சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மாயத் திரைகளில் வரைபடம் -2

18 டிசம்பர், 2008

எனது இறந்தகால அல்பம்
...........................................................................
சித்தாந்தன்

உங்களிடமிருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது. ஒரு பிணத்தை எப்படி மறைத்து வைக்க முடியும்? என் அல்பம் முழுமையும் பிணங்கள்தான் நிறைந்திருக்கின்றன. இரவுகளால் வஞ்சிக்கப்பட்டவர்களின் தெருக்களில் தொலைந்து போனவர்களின் அடையாள அட்டைகளில் முகம் மாறிப்போனவர்களின் அல்பம் என்னுடையது. எனது அல்பத்தை தெருக்களில் விரித்து வைத்திருக்கிறேன். யாருமே ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. எல்லோருமே இறந்த காலத்தின் பிணங்கள்தான். பிணங்களின் அல்பங்களை பிணங்கள் பார்ப்பதுமில்லை.அல்பங்களின் வர்ணங்களைப்பற்றி வளர்ந்து வரும் கதைகளை வாசித்துக் கொண்டிருந்த ஆதிக் குரங்கிடம் நான் கேட்டேன் வர்ணங்களின் கதைகளை

ஆதிக்குரங்கு சொன்ன அல்பங்களின் கதை

ஆதியில் அல்பங்களிருந்தன. முகத்திரையிடப்படாத அல்பங்கள விலங்குகளின் அல்பங்கள் ஒன்றும் மனிதர்களின் அல்பங்களிலிருந்து மாறுபட்டவையல்ல. விலங்குகள் மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்ட நாட்களில் அல்பங்களை ஆக்கத் தொடங்கின. விலங்குகளில் முதலாவது அல்பம் என்னுடையது. நான் எனது அல்பத்தின் முதலாவது படத்தை குகைச்சுவரில் வரைந்தேன். இலைகளாலும் தழைகளாலும் அதற்கு வர்ணங்கள் பூசினேன்.இப்படித்தான் தொடங்கியது வர்ணங்களின் கதை.மனிதர்கள் காடுகளிலிருந்து வெளியேறத் தொடங்கிய பின்னர் எனது முகத்தின் சாயலை அவர்கள் இழக்காத போதும் நிமிர்ந்து நடக்கத்தொடங்கினர். கத்திகளையும் கூரிய கற்களையும் அவர்கள் கைவிடவில்லை. முன்னர் எம்மை வேட்டையாட அவற்றைப் பாவித்தவர்களின் பழக்க தோசம் மாறாததால் தங்களிடையே சண்டையிடத் தொடங்கினர். விலங்குகளின் அல்பங்களை விடவும் மனிதர்களின் அல்பங்களில் இரத்தக் காயங்கள் அதிகம்.எனது அல்பத்தில் நதிகள் வற்றி விட்டன மலைகள் கரையத் தொடங்கிவிட்டன காடுகளின் நிலக்காட்சிகளில் விலங்குகள் பற்றிய கதைகளை வெறும் என்புகளாக மனிதர்கள் வாசிக்கின்றார்கள்.காடுகளுக்குள் யுத்தம் வந்துவிட்டது நிலங்களைப் போல காடுகளையும் யுத்த டாங்கிகள் உழுகின்றன.எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன் காடுகள் எரிகின்றன. பசுமை போர்த்திய மரங்களில் போர் உறைந்துபோயிற்று. மிருகங்களைப் போர் துரத்துகின்றது. காடுகள் அழகையிழந்து விட்டன. ஆதிக்குரங்கு தன் அல்பங்களில் வற்றிப்போன நதிகளை தேடிக் கொண்டிருக்கிறது.

இசையாய் மிதக்கும் பூனைக்குரல்

10 டிசம்பர், 2008

சித்தாந்தன்
........................................................................


