சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

வேட்டையன்

31 டிசம்பர், 2012



சித்தாந்தன்

த்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’
இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு.
காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது மூன்றோ மணித்தியாலங்கள்தான் நித்திரை கொண்டிருப்பான். அதையும் யாரோ வந்து கெடுத்துவிட்டார்களே!
எரிச்சல் தலைக்கேறியது அவனுக்கு.
அவனுக்கு மனைவிமீதுதான் கோபம் மேலிட்டது. ‘தான் அந்தக் காலையிலேயே எங்கோ வெளிக்கிட்டுப் போயிட்டன் என்று ஏதாவது பொய் சொல்லி வந்திருப்பவரை அனுப்பியிருக்கலாம். இப்ப நித்திரைகொள்ள விடாமல் கெடுத்திட்டாளே’
‘என்னப்பா செய்யிறியள்? சாமி காத்துக்கொண்டிருக்கிறார்’ என மனைவி மீண்டும் வந்துஅறிவித்தாள்.
‘சாமியா?’
இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘என்னைத் தேடி எந்தச் சாமி ஏன் வர வேணும்? இவளுக்கு விசர் போல. ஆரோ பிச்சைக்காரனாக்கும், சாமி என்று சொல்லிக் கொண்டு, காசு பறிக்க வந்திருக்கிறாங்களாக்கும்’ என்று நினைத்துக் கொண்டான்.
முன்பும் ஒரு முறை சாமி என்று சொல்லிக் கொண்டு, ஒரு ஆசாமி வந்திருந்தான். அப்ப இவள் மூத்தவனை வயிற்றில் சுமந்திருந்தாள். வந்த ஆசாமி அதைப் புரிஞ்சு கொண்டு, எடுத்த எடுப்பிலேயே ‘உங்களுக்குச் சிங்கக் குட்டி பிறக்கப்போகிறான்’ என்றான். இவளும் வியந்து போய், பக்திப் பரவசமாகி நின்றாள். இதைப் புரிஞ்சு கொண்ட ஆசாமி, ‘ஆனாலும் சின்னக்குறையிருக்கு. நாகபூசினி அம்மாளுக்குக் காணிக்கை செய்யவேணும். எல்லாம் நிவர்த்தியாகும். அம்மாள் நிச்சயமாக் கைவிடமாட்டாள்’ என்றான்.
இவள் மனம் பதறிப்போய், பண்ணையில் நின்ற ஆத்மார்த்தனுக்குப் போன் பண்ணி, ‘உடன வாங்கோ, அவசரம்’ என்றிருக்கிறாள். ஆத்மார்த்தனும் ஏதோ என்னவோ என்று பதறியடித்துக் கொண்டு வந்தான்.
வீட்டு வாசலில் காவி உடையோட ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு முன்னால் இவள் நின்றிருந்து குருபதேசம் கேட்டவளாய் இருந்தாள்.
‘சாமி இவர் வந்திட்டார்’ என்று பவ்வியமாய்க் கூறவும், சாமி, ‘வாங்கோ தம்பி’ என்று அழைத்தார். இவனும் மனைவிக்கு அருகே போய் நின்றான்.
‘பாருங்க தம்பி, உங்களுக்கு சிங்கக் குட்டி பிறக்கப்போகிறது. சந்தோசம் பாருங்கோ. ஆனாலும் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி தோஷ நிவர்த்தி செய்யுங்கோ’ என்றார்.
இவனுக்கு சாமியின் இலக்கு என்னவென்பது புரிந்து விட்டது.
‘ஓம் சாமி, அடுத்த கிழமை போய்ச் செய்யிறம்’ என்றான்.
‘நீங்கள் வரவேணுமெண்டில்லை. நான் இண்டையோட என்ரை யாத்திரையை முடிச்சுக் கொண்டு நாளை விடிய அங்க போறன். நீங்கள் பூசைக்குரிய பணத்தைத் தந்தால், நான் செய்திட்டுப்பிரசாதத்தை தபாலில் அனுப்புவன்’ என்றார்.
ஆத்மார்த்தன் சாமி பணத்தைப் பறிப்பதில் காட்டும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டான். ஆனால், மனைவியோ, ‘நான் இந்த நிலைமையில இயலாது. நீங்களும் எப்பிடிப் போறது? பண்ணை வேலையெல்லாம் அப்பிடியே நின்றிடும். சாமியிட்டக் காசைக் குடுப்போம்’ என்றாள்.
மனைவி சாமியின் வார்த்தைகளில் பயந்து போயிருப்பதை இவன் புரிந்து கொண்டான். மனைவியைப் பதட்டப்படுத்தக் கூடாது என்பதற்காக ஐநூறு ரூபாய்த் தாளை; ஒன்றை எடுத்து சாமியிடம் நீட்டினான். சாமி, ‘இது பூசைச் சாமானுக்கே போதாது. இன்னும் ஆயிரம் ரூபாய் எண்டாலும் வேணும்’ என்றார்.
மனைவி, வீட்டினுள்ளே சென்று தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாவை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள்.
சாமி இவர்களின் முகவரியை வாங்கிக் குறித்துக் கொண்டு போய் விட்டார்.
போன சாமியிடமிருந்து வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் விபூதி பிரசாதம் வந்து சேரவில்லை. ஒரு வேளை போற வழியில சாமி சமாதி அடைஞ்சிட்டாராக்கும் என்று இவன் நினைத்தான்.
அப்படியொரு சாமிதான் இப்பவும் வந்திருக்கிறார் என்று வெறுப்போடு முகத்தைத் தண்ணீரால் துடைத்து விட்டு சாமி முன்னாலே போய் நின்றான்.
சாமியின் தோற்றம் இவனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அழுக்கான வேட்டி உடுத்திருந்தார். மேலாடை இல்லை. தலைமயிரும் புலுண்டிப்போன புல்வெளியைப்போல செம்படை தட்டிக் கிடந்தது. கையில் ஒரு கறுப்புப் பை. இவரைச் சாமி என எப்பிடி நம்புவது என இவனுக்குச் சங்கடமாக இருந்தது.
‘வா. ஆத்மார்த்தா’ என்று தனக்கு அருகே அமரும்படி கையால் நிலத்தைத் தட்டிக் காட்டினார் சாமி. இவன் ஒரு கணம் அதிர்ந்து விட்டான். ஆனாலும் பேசாமற்போய் அவரின் அருகில் அமர்ந்தான்.
பண்ணையிலோ வீட்டிலோ ஊரிலோ யாரும் இவனைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. இந்தாள் கூப்பிடுதே என்ற கோபம் மனதுக்குள் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவரின் அருகில் உட்கார்ந்தான்.
‘மகனே நீ சாதாரணவனில்லை. இந்த ஊரையே ஆளப்பிறந்தவன்’ என்று சாமி பேச்சைத் தொடர்ந்தார். இவனுக்குத் தலைகால் பிடிபடவில்லை. தன்னை ஒருவர் வீட்டுக்குத் தேடி வந்து இப்படிச் சொல்வது, இவனுக்கு வியப்பை அளித்தது. அதே நேரம் காசு கீசு கேட்கத்தான் இப்படி அதிர்ச்சியான வார்த்தைகளைச் சொல்கிறாரோ என்ற சந்தேசமும் இவனுக்கு வந்தது.
‘தம்பி நான் உன்னட்ட காசு எதையும் எதிர்பார்த்து வரேல்ல. உனக்கு ஒளியைக் காட்டவே வந்திருக்கிறேன்’ என்றார் சாமி.
இவன் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து விட்டான். சாமி, ஆசாமியில்லை. உண்மையான சாமிதான் என நினைத்தான். தான் நினைப்பதையெல்லாம் அப்படியே சொல்கிறாரே!
இவன் தன்னையறியாமலே அவருடைய கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்;கொண்டான். அவரையே கூர்ந்து பார்த்து எதையே வேண்டிக் காத்திருப்பவன்போலானான்.
சாமி தொடர்ந்தார்.
‘மகனே, கேள். நான் சொல்லப்போகும் வழி உனக்கு இந்த ஊரிலேயே மதிப்பைத் தேடித்தரும். ஆதலால், நீ அதைப் பின்பற்ற வேண்டும். கடவுளின் கிருபையால் நீ சூழப்பட்டிருக்கிறாய். உன்னைத் துன்பம் சூழாது. எப்பவும் இன்பமே பெருகும். நீ உனது பயணத்துக்குத் தயாராக வேணும். பாதை கரடு முரடானது. நாட்களும் உனக்கு அதிகம் தேவைப்படும். பசி, தாகம் உன்னை வாட்டும். ஆனாலும் நீ சோர்ந்து போய் விடக்கூடாது.
இவன் சாமியின் சீடனாகி அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். மனதில் உள்ளுரக் கிளர்ச்சி பெருகியது. கண்களில் பரவசத்தின் ஈரத்துளிகள் பெருக்கெடுத்தன. தன்னை மறந்து நிஷ்டையிலிருக்கும் சாமி போன்ற பாவனை தனக்குக் கூடிவருவதாய் நினைத்துக் கொண்டான்.
சாமியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இறைவாக்காய் காதுகளில் ஒலித்தன.
‘மகனே இன்றிரவே நீ பயணத்தைத் தொடங்கு. இரவு வேளை மட்டுமே நீ பயணம் செய்ய வேண்டும். பகலில் நகரவே கூடாது. மனிதர்களின் கண்களுக்கு படுவாயாக இருந்தால், நீ பயணத்தை அத்தோடு முடித்து விட்டு, மீண்டும் வீடு வந்து திரும்பவும் பயணத்தைத் தொடங்க வேண்டும்.
நீ இன்றிரவே உன் ஊரை அடுத்துள்ள ஆற்றைக் கடக்க வேண்டும். பயணத்தின் மூன்றாவது நாள், ஒரு புல்வெளியை அடைவாய். அந்தப் புல்வெளியை அடர்ந்து மூடியுள்ள இருளில் நீ ஒரு ஜோகியைக் காண்பாய். அந்த ஜோதியின் அருகே சென்று பார். அதில் ஒரு மந்திரக் கல் இருக்கும். அதுவே உனக்கு மீதி வழியைக் காட்டும். நீ யாராலும் அடைய முடியாத பெரும் பேற்றைப் பெறுவாய். நீ இந்த ஊரின் மகா மனிதனாவாய’;.
இவனுக்கு மந்திரக்கல், அது வழிகாட்டும் என்றெல்லாம் சாமி சொன்னபோது இவர் ஏதோ கதை விடுகிறார் என்றே தோன்றியது. இதெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமா, என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
‘சந்தேகப் படாதே! இன்றே வெளிக்கிடு’ என்று சாமி சொன்னதும் இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. இவன் ஒரு பொம்மை போலாகித் தலையை ஆட்டினான்.
மனைவி சாமிக்குத் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். சாமி அதை மறுத்து விட்டார். ஆத்மார்த்தன் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பின் தானே வருவதாகக் கூறிவிட்டு அவர் எழுந்து சென்றார்.
ஆத்மார்த்தன் அன்று பண்ணைக்குப் போகவில்லை. தன் உதவியாளனை பண்ணையைக் கவனிக்கும் படியும் தான் வெளியூர் செல்வதால் பத்து நாட்களின் பின்னே, ஊர் திரும்புவதாகவும் அன்றைக்குமான கணக்குகளை அன்றன்றே பூர்த்தி செய்து மனைவியிடம் ஒப்படைக்கும் படியும் தொலைபேசியில் தெரிவித்தான்.
சாமி சொன்ன பெரும்பேறு எதுவாக இருக்கும் என அறிய அவனிற்கு ஆவலாக இருந்தது. மனைவியும் அந்தப் பதகளிப்பிலேயே இருப்பதை அவன் புரிந்து கொண்டான்.
பயணத்தின் பின் தனக்கு இந்த ஊரிலிருக்கும் செல்வாக்கு இன்னும் பன் மடங்காகும் என நினைத்துக் கொண்டான். ஊரில் செல்வாக்கு உயர்ந்தால், இப்ப இருக்கிற காரை விற்றுப் புதிய கார் ஒன்றை வாங்க வேண்டும் எனவும் நினைத்தான். பயணம் தனித்தது என்றபோதும் தன்னால் அந்த இலக்கு அடையப்பட வேண்டும் என்பதில் அவன் குறியாக இருந்தான்.
வேதாளம் வொன்ன கதை என்ற தலைப்பில் அம்புலிமாமா புத்தகத்தில் படித்த விக்கரமாதித்தனை விடவா தான் சாகஸங்கள், தடைகளைச் சந்திக்கப்போகிறேன் என நினைத்தான்.
பயண ஒழுங்குகளை எல்லாம் செய்தாயிற்று. மனைவி பல்வேறு உணவுகளையும் பொதியாகக் கட்டிக் கொடுத்தாள். தண்ணீர்ப் போத்தலிரண்டு. மாற்றுத்துணிகள், எல்லாமே பயணப் பையினுள் ஒழுங்கு படுத்தப்பட்டன.
