சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

22 ஜூன், 2012


சித்தாந்தன்

“அவருக்கு அது ஆகாதென்று தெரிந்த பின்னும் அவர் அதைச் சுமக்க விரும்பினார்.” 

ன்றைய நாள் அகங்காரமூர்த்தியைப் பொறுத்த வரையில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இருந்திருக்கும். நெடுங்குரலோனின் ஐந்து சீடர்களில் ஒருவன்; தேவனாய் ஒருவன் அலுவலகப் பொறுப்பேற்கும் நாளிது என்று கத்தியபடி அலுவலகத்தின் வளவெங்கும திரிந்தான். நான் நிறுவனத்தின் மாடியில் நின்றவாறு தெருவையும் அவர்களின் செயல்களையும் அவதானித்துக்கொண்டிருந்தேன்.
அன்றைக்கு காகம் வளமைக்கும் மாறாக மரத்திலிருந்து வேறொரு குரலில் கரைவது போலிருந்தது. காகங்கள் யாரேனும் வீட்டுக்கு வருவதற்கு முன் முன்னுணர்ந்து கரையத் தொடங்கிவிடும் என அம்மா எனக்குச் சொல்லியிருக்கிறாள். நானும் அதை பரிட்சித்துப் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் வீட்டின் வேலிப் படலையில் காகங்கள் கரையும் நாட்களில் சிலர் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்தான். ஆனால் சிலநேரங்களில் அப்படி நடப்பதுமில்லை. அம்மா சின்ன வயதில் எனக்கொரு பாட்டுச் சொல்லித் தந்திருந்தாள்.

“காக்கா கருங்கண்ணி
வேப்பம் பழம் தின்னி
வேற்றிலைச் சாறு தின்னி
உங்கட வீட்டார் வந்தால் பறந்து காட்டு
எங்கட வீட்டார் வந்தால் நடந்து காட்டு”

வீட்டுக்கு ஆக்கள் வராதபோதெல்லாம் காகத்தின் உறவினர்கள் யாரோ வரப்போகிறார்கள் போல இருக்கு அதுதான் கத்துதாக்கும் என்று நினைத்துக் கொள்வேன். என்றாலும் அதின்ர உறவினர் வாரதென்றால் ஏன் எங்கட வீட்டுப்படலையில வந்து கத்த வேணும் என்று யோசிப்பன். பிறகு எங்கட வேப்ப மரத்திலதான் அதின்ர கூடு இருக்குதாக்கும் என்று மரத்தின்ர கிளைகளில தேடிப்பாப்பன். பெரும்பாலும் அங்கு கூடு இருந்துதானிருக்கு. ஆனாலும் சந்தேகம் குறையுறதில்லை.
காகத்தின் கரைதலும் சீடனின் குரலும் ஒன்று போலவும் ஒருமித்தும் ஒலித்தன. அதனால் காகம் அகங்காரமூh;த்தியின் வரவை முன்னுணர்ந்துதான் கரையுது என்று நினைத்துக் கொண்டேன். காலையே சீடர்கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அலுவலக வேலைகளில் காட்டாத உற்சாகமும் தீவிரமும் அவர்களில் தெரிந்தன. தங்களுக்குத் தெரிந்த ஒருவனை அலுவலக அதிகாரியாகக் கொண்டு வருவதற்கு அவர்கள் காட்டிய அக்கறைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதும,; பெரும்பாலும் அகங்காரமூh;த்திதான் அதிகாரியாக வரக்கூடும் என்ற ஊகமும் பலரிடமிருந்ததுதான். சீடர்கள் சில நாட்களுக்கு முன்னிருந்தே தங்களுக்குள் இரகசியமாகக் கூடுவதும், ஏற்கனவே அதிகாரியாக இருக்கும் பத்மராசனைத் துரத்துவதற்குமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். கொஞ்ச நாட்கள்தான் திரைமறைவில் அவர்களின் வேலைகள் நடந்தன. பின்னரெல்லாம் வெளிப்படையாகவே பத்மராசன் பற்றிய அவதூறுகளைப் பரப்பத் தொடங்கினார்கள். பத்மராசன் ஒரு சாதுவான மனிதன் போலிருந்தாலும் அவர் நரிக்குணம் கொண்டவர் என சீடர்கள் அலுவலக வளவெங்கிலும் எதிர்ப்படும் எல்லோரிடமும் சொல்லித் திரிந்தனர். இதைப் பலர் நம்பின போதும் சிலர் பத்மராசனின் நெகிழ்வுத் தன்மைகளுக்காக அவா; துரத்தப்படுவதை விரும்பியிருக்கவில்லை.
குரலோனும் சீடர்களும் அகங்காரமூர்த்தி பதவியேற்கும் நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானித்திருந்தனர். அதற்காக அலுவலப் பணியாளர்களிடமிருந்து ஒரு தொகைப் பணத்தினை அவர்கள் வசூலிக்கத் தொடங்கியிருந்தனர். சீடர்கள் கூட்டம் அலுவலப் பணியாளர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு வந்தது. என்னிடம் வந்தபோது “தனிப்பட்ட எவரையும் வரவேற்பதற்கு என்னால் பணம் தரமுடியாது” என்று மறுத்துவிட்டேன். அலுவலகத்தில் பணிபுரியும் இளையவர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னை அச்சுறுத்துவது போலப் பார்த்துவிட்டு அப்பால் சென்றனர். இப்படிப் பலரும் மறுத்திருந்தார்கள். சீடர்களில் ஒருவன்தான் பாலன். இவன் அலுவலகத்தில் கழிக்கும் நேரத்தைவிட தன் வியாபாரத் தலத்தில் கழிக்கும் நேரந்தான் அதிகமாக இருந்தது. இவனின் இந்த தனத்தினால்த்தான் பத்மராசன் இவனையும் சிலரையும் அலுவலகப் பணிகளில் ஒதுக்கி வைத்திருந்தார் என நம்பப்பட்டது. இந்தச் சீடன்தான் பணம் தராதவர்களின் பெயர் விபரத்தை புதிய அதிகாரிக்குச் சமர்ப்பிக்கப் போவதாகவும், பணம் கொடுக்காதவர்கள் அவருக்கு எதிராக செயற்படுகிறவர்கள் என்ற வாறாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டதோடு சிலரை எச்சரித்துமிருந்தான்.