சிறகுகளற்ற வெளியில் உரையாடிக்கொண்டிருந்தோம்

வீட்டின் வரைபடம் மறந்துபோன

அந்த இளமாலையில்

எமக்கிடையில் சரிந்துகிடந்த சிலுவையில்

எங்கள் கபாலங்கள் அறையப்பட்டுக்கிடந்தன


நாம் பரிமாறாத சொற்கள்

மதுக்குவளைகளில் பனிக்கட்டிகளாய் மிதந்தன

நீ உள்ளிளுத்து ஊதிய சிகரட் புகையில்

கருகிப்போன இதயத்தின் நாற்றமடித்தது


நீ கூச்சலிட்டாய்

சூரியன் பல்லாயிரம் துண்டுகளாய் உடைந்தது

அவசரங்களைக்களைந்து நாம் வந்திருந்த

அந்தப்பொழுதை நான் மௌனத்தால் அடைத்தேன்


நீ சொல்லிக்கொண்டிருந்தாய்

நடு வீட்டின் மையத்தில் தனித்தழும்

குழந்தையின் பூனைக்குரல்

எமது இசைப்பாடல்களில் வழிந்தொழுகுவதாய்


மதுவருந்திக் கழித்த அந்தமாலை

அடர்த்தியான கருமை கொண்டது

ஆயினும்வானம் நிர்வாணமாகவேயிருந்தது

எமது துயரிசையிலிருந்து இறங்கிய பூனை

எஞ்சிய மதுவையும் பருகிப் பாடத் தொடங்கியபோது

நாம் குழந்தைகளாயினோம்


துயரிசையின் உச்ச நொடியில்

ஒரு மாலையின் நிலவுருவை

வெறுமையாகிய மதுக்குவளைகளினடியில் கண்டடோம்

அக்கணம்

சூரியனுக்குக் கீழே நாங்களிருக்கவில்லை

எம் நிழல்கள்தான் நீண்டுகிடந்தன

மாயத் திரைகளில் வரைபடம் -1

25 அக்டோபர், 2008

அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
..........................................................................................
சித்தாந்தன்
புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் தெருவில் அலைந்தபடியிருக்கிறார்கள்.கண்ணாடிகளாலான கட்டடங்கள் சூழ்ந்த நகரத்தில் எல்லோருடைய அந்தரங்கங்களும் பரிசோதிக்கப்படுகின்றன.நகரத்தின் கண்காணிப்பாளர்கள் இரவுகளின் சருகுகளை மிதித்தபடி திரிகிறார்கள்.புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் அல்பங்களிலிருந்து முகங்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.நேற்றுப் புன்னகையோடு விடைபெற்றவன் காலையில் பிணமாகத் தெருவில் கிடந்தான்.சனங்கள் யார் யாரையோவெல்லாம் சபித்தனர்.
மரணத்தின் குறிப்பேடுகள் ரகஸியங்கள் நிரம்பிய தாள்களாலானவை.ஊகங்களால் மட்டும் புனையப்படும் மரணக்கதைகளை புராதன சரித்திரங்களின் குப்பைத்தொட்டிக்குள்ளிருந்து கொண்டு காலம் வாசிக்கின்றது
முகங்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் அல்பங்கள் எல்லோர் வீடுகளிலும் இருக்கின்றன.அவை கண்ணீரின் சலனத்தில் மிதந்து திரிகின்றன.குருதியின் வெம்மையில் உலர்ந்துபோகின்றன.
குழந்தைகள் வீரிடும் நடு இரவுகளில் யன்னல்களின் பின்னும் கதவுகளின் அருகாமையிலும் கேட்கின்றன காலடிகள். மரணத்தின் மணம் எங்கும் பரவிவருகிறது. நிசப்தங்களால் பூட்டப்பட்ட சாலைகளை பூட்ஸ் கால்கள் உதைக்கின்றன. கனவுகளை வனைந்து கொண்டிருக்கும் பின்னிரவை நொருக்கியுடைக்கின்றன அவலங்கள் நிரம்பிய குரல்கள்.


குழந்தைகள் அல்பங்களுக்குள் என்னத்தைத் தேடுகின்றன?