யாருக்கும் இந்த விடயங்களைப் பற்றிக் கூறவேண்டாம் என மனைவியிடம் சொல்லி வைத்தான்.
பொழுது மங்கிக்கொண்டே வந்தது. சரியாகப் பத்து மணிக்குப் பயணத்தைச் செய்வது என ஏற்கனவே தீர்மானித்திருந்தான். இவன் மகனை ஒரு தடவை தூக்கி முத்தமிட்டான். இளையவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியிடம் பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விடைபெற்றான்.
ஊர் அடங்கிப் போய்க் கிடந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்தே ஆற்றங்கரையை அடைய வேண்டும். நடையைத் துரிதப்படுத்தினான். மனதில் பெருகிய ஆர்வமிகுதி இவனின் களைப்பைப் போக்கியது. ஆற்றங்கரையை அடைந்தான்.
ஆறு ஓசையற்று ஓடிக் கொண்டிருந்தது. காற்று உறைந்து போய் மரங்களினடியில் கிடப்பதாய் நினைத்தான். இலைகளின் அசைவுகள் இல்லை. அருகே இருந்த மரத்தில் இடையிடையே பறவையொன்றின் சிறபடிப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.
ஆற்று நீரின் அளவு குறைந்து விட்டதால், ஆற்றை நடந்தே கடக்க முடியும் என்பது ஆறுதலளித்தது. ஆற்றில் இறங்கினான். முழங்கால் அளவில் நீர். பயணப்பை நனைந்து விடாமல் தலையில் எடுத்து வைத்தான். நடக்கத் தொடங்கினான்.  பாதங்களில் கற்கள் உறுத்தின. சில இடங்களில் மணலில் கால்கள் புதைந்து கொண்டன. பாதங்களைக் கவனமாக எடுத்து வைத்தான். கரை அண்மித்ததை நீரின் அளவு குறைந்து உறுதிப்படுத்தியது.
சிறிது நேரம் ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் மனிதர்கள் சிலர் உரையாடும் ஒலி கேட்டது. சிறு சிறு நெருப்புப் பொட்டல்களும் தென்பட்டன. அவர்கள் புகை பிடிக்கிறார்கள் எனப் பட்டது. இந்த இடத்தில் தொடர்ந்திருப்பது பொருத்தமில்லை என நினைத்தவன், கரையை அடுத்துள்ள காட்டுப் பாதையில் நடக்கத் தொடங்கினான். கையில் டோச்சை எடுத்துக் கொண்டான். பற்றைக் காடு முன்னரே நடந்து பழக்கப்பட்ட வழிகள்தான் என்றபோது இந்த நடு இரவில் நடப்பது, அதுவும் தனியாக மனதுக்குப் பயமும் பதட்டமும் ஏற்பட்டாலும் நடந்தான்.
அன்றைய பொழுது விடிந்தது. பற்றைக் காட்டைக் கடந்திருந்தான். அப்பால் அடர்ந்த காடு தென்பட்டது. அன்றைய பகற் பொழுதைப் பற்றைக் காட்டினுள் கழிப்பதாக முடிவெடுத்தான். உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் கீழ் தன் இருப்பிடத்தைத் தீர்மானித்தான்.
தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் குடித்தான். முகத்தையும் தண்ணீரால் துடைத்துக் கொண்டான். மனமும் உடலும் அசதி கண்டன. கால்கள் வலித்தன. மரத்தில் சாய்ந்து உடலை நிமிர்த்தி உழைவெடுத்தான்.
சூரியன் வானில் ஏற ஏற மனதுக்குள் சந்தோசம் ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் நடக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்து விட்டால்…. போதும்.  இலகுவாக எல்லாவற்றையும் அடைந்து விடலாம். மனைவி தந்து விட்ட உணவுப்பொதியை அவிழ்த் சாப்பிட்டான். தண்ணீரை அளவுடன் பருகி மீதியைச் சேமித்துக் கொண்டான்.
பொழுது இருட்டத்தொடங்கியது. மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான். காட்டு வழியில் பயணம் தொடங்கியது. இரவை குழப்பாமல் அதன் நிசப்தத்திற்கு ஏற்றவாறு நடந்தான். சருகுகளை மிதிக்கும்போது எழும் ஓசைகளும் மிருகளின் காலடி ஓசை கேட்டு எழுந்தோடும் ஒலிகளும் அவனைத் திகிலுறச் செய்தன. இடையுறாது நடந்தான். அடுத்து வந்த இரண்டு இரவுகளுமே திகில் நிறைந்தவையாகவே இருந்தன. பொழுது விடியத் தொடங்கியபோது காட்டின் மறுகரையை அடைந்திருந்தான். அடுத்து விரிந்து கிடந்தது புல்வெளி. சாமியின் கணக்குத் தப்பவில்லை. மூன்று இரவுகளின் பின் அவன் புல்வெளியை அடைந்தான். அன்றைய பொழுதையும் காட்டிலேயே கழித்தான்.
மனம் முழுமையாகச் சாமியாரின் நினைவிலேயே உறைந்து கிடந்தது. அவர் மகா ஞானிதான் என எண்ணினான். புல்வெளியைக் கூர்ந்து பார்த்தான். பசுமை இவனை ஈர்த்துக் கொண்டது. மரங்களிடையே மறைந்திருந்து, ரசிக்க வேண்டியிருக்கிறதே இதை என்ற ஏக்கம் மனதை வதைத்தது. வெளியையும் கடந்து பார்வையை விரித்தான். தொலைவில் மரங்கள்தான் தெரிந்தன. மனிதர்கள் யாரேனும் வந்து விடக்கூடாது என கடவுளைப் பிரார்த்தித்தான்.
யாரேனும் கண்டு விட்டால்…? திரும்பி நடக்க வேண்டிய தூரத்தையும் திரும்பவும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் நினைத்து அவதானந்தான் இந்த இடத்தில் முக்கியமென்பதைப் புரிந்து கொண்டான்.
பொழுது உலர்ந்து கருமை படரத்தொடங்கியது. புல்வெளியின் மீது இரவு படுக்கத் தொடங்கியது போல இருந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தான். நட்சத்திரங்களும் பாதி தேய்ந்த நிலாவும் ஒளிர்ந்தபடியிருந்தன. புல்வெளியைப்பார்த்தான். சாமி சொன்ன ஜோதி தென்படவில்லை. புல்வெளியில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
சிறிது தூரந்தான் சென்றிருந்தான். ஜோதி கண்ணிற் பட்டது. மனம் குதூகலத்திற் துள்ளியது. பொங்கிப் பெருகிய பரவசம் அவனை அதை நோக்கித் துரத்தியது. நடந்தான். ஓடினான். ஜோதியின் அருகடைந்தான். யார் இந்த ஜோதியை ஏற்றிச் சென்றிருப்பார்கள்? வானத்திலிருந்து தவறி வீழ்ந்த சூரியக் குஞ்சாய், அது ஜொலித்தது. அருகே சென்றான். அதனருகே படிகக் கல் ஒன்றிருந்தது. அதனைக் கைகளில் எடுத்துக் கொண்டான். கைகள் கூசின. அவன் தன்னிலை மறந்தான். அது அவனை வழி நடத்தியது.
காற்றில் அலையும் ஒரு இறகைப்போல தான் மிதப்பதாய், உணர்ந்தான். சில நாழிகைகள்தான் கடந்திருக்கும். இவன் ஒரு ஆசிரமத்தின் முன்னே வந்து நின்றான். புராணக் கதைகளில் வரும் வர்ணனைகள் யாவும் பொருந்தியிருந்தது அந்த ஆசிரமத்தில். சதா பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் ஆறு ஒன்றின் சலசலப்புக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆசிரமத்தைச் சூழவும் பூமரங்கள் வளர்ந்திருந்தன. அந்தச் சூழலின் ரம்மியத்தில் சில கணங்கள் திளைத்துப்போனான்.
மகனே, வந்து விட்டாயா? என்ற குரலுடன் ஆசிரமத்தின் உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். பரிசுத்தமான ஆடையுடன், நீண்ட தாடியுடன் அவர் காணப்பட்டார்.
துறவி சாரங்க புத்திரர் உன் வரவை எனக்கு உணர்த்தியிருந்தார். சரியாகக் களைத்து விட்டாய். இந்த மரக்குற்றியில் அமர் என இவனை அவர் அமரச் செய்தார். இவனால் எதையும் தீர்மானிக்க முடியவில்லை. தன்னை அனுப்பிய சாமியின் பெயர் சாரங்க புத்திரர் என்பதை இப்போதுதான் இவன் அறிந்து கொண்டான். அவர்களுக்கிடையில் எப்படி செய்திகள் பரிமாறப்படுகின்றன என்பதெல்லாம் இவனுக்கு ஆச்சரியமளித்தது. இந்த் துறவி தன் வரவை எதிர்பார்த்திருந்தது போலவே ‘மகனே வந்து விட்டாயா?’ எனக் கேட்கிறார். எல்லாமே அற்புதங்கள் தான் என எண்ணினான்.
சாமி அவனுக்காக ஒரு குவளையில் ஏதோ பருகுவதற்குக் கொடுத்தார். இதை உனக்காகத்தான் தயாரித்தேன். தாகமாறப் பருகு என்றார். இவன் எதுவும் பேசாமல் பருகினான். அமிர்தமாக அது சுவைத்தது. அவனில் படிந்திருந்த களைப்பு நீங்கிப் போனது.
‘மகனே நீ பாக்கியசாலி. சாரங்கனால் அனுப்பப்பட்டிருக்கிறாய். அவர் என் சீடன். நானே உன்னிடம் அவரை அனுப்பினேன்.
இவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. சாமி என் என்னை அழைக்க வேண்டும் என்பதில் குழம்பிப்போனான்.
‘சாமி, ஏன் என்னை அழைத்தீர்கள்?’ எனத் தயங்கியவாறு கேட்டான்.
‘அதற்கான விடையைத்தான் தேடி வந்திருக்கிறாய். அதை நீயே உணர்வாய்’ என்று கூறியவாறு தன் சுடடு விரலால் மேற்குத் திசையைச் சுட்டிக்காட்டி, ‘அங்கே பார்’ என்றார்.
அத்திசையில் இரண்டு குதிரைக் குட்டிகள் தொலைவில் மேய்ந்து கொண்டிருப்பதைப் போலிருந்தன.
‘அங்கே என்ன தெரிகிறது?’ என்றார் துறவி.
‘குதிரைகள்’
‘அவை குதிரைகள் அல்ல. நாய்கள்’
‘நாய்களா?’
இவனால் நம்ப முடியவில்லை. நாய்கள் இந்த அளவுக்கு வளருமா? இவன் வீட்டில் வளர்க்கும் வெளிநாட்டு வகை அல்ஷேஸனே அதிக உயரமான நாய் என்று நினைத்திருந்தான். இவற்றின் உயரம்?
சாமி இவனைத் தன்னோடு வரும்படி அழைத்தவாறு நடந்தார். இவனும் தொடர்ந்தான்.
அவற்றின் அருகே வந்த பின்தான் அவதானித்தான். அவை புல் மேய்ந்தபடியிருந்தன. முகங்களைக் கூர்ந்து பார்த்தான். நாயின் முகங்கள். நாய்கள் புல் மேயுமா?
துறவி சொன்னார். ‘மகனே, உனக்காகவே இவற்றைச் சிருஷ்டித்தேன். இவை தாவர உண்ணிகள். மாமிசம் தின்பதில்லை. இவற்றை நீ கூட்டிச் செல்லலாம். குருதியின் மொச்சை இவற்றின் மீது கவியாது. வளர்த்துக் கொள். நீ பெருமை பெறும் காலம் கனிந்து விட்டது. உனக்கு ஏற்பட்டிருக்கும் புதிரின் முகத்தை நீயே அவிழ்ப்பாய்’.
இவன் எதுவும் பேசவில்லை. ஆச்சரியத்துள் புதைந்து போனான். துறவியின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.
‘எல்லா நன்மைகளும் உனக்குண்டாகட்டும்’ என ஆசீர்வதித்தார்.
‘மகனே, இப்போதே பயணத்தைத் தொடங்கு. பகல் பொழுதில மட்டுமே பயணம் செய். இரவை ஓரளவுக்குப் பயன்படுத்து. புல்வெளிகளில் இவற்றை மேயவிட்டு ஓய் வெடு. மறந்தும் இரவில் பயணம் செய்யாதே’
துறவி சொல்பவற்றை மனதில் ஆழமாகப் பதித்துக் கொண்டான். அவரிடமிருந்து விடைபெற்றான். இவனுக்காகவே காத்திருந்தவை போல நாய்களும் அவனைப் பின் தொடர்ந்தன.
பயணம் தொடங்கியது. கொழுத்தும் பகல்களின் மீதான பயணம். புல்வெளிகளைக் காணும் போதெல்லாம் நாய்களை மேய விட்டான். நீர் நிலைகள் காணும் போதெல்லாம் நீர் பருக விட்டான். நாங்கள் இவனின் காற்தடங்களைத் தொடர்ந்த வாறிருந்தன. இவனின் சைகைகளுக்கும் வார்த்தைகளுக்கும் கட்டுண்டன. இவனால் தன்னைச் சூழ நடக்கும் ஆச்சரியங்களையும் புதுமைகளையும் விளங்க முடியவில்லை. துறவி சொன்னதைப்போல நானே இந்தப் புதிரை அவிழ்த்து விடுவேனா?’ அப்படி என்ன புதிர் இருக்க முடியும்? இவனது சிந்தனைகள் முழுதும் துயவியின் வார்த்தைகள் மீதே கவிந்திருந்தன.