இப்படியான அசிங்கக் கூத்துக்களின் பின்னர்தான் அன்று அகங்காரமூர்த்தி அலுவலகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. சீடர்கள் பக்திப் பரவசத்தில் உறைந்து போயிருந்தார்கள். காலை அலுவலகத்தின் வளைவில் வாழைமரங்கள் கட்டப்பட்டன. தோரணங்களால் அலுவலக வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாதஸ்வரக் காரர்கள் வந்திருந்தார்கள். அலுவலகமே விழாக்கோலம் கொண்டிருந்தது. சில பணியாளர்கள் வீதியின் இரு மருங்கிலும் பு+க்களுடன் நின்றிருந்தனர். சீடர்களின் தலைவனான நெடுங்குரலோனும் அவனின் நெருங்கிய தோழனும் மாலைகளுடன்  அலுவலக வீதியின் தொடக்கத்தில் நின்றிருந்தனர்.

இந்தக் கூத்துக்களுக்குச் சற்று முன்னர்தான் நான் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். நான் வழக்கமான நேரத்துக்குத்தான் வந்திருந்தேன். அகங்காரமூர்த்தியின் வரவு பற்றி அறிந்திருந்தாலும் எவரையும் மாலை மரியாதைகள் செய்து வரவேற்க வேண்டும் என்ன சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாததால் நான் வீதிக்குச் செல்லவில்லை. அலுவலகத்தின் மேல் மாடியில் ஏறி ஒரு அறையின் யன்னல் வழியாக எல்லாவற்றையும் அவதானித்தபடியிருந்தேன். சீடர்கள் மிக்க பதட்டமாகக் காணப்பட்டனர். ஒருவரோடு ஒருவர் ஏதோ பேசிக்கொண்டும் அடிக்கடி வீதியின் திருப்பத்துக்குச் சென்று அதிகாரி வருகிறாரா எனப் பார்த்தவாறுமிருந்தனர்.
சரியாக ஏழு நாற்பத்தெட்டு மணியிருக்கும் நீல நிறக்கார் ஒன்று திருப்பத்தில் வந்து நின்றது. சீடர்களின் முகத்தில் ஒளி பிறந்தது. நெடுங்குரலோன் விரைந்து சென்று காhpன் கதவைத் திறக்கவும் அதிகாhp இறங்கினார். கறுப்பு நிறக் காற்சட்டையும் நீல நிறச் சட்டையும் அணிந்திருந்தார். மிடுக்கான உயரம், கழுத்துப் பட்டியும் அணிந்திருந்தார். கறுப்பு நிறமான கண்ணாடி அவரின் முகத்தை மேலும் இருட்டாக்குவது போலத்தான் எனக்குப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழங்கின. சீடர்கள் மாலைகளை அணிவித்தார்கள் கைகளைக் கொடுத்து வரவேற்றனர். பணியாளர்கள் மலர்களை எறிந்து வரவேற்றனர். அகங்காரமூர்த்தி புன்னகை செய்தார். அலுவலக வாயிலுக்கு வந்தபோது நெடுங்குரலோன் வலது காலை எடுத்து வைத்து வாருங்கள் என்று அன்பாக வேண்டிக் கொள்ளவும் அவரும் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வந்தார்.சீடர்களும் மேலும் சிலரும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டும் கைகளைக் குலுக்கிக் கொண்டுமிருந்தார்கள். இந்தச் சடங்குகள் சற்று நேரம்வரை நீடித்துக்கொண்டிருந்தது. நான் மாடியிலிருந்து இறங்கி வந்து தாபனுடன் சேர்ந்துகொண்டேன். சிலரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அதிகாரிக்கு முன்னர் மிகுந்த பணிவையும் மரியாதையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 சீடர்கள் அவரை அவரது அறைக்கு அழைத்துச் சென்று கதிரையில் அமர வைத்தார்கள். இருள்நிறக் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் ஏ.சியிலிருந்து பரவிய குளிர் அதிகாரியை மெய்மறக்க வைத்தது. சீடர்கள் அவரது தோழ்களிலிருந்த மாலைகளை வாங்கி வெளியே கொண்டுபோய் போட்டனர். அப்போதுதான் பத்மராசன் உள்நுழைந்தார். நேராக அதிகாரியிடம் சென்று கைகளைக் குலுக்கிக் கொண்டார். தானும் இங்கேயே இரண்டாம் நிலை அதிகாரியாக திரும்பவும் நியமிக்கப்பட்டிருப்பதால் தன்னாலான உதவிகளை அவருக்கு வழங்குவதாக உறுதியளித்தார். சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஏளனப் புன்னகை செய்தனர். பத்மராசன் இவற்றையெல்லாம் அவதானித்தபடி அறையிலிருந்து வெளியேறினார்.
அலுவலக ஊழியன் வாசுக்குட்டி கையில் பல கோப்புக்களுடன் உள்நுழைந்தான். கோப்புக்களை அதிகாரியின் மேசையில் வைத்தான். அதிகாரி அதிலொன்றை எடுக்க முற்படுகையில் சீடர்களில் ஒருவன் இன்னும் ஐந்து நிமிடங்கள் பொறுங்கள் சுபநேரமாகட்டும் என்றான். அதிகாரி ஐந்து நிமிடங்கள் காத்திருந்து கோப்பொன்றை எடுத்துத் திறந்தார். சீடர்கள் மகிழ்ச்சிப் புன்னகையுடன் அறையிலிருந்து வெளியேறினர். அவர் கோப்பை ஒவ்வொரு பக்கமாக விரிக்கத் தொடங்கினார். பிறகு தலையைச் சொறிந்தவாறு தன் கதிரையில் லேசாகச் சாய்ந்தார். அந்த ஏ,சிக் குளிருக்குள்ளும் அவரது முகத்தில் வேர்வைத் துளிகள் அரும்பின.