குழந்தைகள் தயாரித்து வைத்pருக்கும் விளையாட்டு அல்பங்களுக்குள் வரையப்பட்ட பொம்மைகளின் படங்கள் பூக்களின் படங்கள் சாமிகளின் படங்கள்.இன்னும் தான் விரும்பாத நபரையோ விலங்கையோ கோடூரமாக வரைந்து வைத்திருப்பார்கள்.குழந்தைகளின் அல்பங்கள் வளர்ந்தவர்களின் அல்பங்களைக் போன்றிருப்பதில்லை.
நான் சந்தித்தேன் தன் நள்ளிரவுப்பயங்களை அல்பத்தில் வரைந்து வைத்திருக்கும் குழந்தையை.; அவள் தன் அல்பத்தில் தன்னால் குழந்தையாக வாழ முடிந்ததில்லை எனச் சொன்னாள்.தன் தெருக்கள் தனித்துப்போனதை தனது முற்றத்தில் அச்சமூட்டும் காலடிகள் முளைத்துப் பெருகியதை தன் நணபர்கள் வீட்டுக்குவராத நாட்களில் தான் தனித்துப்போக்கிய பொழுதுகளை சில நாட்களுக்கு முன் காணாமற்போன தன் தந்தையின் புன்னகிக்கும் முகத்தை தாயின் கண்ணீர் பெருகிய முகத்தை அல்பத்தில் இட்டு வைத்திருந்தாள்
அவளது அல்பத்தில் இரவுகள் மண்டிக்கிடந்தன சூரியன் ஏதோ தொலைவில் சேற்றிடைப் புதைந்து கிடந்தது.நிலவு வராத வானம் நட்சத்திரங்களையும் இழந்து கிடந்தது. நிலவுருக்கள் சிதறியபடியிருந்தன.
தான் வரைந்த வெள்ளைச் செவ்வரத்தம் பூவின் இதழ்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் படத்தைக் காட்டினாள். அதைத் தன் தாய் என்றாள். தன் மாட்டுத் தொழுவத்தில் காணாமல் போயிருந்த பசு மாட்டை கசாப்புப்புக்கடையில் தோல் உரிக்கப்பட்டு தலைகீழாகத் தொங்குவதாக வரைந்திருந்தாள்.அது தன் தந்தை என்றாள்.
குழந்தைகள் நினைவுகளை அல்பங்களில் சேமிக்கின்றன.கனவுகளின் நிறங்களால் தம் இயலாமைகளையும் சிதறடிக்கப்பட்ட வாழ்வையும் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உலகங்களையும் வரைகின்றன.
குழந்தைகளின் அல்பங்களில் குறுந்தெருக்கள் நெஞ்சாலைகளைக் குறுக்குறுப்பதில்லை.தொலைவுகளை அவர்கள் வார்த்தைகளால்த் தாண்டுகிறார்கள். சொற்களில் உறங்கிக் கொண்டிருக்கும் உலகம் காட்சிகளில் இயல்பு குலைந்தும் வர்ணங்கள் சிதைந்தும் வெளிப்படுகின்றன.
ஒரு அல்பத்துக்கான படங்களை சேகரிக்கத் தொடங்கும் குழந்தைகள் அவற்றை தங்கள் கனவுகளிலிருந்தும் தங்கள் பயங்களிலிருந்தும் வரையத்தொடங்குகின்றன.