இரண்டு இரவுகளை காட்டிலேயே கழித்தவன், காலையிலேயே ஊர் எல்லையை அடைந்து விட்டான்.
ஊருக்குள் இறங்குவதற்கு முன், தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவித் துடைத்தான். நாய்களைத் தடவிக் கொடுத்தான். தெருவில் இறங்கி நடந்தான் சூரியன் மேலே எழுந்தபடியிருந்தது. வீதியில் சன நடமாட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தது.
எல்லோரும் குதிரைகளையே ஆத்மார்த்தன் கூட்டிச் செல்வதாயே நம்பினர். இவன் காண்பவ்களுக்கெல்லாம் தலையை அசைத்துப் புன்னகை செய்தான். சிறுவர்கள் தெருவுக்கு வந்து குதிரைகள் குதிரைகள் என ஆரவாரம் செய்தன.
தெருவின் இரு பக்கமும் சனங்கள் கூடினர். இவன் போர் முடிந்து ஊர் திரும்பும் சரித்திர காலத்தின் வீரத்தளபதியாக பாவனை செய்தவாறு நடந்தபடியிருந்தான்.
வீட்டை நெருங்கியதும் வீட்டு வாயிலில் மனைவியும் பிள்ளைகளும் காத்திருந்தனர். குதிரை குதிரை எனச் சொல்லிப் பிள்ளைகள் குதுகலித்தனர்.
ஆத்மார்த்தன் தன் பயண அனுபவங்களையும் தான் சந்தித்த துறவி பற்றியும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டான்.
தான்கொண்டு வந்திருப்பது குதிரையல்ல எனத் தெரிவித்தான். மனைவியால் நம்ப முடியவில்லை. குதிரையின் வடிவை ஒத்த வாம் மிடுக்கும் கொண்ட அந்த நாய்களை அவள் நன்றாகக் கவனித்தாள்.
ஆத்மார்த்தன் கொண்டு வந்திருப்பது குதிரைகளல்ல, நாய்கள் என்ற கதை ஊரெல்லாம் பரவியது. சனங்கள் வீட்டினை மொய்த்தனர். எல்லோரிடமும் தான் ஒரு வெளிநாட்டவரிடம் விலைகொடுத்து அவற்றை வாங்கியதாக இவன் சொன்னான்.
நாய்கள் புற்களைத் தின்னும் அதிசயத்தைக் கண்டு சனங்கள் வியந்தனர்.
ஆத்மார்த்தனுக்கு விலையுயர்ந்த நாய்களை வைத்திருப்பவன் என்ற பெயர் கிடைத்தது. மாலை நேரங்களை நாய்களுடனேயே செலவிட்டான். தன்னுடைய பண்ணைக்கு வடக்குப் புறமாக இருந்த காணியை வாங்கி அதில் புல்வெளியை உருவாக்கினான். வெளிநாட்டுப் புல்லினங்களை அதிலே வளர்த்தான்.
இவனுக்குப் பண்ணையிலும் வருமானம் பெருகியது. அயல் ஊர்களிலும் நிலங்களை வாங்கிவிட்டான். குறிப்பாக, தன் ஊரின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் பெருவாரியான நிலங்களை வாங்கினான். தான் விரும்பும் நிலங்களை தரமறுத்தவர்களிடம் வன்முறை வழிமுறைக் கையாண்டு அபகரித்தான். ஒரு குறுநில மன்னன் போல எங்கும் உலாவந்தான்.
வெளியூர்களில் வசித்த தன் தம்பிகள் கோட்டை ராஜனையும் பட்ஷிராஜனையும் அழைத்து வடக்கிலும் கிழக்கிலுமுள்ள வயல் நிலங்களில் புற்களை நாட்டும்படி செய்தான்.
நாளுக்கு நாள் புல்வெளிகளை உருவாக்கும் திட்டம் பெருகிக் கொண்டே போனது. நாய்களுக்காகவே எல்லாவற்றையும் செய்தான்.  அவையே அவனது உலகாக மாறின.
மாலைவேளைகளில் தன் இரண்டு பிள்ளைகளையும் நாய்களின் மேல் இருத்தி வீதிகளில் உலாவந்தான். வரத்தொடங்கிய நாட்களில் அவனுக்கு ஊருக்குள் வேட்டையன் என்ற பெயரும் உருவாகி விட்டிருந்தது.
பெயர் மாற்றம் ஏற்பட்ட பின்னர், தன் கையெழுத்தையும் வேட்டையன் என இடுவதை வழக்கமாக்கினான்.
மறந்தும் கூட வீட்டில் நாய்களுக்கு அண்மையில் வைத்து மீன் வெட்டுவதையோ கோழியை அறுப்பதையோ இவன் மனைவி செய்ததில்லை. இவன் வீடு திரும்பி 28 ஆவது நாள், சாமி சங்கரபுத்தன் வீட்டுக்கு வந்தார். இவன் ஓடிச் சென்று அவரின் கால்களில் வீழ்ந்தான்.
அவர் இவனை ஆசீர்வதித்து, ‘மகனே, உன் வாழ்வு இனி வழமாகும். என் குருதேவர் உனக்கிட்ட அறிவுறுத்தர்களைப் பின்பற்று’ என்றார்.
மனைவி தேநீருடன் வந்து குருதேவரின் பாதங்களை வணங்கி, பருகக் கொடுத்தாள். அதை அவர் பருகினார்.
வேட்டையன் மகிழ்வில் திளைத்தான். குருதேவர் தான் புறப்படப் போவதாயும் இனி இரண்டாவது வருடம் இரண்டாவது மாதம் இரண்டாவது கிழமை வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
வேட்டையன் தன் வாழ்வு புதிர்களால் கட்டப்படுவதை உணர்ந்தான். புதிர்களை அவிழ்த்துத் தன் வாழ்வின் இலட்சியத்தை அடைவதையே குறிக்கோளாக்கினான்.
ஊரில் அதிகாலை வேளைகளில் கூவும் சேவல் ஒலியில் தன் நாய்கள் உறக்கம் கலைந்து எழுவதைக் கண்டான். அதனால் ஊரில் சேவல் வளர்ப்பவர்களை அழைத்து சேவல்களின் வாய்களைக் கட்டி வைக்கும்படியும் அவ்வாறில்லை எனில் அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அந்தச் சேவல்கள் தன் வீட்டுச் சட்டியில் குழம்பாகும் என்று எச்சரித்தான்.
சேவல்கள் கூவினால் அந்த ஊருக்குப் பெரும் அழிவு சேரும் என்ற கதையத் தன் முகவர்கள் மூலமாக உலாவவிட்டான். அவர்கள் அந்தக் கதையை ஊரெல்லாம் பரப்பினார்கள். பதிலாக தன் நாய்களுக்குச் சாமத்திலும் அதிகாலையிலும் ஊளையிடுவதற்குப் பயிற்சிகளை வழங்கினான். பின்னெல்லாம் நாய்களின் ஊளையோடே பொழுதுகள் விடிந்தன.
விதியை மீறிக் கூவிய கோழிகள் வேட்டையனின் வீட்டு சட்டியில் கொதித்தன. மனைவியும் இரண்டு பிள்ளைகளும் கொழுத்தனர். இவனின் மனைவி நடப்பதற்கே சிரமப்பட்டாள்.
சேவல்களை இழந்தவர்கள் சங்கம் திரட்டி பல அமைப்புகளிடம் முறையிட்ட போதும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நள்ளிரவில் ஊளையிடும் நாய்களினால் குழந்தைகள் வெருண்டு போயின. ஊர் வறண்டு போவதைக சனங்கள் உணரத் தொடங்கினர். வேட்டையனோ புதிய புல்வெளிகளால் ஊரே அழகில் பொலிவதாய் எண்ணினான்.
நாட்கள் செல்லச் செல்ல நாங்களின் மீதான காதல் பெரும் வெறியாக மாறத் தொடங்கியது. வீட்டைம றந்து நாய்க்கூட்டிலேயே உறங்கவும் தொடங்கினான் அவன்.
தன் செல்ல நாய்களின் வனப்பிலும் சாகஸங்களிலும் மிதந்தான். மனைவி, பிள்ளைகளுடன் கழிக்கும் பொழுதுகளையும் மறந்தான். அவர்களும் இவனிடம் இருந்து அந்நியப்படுவதாய் உணர்ந்தான்.
தீடீரென ஒருநாள் தன் பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளர்களை அழைத்து இனிப் பண்ணையில் வேலை செய்யத்தேவையில்லை. புல்வெளிகளைப் பராமரித்தால் மட்டுமே போதும் எனக்கூறி, புல்வெளிகளுக்கு அனுப்பினான். பண்ணைகளிலுள்ள கோழிகளும் மாடுகளும் பட்டினியால் இறந்தன. ஊரே துர்நாற்றத்தில் ஆழ்ந்தது.
வேட்டையன் நாய்க்கூடுகளை நறுமணப் புகையினால் நிறைத்தான். தனக்கு ஊரில் மேலும் மேலும் செல்வாக்கு உயர்வதான பிரமை அவனிடம் வளர்ந்து கொண்டே போனது.
ஒருநாள் வேட்டையனின் கனவில் அவனது நாய்கள் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் நாய் ஒன்றினைத் துரத்தித் துரத்தி வன்புணர்ச்சியில் ஈடுபடுவதைக் கண்டான். அவற்றின் புணர்ச்சி வெறியும் அவையிடும் ஒலியும் இவனைத் திகிலடையச் செய்தன. இரண்டு நாய்களுமே அந்தப் பெண்நாயைக் கொடூரமாகப் புணர்ந்தன. அதன் பெண்ணுறுப்பிலிருந்து பெருகிய இரத்தத்தை நக்கி நக்கிக் குடித்தவாறு கொடூரமாக ஊளையிட்டன. இவன் மிகவும் பயந்து போய் கனவிலிருந்து திடுக்கிட்டு எழுந்தான். நெஞ்சு பயத்தினால் இடித்தது. பயம் தலைக்கேறி நடுங்கினான். குரு தேவன் சொன்ன மகா வாக்கியங்களை ஒரு தடவை நினைத்துப் பார்த்தான். இரத்த வெடில் இரத்த வெடில் என்று மீளவும் மீளவும் சொல்லிக் கொண்டான்.
தன் சுய நிலையை அடைந்த சிறு கணங்களின் பின் நாய்கள் உறங்கும் பக்கமாக தன் பார்வையைத் திருப்பினான். அவை மிகச் சாதுவான பிராணிகளாய் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தன. மனம் ஆசுவாசப்பட்டது.
பொழுது விடிந்தும் கனவினால் விளைந்த படப்படப்பு நீங்கவில்லை. யாரோடும் கனவு பற்றி அவன் மனம் பேசி ஆறுதலடைய விரும்பவில்லை. நாய்களையே பார்த்தபடியிருந்தான். இவை இரத்தம் குடிக்குமா? இரத்தம் குடிக்கத் தொடங்கினால், என்ன நடக்கும்? போன்றதான கேள்விகள் இவனைச் சூழ்ந்து கொண்டன.
பிறகு எழுந்து அவற்றை கூட்டிக்கொண்டு கிணற்றடிக்குச் சென்றவன் அவற்றை நன்றாக நீராட்டினான்.  அவற்றின் வாய்களிலிருந்து இரத்த வெடில் அடிக்கின்றதா என மோந்து பார்த்தான். இவை ஒரு போதும் குருதி சுவைக்காது என மனதை தேற்றிக் கொண்டான்.  நாய்களின் ஈரத்தை உலர்த்திவிட்டு புல்வெளியில் மேயவிட்டு அவற்றின் மினுங்கும் உடலைப் பார்த்துப் பார்த்து மனங்குளிர்ந்தான்.
அன்றைய காலை உணவுக்காக வீட்டுக்குச் சென்றான்.  மனைவி றொட்டியுடன் இறைச்சிக் குழம்பையும் இரத்த வறையையும் கொண்டு வந்து வைத்தாள்.
இரத்த வறையைக் கண்டவனுக்கு ஏதோ செய்வது போலிருந்தது. அடி வயிற்றிலிருந்து குடல் பிடுங்கப்பட்டு தொண்டைக் குழியை அடைத்துக் கொள்வதாய் உணர்ந்தான்.
தனக்கு பிடித்த இரத்தவறை இன்று தன் வயிற்றைக் குமட்டுவதை இவனால் ஜீரணிக்க முடியவில்லை.  கண்களை மூடிக்கொண்டு தன் மனதை ஒரு நிலைப்படுத்தினான்.  பிறகு கவளம் கவளமாக அள்ளி அள்ளி இரத்த வறையை உண்டான்.  அதன் மீதான தாகம் அவனுக்கு அதிகரித்தது.  கோப்பை காலியாகும்படி உண்டான். அவனுக்குப் போதவில்லை.  மேலும் மனைவியை கொண்டு வருமாறு கூறி உண்டான். இரத்தவறை தீர்ந்தபின்னும் அவன் பசி அடங்கவில்லை. எழுந்து நாய்க்கூட்டுக்குச் சென்றான்.
தன் படுக்கையில் படுத்தவாறு யோசிக்கத் தொடங்கினான். தனது நாய்கள் புணர்ச்சியல் விருப்பம் கொண்டவையாக இருக்குமா? கனவில் கண்டது போலவே வெறி கொண்டு புணருமா? என அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்தன.  கேள்விகளின் முடிவில் அவனுக்கு விசித்திரமான எண்ணம் தோன்றயது ஒரு பெண் நாயை கூட்டில் விட்டுப் பார்த்தால் என்ன? கனவை ஆராயும் இவனின் வேகம் குருதேவா சொன்ற மகா வாக்கியங்களை விஞ்சி நின்றன.