அன்று பிற்பகலே அகங்காரமூர்த்தி அனைத்துப் பணியாளர்களையும் சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அலுவலக ஊழியன் வாசுக்குட்டிதான் அந்தத் தகவலைப் பணியாளர்களுக்கு பயபக்தியுடன் சொல்லிக் கொண்டு திரிந்தான். கூட்டம் ஒன்று முப்பது மணிக்குத் தொடங்கவிருந்தது. பணியாளர்கள் எல்லோரும் மண்டபத்தில் கூடியிருந்தனர். சரியாக இரண்டு மணியிருக்கும் அகங்காரமூர்த்தி மண்டபத்துக்குள்; நுழைந்தார். அவரின் பின்னே பத்மராசனும் வந்தார் எல்லோரும் எழுந்து நின்றனர். சீடர்களுக்கு குழப்பமாக இருந்தது. பத்மராசனும் அகங்காரமூர்த்தியுடன் வருவதால் அவருக்காகவும் எழுந்து நிற்பது போலாகிவிடும் என்று அவர்கள் சங்கடப்படுவது தெரிந்தது.
சம்பிரதாயமான வணக்கத்துடன் அகங்காரமூh;த்தி பேசத்தொடங்கினார். “நான் இந்த அலுவலகத்துக்கு பணிபுரிய உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்.”  என்று அவர் தொடங்கிய போது பெருங்குரலோன் கைதட்டினார். சீடர்கள் அவருடன் சேர்ந்து கைதட்டினார்கள். “நான் எல்லோருடனும் நட்பாக இருக்கவே விரும்புகின்றேன் எனக்கு ஒத்துழைத்தால் நான் யாரையும் பகைக்க மாட்டேன் ஒத்துழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எனக்குக் கீழே வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் கடிதம் எழுதித்தரலாம் அவர்களின் இடமாற்றத்துக்கு நான் வழிசெய்கிறேன்.” என்று பேச்சைத் தொடர்ந்தார். சீடர்கள் ஐந்துபேரும் எங்களைத்திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள். எங்களில் பலர் பயந்துதான் விட்டனர். இடமாற்றம் என்ற சொல்லே அனைவரையும் கிலி கொள்ள வைத்தது. அப்போதுதான் நான் அகரங்காரமூர்த்தியை ஆழமாகக் கவனித்தேன் அவர் மிடுக்காகக் காணப்பட்ட போதும் அவரது முள்ளந்தண்டு ஏதோ உள்வளைந்திருப்பது போலத்தானிருந்தது.

மண்டபம் முழுவதும் நிசப்தமாகிவிட்டது. வந்த முதல் நாளில் அதிகாரியின் உரையில் அதிகாரம் தொனித்தது பலருக்கும் ஏமாற்றமளித்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இது ஏமாற்றமானதாகப் படவில்லை. அதிகாரிகள் முதலில் அதட்டித்தான் கதைப்பார்கள். பின்னரெல்லாம் தமக்கான ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அக்குழுவின் நலன் கருதியே செயற்படுவார்கள். பத்மராசனும் இப்படித்தான் பொறுப்பேற்றபோது பேசினார். பிறகு ;அப்போது துணையதிகாரியாக இருந்த ருத்திரகுமாரனின் சொற்படிதான் செயற்பட்டார். இந்த யதார்த்த விதி இன்னொரு தடவை மெய்பிக்கபடக் கூடுமோ? என்று யோசித்தேன்.

அதிகாரியின் உரையினைத் தொடர்ந்து துணையதிகாரி பத்மராசன் பேசினார். தான் நெருக்கடியான காலத்தில் நிறுவனத்தை அப்போது பொறு;பேற்றதாயும் தன்னால் முடிந்தவரை நிறுவனத்தின் மேன்மைக்காக விசுவாசமாக செயற்பட்டதாகவும் பேசினார்.
அவரின் உரையின் போது சீடர்கள் தங்களுக்குள் எதையோ பேசிக்கொணடிருந்தனர். சபையில் மெல்லிய சலசலப்பு ஏற்பட்டது. புத்மராசன் எதையும் பொருட்படுத்தாது பேசினார்.