வளர்ந்தவர்களின் ஆல்பங்கள் அல்லது வரையப்படாத நிழலுருக்கள்


நான் கூறுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனது கனவுகளின் சாயங்கள் பெயரத் தொடங்கிவிட்டன. மலைகள் இல்லாத நிலத்தில் வளர்ந்திருக்கின்றன மாபெரும் கற்சுவர்கள்.நண்பர்களை இழந்த நெடுநிலம் என்னுடையது. பறவைகளுக்கு கூடுகளுமில்லை குரல்களுமில்லை. நிராகரிக்கப்பட்ட வானத்தில் வரையறுக்கப்பட்ட கனவுகளுடன் பறந்து திரிகின்றன.
பறத்தல் என்பது உணவுக்காக அலைதலும் துயிலுக்காக கூடடைதலும் மட்டுமே. நெடுநிலம் சிறகுகளை உறிஞ்சுகிறது.
எனது அல்பங்களை இறந்த காலங்களின் பிணங்களால் நிரப்பி வைத்திருக்கிறேன். காரணம் நிகழ்காலத்தில் யாரும் கனவு காண்பதில்லை நினைவுகளை சேமிக்கும் மனவெளியும் காயங்களால் நிரம்பிக்கிடக்கின்றது. கண்ணீரால் வரையப்பட்ட சித்திரங்களைப் பார்த்து எரிந்து கொண்டிருப்பவர்களிடம் என்னால் கையளிக்க முடியுமானதெல்லாம் பிணங்களை இட்டு வைத்திருக்கும் மரணத்தின் குறிப்புக்களைதத்தான் அல்பங்களையல்ல

பாழ் வெளியில் தவறிய மூன்று இரவுகள்

17 அக்டோபர், 2008

சித்தாந்தன்
..............................................................................

கனவாய் உதிர்ந்த இரவு

யாரையுமே வருடாத உன் முகத்தை
அந்த இரவுகளுக்குப் பின் காணமுடிந்ததில்லை
நான் உனக்காகக் காத்திருந்தேன்;
நினைவுச் சுவர்ப்பாளங்களில் கண்ணீர் முகத்தோடு
துயரின் குறியீடாய் உறைந்து போயினாய்

எந்தப் பகலும் உன்னுடையதாயில்லை
மினுங்கும் கரிய பிசாசுகளைத் தோளில்
சுமந்து திரியும் மனிதர்களிடம் தோற்றிருந்தாய்
எந்த இரவும் உன்னுடையதாயில்லை
கனவுகள் குலைந்த நாளில் இரவுகளையும் பறிகொடுத்தாய்

நீ பேசாதிருந்த இரவு

கண்கள் முழுவதும் முட்கள்
உனது பார்வைகளிலிருந்து விலக்கப்படுவதை உணர்ந்தேன்
காற்றோ சருகுகளுக்கிடையில் செத்துக்கிடந்தது
ஒரு நாயின் ஊளையை இன்னொரு நாய் தின்று தொலைத்தது
உனது ஒரு சொல்லும் வெளிச்சம் பாய்ச்சுவதாயில்லை
மௌன இடிபாடுகளுக்குள் வார்த்தைகளில் புதர்மண்டிற்று
நான் தூங்காமலே விடிந்த இரவில்
கனவு கண்டு சிரித்தபடியிருந்தாய்

நான் வெளியேறிய இரவு

இதயத்தின் நாளங்கள் அறுந்துபோயின
கடலின் அலைகளில் உருவம் உடைந்த எனது முகம்
அலைந்தபடியிருந்தது
நீ நினைத்தேயிருக்கமுடியாத் தூரத்தில்
நான் பயணித்தபடியிருந்தேன்
முடிவில் நான் கண்டது காடுகளை

இருளில் முகம் தெரியாதவர்களின் வார்த்தைகளைக் கேட்டேன்
நள்ளிரவின் திகிலூட்டும் ஒலிகளுக்கிடையில்
கனவின் ஈரித்த நிறங்களில் ஒளிரும் நாய்களின் கண்கள் கண்டு
பலமுறையும் திடுக்குற்றுத் துயருற்றேன்
இரவின் கால்களுக்கிடையில் அன்று உடைந்து கிடந்த பகலின் ஒளித்துண்டுகளை அதன் பிறகு
ஒரு போதுமே நான் கண்டதில்லை

மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு

03 அக்டோபர், 2008

சித்தாந்தன்
.................................................................................................
அ.