தன் வேலையாட்களில் ஒருவனை அழைத்து பெண் நாய் ஒன்றினை எங்காவது பிடித்துவருமாறு அனுப்பினான்;. பிறகு தன் இரண்டு நாய்களையும் கூட்டுக்கு கொண்டுவந்து விட்டான்.
சிறிது நேரத்தில் வேலையாள் பெண்நாயுடன் வந்தான். அவனை அனுப்பிவிட்டு இவன் கூட்;டைத்திறந்து மெதுவாக நாயை உள்ளே விட்டான்.
பெண் நாய் அந்த இரண்டு நாய்களையும் பார்த்து வெருண்டு போய் மூலைக்குள் ஒதுங்கியது.  நாய்கள் இரண்டும் சாதுவான பிராணிகளாய் தம் பாட்டில் படுத்திருந்தன.  கனவில் கண்டது ஒரு போதும் சாத்தியமில்லை. முனிவர் பெண் வாடையின்றியே நாய்களை வளர்ந்திருப்பார் என இவன் நினைத்தான்.  பெண் நாயைக் கூட்டிலிருந்து வெளியேற்றுவதுதான் நல்லது என நினைத்தான். ஆனாலும் தன் நாய்கள் அதைப் புணருவதை காண வேண்டும் என்ற விருப்பு இவனின் செயலூக்கத்தை பின்தள்ளியது.
காத்திருந்தான். தன் நாய்களில் மாற்றங்கள் ஏதும் நிகழுகிறதா என்று. சற்று நேரம் சென்றதும் நாய்களில் ஒன்று எழுந்து பெண் நாயின் அருகே சென்றது. அது பயந்து மூலைக்குள் ஒதுங்கியது. நாய் அதன் முகத்தை முகர்ந்து.  பின் உடலை பிறகு குறியை. அதன் கண்களில் சிவப்பேறியது. உரோமங்கள் குத்திட்டன. பெண் நாயை தன் கால்களால் அமர்த்தி அதைப் புணரத் தொடங்கியது. சாதுவாய்க் கிடந்த மற்ற நாயும் புணர்ச்சி வெறியேற பாய்ந்து வந்தது.  இரண்டும் மாறிமாறி அதைப் புணர்ந்தன.  பெண் நாயின் ஓலம் எங்கும் எதிரொலித்தது. நாய்கள் இரண்டும் புணர்ச்சியின் உச்சத்தில் அதன் குரல்வளையைக் கடித்தன. அதன் குறியிலிருந்து இரத்தம் பெருகியது.  அவை இரத்தத்தை நக்கி நக்கிக் குடித்து விட்டு பெரும் ஊளையிட்டன. பிறகு சாதுவான பிராணிகளாகி தங்கள் இடங்களில் போய் படுத்துக் கொண்டன.
இந்த காட்சி இவனுக்கு மனதுள் பெரும் பீதியை ஏற்படுத்தியபோதும் அவற்றின் கொடூரமான புணர்ச்சி இவனுக்கு ஒரு விதமான ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
புணர்ச்சியின் பின் நாய்கள் இரண்டும் சாதுவாக போய் தங்களின் இடத்தில் படுத்துக்கொண்டதில் ஒரு வித ஆறுதலும் ஏற்பட்டது.  தன் நாய்களிடமிருந்த புணர்ச்சியின் வேகத்திலும் அவற்றின் ஓர்மத்திலும் தன்னிலை இடிந்து போன வேட்டையன் சடுதியாக ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
தன் பண்ணையில் வேலை செய்யும் ஐந்து பேரை வரவழைத்து ஊர் ஊராகச் சென்று நல்ல பெண் நாய்களை பிடித்து வருமாறு கட்டளையிட்டான் அவர்களுக்கு தன் புதிய வாகனத்தையும் கொடுத்தான்.
நாய் பிடிகாரர்கள் இரவுகளை சாதகமாக்கி வீட்டு வளவுகளுக்குள் இறங்கி தினமும் பெண் நாய்களைப் பிடித்தனர். வேட்டையன் இரவுகளில் பெண்நாய்களை கூட்டுக்குள் தனித்தனியாகவும் கூட்டாயும் அனுப்பி தன் நாய்களின் காமத்துக்கு இரையாக்கினான்.
தன் நாய்கள் புணரும் விதமே தனியானது எனப்   பெருமை கொண்டான். ஊரில் பெண் நாய்கள் குறைந்து கொண்டு போயின. வேட்டையனின் வீட்டில் இரவில் நாய்களின் அவல ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. சனங்கள் பயந்து போயினர். ஊரை அண்டிக் கிடந்த ஆற்றங்கரையில் பெண் நாய்களின் உடலங்கள் ஒதுங்கின. ஆற்றங்கரையின் பிணநெடி ஊர்வரை அடித்தது. சனங்கள் மூக்கை மூடி துணிகளைக் கட்டிக்கொண்டே திரிந்தனர்.
வேட்டையன் தன் செல்வாக்கு ஊரில் பன்மடங்கு பெருகியதாய் நினைத்துக் கொண்டான். நாய்கள் பெண் நாய்களைப் புணரத் தொடங்கிய பிறகு அவற்றின் கொடூரப்பசியை புல்வெளிகளால் ஈடுசெய்ய முடியவில்லை. அதனால் அவற்றுக்கு மாமிசம் உண்ணப் பழக்க வேண்டும் என முடிவெடுத்தான்.
தன் பண்ணையில் இருந்த கோழிகள் இறந்து போனதால் தன் நாய் பிடிகாரரை ஊருக்குள் இறக்கி கோழிகளைப் பிடிக்கச் செய்தான். கோழிக்கறியை விதம் விதமாகச் சமைத்து தன் நாய்களுக்கு கோழிகளை உண்ணும் சடங்கினை முதன்முதலில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்தான்.
ஊரில் சில பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இருந்தபோதும் அந்த விழா பிரமாண்டமாக நடந்தது. நாய்களை நன்றாக அலங்கரித்து மாலை சூட்டி வீதி வழியே ஊர்வலமாக அழைத்துச் சென்று விசேடமாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் கோழி உணவைப் படைத்து உண்ண விட்டான்.
முதன்முதலில் கோழியை உண்பதால் அவற்றுக்கு குமட்டல் கொடுக்குமோ என நினைத்தான். ஆனால் அவை பூக்களைச் சாப்பிடுவதைப் போலவே அவை கோழிக்கறிகளையும் உண்டு கழித்தன.
தினமும் இரவுகளில் கோழிபிடிகாரர்கள் வீடுகளுக்குள் புகுந்து கோழிகளைப் பிடித்தனர். இரகசியமாகப் பிடிக்கமுடியாத சந்தர்ப்பங்களில் உடமையாளர்களுடன் முரண்ட வேண்டியேற்பட்டது. முரண்பட்டவர்களை வேட்டையன் தன் நாய்களுக்கு இரையாக்கி விடுவான் என அச்சுறுத்தினர். இதனால் உடமையாளர்கள் தங்கள் கோழிகளையும் பெண் நாய்களையும் ஆற்றைக்கடந்து அனுப்பினர்.
வேட்டையனின் பெண்நாய் கூடுகளில் நாய்களின் எண்ணிக்கை குறைந்து போனது. இதனால்  நாளுக்கு நாள் நாய்களின் புணர்ச்சி வெறி அதிகரித்தது.
வேட்டையன் தன் நாய்கள் புணரும் காட்சிகளைப் பார்ப்பதிலேயே பொழுதுகளைக் கழித்தான். தன் மனைவியை அழைத்து அந்தக் காட்சிகளைப் பார்க்கும்படி செய்தான். அவளோ இவனிடம் பெருகும் கொடூரவெறியைக் கண்டு அருவெறுத்தவளாய் அவ்விடத்தில் இருந்து அகன்றாள். இவனது நாய்களைப் போலவே கொடூர வெறியோடு தன்னையும் புணர்ந்து கொன்றுவிடுவானோ என்ற பயம் அவளது தூக்கத்தைத் துரத்தியடித்தது. தனியே தன் அறையில் உறறங்குவதைத் தவிர்த்தாள். பிள்ளைகளின் துணையுடன் இரவுகளில் உறங்கினாள். இப்படியாக நாட்கள் ஓடின.
ஊரில் பெண் நாய்கள் எதுவுமே இல்லாமல் போயின. வேட்டையனின் பெண் நாய்களின் கூடுகளும் வெறுமையாகின. இவனது நாய்களின் வெறி மேலும் மேலும் அதிகரித்தது. அவை இரவுகளில் தாமே கூட்டைத்திறந்து வெளியேறி பெண் நாய்களைத் தேடி அலையத் தொடங்கின. இரவுகளில் சனங்கள் பயந்துபோய் முடங்கினர். ஊரே ஓலத்தினால் நிறைந்தது. இவனது நாய்களின் ஊளைகளால் இரவுகள் நடுங்கின.
பகலில் நாய்கள் சாதுவாகி கூட்டுக்குள் கிடக்கும். இரவு ஆக ஆக அவற்றின் கண்களில் தோன்றும் தீப்பந்தம் போன்ற காம நெருப்பை அவன் கண்ணுற்றான். இவனது மனதில் அப்போதெல்லாம் ஆனந்தம் தாண்டவமாடியது. பகல்களில் நாய்களைப் பார்ப்பதை விரும்பாதவனானான்.
அவற்றுக்கான பகல் உணவுகளை வேலையாட்கள் மூலமே வைத்தான். நாய்கள் அனுமதி இல்லாமல் இரவுகளில் வெளியேறுவதை உணர்ந்தும் இவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சாதுவான அவற்றின் தோற்றமும் மினுமினுக்கும் உடலும் அவனை ஈர்ர்த்து வைத்திருந்தன. நாய்கள் தன்னோடு இருப்பதாலேயே தனக்குப் பேரும் புகழும் என நினைத்தான். தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து அந்நியப்பபட்டாலும் அந்தக் குறையை நீக்குபவை நாய்கள் தான் என அவன் நம்பினான். அந்த நாய்கள் இல்லாத உலகத்தை இவனால் கற்பனை கூடசெய்யமுடியாமல் இருந்தது.
நாய்கள் தன்னை நீங்கிய ஊரில் தனக்கிருக்கும் செல்வாக்கு யாவும் நீங்கி தானொரு நடைப்பிணமாக அலைய நேரிடும் எனப் பயந்தான்.
அன்றைய இரவும் நாய்களுக்கு உணவை தன் கைகளாலேயே ஊட்டிவிட்டான். அவற்றின் இடங்களில் உறங்கச் செய்துவிட்டு தானும் தன் படுக்கையில் படுத்தான். நள்ளிரவில் இரண்டு நாய்களும் எழுந்து கூட்டின் கதவைத் திறந்து வெளியேறின. அவை வெளியேறிச் சென்ற சில நிமிடங்களில் எல்லாம் ஊரில் ஓலமும் அதனைத் தொடர்ந்து இவனது நாய்களின் ஊளையும் கேட்டன.
காலை எழுந்து வழமைபோல தன் நாய்களை நீராட்டச் செல்ல எண்ணி அவறறின் அருகே சென்றான். அவை முன்னால் ஆண் குறி ஒன்று கிடந்தது. இவன் வெருண்டு போனான். நாய்கள் தங்கள் வெறித்தனத்தை ஆண்கள் மீதும் காட்டத்தொடங்கி விட்டதை உணர்ந்தான். நாய்களின் உடலிலும் வாயிலும் குருதி உறைந்து போயிருந்தது. பதற்றத்துடன் அவற்றை நீராட்ட அழைத்துச் சென்றான்
நாய்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆண்குறி வெறியால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயம் இவனைச் சூழ்ந்தது. நாய்களை நீராட்டி விட்டுவிட்டு இன்றே குருதேவரிடம் செல்ல வேண்டும் என நினைத்தான். அவரின் மகா வாக்கியங்களை மறந்து போனதால் தான் தனக்கு இத்தகைய நிலை வந்தது என உணரத் தலைப்பட்டான். குருதேவரிடம் ஏதாவது பரிகாரம் இருக்கக்கூடும். அவரால் தான் நாய்களை மீளவும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் எனக் கருதினான்.
கிணற்றடியில் நாய்களைப் படுக்கும்படி செய்துவிட்டு அவற்றின் மேல் நீரை அள்ளி அள்ளி ஊற்றினான். திடீரென்று நாய்கள் இரண்டும் எழுந்து நின்றன. அவற்றின் கண்கள் இரண்டும் தீப்பந்தம் போல சிவந்து எரிந்தன. அவற்றில் ஒன்று பாய்ந்து அவனது அரையில் கட்டியிருந்த ஆடையை இழுத்து உரிந்தது. மற்றையது பாய்ந்து அவனது குறியைக் கடித்து எடுத்தது. பிறகு இரண்டும் அவ்விடத்தில் இருந்து நீங்கி ஊரின் எல்லை நோக்கி ஓடின.
இவன் துடிதுடித்தான். இரத்தம் பீறிட்டது. கைகளால் கவட்டைப் பொத்தியவாறாக வீட்டை நோக்கி ஓடினான். இவனின் ஓலம் ஊரெங்கும் எதிரொலித்தது. வீட்டின் முன் விழுந்து கிடந்து கதறினான். மனைவியும் பிள்ளைகளும் ஓடிவந்தனர். இரத்த வெள்ளத்தில் கிடக்கும் இவனைப் பார்த்து அலறினர்.
இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு கிழமைகள் கழித்து சாமி வீட்டு வளவினுள் நுழைந்தார். இவன் குறியற்று வீட்டின் முன் புரண்டு அலறுவதைப் பார்த்தார். அவரின் உதடுகளில் லேசான புன்னகை மலர்ந்தது. அவர் எதுவுமே பேசவில்லை. வீதியை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினார்.

உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை

07 அக்டோபர், 2012




















நேற்று நாங்கள் வலைஞர்மடத்துக்குப் போயிருந்தோம். அங்கேதான் இறுதிப் போர்க்காலத்தில் தானா விஷ்ணு இருந்தார். அப்படியே வலைஞர்மடம் கடற்கரைக்கும் போனோம். அந்தக் கடலின் வழியாகத்தான் விஷ்ணு தப்பிச் செல்ல முற்பட்டார். யுத்த்தின் இறுதி நாட்களில் தப்பிச் செல்வதைத் தவிர, வேறு வழியில்லாத ஒரு நிலையில், வேறு தெரிவுகளுக்கிடமில்லாத நிலையில், குடும்பத்தோடு விஷ்ணு தப்பிச் செல்ல முயன்றார். இப்பொழுதும் இந்தக் கடலின் வழியாகத் தப்பிச் செல்கின்றனர் பலர். ஆனால், இந்தத் தப்பிப் பிழைத்தல்களும் இவற்றின் நோக்கங்களும் இந்தப் பயணங்களும் வேறு நோக்கம் கொண்டவை. இவை அந்நிய நாட்டுக்கு உழைப்பைத் தேடிய பயணங்கள். கடல்வழியான அவுஸ்ரேலியப் பயணங்கள். 
அன்றைய தப்பிச் செல்லல்கள் வேறானவை. உயிருக்காக, உயிரைக் கையிற் பிடித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தல் என்பது எந்த நிலையிலும் உத்தரவாதமில்லாதது. ஆனால், வேறு வழியில்லை. விஷ்ணு தப்பிச் சென்றார். கைக்குழந்தை நிலையில் இருந்த தன்னுடைய மகளுடன், அபாயங்கள் நிறைந்த கடல்வழியே ரகசியமாகத் தப்ப முயற்சித்த ரகசியப் பயணம் அது. அப்படித் தப்பிச் சென்றவர் தப்பி விடவில்லை. மீண்டும் அபாயத்தில் சிக்கினார். முன்னரையும் விடக் கடினமான அபாயத்தில். விளைவாக விஷ்ணு புலிகளிடத்தில் கைதியானார். பிறகு அகதியாகி முகாம்வரை சென்று மீண்டார். ஆனாலும் இன்னும் விஷ்ணு அகதியே. பால்யபருவத்தில் தன்னுடைய சொந்த ஊரை விட்டுப் பெயர்ந்த விஷ்ணு இன்னும் தன்னுடைய ஊருக்கப் போகமுடியாமலே உள்ளார். 
யுத்தம் விஷ்ணுவைப் பாதித்தது. அவருடைய வாழ்வை, மனதை, இருப்பை எல்லாவற்றையும் பாதித்தது. எல்லாவற்றையும் அது காயப்படுத்தியது. அதனால், அவர் தன்னுடைய சொந்த அனுபவங்களை எழுதுகிறார். தான் சந்தித்த நெருக்கடிகளை, தனக்கு நேர்ந்த அபாய நிலைகளை, கொடுமைகளை, தான் பட்ட துயரத்தை எல்லாவற்றையும் எழுதுகிறார். இது விஷ்ணுவுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. இது உண்மையின் எழுத்து. நடந்தவற்றின் பதிவு. இவற்றை எழுதுவதன் மூலம் விஷ்ணு வரலாற்றுக்குச் சாட்சியாகின்றார். அல்லது வரலாற்றைச் சாட்சி பூர்வமாக நமக்குத் தருகிறார். இதை விட வேறு என்னதான் செய்ய முடியும் விஷ்ணுவினால்?
இதை யாரும் மறுக்க முடியாது. இதை எதிர்கொள்ளச் சிலருக்குக் கடினமாக இருக்கலாம். இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாதிருக்கலாம். ஆனால், என்ன செய்ய முடியும்? உண்மை அப்படித்தான் உள்ளது. கடினமானதாக. ஏற்றுக்கொள்ள முடியாததாக. சுடக்கூடியதா. இதுதான் அவலம். இதுதான் இன்றைய தமிழ்ச் சூழலின் கொடுமை. உண்மையை மூடி மாபெரும் திரைகள் விரிக்கப்படுகின்றன. மிகக் கடினமான, கெட்டி தட்டிய திரைகள். இந்தத் திரையில் அவரவர் விரும்பியமாதிரி வர்ணங்களைத் தீட்டுகிறார்கள். தாங்கள் விரும்பியமாதிரி எதையோவெல்லாம் வரைகிறார்கள். வரைந்து விட்டு இதுவே உண்மை என்று தோற்றம் காட்டுகிறார்கள். 
இதைக் கடந்து நாம் உண்மைகளைப் பேச முடியாது. யாரும் உண்மைகளைச் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், அது அரசியல். அது தவறான அரசியல் என்கிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு தவறானது? 
வலைஞர்மடத்தில் இன்னும் அவலப்பரப்பு முடியவில்லை. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஆனால், வலைஞர்மடத்தில், மாத்தளனில், பொக்கணையில், முள்ளிவாய்க்காலில், இரட்டை வாய்க்காலில் எல்லாம் சனங்கள் வாழும் வாழ்க்கையை நீங்கள் போய்ப்பார்க்க வேணும். அவர்கள் அவலத்தின் மத்தியில்தான் வாழ்கின்றனர். 
நேற்றும் நாங்கள் அதைப் பார்த்தோம். இங்கே எங்களோடு ‘அடையாளம்’ சாதிக் அமர்ந்துள்ளார். அவரைக் கேட்டுப்பாருங்கள், அந்தச் சனங்கள் என்ன சொல்கிறார்கள் என்று. 
அழிவின் சின்னங்கள் எதுவும் மறையவில்லை. யுத்த வடுக்கள் எதுவும் நீங்கவில்லை. எல்லாம் அப்படியே உள்ளன. அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட சடலங்கள் உக்கிவிடாத நிலப்பரப்பில், அந்தப் புதைகுழிகளுக்கருகில் அவர்கள் தங்களின் குடிசைகளை அமைக்கிறார்கள். தாங்கள் புதைத்து விட்டுச் சென்ற உடமைகளை மீட்டெடுக்கிறார்கள். பழைய பொருட்கள் நிறைந்திருக்கும் அந்த நிலப்பரப்பில் யுத்தநாட்களில் இருந்ததைப் போலவே பற்றாக்குறைகளோடு வாழ்க்கிறார்கள். இருள் நிரம்பிய இரவுகளில் பாம்புகளோடும் எலும்புக்கூடுகளோடும் சிதிலமாகிய சூழலோடும் அவர்கள் படுத்துறங்குகிறார்கள். இப்படியான ஒரு சூழலில்தான் அங்கிருக்கும் குழந்தைகள் விளையாடுகின்றன. அவர்களுக்கு இன்னும் பள்ளிக்கூடம் திறக்கவில்லை. பாதைகள் கூடச் சரியாகத்திறக்கப்படவில்லை.  இன்னும் ஒரு தற்காலிக் கூடாரத்தைக் கூட யாரும் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கவில்லை. அரசாங்கமோ, இந்த உலகமோ அவர்களுக்கு அதை இதுவரையில் அமைக்கவில்லை. இப்படியான ஒரு அவலப்பரப்பே அந்தப் பகுதியில் உள்ளது. இதுதான் உண்மை.
இதைச் சொல்வதோ வெளிப்படுத்துவதோ மட்டுமே நாம் செய்யும் பணி அல்ல. அதற்கப்பால் நாம் இயங்க வேண்டியுள்ளது. ஆனால், நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? எங்களுடைய தேசிய உணர்வு எப்படி உள்ளது? நமக்குப் பக்கத்தில், தொட்டுவிடக்கூடிய தொலைவில் இப்படியான ஒரு அவலப்பரப்பை வைத்துக் கொண்டு நாங்கள் கொண்டாடுகிறோம். நாங்கள் ஆடிப்பாடுகிறோம். 
கடந்த நல்லூர்த்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்ததாகப் பத்திரிகைகளில் படித்தேன். இது எப்படி வந்தது? திருவிழாவின்போது நடந்த வியாபாரத்தின் மூலமாகவே இந்த வருமானம் வந்தது? ஆனால், அங்கே?
இதைப் பற்றி எத்தனைபேர் அறிய விரும்புகிறார்கள்? இதைப் பற்றி எத்தனைபேருக்கு அறிய விருப்பம் உள்ளது? நமது தேசிய உணர்வின் சிறப்பும் சீத்துவமும் இப்படித்தான் உள்ளது. நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில் குற்றம் சுமத்தவில்லை. நான் இங்கே அரசியலைப் பேசவில்லை. ஆனால், நான் இப்படிச் சொன்னால் அது அரசியல் என்கிறார்கள்.
நண்பர் சாதிக் வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் என்று எல்லா இடங்களிலும் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்குச் சாதிக்கை யார் என்று தெரியாது. சாதிக்கைப் பற்றி எதுவும் தெரியாது. சாதிக்குக்கும் அவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் அகதிகளாக இருந்தவர்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு அப்பால். ஆனால், அவர்கள் தங்களின் கதைகளைச் சாதிக்குக்குச் சொன்னார்கள். தங்களுடைய மன உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தார்கள். வயதில் மூப்பு, இளமை, ஆண், பெண் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அவர்கள் தங்களைத் திறந்து கொட்டினார்கள். 
சாதிக் சொன்னார், ‘கருணாகரன், இதையெல்லாம், இவர்கள் சொல்வதையெல்லாம் நான் வெளியே போய்ச் சொல்ல முடியாது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள வெகுஜன ஊடகங்களில் இதையெல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை இப்படித்தான் இருக்கு. நான் இதைப் புரிஞ்சுக்கிறேன். இதை நீங்க எழுதுங்க. நாம புத்தகமாகக் கொண்டு வரலாம். அதுக்கு வாற எதிர்ப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. உண்மையை நாம் எப்படியோ, எந்த மாதிரியாகவாவது கொண்டு வரத்தான் வேணும்’ என்று. 
சாதிக்குக்கு உண்மை தெரிகிறது. ஆனால், அதை வெளியே சொல்ல முடியாது. அதற்கு அனுமதி கிடையாது. ஆனால், சாதிக் உண்மையை மறைக்க விரும்பவில்லை. வெளிச் சூழலின் நிலைமை இதற்கு எதிர்மாறானது. இதுதான் கொடுமை. இதைத்தான் அவலம் என்பேன். 
சாதிக்கை அழைத்துக்கொண்டு கூடவே வந்த எழுத்தாளர் டானியலின் மகன் சாம் குடும்பத்தினருக்கும் நேற்றுப் பல உண்மைகள் தெரிந்தன. அவர்கள் வன்னிக்கு வரும்போது, வேறு விதமான எண்ணங்களோடு இருந்தனர். ஆனால், வன்னியில் பயணித்து வலைஞர் மடம், மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரிற் போய்ப் பார்த்து, அந்தச் சனங்களோடு கதைத்த பிறகு பல விசயங்கள் புரிந்தன. இதை நான் அவதானித்தேன். உண்மைகளை எங்களுடைய ஊடகங்கள் மறைக்கின்றன. மறைத்துப் பெரிய திரைகளை விரிக்கின்றன. தாங்கள் உருவாக்குகின்ற புனைவுகளே உண்மைகள் என்று நிரூபிக்கப்படுகின்றன. பகுதி உண்மைகள் முழுமையான உண்மைகள் ஆக்கப்படுகின்றன. 
சனங்கள் இரண்டு தரப்பையும்தான் கண்டிக்கிறார்கள். அவர்கள் உண்மையைச் சொல்ல முற்படுகிறார்கள். அதையே அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையைச் சொல்லும்போது அது அப்படித்தான் இருக்கும்.  
இன்று சனங்களுக்குத் தேவையானது முதலுதவி. இதை நாம் செய்ய வேணும். இதையே நான் வலியுறுத்துகிறேன். இதையே நான் செய்ய விரும்புகிறேன். இதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லட்டும். நான் அதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை. 
அண்மையில் இதே புத்தகத்திற்கான வெளியீட்டு நிகழ்வில் பேசிய நண்பர் நிலாந்தன் மாற்றங்களைப் பற்றி விரிவாகச் சொன்னார். சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்கள், அமைப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வரலாற்றில் ஏற்படுகின்ற மாற்றங்கள், மனிதர்களிடத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என எல்லாவற்றையும் தர்க்க பூர்வமாக, வரலாற்று ஆதாரங்களோடு முன்வைத்தார். நாம் எதையும் மாற்றமடைய விரும்பவில்லையா? தோல்விகளை வெற்றியாக்குவதற்கு, அவலங்களை விட்டு நீங்குவதற்கு, நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு எல்லாம் நாம் விரும்பவில்லையா? அப்படியென்றால் தொடர்ந்தும் அவலப்பரப்பிற்தான் இருக்கப்போகிறோமா? 
இதை நான் ஏற்கவில்லை. நாம் பலவற்றிலும் மாற்றங்களைக் காணவேண்டும். மாற்றங்களைச் செய்ய வேணும். 
விஷ்ணுவின் கவிதைகள் உண்மைகளைச் சொல்லி, நடந்தவைகளைச் சொல்லிப் புதிய எல்லைகளை நோக்கி, புதிய சிந்தனைகளை நோக்கி எம்மை நகர்த்தக் கோருகின்றன.  
இரண்டு தீவிரத் தேசிய மனநிலைகளில் சிக்கிச் சிதைந்த சனங்களில் ஒருவரே விஷ்ணு. அப்படிச் சிக்கிய பலியாடுகளில் ஒருவரே விஷ்ணு. அந்தப் பலியாடு தப்பிப் பிழைத்துத் தன்னுடைய கதைகளை இங்கே சொல்கிறது. 
யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்திருக்கிறது. எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். பாதைகள் திறந்துள்ளன. பயணங்கள் நடக்கின்றன. திருவிழாக்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் போட்டிபோட்டுக்கொண்டு கல்யாண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.  இவையெல்லாம் வேண்டும்தான். ஆனால், இது ஒரு பக்கத்தில் நடக்கும்போது யுத்தம் நடந்த, யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் துடைக்கப்படாமல், அது அவலப்பரப்பாக விடப்படுவதும் வியாபாரமாக்கப்படுவதும்தான் கண்டிக்க வேண்டியது என்கிறேன்.
இந்த மாதிரியான ஒரு சூழல் நம்மைச் சுற்றியிருக்கும்போது, நிச்சயமாக இந்தப் புத்தகத்துக்கும் சரியான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. விஷ்ணுவின் கவிதைகளை எந்தத் தமிழ் ஊடகமும் துணிச்சலோடு விமர்சிக்கும் என நான் நம்பவில்லை. அப்படி விமர்ச்சிக்க வந்தால் அது இந்த உண்மைகளை எதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கு யார் தயார்? எந்தத் தரப்பு முன்வரும்? ஆகவே நிச்சயமாகச் சொல்வேன், இந்தக் கவிதைகளுக்கான விமர்சனங்கள் வரவே வராது. உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை. 
00
தானா. விஷ்ணுவின் ‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வில் கருணாகரன் ஆற்றிய அறிமுகவுரை.