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அதிகாரியை மனமுவந்து வரவேற்பதாகக் கூறினார். துhன் துணையதிகாரியாக மீண்டும் இங்கேயே பணிபுரிவதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார். எனது காலத்தில் இருந்த நெருக்கடியும் மரண அச்சுறுத்தல்களும் குண்டு வெடிப்புக்களும் தற்போது இல்லாததால் தலைவரினால் நிறுவனத்தைச் சிறந்த முறையில் வழிநடத்த முடியும் . அதற்கு தன்னால் இயன்ற முழு உதவிகளையும் புரியத்தயார் எனவும் பேசி முடித்தார்.

சபையில் இருந்த சிலர் கைகளைத் தட்டினர்.

பத்மராசன் நிறுவனத்தை பொறுபடபேற்ற போது நாடு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. சுமாதனம் பேசப்பட்ட காலம் முடிந்து போருக்கான முன்னாயத்த வன்முறைச் சம்பவங்கள் நிகழத் தொடஙகியிருந்த காலமது. நிறுவனத்தின் முன்னண அதிகாரியும் வன்முறைச் சம்பவம் ஒன்றில்த்தான் கொல்லப்பட்டார். ஆதலால் நிறுவனத்தை எவருமே பொறுப்பேற்கத் தயங்கிய நிலையில் துணையதிகாரியாக இருந்த பத்மராசனே நிறுவனத்தை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பத்மராசன் பொறுப்பேற்றவுடன் முதலில் செய்ததே ஏற்கனவேயிருந்த சட்டதிட்டங்களை மாற்றியமைத்ததுதான். ஆத்தோடு தனக்கான விசுவாசக்குழு ஒன்றையும் அமைத்தார். தன்னை எதிர்ப்பவர்களின் அதிகாரங்களைப் பறித்தெடுக்க தன் விசுவாசக்குழுவைப் பயன்படுத்தினார். இதனால் பத்மராசன் எதிர்பார்க்காத அளவுக்கு அவருக்கு எதிரான அதிருப்பதிக்குழு வளரக் காரணமானது. அது பத்மராசனை அதிகாரத்தில் இருந்து விலக்கும் அளவுக்கு வலிமையான குழுவாகிவிட்டது. அதிருப்திக்குழுவின் தலைவராக நெடுங்குரலோன் விசுபரூபம் எடுத்தார். தன்னால் முடிந்தளவு நிறுவனத்துக்குள்ளேயும் வெளியேயும் ஆட்களைத் திரட்டினார். ஆரசியல்வாதிகளையும் பயன்படுத்தினார். அதன் விளைவே அகங்காரமூhத்தியின் வருகை.

நெடுங்குரலேனின் குழுமீது பத்மராசனின் விசுவாசக்குழு சடுதியாகக் குற்றங்களைப் புனையத் தொடங்கினர். ‘வேலைநேரங்களில் வேலை செய்யார் அதிகமான நேரத்தை சிற்றுண்டிச் சாலையில் கழிப்பது, நிர்வாகத்திற்கு விசுவாகமாக இருக்காது நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தலைமை பற்றி அவதூறுகள் செய்வது’ போன்றவை அவர்களால் புனையப்பட்ட முக்கிய குற்றங்கள் சிலவாகும். இதன் பிறகெல்லாம் நிறுவனத்தின் கூட்டங்கள் நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அதிருப்திக் குழு குழப்பங்களை விளைவித்தது.

பத்மராசன் போடுகின்ற முக்கிய கூட்டங்கள் எல்லாம் நெடுங்குரலோனின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகின. சபையை கிரகிக்க விடாது குரலோன் எதையாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். அதனால் கூட்டங்கள் பலவும் தீர்மானங்கள் இன்றியும் முடிவுகள் இன்றியும் நிறைவுற்றன. அந்தச் சந்தர்ப்பங்களில் பத்மராசன் மிகப் பரிதாபத்திற்குரியவராகத் தெரிவார்.
பத்மராசனின் இன்றைய பேச்சு அமைதியாக சில சமயங்களில் சிறு சிறு சலசலப்புக்களுடன்தான் நடந்து முடிந்தது. அதிகாரி கூட்டத்தை நிறைவு செய்வதாகக் கூறியதும் அனைவரும கலைந்து சென்றனர்.
நாட்கள் நகர்ந்தன. நெடுங்குரலோனின் குழு பொழுதுகளை சிற்றுண்டிச்சாலையில்த்தான் போக்கிக் கொண்டிருந்தது. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சி எதுவும் தென்படவில்லை. தங்களி;ன் அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்படும், மீளவும் அலுவலகத்தில் அதிகாரம் செலுத்தலாம் என கருதியவர்களுக்கு பிள்ளையார் பிடிக்கப்போய் பிசாசான கதையென்றாகிவிட்டது. நெடுங்குரலோன் பல தடவைகள் அகங்காரமூர்த்தியுடன் பேசமுனைந்தார். ஆனால் மூர்த்தி ஒவ்வொரு தடவையும் சாதுரியமாகத் தவிர்த்தபடியிருந்தார். நேரே சந்திக்கும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் விலகி நடந்தார். குரலோனின் குழுவால் எதனையும் தீர்மானிக்க முடியாமற் போனது.

