சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சந்திரபோஸ் சுதாகர்- நினைவுக் குறிப்பு

14 ஏப்ரல், 2010


நெருப்பின் நிழலில் சுடர்கிளரக்கிடக்கிறது
எந்த வார்த்தையுமற்ற மனசு

சித்தாந்தன்

ந்திரபோஸ் சுதாகர் கொலைசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளிலும் ஈழத்தமிழர்களின் வாழ்விலும் அரசியலிலும் பல மாறுதல்களும் தோல்விகளும் ஏற்பட்டிருக்கின்றன. சுதாகர் 90களில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவர். சமகாலத்தின் நிலைப்பாடுகளையும் பின்னடைவுகளையும் கூர்ந்து அவதானித்தவர். கவிஞன் என்ற அடையாளத்திற்கு அப்பாலும் சமூகப் பொறுப்புணர்வுடன் தீவிரமாக இயங்கியவர். தன்னை நோக்கி அதிகாரத்தின் பாஸிச கரங்கள் இருப்பதை உணர்ந்திருந்த போதும் அதிகாரங்களுக்கு எதிராக தன் குரலைப் படைப்புக்களில் பதிவு செய்திருக்கின்றார்.மரணம் என்பது இயல்பான ஒன்று என்பைதை நம்பமறுக்க வைக்கும் ஒரு காலத்தில் சுதாகரின் மரணம் நிகழ்ந்தது. இலங்கை அரசியலிலும் போர்புரி காலங்களிலும் இந்தக் காலம் மிகக் கொடூரமானது என்பதை யாருமே மறந்துவிட முடியாது.
துப்பாக்கிகளால் அச்சுறுத்தப்பட்டிருந்த அந்த நாட்களில் நாங்கள் எத்தனைபேரைத்தான் இழந்துவிட்டோம். அவர்களாலும் இவர்களாலும் இன்னும் இனந்தெரியாதவர்களாலும் என எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. யுத்தத்தின் மீதிருந்த மாயை மக்களிடமிருந்து அகன்றுவிட்டபோதும் போர்புரிபவர்கள் மக்களை யுத்தத்தை நோக்கியே இழுத்துக்கொண்டிருந்தனர். யுத்தத்தின் பொய்யுருவும் அதன் பிம்பமும் அவர்களால் புனிதப் போர்வைகளால் போர்த்தப்பட்டன. யுத்தம் அதிகாரங்களை நிலைநாட்டவும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தவும் நடாத்தப்பட்டன.மக்கள் யுத்தத்தின்போதும் அவலங்களையும் வலிகளையுமே சந்தித்தனர். யுத்தம் முடிந்துவிட்டதாய் நம்பப்படும் காலத்திலும் அவலங்களையே எதிர்கொள்கின்றனர். உண்மையில் யுத்தம் மக்களையே குறிவைக்கின்றது. அவர்களின் வாழ்வாதாரங்களையே சூறையாடுகின்றது. அதிகாரத்திலிருப்பவர்கள் மக்களை யுத்தத்தை நோக்கியே துரத்துகின்றனர்.
சந்திரபோஸ் சுதாகரின் கவிதைகளினை வாசிப்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவர் அதிகாரங்களை வெறுக்கின்றார். அதனால்த்தான் அதிகாரங்களை நோக்கி குரல் எழுப்புகின்றார்.

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான
நமது இதயங்களைச்
சிலுவையிலறைவதா? என சுதாகர் ‘சிலுவைச் சரித்திரம்’ என்ற கவிதையில் எழுதியிருக்கின்றார்.