தெருமரங்கள் சவத்துணி போர்த்தியுள்ளன
இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன
வெளிறிப்போன வானத்தினடியிலிருந்து
நாங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
ஒளிரும் சொற்களால் குழந்தமையை நினைவு கூர்ந்தோம்
நட்பின் கதைகளை வரித்து வைத்தோம்
அவற்றில் அச்சமுற என்ன இருக்கிறது

ஆ.

வெளிவர முடியாப்பாதைகளில்
கனவுகள் குலைந்த விம்மலின் குரலை
பெருமூச்சுக்களால் எழுதவேண்டியிருக்கிறது
நம் சந்திப்புக்கான சந்தர்ப்பங்களை
தெருக்கள் அடைத்துள்ளன

வீட்டின் கதவையும் பூட்டி விட்டேன்
அதன் முன்னிருந்த குழந்தையின் பாதணிகளைக்கூட ஒளித்துவைத்துவிட்டேன்

இ.

இன்றைய மாலை சந்தித்தோம்
கவிதைகளைப் பற்றிப் பேசினோம்
மறுக்கப்பட்ட சொற்களின் வலியாய்
இதயத்தில் வெம்மை தகிப்பதாய்ச் சொன்னேன்
நீ பேசமுடியா ஒரு நூறு சொற்களை
என்முன் பரத்தினாய்
எல்லாம் எனது சொற்களாகவுமிருந்தன



சட்டத்தால் கட்டப்பட்டிருக்கிறது இரவு
வாகனங்களின் இரைச்சல்கனவுகளில் எதிரொலிக்கிறது
கபாலத்தில் உதிரத்தின் நெடி தெறிக்கிறது
இந்த இரவை எப்படித் தாண்டப் போகிறேன்
ஆசுவாசப்படுத்த எவருமில்லை
படபடப்புடன் விழிக்கும் மனைவியை அணைக்கிறேன்
ஓலங்கள் பின் தொடரதெருவைக் கடக்கும் வாகனத்தின்
நிறங்குறித்து அச்சமில்லை
அதில் திரிபவர்கள் பற்றிய பயமே நிறைந்திருக்கிறது

உ.

துயில் உரிக்கப்பட்ட எனது கண்களில் வழிவது பயமா
ஆற்றாமையின் வலியா
கையாலாகாத்தனத்தின் கண்ணீரா
புரியாமை என்னைச் சிலுவையில் அறைந்தருக்கிறது
காற்றில் பரவும் செய்திகள்
உருச்சிதைக்கப்பட்டகழுத்து வெட்டப்பட்ட மரணங்கள் பற்றியன
தாய்மையின் கண்ணீரின் வலியுணராதவர்கள்
மரணங்களை நிகழ்த்துகிறார்கள்
மரணத்தின் குறிப்பேடுகளுள் ஓலமாய் கசிகிறது குருதி
எத்தனை தடவைகள்தான்
இறந்திறந்து வாழ்வது

ஊ.

மாலைகள் ஏன் இரவுகளாகின்றன
சந்தடியில்லாத் தெருவின்தனித்த பயணியாகத் திரும்புகிறேன்
பேய்விழி மனிதர்களின் பார்வைகளுக்கு
என் முகத்தை அப்பாவித்தனமாக்குகிறேன்
முதுகை வளைத்து முதிர்ந்த பாவனை செய்கிறேன்
இடையில் வாகனங்கள் ஏதும்வரவேண்டாமென கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
புறப்படும் போது மனைவியிடம் சொன்னேன்
என் பயணத்தையோ வீடு திரும்புதலையோ
இப்போது தீர்மானிப்பது நானில்லை என

எ.

காத்திருப்பின் கணங்கள் நீண்டு
பாதங்களுக்கிடையில் நீரோடைகளாகின்றன
மறுக்கப்பட்ட உணவுப்பண்டங்களுக்காக
பிணத்தில் மொய்க்கும் ஈக்களாக மனிதர்கள்

கால்கள் கடுக்கின்றனசோர்வுற்றுத் திரும்பிவிடலாம்
பின் பசித்த வயிறுகளை எதைக் கொண்டு நிரப்புவது
குழந்தையின் குழல் மொழியை எப்படிக் கேட்பது
சற்றும் இளைப்பாற விடாமல் துரத்துகின்றன பசித்த வயிறுகள்
உயிரை தின்பவனிடம் உணவுக்காக மண்டியிடும் வேதனை

ஏ.