அகங்காரமூர்த்தி ‘ஏன் அவர்களைத் தவிர்க்க வேண்டும்’ என்பது பலருக்கும் புரியவில்லை.ஆனால் அகங்காரமூர்த்திக்கு அதிருப்திக் குழுவின் அனுசரனையை விடவும் பத்மராசன் குழுவின் அனுசரனைதான் முக்கியமெனப் பட்டிருக்க வேண்டும். பின்னர் நடந்த கூட்டங்களில் அகங்காரமூர்த்தியை விடவும் பத்மராசனும் ருத்திரகுமாரனுந்தான் அதிகமும் பேசினார்கள். மூர்த்தி கூட்டத்தை முடித்து வைப்பவராகவும் அல்லது பணியாளர்களை எச்சரிப்பது போல் “விரும்பினால் வேலை செய்யுங்கோ இல்லாதுவிட்டால் விட்டிட்டுப் போங்கோ” என்ற தொனியில் பேசுவதுடன் நின்று விடுவார். கூட்டத்தில் சலசலப்பு ஏற்படும் போதெல்லாம் இந்த வசனத்தை திரும்பத்திரும்பச் சொல்லித்தான் சலசலப்பை அடக்குவார்.
அதிருப்திக்குழு சிற்றுண்டிச்சாலையில் கூடியது. ஆளுக்கொரு வடித்துக் கொண்டு தேநீருக்குச் சொல்லிவிட்டு அன்றைய குழுக் கூட்டத்தை தொடங்கினார் நெடுங்குரலோன்.

“பாருங்கோ, இவர் வந்து ஒரு மாதம் ஆகிவிட்டுது. ஆனால் எங்களுக்கு இன்னும் வேலைகள் தரப்படேல. கேட்கும் போதெல்லாம் கதையை மாத்துகிறார். சந்திக்க விரும்புகிறாரில்லை. இப்படியே போனால் நாங்கள் இஞ்சை தலைகாட்டேலாது. இதுக்கு ஏதாவது செய்ய வேணும்.”

“ஓம் மச்சான் இவரின்ர போக்கு எனக்கு பிடிக்கேல. இவர் பத்மராசன்ர ஆளாயிட்டார் போல இருக்கு” என்றான் சீடர்களில் ஒருவன்.

“நாங்கள் எல்லாரும் போய் ஆளோட கதைப்பம் என்ன சொல்லுறார் எண்டு பாப்பம். இல்லாட்டா வேற வழியை யோசிப்பம்” என்றான் மற்றொருவன்.
“இப்பவே போவம்” என்றார் குரலோன்.

சூடான தேநீர் வந்ததும் அதனைப் பருகிவிட்டு. அலுவலகத்துக்குச் சென்றார்கள். அங்கு மூர்த்தி கிளாக் நுதலியுடன் கணனியில் ஏதோ செய்துகொண்டிருந்தார்.

குரலோன் “மன்னிக்கணும் உள்ளே வரலாமா சேர்” என்று கேட்டுக்கொண்டே சீடர்கள் பின்தொடர உள்ளே சென்றார். ஆகங்காரமூர்த்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. “ஓம் ஓம் வாங்கோ” என்று தடுமாறினார். நுதலி அறையை விட்டு வெளியேறினாள்.

“என்ன விசயம் எல்லாரும் வந்திருக்கிறீயள் சொல்லுங்கோ” என்றார் மூர்த்தி.
“அது சேர் இன்னும் எங்களுக்குரிய பொறுப்புக்கள் தரப்படேல. நீங்கள் வந்தும் ஒரு மாதம் ஆகிடுத்து” என்றார் குரலோன்.

“குரலோன் சம்பளம் வருதுதானே பிறகேன் கவலைப்படுறீயள்”
“இல்லை சேர் வேலை செய்யாமல் சும்மா இருக்க ஏலாது. எங்களுக்குரிய பொறுப்புக்களைத் தந்தால் நாங்கள் எங்கட பாட்டுக்கு வேலைகளைச் செய்வம்”

“விளங்குது குரலோன். இண்டைக்கு ஒரு கூட்டம் இருக்குது அதில இது பற்றிக் கதைத்து முடிவெடுப்பம். இப்ப நீங்கள் போங்கோ எனக்கு வேலைகளிருக்கு” என்று கூறியவாறு நுதலியை அழைத்தார் மூர்த்தி.
அதிருப்பதிக் குழுவினரின் முகங்கள் சுருங்கிவிட்டன. அறையிலிருந்து வெளியேறினார்கள். ஏதாவது முடிவு இண்டைக்கு கிடைக்குந்தானே என்று ஒருவருக்கு ஒருவர் சமாதானம் செய்தனர்.

பியோன் வாசுக்குட்டி நடக்கப்போகும் திடீர்க் கூட்டம் பற்றி பணியாளர்களுக்குச் சொல்லக்கொண்டு திரிந்தான்.
பணியாளர்கள் கூட்டத்துக்காக கேட்போர் கூடத்தில் கூடியிருந்தனர். குரலோனும் குழுவினரும் கடைசி இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பணியாளர்கள் பலரும் தங்களுக்குள் பலதும் பேசிக் கொண்டிருந்தனர்.
அகங்காரமூர்த்தியும் பத்மராசனும் கூடத்துக்குள் வந்தார்கள்.