எப்போதும் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்;கள் தங்களை நோக்கி நீளும் விரல்களின் சொந்தக்காரர்;களை வாழ அனுமதிப்பதிப்பதில்லை. ஈழப்போராட்டம் தொடங்கி முப்பதாண்டுகள் முடிந்திருக்கின்ற நிலையில் கொல்லப்பட்ட கவிஞர்கள் பத்திரிகையாளர்;கள் எத்தனை பேர் என்கின்ற பட்டியல் சுருக்கமானதில்லை.யுத்தத்தை புகழுகின்ற யுத்தம் புரிவோரைத் துதிபாடுகின்ற யுத்தத்தை ஊக்குவிக்கின்றவர்களை வீரர்களாகவும் மாறாக யுத்தம் மக்களை வதைப்பதை எழுதுகின்றவர்கள் துரோகிகளாகவும் கருதும் நிலை காணப்பட்டு வந்திருக்கின்றது. இதில் முரண் என்னவென்றால் யுத்தத்தைப்புரிந்தவர்;கள் ஜனநாயகம் பற்றிப்பேசுவதுதான்.
சுதாகரின் ஆநேக கவிதைகளும் அகக் காட்சித் தரிசிப்பக்குரியன. உள்ளார்த்தமான மொழிதலும் படிமச் செறிவும் மிக்கவை. பிற ஈழக் கவிஞர்களிடம் காணக்கிடைக்காத உள்முகத்தரிசனத்தை சுதாகரின் கவிதைகளில் காணமுடியும். கருணாகரன் குறிப்பிடுவதைப்போல “90களில் கவிதை எழுதத் தொடங்கியவர்களில் சுதாகரளவுக்கு மொழியை பயன்படுத்தியவர்;கள் எவருமில்லை” என்றே சொல்ல வேண்டும். சுதாகரின் கவிதைகளின் இயங்குநிலை போர்க்கால அனுபவங்களின் திரட்சியிலிருந்தே தொடங்குகின்றது. அவர் சந்தித்த அனுபவங்கள் உச்சமான சாத்தியங்களை அவரின் கவிதைகளில் ஏற்படுத்தின.
சுதாகர் 2001 அம் ஆண்டில் ஒரு முறை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு சில தினங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களின் பின் அவரின் காற்பாதங்கள் பிளந்து பிளந்து நிணம் வழிந்துகொண்டிருந்தது. தனக்கு நேர்ந்த சித்திரவதைகளின் வலியை அவர் என்னோடு பகிர்ந்திருக்கின்றார். அதன் பின்னர்தான் அவரின் நிலம் சஞ்சிகையின் மூன்றாவது இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரிய தலையங்கத்தை “சித்திர வதைகளுக்கும் கைதுகளுக்கும் எதிராக…” என்ற தலைப்பில் எழுதினார். அதில்ஒரு துப்பாக்கியையோ அல்லது கத்தி, கோடரியையோ கூட கையில் எடுக்கத் துணியாத, அவற்றின் வருகைக்காக அஞ்சி ஒடுங்கும் அப்பாவி மக்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசோ அது சார்ந்த இராணுவமோ அது சார்ந்த அமைப்புக்களோ பலி கொண்ட உயிர்களின் எண்ணிக்கை சொல்லில் உயிர்ப்பிக்க முடியாதவை. இவை குறித்த கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. எனினும் படைப்பாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். கவிஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்தும் படைப்பாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். கவிஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவற்றிற்கெதிராக மீண்டும் மீண்டும் குரலெழுப்பவும் போராடவம் வேண்டிய நிலைக்கு ஊடகத்துறையிலும் படைப்புத்துறையிலும் இயங்கிவரும் சகலரும் முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நிலம் சஞ்சியை தொடர்ச்சியாக காத்திரமான கவிதைக் காலாண்டிதழாகக் கொண்டு வரவேண்டுமெனவே சுதாகர் விரும்பினார். எனினும் தொடர்ச்சியாக இதழ்களை அவரால் கொண்டுவர முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களை அவர்; கூறினார். அதில் முக்கியமானது பொருளாதார நிலைதான். ஒரு கவிஞனாக மட்டுமன்றி பத்திரிகையாளனாகவும் சிறுகதையாளனாகவும் இதழ் வடிவமைப்பாளனாகவும் விமர்சகனாகவும் என பல தளங்களில் சுதாகரின் இயங்குதளமிருந்தது. உயிர்நிழல் என்ற பெயரில் இரு பத்திரிகையினைத் தொடங்கும் ஏற்பாட்டிலும் சுதாகர் ஈடுபட்டிருந்தார். அதைப் பதிவு செய்வதிலுள்ள சிரமங்களை சில தடவைகள் என்னோடு பகிர்ந்திருக்கின்றார்.
சுதாகரின் மரணத்தின் ஓராண்டு நினைவாக அவரின் மனைவியினால் சுதாகரின் சில கவிதைகள் தொகுக்கப்பட்டு “கனவுகளின் அழுகையொலி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தொகுப்பில் தவறுதலாக வேறு சிலரின் கவிதைகள் சுதாகரின் கவிதைகளாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. சுதாகர் நிலம் இதழுக்காக பிறரிடமிருந்து பெற்ற கவிதைகளே இவ்வாறு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் மரணத்தின் நினைவுகூறுதலுக்காக கல்வெட்டுக்கள் அச்சிடப்படும் சூழலில் இத்தொகுப்பின் வெளியீடு மிகவும் முக்கியமானது.
சுதாகரின் கவிதைகளும் பிற படைப்புக்களும் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும். தன் காலத்தை தன் படைப்புக்களுக்கூடாக வெளிப்படுத்தும் படைப்புக்களவை. இன்று யுத்தம் முடிந்து விட்ட சூழ்நிலையில் போர்க்கால இலக்கியங்கள் என்னத்தைச் சாதித்துவிட்டன என்ற கேள்வியைச் சில புத்திஜீவிகள் முன்வைக்கின்றனர். உண்மையில் போர்க்காலப் படைப்புக்களின் பெறுமானத்தை விளங்கிக் கொள்ளாத சுயலாபங்களை எதிர்பார்க்கின்ற வணிகநிலைப்பட்ட படைப்புக்களை பிரசவிக்கின்றவர்களிடமிருந்து இத்தகைய கேள்விகள் எழுவதில் வியப்பில்லைத்தான். தம்மை முன்னிலைப்படுத்தி தங்களுக்குள் விழாக்களையும் கௌரவிப்புக்களையும் மேற்கொள்வர்களின் படைப்புக்கள் மீதுதான் இத்தகு கேள்விகளை முன்வைக்க வேண்டும். போர்க்காலப் படைப்புக்கள் என்பவை வெறுமனே போரை ஊக்குவிக்கின்ற போரிடுவோரை புகழுகின்ற இலக்கியங்களல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈழத்தின் போர்க்காலத்தில் வெளிவந்த படைப்புக்களில் பலவும் போர்க்காலத்தின் நெருக்கடியையும் அவலங்களையும் பதிவுசெய்திருக்கின்றன. எனவே ஒற்றைப்படையாக போர்க்கால படைப்புக்கள் தோற்றுவிட்டன என புலம்பித்திரிபவர்களின் பின்னுள்ள அதிகாரங்களும் அரசியல் நிலைப்பாடும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டடியவை. சுதாகர் எந்த அதிகாரத்தின் நிழலிலும் ஒதுங்கிக்கொண்டவரல்ல. எந்தக் கருத்துக்களின் பின்னும் ஈர்க்கப்பட்டு அலைந்தவரல்ல. தனக்கான கருத்துநிலைகளை அவர் கொண்டிருந்தார். அதன் வழியில் தன்னைப் பிரக்ஞை பூர்வமாக ஈடுபடுத்திச் செயற்பட்டார். சுதாகரின் படைப்புக்கள் அப்பட்டமாக போரை விமர்ச்சிக்கின்றன. போரிடுபவர்;கள் யாராகவிருந்தாலும் அவர்;கள் மீது கேள்விகளை எழுப்புகின்றன. அவர்களைக் கண்டிக்கின்றன. போர்க்காலத்தின் மனச்சாட்சியாகவும் பதிவுகளாகவும் விளங்குகின்றன. தன்சுயங்களில் நம்பிக்கை கொள்ளும் மனிதனாக அவரிருந்தார் என்பது மிகவும் முக்கியமானது.
‘சுயம்’ என்கின்ற கவிதையில்
என்னைப் பேச விடுங்கள்
உங்களின்
கூக்குரல்களால்
எனது
காயங்கள் ஆழமாக் கிழிபடுகின்றன
எனது
குரல் உங்களின் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச்
சிதைகிறது வேண்டாம், நான் என்னைப் போலவே இருக்கவிரும்புகின்றேன் எப்போதும் …………………………………... …………………………………… ……………………………………
எனது
உடைந்த குரலில் நானும் பாட விரும்புகின்றேன்
அன்பு
நிறைந்த துயரப் பாடல்களை என எழுதியிருக்கின்றார்.