நன்றி- புல்வெளி
 

மரணத்தில் துளிர்க்கும் கனவு

28 ஆகஸ்ட், 2012

 

- சி. ரமேஸ்

நுண்ணுணர்வின் வெளிப்பாடாக அமையும் கவிதை,சொற்களுக்குள் கட்டுண்ட அர்த்த உற்பத்தியை உள்வயப்படுத்திஅதன் கருத்துருவாக்கம்,வெளிப்பாட்டு முறைமை,வடிவஅமைப்பால் பன்முகத்தன்மைக் கொண்டு விரிந்த எல்லைகளைச் சாத்தியமாக்குகிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை நிகழ்த்தும் ஈழத்து நவீன தமிழ்க்கவிதை, அதீத புனைவு, புதிய உத்திகளுக் கூடான வடிவமைப்பு, குறியீட்டு முறைமைகளுக்கூடான பிரக்ஞை பூர்வமான முன்வைப்பு,முதலியவற்றால் செறிவிறுக்கம் கொண்ட நிகழ் கவிதையாகப் பரிணாமம் கொள்கிறது.

இரண்டாயிரத்துக்குப்பின் ஈழத்தில் எழுந்த கவிதைத் தொகுதிகளில் பெரும்பாலானவை தமிழரின் துன்பியல் வாழ்வியலையும் அது வேரூன்றிய பூர்வீகபூமியையும் அவாவுறுகின்ற கவிதைகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்ட பிரதிகளாகவே காணப்படுகின்றன.தமிழர் வாழ்வில் நிலம் பற்றிய பதிவுகள், வரலாற்று ஆவணமாகவும் முதன்மையானதாகவும் முக்கியமான வையாகவும் கருதப்படுகின்ற இச்சூழலில் தமிழரின் வாழ்வியல் இருப்பியலின்; சுவடாகத்துலங்கும் இக்கவிதைகள், ஈழப்போராட்டத்தையும் சிதைந்துபோன போரியல் வாழ்வையும் அதன் வலிகளையும் வன்கொடுமைகளையும் பாடுபொருளாகக் கொண்டவை.

மரணங்கள் மலிந்த பூமியில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மையம் கொள்ளும் இக்கவிதைகள் பூர்வீக பூமியை இழந்து தவிக்கும் நலிவுற்ற மக்களின் வாழ்வியலை உயரோட்டமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்கின்றன. இடிபாடுகளுக்குள் சிதைவுண்டு அழிவுண்ட காலவெளிக்குள் அமிழ்ந்து நொந்து நைந்து போன துயரியின் அவலக் குரலாய் எழுந்து நிற்க்கும் இக்கவிதைகள் இராணுவ ஆக்கிரமிப்புக்களால் பலியாகிப் புதையுண்டு போன உறவுகளின் வலிகளையும் தொடர்ச்சியான இடம்பெயர்வுகளையும் இழப்புக்களையும் பயங்கரவாதத்தின் வன்கொடுமையை எதிர்கொண்ட வாழ்க்கைச் சூழலையும் பேசுகின்றன.இத்தடத்தில் முகம் கொள்ளும்“மரணத்தில் துளிர்க்கும் கனவு”அழிவென்ற பேரிலக்குடன் நடத்தப்பட்ட போரில் ஈழத்தமிழரால் தொலைக்கப்பட்ட – புதையுண்ட வாழ்வியலை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யும் அதே வேளை மூடுண்ட வெளிக்குள் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட மக்களின் நிகழ்சார் இருப்பை ரணமும் வலியுமாக முன்மொழிகிறது.

ஈழத்து மக்களின் புரையேறிபோன வாழ்வை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு அனுபவங்களுக்கூடாகக் வெவ்வேறு காலகட்டங்களைக் காட்சிப்படுத்தும் இத்தொகுப்பு, கவிதைகள் வாயிலாக வடக்கு, கிழக்கு அப்பால் வடமேல்மாகாணத்தையும் ஒன்றிணைக்கிறது. அனார், அலறி, பஹிமா ஜஹான், சித்தாந்தன், துவாரகன், தீபச்செல்வன், பொன்.காந்தன், தானா.விஷ்ணு என எட்டு கவிஞர்களின் எண்பது கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்த இத்தொகுப்பின் தொகுப்பாசிரியார் கவிஞரும் ஊடகவியலாளருமான பாலேந்திரன் பிரதீபன் எனப்படும் தீபச்செல்வன் ஆவார்.

யுத்தபூமியின் மூடுண்ட நகரத்தின் வாழ்வியல் பொழுதுகளைப் பாடும் தீபச் செல்வனின் கவிதைகள் சமகால நிகழ்வுகளின் பதிவுகளாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன.துயர் மண்டிய மரணவாழ்வின் பொழுதுகளைக் கண்டு நொந்து புண்ணுற்றுப்பாடும் இக்கவிதைகள் ஈழத்தமிழரின் வாழ்வியலை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுபவை.ஒரு கோயிலைக் கைப்பற்ற தொடங்கிய யுத்தம் பேரழிவாய், பெருஊழியாய் மாறி ஈழத்தமிழரை அழித்த கதையைச் சொல்லும் “போர்தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்”பொருட் பெறுமானமுள்ள வரலாற்று நிகழ்வின் ஒரு பதிவை ஆவணப்படுத்துகிறது.

“போராளிகள் மடுவை விட்டுப் / பின்வாங்கினர் /நஞ்சூரிய உணவைத் /
தின்ற / குழந்தைகளின் கனவில் /நிரம்பியிருந்த / இராணுவ
நடவடிக்கையிலிருந்து / போர் தொடங்குகிறது.
நகர முடியாத இடைஞ்சலில்/நிகழ்ந்து வருகிற /எண்ணிக்கையற்ற /
இடம் பெயர்வுகளில் /கை தவறிய /உடுப்புப் பெட்டிகளை விட்டு /
மரங்களுடன் /ஒதுங்கியிருக்கின்றனர் சனங்கள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -88)

மனித வாழ்வின் உயிர்ப்பின் கணங்களை நிதர்சன வாழ்வுக்கூடாக இக்கவிதை புடம் போட்டுக்காட்டுகிறது.

அச்சுறுத்தும் வன்முறைகளினதும் அவ்வன்முறைகளினால் நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகளினதும் கோரமுகங்களை இதயசுத்தியுடன் மென்னுணர்வுத்தளத்தில் வெளிப்படுத்தும் ‘தீபச்செல்வனின்’“எல்லாக் கண்களையும் இழந்த சகோதரியின் கனவு” நிகழ்வின் வழி மனிதம் ஏந்திய பெருந்துயரை தத்துருபமாகக் கண்முன் நிறுத்துகிறது.

“….குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருக்கிறாள்
என்றும் தன்னால் தன் நிலத்தை
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகிறாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -103)

யுத்தம் குழந்தையின் அகப் புற உலகைச் சிதைத்து நகரைச் சின்னா பின்னப்படுத்துகிறது.அழிவுண்ட நகரத்தில் இருந்து எழும் மனித பேரவலத்தின் குரல் தீபச்செல்வனின் கவிதைகளில் மனிதத்தின் வலியாய் ஒளிர்கிறது.

காயத்திலிருந்து கொட்டுகின்ற கனவுகளைக் கூடச் சிதைக்கின்ற இராணுவ நடவடிக்கையால், பதுங்கு குழிக்குள் பல்லாயிரக்கணக்கான துன்பங்களை வாழ்வின் வலிகளாகத்தாங்கி கூனிக் குறுகி வாழும் ஈழமக்களின் அவல வாழ்வைக் காட்சிப்படுத்தும் தீபச் செல்வனின் ‘கடல் நுழைகிற மணற் பதுங்கு குழி’ பெருந்துயர் பொதிந்த அழிவின் குறிகாட்டியாய் முகம் கொள்கிறது.காலவடுவின் நிகழ்ப் புற பொருண்மையில் உருக்கொள்ளும் இக்கவிதை போரினால் காவு கொள்ளப்பட் சூழலில் வாழ்தலுக்கான எத்தனிப்பின் சுவடுகளை உணர்த்தி நிற்கிறது.

குருதியின் பாரத்தையும் கண்ணீரின் உவர்ப்பையும் கொடுந் துயரின் அவலத்தையும் அகதி வாழ்வின் நீட்சியையும் இழப்பின் சுவடுகளையும் தீப்ச்செல்வனின் கவிதைகள் வரலாற்றின் வழி பதிவு செய்கின்றன. ஒருவிதப் பிரச்சாரத்தன்மை தீபச்செல்வனின் கவிதைகளில் ஒளிர்ந்திருந்தாலும் இக்கவிதைகளை ஈழத்து இலக்கியப்பரப்பிலிருந்து ஒதுக்கிவிட முடியாது.ஏனெனில் இவை காலத்தின் சாட்சியாய் நிற்பவை.யுத்த சன்னதத்தின் அழிவின் சிதைவிலிருந்து எழும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் சாவுக்கு மிடையிலான வலியிலிருந்து பிறப்பவை.

நவீன சிந்தனையை உள்வாங்கி பன்முகத்தளத்தில் இயங்கும் அனார் பெண்ணுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அநுபவங்களைப் பெண்ணிலை, பெண்ணியநிலை சார்ந்து நுட்பமாய் வெளிப்படுத்தும் இயல்புடையவர். இத்தொகுப்பில் இடம்பெறும் அனாரின் கவிதைகள் கண்டு கொள்ளப்படாத – வெளிப்படுத்தமுடியாத பெண்மொழிசார் அனைத்து கூறுகளையும் தனனகத்தே கொண்டு இயங்குகிறது.ஆணின் அனுபவக் குரலில் இருந்து வேறுபட்ட இக்குரல் அதீத குறியீடுகளையும் அனுபவ வெளிப்பாட்டுவழி கட்டமைக்கப்பட்ட நவீனகருத்தியலுக்கான மொழிசார் கூறுகளையும் கொண்டு இயங்குகிறது.

ஒரு சமூகப்பண்பாட்டு நடத்தைக்குள் சிக்குண்டு உள,உடல் ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணின் குரலாய் வெளிப்படும் ‘ஓவியம்’ அனுபவப் பதிவின் மூலம் பெண்ணுக்கென்று எதுவுமில்லாத ஆண்மையச் சிந்தனையால் உருவாக்கப்பட்ட நலிவுண்ட நிஜவுலகைக் காட்சிப்படுத்துகிறது.

“ வெறும் ஓவியத்தின் வாழ்வில் / என்ன அர்த்தமிருக்க முடியும் /அசைய
முடியாக் கைகளும்/நகர முடியாக் கால்களும் /பேசமுடியா உதடுகளும்/
சந்தேகமே இல்லை/வாயில்லா ஜீவன் ஆடாதசையாது /சுவரில் மாட்டப்
பட்டிருக்கிறது /பல்லிகள் எச்சில் படுவதையும் எதிர்க்காமல்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -11)

சமூகநியதியைத் தகர்க்க முடியாது அத்தளைக்குள் சிக்குண்டு நலிவுற்று வாழ்வின் அர்த்தமின்மைக்குள் உழலும் குரூரவெளியை அனாரின் ‘யாருக்கும் கேட்பதேயில்லை’ கவிதையிலும் தரிசிக்கலாம்.

அதிக அலங்காரமில்லாத சொற்கள், நேர்த்தியானமொழியமைவு, எளிமையானபுனைவு நுட்பமாகக் கையாளப்படும் மொழிப்பிரயோகம் எனவிரியும் அலரியின் கவிதைகள் மிகைநிலை கவியாடலாக அமையாது அநுபவத்தை உள்வாங்கிய பகிர்தலாகவே அமைகின்றன. ராணுவ ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் வலுப் பெற்ற யுத்த பூமியில் எவ்வித பிரக்ஞையும் ஏற்படுத்தாத மனித இறப்புக்களின் நிதர்சனத்தை, இயல்புற வாழ்வை ‘ஒருவன் கொல்லப்படும் போது’ என்னும் கவிதை மிக எளிமையாகப் பதிவு செய்கிறது.அதே சமயம் அக்கவிதை ஏற்படுத்தும் தாக்கம் அதீதமானது.

“ஒருவன் கொல்லப்படும் போது/பெரிதாக என்ன நடக்கப் போகின்றது.
குருதி பெருகி வடிந்து /பச்சை பசும் புல்தரை/செவ்வரத்தம் பூக்கள்
போலாகப் போகின்றது…./மல்லிகை மணம் கசியும் காற்று /பிணநெடி
சுமந்து வீசப் போகின்றது /அழும் குரல்கள் கணப் பொழுதில் /ஓய்ந்து
விடப்போகின்றன. /இவை தவிர/ஒருவன் கொல்லப்படும் போது /
பெரிதாக என்ன நடக்கப் போகின்றது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -23)

இனப்படுகொலைகள் தீவிரமடைந்த சூழலில் குரூரத் தாக்குதல்களுக்குள்ளாகி வதையுண்ட மனிதர்கள் ஆழ்கடலிலும் ஆற்றங்கரையோரங்களிலும் பிணங்களாக மிதப்பர்கள்; ‘கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று யாருக்கும் தெரியாது” எனத் தொடங்கும் ‘இனந்தெரியாத சடலங்கள்;’ கடந்த கால நிகழ்வெளியை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.

“யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று
சடலங்களுக்கு தெரியாதது போலவே
கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று
கடலுக்கு தெரியாது.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -26)

‘சொல் பொருள் பின்வரும் நிலையணியை நிகழ்கால இருப்புக்கு ஏற்ப வெவ்வேறு கோணத்தில் பயன்படுத்திய அலறி ஒரு பொருட்படக் கையாளும் சொற்களைக் கொண்டு சொல்லின் வெளியைத் திறக்கிறார்.இவ் மீப்பொருண்மையில் கட்டுறும் பிறிதொரு கவிதையே சித்தாந்தனின் “பசியோடிருப்பவனின் அழைப்பு”.

“மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்/பிறகு
மலைகளின் சுவை பற்றிய பாடல்களை/இசைத்துக் காட்டினாய்/
மழைப் பொழிவுகளுக்குள்/மலைகள் வளரும் அதிசயங்களை
வசியச் சொற்களில் சொன்னாய்/மலைகள் தீர்ந்து போகும்
ஒருநாள் வருமெனில் /அப்போது/மலைகளைத் தின்று
மலைகளாகிய நாம்/நம்மையே பகிர்ந்துண்டு/பசியாறலாம்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -57)

முழுக்கமுழுக்க கருத்தியலை உள்வாங்கி நவீன கதையாடல்வழி இயங்கும் இக்கவிதை பிரச்சினைக்குட்பட்டு மறைந்து போகும் யுகத்தில் கண்ணீர் வழி மனிதனால் மனிதன் காவு கொள்ளப்படும் துன்பியல் நிகழ்வைத் துக்கித்துக் காட்டுகிறது.சிதைவாக்கம் என்னும் பின்நவீனத்துவ களத்தில் இயங்கும் இக்கவிதை வெளிமாயையால் கட்டுண்ட அகவெளியைப் படிமத்துக்கூடாகக் காட்சிப்படுத்துவதுடன் அடக்கி ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்படும் மக்களின் வாழ்வை மலையென்னும் குறியீட்டுக்கூடாகவும் துல்லியமாக முன்வைக்கிறது.

ஈழத்தின் போரியல் வாழ்வை,அதன் வரலாற்றை, மரபை, தத்துவத்தை கதையாடல் வழி கட்டமைக்கும் சித்தாந்தன்கவிதைகள் ஆழ்ந்த பொருட் பெறுமானம் மிக்கவை.மொழிவழி இயங்கும் நுட்பமான சொல்லிணைகளால் உருவாக்கப்படும் இக்கவிதைகள் பன்முகத்தளத்தில் இயங்குபவை.மூடுண்ட நகரத்தின் இருண்ட வாழ்வின் ஆறாத ரணங்களையும் கொடுமையான மரணவெளிகளையும் காட்சிப்படுத்தும் ‘மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு’ குருதி சுவரப்பட்ட கடந்த காலத்தின் ஆவணப் பெட்டகம்.

“தெருமரங்கள்
சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள்
நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன.;;;;;……
சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்
கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித்தாண்டப் போகின்றேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை.”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -58)

கடந்த கால ஈழத்தின்சனநடமாட்டமில்லா அச்சமூட்டும் இரவு பொழுதினைக் காட்சிப்படுத்தும் இக்கவிதை யதார்த்த நிகழ்வின் நிழற் பிரதி.தூக்கத்தை தொலைத்து விட்டு நடுநிசியில் மரணத்துடன் இறந்து இறந்து வாழும் உருச்சிதைக்கப்பட்ட தமிழ் ஆத்மாக்களின் இதயத் துடிப்பைப் பதிவு செய்கிறது.

உருமாறும் தேசத்து தலைமைகளால் மனிதப்படுகொலைகள் சப்தமின்றி அரங்கேற்றப்படுகின்றன.; ஒப்பாரிகளும் ஓலங்களும் நிறைந்த மலிந்த மரணவெளிக்குள் நாற்சிகளினல் உருவாக்கப்பட்ட மொத்ஹவுசன் முகாமை விட கொடூர வதைமுகாங்கள் வன்மங்கள் உறையும் கண்களுடன் ஒளிர்கின்றன.அச்சமே வாழ்வாய்ப் போன அசமந்த சூழலில் உயிரைக் கையில் பிடித்தபடி அலையும் மனிதவாழ்வைக் காட்சிப்படுத்தும் ‘கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்’ என்னும் கவிதை ஈழத்தின் உண்மையின் தோற்றத்தை நகல் பிரதியாய் எடுத்துரைக்கிறது.

மக்களின் யதார்த்த வாழ்வியல் புறப்படிமங்களுக்கூடாக இக்கவிதையில் நன்கு காட்சிப்படுத்துகிறது.இப்பின்
னனியில் எழும் ‘மகாஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்’ கனவுகளால் நிரப்ப பட்ட வர்ணம் குழையாத வாழ்வை அவாவுகின்றது. குழந்தைகளை மகிழ்வூட்டாத பொழுதுகள்,குருதி,அச்சம், துயரம் முதலானவற்றுக்குள் உழன்று கொண்டு போலி வார்த்தைகளை உண்மையென நம்பி ஏமாறும் மக்கள், உணர்வுகளற்ற உறவுகளுடன் கழிக்கும் பொழுதுகள் என விரியும் இக்கவிதை மனித வாழ்க்கை வாழ்வதற்;காக அன்றி அரசை சந்தோசிப்பதற்காகவும் அரசனை வாழ்விப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது என்னும் ஈழத்தின் இன்றைய நடப்பியல் நிலையையும் விளக்கி நிற்கிறது.

உயிர்ப்புடன் மேலான்மை செலுத்திய அரசியல் பின்னனியில் வன்மப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வைப் பாடும் சித்தாந்தன் கவிதைகள் மறைக்கப்பட்ட,மறுக்கப்பட்ட பகுதிகளை தன்னுள் இணைத்து இயங்குகிறது.உணர்வுகளுக்கப்பால் செறிவிறுக்கம் கொண்ட புதிய சொல்லாட்சி, புதிய சொல் முறைமைக்களுக்கூடாக நவீன கவிதைக்கான இயங்கு வெளியைச் சாத்தியமாக்கும் சித்தாந்தன் மீபொருண்மையில் இயங்கும் அசாத்தியமான படிமங்கள், குறியீடுகளுககூடாக நிகழ்கவிதைக்கான புதியவெளியைத் திறக்கிறார்.

சமூக அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச்சாதனமாக விளங்கும் கவிதை கவிஞனின் அனுபவத்துக் கூடான அகப்புற உலகை கட்டமைக்கிறது.அக்கவிதை உணர்வு பூர்வமாகவும் உயிரோட்டமான முறையிலும் தான் வாழ்ந்த சூழலையும் அச்சூழலுக்குள் நிர்பந்திக்கப்பட்ட வாழ்வியலையும் அடையாளப்படுத்துகிறது. அவ்வகையில் உணர்வின் தடத்தில் எழும் பொன்.காந்தனின் கவிதைகள் போரினால் புண்ணுண்ட மக்களின் கோர இருப்பை ஆவணப்படுத்துகிறது.அகதி முகாம் என்னும் பெயரில் இயங்கிய சமகால வதை முகாம்களில் வாழ்ந்த மக்களின் மனங்களில் மேலெழும் விரக்தியையும் ஆபத்தையும் துயரையும் பேசும் இவரது கவிதைகள் தனித்துவமானவை.

“…நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின் மாபெரும் அழுகை
இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -118)

மரணங்கள் மலிந்த யுத்த பூமியில் பிணங்களை எண்ணி உரத்து அழுவதற்கு கூட குழந்தைகளற்ற சூழலை முன்வைக்கும் ‘நமது கடன்’ ஈழத்தமிழனின் நாதியற்ற அவல வாழ்வின் நிகழ்தன்மையை விளக்குகிறது.

சமூக,அரசியல் பரிமாணங்கள் உள்ள ஒருவரது இலக்கிய ஆளுமை, அவரது படைப்பினுடாகச் சுவரப்படும் போது அப்படைப்பு யதார்த்ததன்மை கொண்ட கனதியான பன்முகப் படைப்பாக உருப்பெறும்.அவ்வகையில் வரலாற்று நிகழ்வின் உள்முக இயங்கியலை மனித வாழ்வியலுக்கூடாகப் பதிவு செய்யும் கவிதைகளே பொன்.காந்தன் கவிதைகள். வாழ்வதற்கு இடமற்று துரத்தப்படும் ஈழத்தமிழர் வீடிழந்து, வாழ்விழந்து அகதிமுகாமில் மந்தைகளைப் போல் அடைக்கப்பட்டு வாழ்வதனை தந்தையின் மரணத்துக்கூடாகக் காட்சிப்படுத்தும் ‘அப்பாவின் சுதந்திரம் பற்றிய குறிப்பு’ யதார்த்தவாழ்வின் இயல்புநிலையை எடுத்துகிறது.

“அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது
அப்பா ! செத்துவிட்டார்
சந்தோசம்
இப்போதுஅப்பாமுதுமையோடுகால் கடுக்க
நிவாரணத்திற்காககாத்திருக்கத்தேவையில்லை
சிலவேளைநெரிசலில் சிக்குண்டு
தடக்கிவிழுந்து
எழமடியாமல் தவிக்கவேண்டியதில்லை
அகதிவாழ்வைவிடஅவருக்குச் சாவுமேலானது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -120)

காலத்தின் சாட்சியாக நிற்கும் இக்கவிதை தான் வாழும் கொடிய சூழலின் மெய் உருக்காட்டியாக விளங்குகிறது.அப்பாவின்பாடல்,உன் எஜாமானின் மரணச்சான்றிதழ் முதலான கவிதைகளும் இத்தளத்திலேயே இயங்குகின்றன.

எதிர்காலம் பற்றிய கனவுகள் தொலைந்த நிலையில் போலிமைகளால் உள்ளமைக்கப்படும் வாழ்வே நிகழ்கால இருப்பாக கட்டமைக்கப்படும் ஈழச் சூழலில்,ஒளிமயமான காத்திருப்புக்கள் தொடர்கின்றன. ஆயினும் நம்பிக்கையிழந்து அல்லலுற்று ஏமாந்து வாழும் வாழ்வோ வேம்பெனக் கசக்கிறது.காருண்யம் மிக்க மனிதப்பண்புகள் மனிதனாலே வேட்டையாடப்படுகிறது.பொன்.காந்தனின் “காத்திருப்பின் கடைசிக்காலம்” என்னும் கவிதையும் இப்பின்னனியில் புறப்பொருட் படிமங்களுக்கூடாக தன்னை முன்மொழிகிறது

இன்றைக்கும் நாளைக்கும் இடையில் உயிர் வாழ்வதற்கும் உணவுக்கும் அல்லாடும் மனிதனின் உயிர்த்துடிப்பை “ஆடை” கவிதையில் தரிசிக்கலாம்.அகதி முகாமில் கொடும் நெருக்கடிக்குள்ளாகி வதைபட்டு நொந்து நொடிந்து வாழும் மனித வாழ்வியல் உணர்வுத்தளத்தில் காட்சிப்படுத்துகிறது.

“ஆடை வழங்கலாம் என அகதி முகாம் / ஒலி பெருக்கி அலறியது/
விழுந்தடித்து /நிவாரண அட்டையோடு ஓடிய / சனத்திரலில் /கலந்த
அவள் திரும்பி வரும்பொழுது / வெயிலை அணிந்து வியர்வை கொட்ட /
ஏமாற்றத்தை அணிந்து / ஆடைகள் முடிந்ததாம் / இனி அடுத்த முறையாம்
என்பதை ஃ/அணிய முடியாத முகத்துடன் / அணிந்து போன ஆடை நெரிசலில் /
கிழிந்ததும் தெரியாமல் நின்றாள்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -123)

விதிக்கப்பட்ட வாழ்வைப்பாடும் பொன்.காந்தன் கவிதைகள் மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட வாழ்வின் மேலெழும் துன்பியல்குரலாகவும் எழுகிறது.