உன் தோள் மீறிய மகன் குறித்து நீயும்
இன்னும் தவளத்தொடங்காதகுழந்தை பற்றி நானும் கவலையுறுகிறோம்
காலம்ஒரு கனியாக வாய்க்கவில்லை நமக்கு
அழுகலின் மணம் எம் தூக்கத்தை விரட்டுகிறது
சுவாசிப்பை மறுதலிக்கிறது
கனவுகளை நாற வைக்கிறது
ஒரு கனியைஎம் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியுமானால்
ஆத்மார்த்தமான அந்தக் கணத்தில்
பறவைகளுக்கு மேலும் ஒரு சோடிச்சிறகுகளை
பரிசளித்த மகிழ்வில் திளைப்போம்

ஞானம் கலைந்த இரவு

14 செப்டம்பர், 2008

சித்தாந்தன்
--------------------------------------------------
யசோதரையுடனான கடைசியிரவில்
தியானத்தின் ஆழ்நிலையில்
ஊறிக்கிடந்த புத்தரை
அரூப நடன தேவதைகள் இழுத்துச்சென்றன
சூழவும் விருட்சங்கள் வளர்ந்திருந்த
இன்பச் சோலையுள்
நகக்கணுக்கள் வழியே நுழைந்த
மோகக்கனிகளை உண்டு அவர் பசியாறினார்
பிறகு
தேவதைகள் யசோதரையின் படுக்கையில்
அவரைக் கடாசி வீசிவிட்டுப் போயின

காலை விடிந்தும் ஞான உறக்கத்திலிருந்து
கலையாதவரை
தனது தலை மயிர்களினால் மூடி
மார்போடணைத்து முத்தமிட்டாள் யசோதரை
புத்தரின் ஞானம் சிதறுண்டு
யசோதரையின் கன்னங்களில் முத்தமிட்ட
அவரின் ஞான வெளியில்
தேவதைகளின் அந்தரங்கங்கள் பூத்து விரிந்தன
அவர் படுக்கையிலிருந்து இறங்கி
தேவதைகளின் உலகை
தேடி அலையத் தொடங்கினார்
----------------------------------

பாம்புகள் உட்புகும் கனவு

06 செப்டம்பர், 2008

சித்தாந்தன்
.....................................................................................................
பாம்புகள் நுழைந்த
கண்ணாடி அறையுள்ளிருந்து
அவசரமாக
என் பிம்பங்களைப் பிடுங்கி எடுத்தேன்

காற்றின் விஸ்தீரணம் மீது கவியும்
துர்மணத்துடன்தான்
பாம்புகள் நுழையத்தொடங்குகின்றன

என் குரல் வழியே ஆரவாரப்பட
எதுவுமே இல்லை
இரட்டை நாக்குடன்
மேனியிலூறிய பாம்பை
கனவுகளின் இடுக்குகளினூடாக
உதறிவிட்டு திரும்பி நடக்க முடிகிறது
கனவினது ஆழ் உறக்கத்திற்குள்

பறக்கும் பாம்பு
கண்ணாடி அறையினுள்
தனது இறக்கைகளை உதிர்க்கிறது
நான்
கனவுக்கு வெளியே
அல்லது
கண்ணாடி அறைக்குப் பின்னால்
இருந்து அவதானிக்கின்றேன்
பாம்புகளுக்குப் பற்களிலிலை
உதிர்ந்த இறக்கைகளில்
பற்கள் முளைத்திருக்கின்றன

நெடு நாட்களாய்
எனது உறக்கத்தைக் கலைத்து
இருளில் மூழ்கடித்துப் பயமூட்டும்
ஒவ்வொரு பாம்புக்கும்
எனது முகம் மட்டும்
எப்படி வாய்த்திருக்கிறது

எனது குரலும்
கண்களினது ஒளியும்
வற்றிக் காயத்தொடங்குகையில்
இரவுகளின் கரிய தடங்களினூடு
உட்புகுகிறேன் கண்ணாடி அறையுள்
எனது பிம்பங்களுக்கு
பாம்புகள் படம் வரித்துக் குடைபிடிக்கின்றன
இப்போது
பாம்புகளின் குடையின் கீழ்
ஒரு பாம்பாய் வாழ நேர்கிறது



காற்றில் அலைகிற மரணம்

27 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
........................................

யாரோ துப்பிய எச்சிலை
வாங்கிக் கொண்டது என்முகம்
காற்றின் திசைக்கு வளைந்து
கைகள் சோர்ந்து தெருவில் நடக்கும் போதில்
வலமாய் வருபவனின் காலடி ஓசை
நெஞ்சை மிதிக்கிறது
இடமாய் எதிர்ப்படுபவனின் பார்வை
பீதியை வளர்க்கிறது
வலமும் இடமும் விலக்கி
நடுத்தெருவில் நடக்கையில்
பின்னும் முன்னுமாக
இரைச்சலிடும் வாகனங்களுக்கிடையில்
பரிதவிப்பின் உச்சத்தில் நசிபடும் உயிர்

மரணத்தின் அச்சமூட்டலில் இருந்து
தப்பமுடியாத் தெருவில்
தினமும் நடக்கவேண்டியிருக்கிறது
பிறகு
எப்படிக் கேட்க முடியும்
சளிகாறி முகத்தில் துப்பியவனிடம்
ஓரமாய்த் துப்பினால் என்னவென

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

21 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
............................................

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

08.08.2008 இரவு.9.49

குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு

18 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
.....................................................................................

மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்துகிடந்தது பூச்சாடி
நீ பூக்களின் கனவுகளை
சேகரித்துக்கொண்டிருந்தாய்
உள்ளங்கையினுள் மறைந்துகிடந்தது
குரோதத்தின் கத்தி
எனினும்
புன்னகைக்கும் குழந்தையின் முகத்தை
பொருத்தியிருந்தாய்
இந்த இரவு முழுதும் அந்தரிக்கும்
நிலவு பற்றியஅனுதாபச் சம்பாசனையை
நான் தொடங்கினேன்
காற்றின் குறுக்கு வெட்டு முகத்தில்
தலைசாய்த்துக் கிடந்த நீ
புன்னகையின் விரும்பப்படாத பக்கங்களை
எனக்குக் காட்டினாய்;

வெறுமையும் தனிமையும் உறைபனியாயின
எம் கால்களின் கீழே விழுந்திருந்த
மரங்களின் நிழல்கள் பாறைகளாயின
தொலைவில்
கடலின் அலைமடிப்புக்களில்;
மீளவும் இசைக்க முடியாத கீதமாய்
அலையத்தொடங்கியிருந்தோம்
நீ உனது கத்தியை
என் உள்ளங்கையினுள் திணித்தாய்
அது குரோதத்தின்
விழி சிவந்த பசியை ஊட்டியது
ஆகாயமோ
பறவையின் சிறகளவு குறுகியது
தொன்மங்களின் வனதேவதைகள்
கடவுளரின் தூதுவர்கள்
சாபங்களின் துர்மோகினிகள் எல்லாம் பார்த்திருக்க
ஒரு இடையனின் கைத்தடியளவிலான இரவை
நாங்கள் பகிர்ந்து கொண்டோம்

குரோதத்தின் கத்தி
தொலைந்துபோன அந்தக்கணம்
உடைந்த பூச்சாடியின் சிதறல்களுக்குள்
வெள்ளியாய் மினுமினுப்புடன்
ஏதோ ஊர்ந்துகொண்டிருந்தது

25.07.2008

துரத்தும் நிழல்களின் யுகம்

10 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
-------------------------------
எது எனது நிழல்
எது உனது நிழல்