அதிகாரத்தின் பின்னால் மறைந்துள்ள கைகளும் கத்திகளும் துப்பாக்கிகளும் கதியற்றுப் போயுள்ள எண்ணற்ற மனிதர்களின் துயரங்களை எழுதிய கவிஞனைத் தின்றிருக்கின்றன. சுதாகரின் மரணத்தின் மிகக்குரூரம் அவர் அவரின் மகனின் முன்னிலையில் கொல்லப்பட்டதுதான். சுதாகர் தன் மகனில் அளவற்ற பாசமிக்கவர். கொலையாளிகளின் கைகளுக்கும் ஆயுதங்களுக்கும் ஒரு தந்தையின் பரிவையோ பாசத்தையோ புரிந்து கொள்ளும் வலிமையிருந்திருக்க வாய்ப்பில்லைதான். கொலைகளைச் சாதாரண நிகழ்வுகளாக்கி அதைச்செய்பவர்களின் சாகசங்களை விதந்து போற்றுகின்ற சூழலில் ஒரு கவிஞனின் மரணம் அதுவும் எந்த அமைப்புக்களையோ அதிகாரவர்க்கத்தையோ சார்ந்து செயற்படாத ஒரு கவிஞனின் மரணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்.
o

வலியுணர்தல்-1

08 ஏப்ரல், 2010

சித்தாந்தன்
.........................................................................

சரி செய்யப்படாத பிரச்சினைகளால்
நிறைந்திருக்கும் அறையில்
நீயும் நானும் தனித்திருக்கின்றோம்

புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலைக்கண்ணாடி
பலமுறையும் புறக்கணிக்கிறது என் விம்பத்தை

முழுமையும் சிதறிய குளிர் நீர்
ஆவியாகத் தொடங்கிவிட்டது
உஷ்ணமான மூச்சால் நிறைகிறது அறை

நீ சூசகமாய்த் தவிர்க்கும்
என்னுடலின் தவிப்பைத் தின்று தொலைக்கின்றன
சுவரில் புணரும் பல்லிகள்

உனது ஆழ்ந்த உறக்கத்தின் மூச்சொலி
துரத்திச் செல்கிறது
விடுபட்ட நாட்களின் வார்த்தைகளை

அறையை மூடியிருக்கிறோம் நாம்
அல்லது
நம்மை மூடியிருக்கிறது அறை

சாவித் துவாரத்தின் வழி
வெளியேறிச் செல்கிறது காற்று

புணர்ந்து களைத்து நகர்ந்த பல்லிகளின்
வெறுமையினிடத்தில்
தெறித்து வழிகிறதென் சுக்கிலம்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்