
சித்தாந்தன்
சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களின்
கனவுகளின் மீது
கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன
இவர்களின் சகோதரர்களை
அவர்கள் கொன்று புதைத்தபோதும்
இந்த நகரத்தின் மனிதர்கள்
மௌனமாகவே அழுதார்கள்
புதைக்கப்பட்ட மனிதர்களின் ஆன்மாக்கள்
தெருக்களில் அலையும் நாட்களில்
அவர்கள் “சுதந்திரம்” என எழுதப்பட்ட
பிரசுரங்களில் புன்னகை புரியும் தலைவர்களுக்கு
வாக்களித்துவிட்டு வீடு திரும்பினர்
இன்னும் அவர்கள்
இவர்களின் சகோதரர்களைக் கொன்று புதைக்கிறார்கள்
இவர்களால்
பதாதைகளை உயர்த்த முடியவில்லை
கதறியழ முடியவில்லை
மௌனங்களால் துயரை அழுது கரைக்கிறார்கள்
நகரத்தின் முகட்டில் பறந்தபடியிருக்கும்
சமாதானக் கொடியின் கீழ்
இவர்களின் சகோதரர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்
இவர்களின் நாக்குகளில் ஏற்றப்பட்டிருக்கிறது தூண்டில்
நகரத்தின் தலைவர்கள்
சுவர்களில் எழுதியிருக்கும் பிரகடனங்களுக்குள்
மூடுண்டு கிடக்கின்றன
இவர்களின் சிரிப்புக்களும்
வசந்தம் பற்றிய கனவின் பசிய துளிரும்
இவர்களுக்கு
வீதிகளில்லை
பயணங்களுமில்லை
எப்போதும்
நகரத்தின் முகட்டில் காகங்கள் கூடிக் கரைகின்றன
வெள்ளை நிறம் பூசப்பட்ட வாகனங்களில்
பறக்கின்ற கொடிகளில்
அழகாக அச்சிடப்பட்டுள்ளன
குழந்தைகளின் முகங்கள்
பறவைகள்
மற்றும்
ஓன்றிணைந்திருக்கும் கைகள்
ஆயினும்
அவலமாய்க் கரையும் காகங்கள்
நகரத்தின் முகட்டில் காத்திருக்கின்றன
குழந்தையின் துண்டிக்கப்பட்ட கைவிரல்களாய்
விரிந்திருக்கும் நகரத்தினுள் வாழும்
சிலுவையில் அறையப்பட்ட மனிதர்களின்
நிர்வாணத்தின் மீது
கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன