அன்றைய தப்பிச் செல்லல்கள் வேறானவை. உயிருக்காக, உயிரைக் கையிற்
பிடித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தல் என்பது எந்த நிலையிலும்
உத்தரவாதமில்லாதது. ஆனால், வேறு வழியில்லை. விஷ்ணு தப்பிச் சென்றார்.
கைக்குழந்தை நிலையில் இருந்த தன்னுடைய மகளுடன், அபாயங்கள் நிறைந்த
கடல்வழியே ரகசியமாகத் தப்ப முயற்சித்த ரகசியப் பயணம் அது. அப்படித் தப்பிச்
சென்றவர் தப்பி விடவில்லை. மீண்டும் அபாயத்தில் சிக்கினார். முன்னரையும்
விடக் கடினமான அபாயத்தில். விளைவாக விஷ்ணு புலிகளிடத்தில் கைதியானார்.
பிறகு அகதியாகி முகாம்வரை சென்று மீண்டார். ஆனாலும் இன்னும் விஷ்ணு அகதியே.
பால்யபருவத்தில் தன்னுடைய சொந்த ஊரை விட்டுப் பெயர்ந்த விஷ்ணு இன்னும்
தன்னுடைய ஊருக்கப் போகமுடியாமலே உள்ளார்.

இதை யாரும் மறுக்க முடியாது. இதை எதிர்கொள்ளச் சிலருக்குக் கடினமாக
இருக்கலாம். இதை ஏற்றுக் கொள்ளவும் முடியாதிருக்கலாம். ஆனால், என்ன செய்ய
முடியும்? உண்மை அப்படித்தான் உள்ளது. கடினமானதாக. ஏற்றுக்கொள்ள
முடியாததாக. சுடக்கூடியதா. இதுதான் அவலம். இதுதான் இன்றைய தமிழ்ச் சூழலின்
கொடுமை. உண்மையை மூடி மாபெரும் திரைகள் விரிக்கப்படுகின்றன. மிகக் கடினமான,
கெட்டி தட்டிய திரைகள். இந்தத் திரையில் அவரவர் விரும்பியமாதிரி
வர்ணங்களைத் தீட்டுகிறார்கள். தாங்கள் விரும்பியமாதிரி எதையோவெல்லாம்
வரைகிறார்கள். வரைந்து விட்டு இதுவே உண்மை என்று தோற்றம் காட்டுகிறார்கள்.
இதைக் கடந்து நாம் உண்மைகளைப் பேச முடியாது. யாரும் உண்மைகளைச் சொல்ல
முடியாது. அப்படிச் சொன்னால், அது அரசியல். அது தவறான அரசியல்
என்கிறார்கள். இது எவ்வளவு கொடுமையானது? எவ்வளவு தவறானது?
வலைஞர்மடத்தில் இன்னும் அவலப்பரப்பு முடியவில்லை. யுத்தம் முடிந்து மூன்று
ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள்
நடந்திருக்கிறது. ஆனால், வலைஞர்மடத்தில், மாத்தளனில், பொக்கணையில்,
முள்ளிவாய்க்காலில், இரட்டை வாய்க்காலில் எல்லாம் சனங்கள் வாழும்
வாழ்க்கையை நீங்கள் போய்ப்பார்க்க வேணும். அவர்கள் அவலத்தின் மத்தியில்தான்
வாழ்கின்றனர்.
நேற்றும் நாங்கள் அதைப் பார்த்தோம். இங்கே எங்களோடு ‘அடையாளம்’ சாதிக்
அமர்ந்துள்ளார். அவரைக் கேட்டுப்பாருங்கள், அந்தச் சனங்கள் என்ன
சொல்கிறார்கள் என்று.
இதைச் சொல்வதோ வெளிப்படுத்துவதோ மட்டுமே நாம் செய்யும் பணி அல்ல.
அதற்கப்பால் நாம் இயங்க வேண்டியுள்ளது. ஆனால், நாங்கள் என்ன
செய்துகொண்டிருக்கிறோம்? எங்களுடைய தேசிய உணர்வு எப்படி உள்ளது? நமக்குப்
பக்கத்தில், தொட்டுவிடக்கூடிய தொலைவில் இப்படியான ஒரு அவலப்பரப்பை வைத்துக்
கொண்டு நாங்கள் கொண்டாடுகிறோம். நாங்கள் ஆடிப்பாடுகிறோம்.
கடந்த நல்லூர்த்திருவிழாவின் போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு ஒரு கோடி
ரூபாய் வருமானம் வந்ததாகப் பத்திரிகைகளில் படித்தேன். இது எப்படி வந்தது?
திருவிழாவின்போது நடந்த வியாபாரத்தின் மூலமாகவே இந்த வருமானம் வந்தது?
ஆனால், அங்கே?
இதைப் பற்றி எத்தனைபேர் அறிய விரும்புகிறார்கள்? இதைப் பற்றி
எத்தனைபேருக்கு அறிய விருப்பம் உள்ளது? நமது தேசிய உணர்வின் சிறப்பும்
சீத்துவமும் இப்படித்தான் உள்ளது. நான் யாரையும் தனிப்பட்ட ரீதியில்
குற்றம் சுமத்தவில்லை. நான் இங்கே அரசியலைப் பேசவில்லை. ஆனால், நான்
இப்படிச் சொன்னால் அது அரசியல் என்கிறார்கள்.
நண்பர் சாதிக் வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் என்று
எல்லா இடங்களிலும் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்குச்
சாதிக்கை யார் என்று தெரியாது. சாதிக்கைப் பற்றி எதுவும் தெரியாது.
சாதிக்குக்கும் அவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் அகதிகளாக
இருந்தவர்கள், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கு அப்பால். ஆனால்,
அவர்கள் தங்களின் கதைகளைச் சாதிக்குக்குச் சொன்னார்கள். தங்களுடைய மன
உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தார்கள். வயதில் மூப்பு, இளமை, ஆண், பெண் என்ற
எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அவர்கள் தங்களைத் திறந்து கொட்டினார்கள்.
சாதிக் சொன்னார், ‘கருணாகரன், இதையெல்லாம், இவர்கள் சொல்வதையெல்லாம் நான்
வெளியே போய்ச் சொல்ல முடியாது. கண்டிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ள வெகுஜன
ஊடகங்களில் இதையெல்லாம் பேசவோ எழுதவோ முடியாது. அதை அவர்கள் ஏற்றுக்
கொள்ளவே மாட்டார்கள். ஆனால், உண்மை இப்படித்தான் இருக்கு. நான் இதைப்
புரிஞ்சுக்கிறேன். இதை நீங்க எழுதுங்க. நாம புத்தகமாகக் கொண்டு வரலாம்.
அதுக்கு வாற எதிர்ப்பையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. உண்மையை நாம்
எப்படியோ, எந்த மாதிரியாகவாவது கொண்டு வரத்தான் வேணும்’ என்று.
சாதிக்குக்கு உண்மை தெரிகிறது. ஆனால், அதை வெளியே சொல்ல முடியாது. அதற்கு
அனுமதி கிடையாது. ஆனால், சாதிக் உண்மையை மறைக்க விரும்பவில்லை. வெளிச்
சூழலின் நிலைமை இதற்கு எதிர்மாறானது. இதுதான் கொடுமை. இதைத்தான் அவலம்
என்பேன்.
சாதிக்கை அழைத்துக்கொண்டு கூடவே வந்த எழுத்தாளர் டானியலின் மகன் சாம்
குடும்பத்தினருக்கும் நேற்றுப் பல உண்மைகள் தெரிந்தன. அவர்கள் வன்னிக்கு
வரும்போது, வேறு விதமான எண்ணங்களோடு இருந்தனர். ஆனால், வன்னியில் பயணித்து
வலைஞர் மடம், மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரிற் போய்ப்
பார்த்து, அந்தச் சனங்களோடு கதைத்த பிறகு பல விசயங்கள் புரிந்தன. இதை நான்
அவதானித்தேன். உண்மைகளை எங்களுடைய ஊடகங்கள் மறைக்கின்றன. மறைத்துப் பெரிய
திரைகளை விரிக்கின்றன. தாங்கள் உருவாக்குகின்ற புனைவுகளே உண்மைகள் என்று
நிரூபிக்கப்படுகின்றன. பகுதி உண்மைகள் முழுமையான உண்மைகள்
ஆக்கப்படுகின்றன.
சனங்கள் இரண்டு தரப்பையும்தான் கண்டிக்கிறார்கள். அவர்கள் உண்மையைச் சொல்ல
முற்படுகிறார்கள். அதையே அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையைச்
சொல்லும்போது அது அப்படித்தான் இருக்கும்.