அகங்காரமூர்த்தி தன்னோடு சில கோப்புக்களையும் வைத்திருந்தார். அலுவலகத்துக்கு வந்;த நாளில் இன்றுதான் அவர் கோப்புக்களுடன் வந்திருந்தார். அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. நான் நினைத்தேன் இவரும் பத்மராசனைப்போல் சுற்றுநிருபங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப்போகிறாரா? என்று. ஆனால் அவர் கோப்புக்கள் எதையுமே கையில் தொடாமலிருந்தார். அடிக்கடி கைத்தொலைபேசியில் யாரையோ அழைத்துப் பேசியபடியும் அழைப்புக்களுக்குப் பதில் அளித்தபடியுமிருந்தாh;. என் அருகிலிருந்த நண்பன் சொன்னான் “உந்தாளின்ர கையோட ஃபோண் ஒட்டிக்கிடக்குது போல, கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்த மாதிரி உந்தாள் ஃபோணோட பிறந்திருக்காக்கும்” எனக்கு சிரிப்பு வந்ததுதான் நான் சிரிக்கவில்லை.ஏனென்றால் பத்மராசன் எழும்பி “இந்தக் கூட்டம் சிரிக்கிறதுக்கில்லை சிந்திக்கிறதுக்கு” என்று சொல்லுவார் என்பதால் சரிப்பை அடக்கிக் கொண்டு பேசாமலிருந்துவிட்டேன். அகங்காரமூர்த்தி பேசப்போகின்றார் என காத்திருந்த போது அவா எழுந்து “இப்போது துணை அதிகாரி பத்மராசன் பேசுவார்” என்றார். வழமையாக பத்மராசனின் கூட்டத்திலிருக்கும் சலசலப்பு காணப்படவில்லை. எல்லோரும் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள். “மதிப்புக்குரிய எமது நிறுவனத்தின் தலைவர்” என பேச்சைத் தொடர்ந்தார். பேச்சின் இடையில் அகங்காரமூர்த்தி கொண்டு வந்த கோப்புக்களில் ஒன்றை கையில் எடுத்தார். நண்பன் என்னைக் கேட்டான்
;
“பியோன் வாசுக்குட்டி வந்தவன்தானே”

“ஓம்” என்றேன்

“பிறகு ஏன் மச்சான் பத்மராசன் உந்தாள பியோன் ஆக்கிட்டுது”

“யாரை”

“எங்கட தலைவரைத்தான்”

“ஏன்”;

“அவர்தானே கோப்புக்களைக் காவிக்கொண்டு வந்தவர்”

“சும்மா பேச்சைக் கவனி”

பத்மராசன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கையில் வைத்திருந்த சிவப்புநிற கோப்பை விரித்தார். இது மதிப்புக்குரிய தலைவர் அவர்கள் தயாரித்த கோப்பு இதில நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களின் பெயர்களுள்ளன. என்று பத்மராசன் பேச்சை நீட்டிக் கொண்டு போனார். நண்பன் என்னைப் பார்த்தான்

“என்ன மச்சான் எங்கட பேரெல்லாந்தான். நாங்கள் காசு கொடுக்கேலதானே. அதுதான் இந்தாள் முதல்நாளே ஆப்பு வைக்குது”

“பொறு யார்யாரென்று வாசிப்பார்தானே கேட்பம்”

பத்மராசன் பெயர்களை வாசித்தார். முதலாவது பெயர் நெடுங்குரலோனுடையது தொடர்ந்து ஏனைய சீடர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சீடர்களின் முகங்கள் இருண்டு போயிருந்தன. நெடுங்குரலோன் எழுந்து சபையின் முன்னே சென்றார். “மிஸ்ரர் பத்மராசன் நீர் எங்கள இஞ்சையிருந்து கலைக்கிறதெண்ட முடிவோடதான் இருக்கிறீர். அந்தாள் வந்த ஒரு மாதத்ததுக்குள்ளேயே எங்களைப் பற்றி போட்டுக் கொடுத்திட்டீர்.”

பத்மராசன் குறுக்கிட்டார் “குரலோன் மரியாதையாகக் கதையும் நான் ஒரு அதிகாரி மறக்காதையும்”

“அது முந்தி இப்ப தலைவர் வந்திட்டார். நீர் உம்மட வேலையைப் பாரும் அது போதும் இனியும் நடத்தலாம் என்று நினைக்காதையும். இவர் தலைவருக்குரிய தகுதியோடுதான் வந்தவர் உம்மள மாதிரி இடைக்காலத்தில அதிஸ்ரத்தில வந்தவரில்லை”

அகங்காரமூர்த்தி எல்லாவற்றையும் கவனமாக அவதானித்துக் கொண்டிருந்தார். எனக்கு பத்மராசனின் கையிலிருப்பது கோப்பல்ல அகங்காரமூர்த்திதான் விளையாட்டுப் பொம்மையாய் இருப்பதாகப்பட்டது.

சீடர்களில் மற்றவன் எழுந்தான் “ இஞ்சை பாரும் பத்மராசன் உம்மை இஞ்சையிருந்து துரத்தத்தான் நாங்கள் தலைவரைக் கொண்டுவந்தனாங்கள். அவருக்கு விருப்பமேயில்லை. நான்தான் அவரின்ர வைப்போட கதைச்சு சம்மதிக்க வைச்சனான்”

அகங்காரமூர்த்தி அப்பவும் அமைதியாகத்தானிருந்தார். எதுவும் பேசவில்லை. ஃபோனில் யாரையோ அழைத்துக் கொண்டிருந்தார்.