வெர்லோன், பால்வெலரி கூறுவதைப்போல ‘உள்ளுணர்வின் தடத்தில் கவிஞனை மீறி எழும் அர்த்த தன்மையற்ற கலைஇலக்கிய வடிவமான கவிதை’ சிந்தனை,எண்ணப் புரிதலுக்கேற்ப வெவ்வேறான அர்த்த பரிமாணங்களைக் கொண்டு  இயங்கும் ஆற்றல்மிக்கது. நுட்பமான உத்வேகத்தன்மையுடன் இவ்வழி இயங்கும் விஷ்ணுவினுடைய பெரும்பான்மையான கவிதைகள் பன்முகத்தன்மை கொண்ட அபூர்வமான சொல்லிணைகளால் உருவானவை.
               “ நடுநிசிகளில் / பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன /
                அவைகளின் விழிகளுள் படர்கிறது / உதிர்ந்து கிடக்கும்
                மிரட்டும் விழிகள்
                 பொம்மைகள் சிரித்துப் பேசும் / மனநிலையில் இருப்பதில்லை /
                 மிரட்டும் விழிகள் ஆணியடிக்கிறது / அதன் அடிமனதில்…”
 மொழியின் சாத்தியங்களை இக்கவிதை முடிவுறாத் தன்மையை நோக்கி இட்டுச் செல்கிறது. ஒரு புனைவின் கட்டமைவுவானது அதன் எல்லைகளை – அர்த்த சாத்தியத்தை -உணர்வுத் தொற்றை ஒரு வரையறைக்குள் சுருக்கிக் கொள்ளாது வாசிப்பு, மீள்வாசிப்புக்கூடாக அதன் பரிமாணங்களை வியாபிக்கச் செய்தலாகும். முடிந்த காலத்தின் பதிவாக, சாட்சியமாக விளங்கும் விஷ்ணுவினுடைய இக்கவிதை குறியீட்டுக்கூடாக உள்ளுணர்வின் மெய்கூறுகளை இணைத்துப் பார்க்கிறது.
 தொடரும் இடம் பெயர்வுகளுக்கு மத்தியில் எமது நிழல்களே அச்சுறுத்தும் கொலை வாள்களாக மாறி எம்மைத் துன்புறுத்தும் அகால சூழ்வெளியை விஷ்ணுவினுடைய ‘நிழற்படங்கள்’ தர்க்கரீதியாக உணர்வு பூர்வமாக முன்மொழிகிறது.
        “வெளவால்களும் சிலந்திகளுமாய்க் / கூடிவாழும் வீடொன்றில் / தொங்கியபடி
        இனம் தெரியாதொருவரின் / நிழற்படம் / முன்னெப்போதுமே கண்டிராத அந்த
        முகம் நன்கு பழகியவனைப் போல் / புன்னகைக்கிறது.
        எல்லோரும் விட்டுக்கிளம்பிய பின் /தனித்திருப்பது கூடத் தெரியாமல் /
        புன்னகைக்கும் அந்த உருவம் / என்னுடையதொன்றாய் மாறுகின்றது. /
        நான் திகைத்துத் திரும்புகையில் / சுவர் எங்கும் / தொங்கிக் /
        கொண்டிருக்கின்றன / என்னையொத்த நிழற்படங்கள் இன்னும் பல.”
                                             (மரணத்தில் துளிர்க்கும் கனவு -125)
    யுத்தத்தை மையப்படுத்தி இயங்கும் சூழலும் அது தரும் தாக்கமும் அதிர்வும் ‘அந்நியமாதல்’ கவிதையில் பிறிதொரு பொருட்புலத்தில் அர்த்த உருப்பெறுகிறது. விம்பங்கள் அழிக்கப்பட்டு உணர்வுகள் சிதைக்கப்பட்டு சொல்வதை மொழியும் மனிதனாக வாழ்க்கை நிர்பந்திக்கப்பட்டதை
            “ எனது வெளியெங்கும்  /எப்போதுமே  கண்டிராத /அவர்களது
            முகங்கள் / வீசிவிட்டுச் செல்லும் புன்னகைகளை / பத்திரமாக
            வாங்கிக் கொண்ட பின் / எனது புன்னகையைப் பதிலாக அளிக்கிறேன் /
            வெறும் சம்பிரதாயமாகப் / பரிமாறப்படும் புன்னகைகள் வெறுமையாய்… ”
என்னும் வரிகள் துயருடன் கூடிய வலிகளுடன் தன்னை முன்மொழிகிறது.
கவிதை கட்டுப் பொருளாக அன்றி நேரடித்தன்மை கொண்ட அநுபவத்தின் மாதிரியுருக்களாக விஷ்ணுவின் ‘அந்நியமாதல்’, ‘கனத்த நாள்’, ‘கடைசிநட்சத்திரம்’முதலான கவிதைகள் முகம் கொள்கின்றன. இவ்வகையான தூலத்தன்மை கொண்ட கவிதைகள் வெகுஅரிதாகவே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆயினும் இக்கவிதைகளிலேயே உயிர்த்துடிப்பும் உணர்வும் ஒன்றிணைந்த கலவையாய்ப் பொங்கிப் பிரவகிக்கிறது.

அடக்குமுறை,அதிகாரத்துக்கெதிரான குரலாக வெளிப்படும் ஃபஹிமா ஜஹனின் கவிதைகள் பெண் மொழிப்பிரக்ஞைக் கூடாகத் தன்னை விசாலித்துச் செல்கிறது.யுத்த சூழலுக்குள் வலியோடும் வாழ்வின் அனுபவங்களோடும் வெளிப்படும் இக்கவிதைகள் உள்ளடக்க முறையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தனித்தன்மையை பெற்றுள்ளன.
கதையும் கவிதையும் ஊடாடி ஒன்று கலக்கும் இடமாக ஃபஹிமாவின் ‘உயிர்வேலி’ அமைகிறது. ஆழ்பொருள் குறியீட்டுக் புனைவுக்கூடாக உயிர் பறிக்கும் வாழ்வின் நிகழ்வினைப்பாடும் இக்கவிதை பெருந்தேசியத்தின் வன்மத்தின் வெளிக்குள் உழலும் நிகழ் இருப்பைச் சித்திரிக்கிறது.

“குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தது இற்றுப்போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப்படுக்கையில் மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்
அசைந்து வரும் கரிய யானைகளைப் பார்த்தவாறு கைவிடப்பட்ட தன் கூட்டை
எண்ணிக் கண்ணீர் உகுத்திடலாயிற்று அடைகாத்த முட்டைகளைப் பெருங்காற்றில்
போட்டுடைத்த கரங்களில் எல்லா அதிசயங்களும் இருந்தது “ஏன் செய்தாய்” எனக்
கேட்க முடியாத அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -37)

போர் தின்னும் பூமியில், கையில் உயிரை பிடித்தவாறு இருண்ட சூன்யவெளிக்குள் அலையும் மனித வாழ்வு இக்கவிதையில் நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது.தேசத்து மானுடத்தின் பேரவலத்தையும், இடம்பெயர் வாழ்வையும், போரின் பிடிக்குள் சிக்குண்டு அல்லலுறும் மக்களின் வாழ்வையும் குறியீட்டு, காட்சிப் படிமங்களுக் கூடாக வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு கவிதை ‘அடவி 2007’ ஆகும். ஈழத்தின் வன்முறைச் சூழல்பற்றிய ஒரு மொத்தமான சித்திரத்தை தரும் இக்கவிதை எம்.ஏ நுஃமான் கூறுவதைப் போல ‘ஈழத்தின் அவலம் பற்றிய ஒரு முழுமையான குறியீடு’எனலாம்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தீவிரப் போக்கு தமிழ்,முஸ்லிம் உறவுகளுக்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்திய சூழலில் ஃபஹிமாஜஹனின் கவிதைகள் நட்புறவின் பாலமாக இருந்தன. போரளி மீது கொண்ட காதலின் தீவிர,மென் போக்குகளின் நுண் இழைகளை ஆழமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் ‘ஒரு கடல் நீருற்றி’ என்னும் கவிதையில் ஃபஹிமா பதிவு செய்கிறார்.

“இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ? “
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -36)

ஒடுக்கு முறைக்குள் உழன்று தவிக்கும் தமிழ் மக்களின் ஆதார சுருதியாக அமையும் இக்கவிதை தமிழ் தேசியத்தின் உரிமைக்கு உயிர் கொடுக்கும் குரலாகவும் ஒலிக்கிறது.அடக்குமுறை,வன்முறைக்கெதிரான கலகக் குரலாக ஒலிக்கும் ஃபஹிமாவின் கவிதைகள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது.இப்பின்னனியில் எழும் ‘பாதங்களில் எழும் முற்ற வெளி’முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு’‘உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்’ முதலான கவிதைகளும் அரச வன்முறையின் உச்சபட்ச நிகழ்வுகளையும் இனத்துவ முரண்பாட்டின் மையத்தில் எழும் போராட்டச்சிந்தனையின் தார்மீக எழுச்சியையும் வெளிப்படுத்தி நிற்கினறன.

ஈழத்து சமகால வாழ்வியலை நுண் அரசியலோடு இணைத்து இயல்பான மொழியில் கவிதைகளுக்கூடாக மென் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் துவாரகன் ஆவார்.சிக்கலில்லாத வாழ்வின் அர்த்தங்களைத் தேடும் இவரது கவிதைமொழி வாழ்வின் அனுபவங்களுக்கூடாகக் கட்டுருபவை.அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வின் அபத்தங்களை எழும் வலிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் அங்கதமாகவும் வெளிப்படுத்தும் துவாரகன் கவிதைகள் சமகால நிகழ்வின் பதிவுகள்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை யாவரையும் குருதியுமிலும் கோரப்பற்களுடன் காவு கொள்ளும் மரணம், எம் தேசத்தில் தெருவோரங்களிலும் வெளிகளிலும் பதுங்கியுள்ளது. பிணம் தின்னும் கழுகு போல் காத்துக் கிடக்கும் மரணத்தை எவ்வித பிசிரலுமின்றி ‘ஒரு மரணம் சகுனம் பார்க்கிறது’ என்னும் இவரின் கவிதை தத்துருபமாகப் பதிவு செய்கிறது.

“நடந்து செல்லும் வயல் வரம்புகளில் /படுத்திருக்கும் பாம்புகள் போல் /
வீதிகளின் வெளியெங்கும் / பதுங்கியிருக்கிறது மரணம் / கலகலப்பான /
மழலைக்குரல்களையும் தம் நீண்ட பிரிவின் பின்னான உறவுகளையும்
தம் கடமை முடிக்க விரையும் எல்லோரையும் தோற்க்கடித்து வெடித்துச்
சிதறும் வெடிகுண்டைப் போல் காத்திருக்கிறது மரணம்…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -78)

இராணுவ அரண்களுக்கு அருகாமையில் நாம் செல்லும் போது மீண்டும் மீண்டும் எம்மை நாமே பரிசீலித்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகிறோம். இவ்வலநிலையை அங்கதமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது ‘மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்’.

“ஓடிய சைக்கிளில் இருந்து /இறங்கி நடந்து /ஓட வேண்டியிருக்கிறது /
போட்ட தொப்பி /கழற்றி போட வேண்டியிருக்கிறது/ எல்லாம் சரிபார்த்து
மூடப்பட்ட / கைப்பை / மீளவும் திறந்து திறந்து /மூடவேண்டியிருக்கிறது
என் அடையாளங்கள் அனைத்தும் /சரியாகவே உள்ளன / என்றாலும் /
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிழுக்கிறது…”
(மரணத்தில் துளிர்க்கும் கனவு -73)

அச்சத்துடனும் ஆற்றாமையோடும் ஒவ்வொரு ஈழக்குடிமகனும் கழித்த வாழ்நாட்களை கண்முன் நிறுத்தும் இக்கவிதை காலத்தோடு கருத்தூன்றி நிற்கிறது.நாதியற்று வெறுமனே கழியும் பொழுதுகள், எம்மை கேட்காமலே எம்மிடம் இருந்து பறிக்கப்படும் எம் உடமைகள், எல்லைகளின்றி காத்திருப்பின் நடுவே பழுத்துப்போன இலைகளாய் உதிரும் வாழ்வு என மூடுண்ட நகரத்தின் அகப் புறவெளிகளைக்காட்சிப்படுத்தும் துவாரகனின் கவிதைகள் மனித துயரின் பதிவுகளாய் அவற்றின் சாட்சிகளாய் விளங்குபவை.

அதிகார வன்முறையின் கீழ் இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடந்தகால நிகழ் பொழுதில் நடந்த கொடூரங்களையும் எடுத்துரைக்கும் இத்தொகுப்பு மரணத்துக்குள் விதிக்கபட்ட வாழ்வை வரையறுத்து நிற்கிறது.வாழ்வும் போரும் ஒன்றாகக் கலந்த சூழலில் எழுதப்பட்ட இக்கவிதைகள் மனித உணர்வுகளின் உள்வயத்தன்மையில் கட்டுறுபவை. ஆங்காங்கே அளவுக்கு அதிகமாகத் தென்படும் எழுத்துச், சொற்,பொருட் பிழைகள் தொகுப்பினை பலவீனமான பிரதியாக முன்மொழிந்தாலும் காத்திரமான எடுத்துரைப்பும் கனதியான வடிவமைப்பும் சமகாலப் பொருட்புலப்பாடும் சிறப்பான தொகுப்பாக இதனை முன்நகர்த்துகிறது.

ஈழத்து இளம் தலைமுறையினரின் ஆளுமைமிக்க கவிதைகளைத் தாங்கி வரலாற்றின் ஆவணமாகவும் காலத்தின் சாட்சியாகவும் நிற்கும் இத்தொகுப்பு சோகமும் அவலமும் நிறைந்த அநுபவத்தின் வாயிலாகவே முகம் கொள்கின்றது.மனிதப்படுகொலைக்குப்பின்னர் துயரத்தையும் அதன் வழி நிறையும் கண்ணீரையும் உள்ளார்ந்த தொனியில் வெளிப்படுத்தும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தீவிரத்தன்மை கொண்டவை.மரணத்தில் துளிர்க்கும் கனவாகவும் ஒன்றாய் வாழ்தலுக்கான குரலாகவும் ஒலிக்கும் இக்கவிதைகள் அழிவுண்ட காலத்தில் கரையாமல் காலத்தைக் கடந்தும் தன்னை முன்நிறுத்தும் இயல்புடையவை.
00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்