இன்று சனங்களுக்குத் தேவையானது முதலுதவி. இதை நாம் செய்ய வேணும். இதையே
நான் வலியுறுத்துகிறேன். இதையே நான் செய்ய விரும்புகிறேன். இதைப் பற்றி
யாரும் எதுவும் சொல்லட்டும். நான் அதைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை.
அண்மையில் இதே புத்தகத்திற்கான வெளியீட்டு நிகழ்வில் பேசிய நண்பர்
நிலாந்தன் மாற்றங்களைப் பற்றி விரிவாகச் சொன்னார். சூழலில் ஏற்படுகின்ற
மாற்றங்கள், அமைப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், வரலாற்றில் ஏற்படுகின்ற
மாற்றங்கள், மனிதர்களிடத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என எல்லாவற்றையும்
தர்க்க பூர்வமாக, வரலாற்று ஆதாரங்களோடு முன்வைத்தார். நாம் எதையும்
மாற்றமடைய விரும்பவில்லையா? தோல்விகளை வெற்றியாக்குவதற்கு, அவலங்களை விட்டு
நீங்குவதற்கு, நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு எல்லாம் நாம்
விரும்பவில்லையா? அப்படியென்றால் தொடர்ந்தும் அவலப்பரப்பிற்தான்
இருக்கப்போகிறோமா?
இதை நான் ஏற்கவில்லை. நாம் பலவற்றிலும் மாற்றங்களைக் காணவேண்டும். மாற்றங்களைச் செய்ய வேணும்.
விஷ்ணுவின் கவிதைகள் உண்மைகளைச் சொல்லி, நடந்தவைகளைச் சொல்லிப் புதிய
எல்லைகளை நோக்கி, புதிய சிந்தனைகளை நோக்கி எம்மை நகர்த்தக் கோருகின்றன.
இரண்டு தீவிரத் தேசிய மனநிலைகளில் சிக்கிச் சிதைந்த சனங்களில் ஒருவரே
விஷ்ணு. அப்படிச் சிக்கிய பலியாடுகளில் ஒருவரே விஷ்ணு. அந்தப் பலியாடு
தப்பிப் பிழைத்துத் தன்னுடைய கதைகளை இங்கே சொல்கிறது.
யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இந்த மூன்றாண்டுகளில் எவ்வளவோ
மாற்றங்கள் நடந்திருக்கிறது. எவ்வளவோ பேர் வந்து போகிறார்கள். பாதைகள்
திறந்துள்ளன. பயணங்கள் நடக்கின்றன. திருவிழாக்கள் நடக்கின்றன. ஒவ்வொரு
ஊரிலும் போட்டிபோட்டுக்கொண்டு கல்யாண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.
இவையெல்லாம் வேண்டும்தான். ஆனால், இது ஒரு பக்கத்தில் நடக்கும்போது
யுத்தம் நடந்த, யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்களின் துயரம்
துடைக்கப்படாமல், அது அவலப்பரப்பாக விடப்படுவதும்
வியாபாரமாக்கப்படுவதும்தான் கண்டிக்க வேண்டியது என்கிறேன்.
இந்த மாதிரியான ஒரு சூழல் நம்மைச் சுற்றியிருக்கும்போது, நிச்சயமாக இந்தப்
புத்தகத்துக்கும் சரியான விமர்சனங்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
விஷ்ணுவின் கவிதைகளை எந்தத் தமிழ் ஊடகமும் துணிச்சலோடு விமர்சிக்கும் என
நான் நம்பவில்லை. அப்படி விமர்ச்சிக்க வந்தால் அது இந்த உண்மைகளை
எதிர்கொண்டேயாக வேண்டும். அதற்கு யார் தயார்? எந்தத் தரப்பு முன்வரும்?
ஆகவே நிச்சயமாகச் சொல்வேன், இந்தக் கவிதைகளுக்கான விமர்சனங்கள் வரவே வராது.
உண்மைகளை உணரத் தயாரில்லாத வரையில் விமர்சனங்களுக்கிடமில்லை.
00
தானா. விஷ்ணுவின் ‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வில் கருணாகரன் ஆற்றிய அறிமுகவுரை.
நன்றி- புல்வெளி
நன்றி- புல்வெளி