும் செட்டைகளும்
என்னைப் பைத்தியக்காரனாக்குகின்றன.
நீர்ப்பரப்புக்கு வெளியே மீன்களில்லை
நீர்ப்பரப்பினுள்ளே நானும் மீனாக இல்லை.
இன்னும்
என் சயனத்தின் நீர்ப்பரப்பில்
நீந்துகின்றன மீன்கள்.
00
என் சுவர்களில்
மரங்களை வரைகின்றேன்.
முட்களாலான கிளைகளையும்
பசி போக்காத நச்சுக் கனிகளையும்
நிழலைப் பெய்யாத இலைகளையுமுடைய
மரங்களை.
அவை
காடுகளை ஏளனம் செய்தவாறு
மேலும் மேலும் ஓங்கி வளர்கின்றன.
கிளைகளில்
வந்தமரும் பறவைகளோ
பசியுடன் விழித்திருக்கின்றன.
மரங்களில் மேலும் கீழுமாய்
ஊர்ந்து திரியும்
ஒரு நூறு எறும்புகளும்
கண்டடைந்ததாக குதூகலிக்கும் பாதைகளில்
சுனைகளில்லை
நச்சுச் சுவறாத கனிகளில்லை.
பசித்திருக்கும் பறவைகளிடம்
நச்சுக் கனிகள் பசியை போக்கிடாதா? என்று
நான் கேட்கவில்லை.
நான் மரங்ளைச்
சுவரிலிருந்து அழித்துவிட்டு
உணவருந்தச் செல்கிறேன்.
பறவைகளும் பசித்தவயிறுகளுடன்
எழுந்து பறந்துவிட்டன.
எறும்புகள்தான் இன்னும் சுவரில் ஊர்கின்றன
சுனைகளையும் கனிகளையும் தேடியபடி.
00
கடற்கரை வெளி
....................................................
1
சாவுகளால் ஓலமிடும்
கடற்கரை வெளியில் முளையிடுகின்றன
குழந்தைகளின் விரல்கள்.
2
காகங்களும் கரையாது
வெறித்து நீளும் கடலில்
அலைகளும் செத்தபின்
துயரங்களால் நிறைந்த காற்று
மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.
3
பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது
அந்திச் சூரியன்.
குருதியின் நிறத்தை காறியுமிழ்ந்து போயின
நாட்கள்
போர் நாட்கள்.
4
சுட்டுவிரல் துண்டிக்கப்பட்டவனின் துப்பாக்கி
துருவேறித் துருவேறி
உப்பு மணலில் புதைகின்றது.
5
மரணம் நிரம்பிய கடற்கரை முற்றத்தில்
கால்களுக்குள் மிதிபட்டுச் சிதைந்துபோயிற்று
அவசரத்தில் மணமுடித்தவனின் கனவுகள்.
6
மாபெரும் பறை
தோல் கிழிந்து கிடக்கிறது.
வெற்றிக் களிப்பின் கீதங்களை
முணுமுணுக்கவியலாது
வயிறு பொருமித் துடிக்கிறது காற்று.
7
இலைகள் புலுண்டி மணக்க
மரங்களில் செத்துத் தொங்குகின்றன பறவைகள்.
பிணங்களை எரியூட்டிய தீயில்
புகைப்பிடிக்கிறான் படைவீரன்.
8
ஒப்பாரிகளும் ஓலங்களும் அடங்கிய நிலத்தில்
கொலையாளிகளின்
வெற்றிக் கூச்சலென இரைகிறது கடல்.
9
யாரும் திரும்பாத நிலத்தில்
பாலையை விரித்தபடி
கோபுரங்கள் உயர்கின்றன.
நினைவுகளை அழிக்க முடியாதவனின் குரலோ
அந்தரத்தில்…
10
சிதம்பிய கடலின் நுரைகளிலெல்லாம்
புழுக்கள்.
11
வானம்
கடல்
தரை
யாவுமே
கைகளற்றவனின் கனவுகளுக்கும் தொலைவில்.
12
கள்ளிகளும்
இன்னும் முட்செடிகளுமாய்
நினைவுகளின் புதரடர்ந்த நிலம்.
00
பறவைகளை அள்ளி வந்து 
என் அறை முழுதுமாக கொட்டியிருக்கிறது காற்று.
என் அறையின் கரிய சுவரெங்கும்
நான் வரைந்து வைத்திருந்த பறவைகள்
காற்றிடம் இறைஞ்சுகின்றன
அறைக்கு வெளியே விரிந்திருக்கும் வானத்தை காட்டுமாறு.
நான் கத்தரித்து வைத்திருக்கும்
அவற்றின் சிறகுகளுக்கு பறக்கக் கற்றுக் கொடுத்ததில்லை
விரிந்த வானத்தைப் பற்றி சித்திரத்தை விதைக்கவில்லை
ஆயினும் பறவைகள் அறிந்துவிடுகின்றன
பறத்தைலையும்
வானத்தையும்.
என் அறைக்கு வந்து சேர்ந்திருக்கும் புதிய பறவைகளை
என் கரிய சுவர்களில் தொங்கவிடுகின்றேன்.
அவை வானத்தின் கருமையில் தடுமாறி
மீண்டும் மீண்டும் சுவர்களில் மோதுகின்றன.
யன்னலினை மேவி மேலெழும் எனது பறவைகள்
வானத்தின் நீலத்தில் மிதக்கின்றன.
இன்னும் அறையில் மிதமான கறுப்பு நிறம்.
நான் புதிய சிறகுகளைச் சேகரிக்கின்றேன்.
00
தயக்கங்களை சொற்குறிகளுடன் கடந்தேன்
நிராதரவாய் காற்றில் அலைந்தன பொழுதுகள்.
மயிர்க்கொட்டியின் அசைவுகளுடன்
பழியுணர்ச்சியின் கரங்களில் புன்னகையைச் சூடிக்கொண்டு
எதிர்ப்படுகின்றனர் மனிதர்.
நீலம் கரைந்த என் கண்களில் சலனமுறும் காட்சிகளை
அடுக்குகளாக்கி ஒழுங்குபடுத்துகின்றேன்.
நினைவுகளில் உதறமுடியாத வடுக்கள்
சிறகு கிளர்த்திப் பறக்கவில்லை கடைசிவரை.
சாமங்களும் மதியங்களும் கலையாத என் பொழுதுகளை
சூரியனோ நிலவோ தாண்டவில்லை.
வெறும் பிரமைகளாலான ஒரு வனாந்தரத்தின் அந்தியில்
சிறு கல்லென கிடக்கின்றேன்.
00
இந்த எச்சில் பாத்திரத்தைக்
கழுவி வையுங்கள்
குருதியையும் நிணத்தையும் 
சமைத்துண்டவர்கள்
இதை எறிந்துவிட்ட போயிருக்கிறார்கள்.
தங்களின் கைகளை
வாசனைத் திரவியங்களில் தோய்த்தெடுத்துவிட்டு
புலால் நாறும் வாய்களால்
மலர்களின் மகத்துவம் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும்.
பழுப்பிலைகளில் துளிர்விடும்
யந்திரச் சொற்களால்
காலத்தின் ஊனத்தில்
பறக்கவிடுகிறார்கள் மகிமைக் காலத்தின்
வெண்ணிறத் துகிலை.
புரவிகளின் கொதிப்படங்காத் தெருவில்
இந்தப் பாத்திரம் கிடக்கிறது.
தனிமையின் நிமிடங்களில்
கரையேறாது கழிகின்றன
ஞாபகங்களின் திசுக்கள்.
யாராவது
இதைக் கழுவி வையுங்கள்
00
நான் விட்டுச் செல்கின்றேன்
சிறகுகளற்ற ஞாபகங்களை
மற்றும்
இலைகளற்ற பெருவிருட்சத்தை
இன்னும்
குளிர்மையற்ற மழையை
ஒலியற்ற எனது குரலை
இந்த வானம்
வனாந்தரத்தின் சாயலுடன்
மேலும் மேலும் விரிகின்றது.
யாராவது
எடுத்துச் செல்லுங்கள்
ஒரு பறவைக்கு
பறத்தலிலும் மேலானதாக
எதுதான் இருக்க முடியும்.
ஞாபகங்கள்
நீரூறிய பஞ்சாய் கனக்கின்றன. ்
நான் செல்ல விரும்புகின்றேன்
ஞாபகங்கள் அழிந்த பெருவெளிக்கு.
யாராவது எடுத்துச் செல்லுங்கள்
என் சிறகுகளற்ற ஞாபகங்களை.
00
கடைசிச்சொல்
....................................................................
நான் விலகிச் செல்லவே விரும்புகின்றேன்
தீயின் நர்த்தனத்தில்
அலைவுறும் காலத்தை
எழுதித் தீர்த்துவிட முடியாத சொற்களோடு
வாழ்வு கழிகிறது.
என் பிரிய நண்பர்களே
நாம் நிரப்பி வைத்திருக்கும் மதுக்குவளைகளில்
காலத்தின் சீழாய்
நுரைகள் ததும்புகின்றன.
இந்த யுகத்தின்
இறுதியில் புயலைக் கைகளால்
தீண்டிக் களித்த சிறுவனை
நான் முத்தமிடுகையில்
அவனது உதடுகளில் குருதியின் வீச்சமடித்தது.
போதும் நண்பர்களே
மணல் ஈறுகளில்
உறைந்து போயின் மிக நீண்ட துயரத்தின்
தடயங்கள்.
நாங்கள் எதைப் பேசுவது?
கனவுக்கும் வாழ்தலுக்குமிடையில்
இளமையின் சிறகுளில் ஒளிரும்
ஓராயிரம் வர்ணங்களின் அழகையா?
தவிர
சூரியன் வடிந்திறங்காத கடல்களின் மேலே
துள்ளியெழும் ஒளிக் கற்றைகளையா?
முழுமையும்
எரிந்தடங்கிய வெளியில்
முளைக்காத ஈச்சம் மரங்களைப் பற்றியா?