இராஜசிங்கம் எழுந்தார்.சிங்கம் எப்பவும் இப்படி நெருக்கடியான நிலை வரும் போது எழுந்துவிடுவார். நல்ல மனுஷன் என்ற பெயர் அவருக்கு இருக்கு ஆனாலும் சில நேரங்களில் மனுஷன் என்ன கதைக்கிறதென்றே தெரியாது வாய்க்கு வந்தமாதிரியெல்லாம் கதைப்பார். மற்றவர்களிடம் வாங்கியும் கட்டுவார் “பொறுங்கோ நீங்கள் பத்மராசனை குறை சொல்லுறத விட்டிட்டு தலைவரிட்ட கேளுங்கோ அவர்தான் இதுக்கெல்லாம் பதிலளிக்க வேணும்” என்று பொருத்தமாக எழுந்து கதைத்தார். எல்லோரும் அதை ஆமோதிப்பதைப் போலத் தலையாட்டினார்கள்.

தலைவருக்கு அப்பதான் விளங்கியிருக்க வேண்டும் இவங்கள் தன்னைப் பற்றித்தான் கதைக்கிறாங்கள் என்று. எழுந்தார். சீடர்கள் கைகள் தட்டினர் ஆரவாரித்தனர். “இது கைதட்டவும் கூவடிக்கவும் உரிய நேரமில்லை இஞ்சை சீரியசா கதைக்கிறம் நீங்கள் என்னென்டால் குழப்புறீயள்” பத்மராசன் பேசுவதைப் போலவே பேசினார்.

“இது நான் தயாரித்த பட்டியல்தான.; வேலை செய்யாத ஆக்களை விடுவிக்க எனக்கு அதிகாரம் இருக்கு அதைத்தான் நான் செய்யுறன்.”

பத்மராசன் ஏதோ சுற்றுநிருபத்தை எடுத்து வாசித்தார்  “ஆ/256749/ஏ45 இன் படி நிறுவனத் தலைவருக்கு விருப்பமில்லாத ஆக்களை வெளியேற்ற உரிமையிருக்கு அதைத்தான் தலைவர் செய்யுறார்” என்றார்.

நெடுங்குரலோன் சொன்னார் “ பத்மராசன் அந்தாளையும் உம்மள மாதிரி ஆக்காதையும்”

தலைவருக்கு கோவமோ ஏதோ வந்திருக்கவேணும் போல “குரலோன் விருப்பமில்லாட்டால் விட்டிட்டுப் போம். சும்மா நிர்வாகத்தைக் குழப்பாதையும்”

“எப்படி சேர் நாங்கள் நீர்வாகத்தைக் குழப்புறம் என்று சொல்லுறீயள். நீங்கள் வந்து ஒரு மாதந்தானே ஆகுது. அதுக்குள்ள எப்படி எங்களை நீர்வாகத்தைக் குழப்புறம் என்றீயள்”

“அதெல்லாம் உமக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை”

“சொல்லத்தான் வேணும் நாங்கள்தானே உங்களைக் கொண்டு வந்தனாங்கள் சும்மாவ மாலை மரியாதை, மேள தாளங்களோட எங்களையே தூக்கப் பாக்கிறீங்கள் இது எப்படி ஞாயம் சேர்”

நெடுங்குரலோனின் குரல் தளதளத்தது. எப்பவும் யாருக்கும் முன்னால் கண்கலங்காத அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கைகளால் கண்களை லேசாகத் துடைத்தபடி மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக நின்றார். அவரின் வாய் ஓய்ந்ததை நாங்கள் பார்த்ததேயில்லை. எப்போதும் உரத்தகுரலில் பேசிக்கொண்டுதானிருப்பார்.ஓரு ஊருக்கே ஏதாவது அறிவித்தலைத் தெரியபடுத்த வேண்டும் என்றால் அவருக்கு சொன்னால் போதும் உரத்த குரலில் சொல்லிவிடுவார் ஆட்டோ லஸ்பீக்கர் காசெல்லாம் மிச்சம் என்று அடிக்கடி சிங்காரம் சொல்லிக் கொள்ளுவான் அப்படிப் பட்டவரின் வாய் ஊமையாகிப் போனது துக்கமாக இருந்தது. சபையே மௌனமாகி உறைந்துகிடந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. சற்று நேரத்தின் பின் தலைவர் சொன்னார்.

“நான் மாலை மரியாதைய கேட்கவில்லை நீங்கள்தானே செய்தீங்கள் அதுக்கு நான் என்ன செய்யுறது.வேள்விக் கடாவையும் மாலை போட்டுத்தான் கூட்டிவாறது”

மேலும் குரலோனால் மௌனம் காக்க முடியவில்லை

“அப்ப ஏன் தலையை மாலைக்கு நீட்டினீர். உமக்குச் சொல்லிப் போட்டுத்தானே செய்தனாங்கள் அப்பவே சொல்லியிருக்கலாமே வேண்டாமென்று. இப்ப பெரிய ஆள்மாதிரிக் கதைக்கிறீர்” குரலோனின் கோபம் வார்த்தைகளில் தெறித்தது.

அகங்காரமூர்த்தியால் அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை

“இளைமருமகன் வந்த பிறகுதான் மூத்தமருமகனின் அருமை விளங்குது” குரலோனின் கோபம் அடங்கவில்லை அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அகங்காரமூர்த்தி இதையெல்லாம் கவனிக்காதது போல ஃபோணில் கதைப்பதாய்ப் பாவனை செய்தார்.

பத்மராசன் மெலிதாகச் சிரித்துக் கொண்டார்.

நண்பன் சொன்னான் “மச்சான் பத்மராசன்ர முகத்தைப் பாரடா. ஏதோ சாதிச்சமாதிரி சிரிக்கிறார். உவர்தான் எல்லாத்துக்கும் காரணம். எப்படி கடைசியா பாத்திய அகங்காரமூர்த்தியையும் பொம்மையாக்கி தனக்குப் பக்கத்தில இருத்திப் போட்டுது. அவங்கள் உந்தாளைக் கலைப்பம் என்று இவரைக் கொண்டுவர உந்தாள் அவங்களையே கலைக்க வடிவா ஆளைப் பயன்படுத்திப் போட்டுது”

“ஓம் மச்சான் எல்லாம் தலைகீழாப் போச்சுது. இவங்கள் பாவமடா திரும்பவும் கன்ரீனிலதான் இருக்கப்போறாங்கள். இனி அகங்காரமூர்த்திக்கும் எப்படி ஆப்பு வைக்கிறதென்றுதான் யோசிப்பாங்கள். நீ சொன்னது சரிபோலதான் இருக்கு தலைவர் அகங்காரமூர்த்தியென்றாலும் நடத்துறது பத்மராசன்தான். அது நல்லா விளங்கிடுத்து”

மண்டபம் எங்கும் சலசலப்புக்கள் மிகுந்தபடியிருந்தன. அகங்காரமூர்த்தியையும் பத்மராசனையும் வசைச்சொற்றகளால் சீடர்கள் ஆலாபனம் செய்துகொண்டிருந்தனர். மேலும் சிலர் பத்மராசன் நரித்தனமாத்தான் செயற்படுறார். சீடர்கள் சொல்வது சரிதான் என்ற விதமாகவும் இன்னும் சிலர் அகங்காரமூர்த்தி சுயசிந்தனை இல்லாதவர். வந்தது ஓரு மாதந்தானாகுது நிர்வாகத்தைச் சீரழிக்கிற மாதிரி நடக்கறார். இனி அலுவலகம் மேலும் சீரழியப்போகுது என்ற விதமாகவும் கதைத்தனர்.

சபையை அவதானித்துக் கொண்டிருந்த பத்மராசன் அகங்காரமூர்த்தியின் காதுக்குள் ஏதோ சொன்னார். அகங்காரமூர்த்தி எழுந்து “இத்தோட இந்தக் கூட்டம் முடிஞ்சுது” எல்லாரும் போகலாம் என்றவாறு எழுந்து நடக்கத்தொடங்கினார் கூடவே பத்மராசனும். நெடுங்குரலோன் அவர்களின் பின்னே துரத்தித்துரத்திச் சென்று ஏசிக்கொண்டேயிருந்தார். “யாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனையும் அஞ்சோம்” என்ற நாவுக்கரசரின் தேவார அடி உரத்துக் கேட்டது. அவர்கள் இருவரும் சிரித்தபடி படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அலுவலகப் பணிமுடியும் நேரம் என்பதால் கையொப்பமிடுவதற்கு எல்லாப் பணியாளர்களும் முண்டியடித்துக் கொண்டு கூடத்தை விட்டு வெளியேறினர். யாரும் தங்கள் நேரத்தின் ஒரு துளியைக் கூட மேலதிகமாகச் செலவிடத் தயாராக இருக்கவில்லை. நானும் நண்பனும் கடைசியாகத்தான் வெளியேறினோம். சீடர்களிடம் ஆறுதலாக இரண்டொரு வார்த்தைகள் பேசுவோமா? என நண்பனைக் கேட்டேன். அவன் சொன்னான். “அவங்கள் இப்ப இருக்கிற நிலமையில நாங்கள் ஏதும் சொன்னால் தங்களை நக்கலடிக்கிறதா நினைப்பாங்கள் பேசாமல் போறதுதான் நல்லது.” அது சரிபோலவும் எனக்குப் பட்டதால் கூடத்திலிருந்து வெளியேறினோம். சீடர்கள் ஏதோ கூடிக்கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

கையொப்பம் இடுவதற்காக அலுவலகத்துக்குள் சென்றோம். அகங்காரமூர்த்தியும் பத்மராசனும் பியோன் வாசுக்குட்டி பரிமாறும் தின்பண்டங்களைக் கடித்தபடி தேநீர் பருகியவாறு சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

நிறுவனத்தின் வாயில் வெறிச்சோடிக் கிடந்தது. முன்னேயிருந்த மரத்திலிருந்து காகம் ஒன்று கரைந்துகொண்டிருந்தது. அகங்காரமூர்த்தியின் வருகை நாளன்று கேட்ட அதே குரல்போலவே இருந்தது. நான் நினைத்தேன் காகத்தின்ர ஆக்கள் இன்னும் வரேலைபோல அதுதான் காலையிலிருந்து கரைந்துகொண்டிருக்குது.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்