அல்லது
ஒரு சொட்டும் உப்பின் சுவைபடராத
துளி நீருக்காக அலைந்ததையா?
என் பிரிய நண்பர்களே
காலத்தின்
அதியுன்னதமான விஷத்துளியை
நாம் பருகிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த விஷத்தின் கனத்தோடு
நான் இனி விலகிச் செல்வதுதான் நல்லது.
இறுமாப்பின்
கடைசிச் சொல்லிலும்
குருதிதான் மீந்திருந்தது
போதையின் கட்டுக்கடங்காத் தினவோடு.
00
தீராப் பெருங்கடல்
............................................
யௌவன விருட்சம்
இலைகளை உதிர்க்கும் காலத்தில்
கடலை அழைத்துக் கொண்டு நீ வருகிறாய்.
யுத்த சந்நதம் படரும் விழிகளில்
தாண்டவமாடுகிறது
இழை பிரியும் மின்னலின் ரேகைகள்.
துளியும் அமிர்தமற்ற ஒரு கிண்ணத்தை
வெறுமையால் நிறைக்கிறேன்.
நீ யௌவன விருட்சத்தின் இலைகளைச் சுருட்டி
குழலுாதுகிறாய்.
கசியும் இசையில் ததும்பும்
போதையின் நெடியில் உலர்கின்றன
ஈரித்த இரவுகள்.
இன்னும்
எதன் மீது
தாகம் சுனையைத் திறக்கிறது.
மஞ்சள் வெய்யிலில்
பூத்தபடியிருக்கும் பகலின் பிரகாசம்
ஏன் சுடர் சுருங்கி அந்திமமாய் அவிகிறது?
தினவடங்கிய முதுமையில் மலர்வது
காமத்தின் முட்களோ
காதலின் மலர்களோ இல்லை.
இரண்டுக்ககுமிடையில்
தேகத்தை கடந்து செல்லும் ஏதோவொன்று
அது
முத்தங்களாலோ
புணர்ச்சியினாலோ தீர்வதில்லை.
தீராப் பெருங்கடல்.
00
ஊழி
..............................................
எனது அன்புச் சகோதரி
ஒரு பிரளயத்தைப் கடந்து வந்தவர்களிடம்
எதைப்பேச
கருணையின் மகத்துவத்தையா?
அல்லது
கைவிடப்பட்ட ஒரு குடிசையாய்
காலம் எஞ்சிக் கிடந்ததையா?
எச்சிலிலிருந்துதான் சிலந்தி வலை பின்னுகின்றது
தோல்வியின் ஊழிப்பிளவில்
நாங்கள் மனிதர்களைத்தான் இழந்தோம்
அதே குருதியும் தசையும் போர்த்திய
தேகமுடைய மனிதர்களை.
பிரார்த்தனைகள் யாவும்
கடவுளர்களைப் பழித்துரைப்பதாயின
கேடயங்கள் யாவும்
வாள்களாயின.
எனது அன்புச் சகோதரி
துக்கிக்கவும் முடியாக் கணத்தில்
தாகித்த நாவுகளை
குருதியிலா நனைக்க முடியும்?
கடைசிவரை
ஒரு சாமகானப் படகுக்காகக் காத்திருக்கையில்
கடல் ஏன் பின்னேகிற்று?
00
கடவுளின் நாள்
.....................................................................
மின் விளக்குகளால் ஒளிரும் நாளை
கடவுளின் நாளாக பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.
இருள் மண்டிய பொழுதுகளில்
கடவுளை அதிகாரத்தின் குறியீடாக
மூலைகளெங்கும் நாட்டியவர்கள்
இன்றைய நாளை
அதியுன்னதமென சுவர்களில் எழுதிச் செல்கிறார்கள்.
நாவுலர்ந்தவர்களின் குரல்வளைகளை
அறுத்தெறிந்தபடி
இதனை கருணையின் நாளென்கிறார்கள்.
கடவுளே சொல்லும்
இந்த இரவில் உம்மால் பாதிவிழி மூடமுடிகிறதா?
சாவின் ஓலம் மிதக்கும் வெளியில்
கருணையின் குரலில் பாட உம்மிடம் ஏதிருக்கிறது?
நாங்கள் வைத்திருக்கிறோம்
இருளில் கரைந்துபோன ஆயிரமாயிரம் மனிதர்களின்
ஓலங்களை.
மணற்தரவைகளில் புதையுண்டுபோனவர்களின்
அழுகைகளை.
நீர் நிஷ்டையில் விழி தாழ்த்தும் இடமெங்கும்
அந்தரிக்கின்றன எண்ணற்ற ஆத்மாக்கள்.
கடவுளே
சாந்தம் புதைக்கப்பட்ட நிலத்தில்
புறமெல்லாம் கேட்கும்
தெய்வ கீதங்களைத் தின்று பசியாற முடியாத சிறுவன்
மழைக்குடில்களின் கீழ் படுத்துறங்குகிறான்.
கடவுளே
இந்த நாளை உமக்கானதாக உணருகிறீரா?
29.05.2010
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்