நிழல்களின் கருமையாய் படர்ந்திருக்கும்
எல்லையற்ற மவுனத்தின் மீது
புழுதியாய் எழும் வார்த்தைகளின் நெடியை
துரத்திவரும் மிருகத்தின் நிழல்
எம் நிழல்களுக்கிடையில்

நானொரு பறவையை வரைந்தேன்
அது போராயுதமாயிற்று
அதன் நிழல் என் உறக்கங்களிலிருந்து
என்னைத் துரத்துகிறது

நிழல்களின் மவுனம் கொடியது
துர்க்கணங்களாய் நீளும் அனாதரத்தருணங்களில்
சலனமெழுப்பி நுழைந்து பின் இருளாய் உறைகையில்
நிழல்களின் மவுனம் கொடியது

நிழல்கள் துரத்தும் நகரங்களிலிருந்தும்
வனங்களிலிருந்தும் வரும் மனிதர்களின் பின்னால்
ஆயிரம் நிழல்கள் தொடர்கின்றன

நிழல்
நிழல்
பறவைகளின் குரலின் நிழல்
குழந்தைகளின் சிரிப்பின் நிழல்
காலமாகிய மனிதனின் கடைசிச் சொல்லின் நிழல்
எல்லாமே அச்சமூட்டுவன

நிழல்களால் நிறைந்த இவ்யுகத்தில்
ஒரு பூவையோ
பறவையையோ வரைந்திட முடிவதில்லை

நிழல்களின் நிரந்திரத்தின் மேல் அதிர்கின்ற குரல்
நிழல்களை எழுப்பி பெருநிழலாய் வளர்கிறது

மிகவும் கொடியது
உறக்கத்தின் நடுநிசியில் கனவுகளை
உதறியெழ வைக்கும் சப்பாத்துகளின் நிழல்கள்

நிழல்களுக்கிடையில்தான்
நீயும் நானுமாகத் தூங்குகிறோம் நிழல்களோடு

இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்

04 ஆகஸ்ட், 2008

சித்தாந்தன்
....................................................................................

யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்
உமது சிடர்களோ
தாகத்தாலும்
பசியாலும் தலை தாழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்

கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த
உமது சொற்களில்
இருளின் வலி படர்ந்திருந்தது
சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை
நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது
பிறகுதானே
இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி

மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை
ஏன் விலங்குகளிடம் விட்டுச்சென்றீர்

அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம்
நின் தந்தையின் வனத்திலிருந்து
சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில்
உமது பற்களுமிருந்தனவாம்
பார்த்தீரா
காடுகளுக்கிடையில் மூடுண்ட
சரித்திரங்களிலெல்லாம் காய மறுக்கும்
உமது குருதியை

யேசுவே
மனிதர்களேயில்லாத உலகில்
தீர்க்கதரிசனமிக்க
உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர்
என்றுமே வற்றாத
கண்ணீர் நதிகளை ஏன் பெருகவிட்டீர்

எதுவுமே வேண்டாம்
யேசுவே
உமது பாவங்களைக் கழுவக்கூட
ஒரு நதியையெனினும்
அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா

மனிதர்களின் மொத்தப் பாவங்களையும்
முதுகுவளைய ஏன் சுமந்தீர்
பாவங்கள் முடிந்து போயினவா
உம்மைச் சூழ்ந்து துரத்துகிற
மனிதர்களின் பாவவினைகளிலிருந்து
நீர் ஒருபோதும்
தப்பிச் செல்லவே முடியாது

என் திசைவழியில் என்னை யாரோ அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள்

19 ஜூலை, 2008

சித்தாந்தன்

.............................................................

காலைப் பனிப்புகையடர்ந்த
இரண்டு உருவங்களுக்குள்
கூறுபட்டுக்கிடந்த இதயத்தசையை
காதலின் மொச்சை மூடிக்கிடந்தது

புருவங்களில் விழியேறி
கண்கள் திரவங்களாய் உருண்டன
ஆழ்நதியோடித்திரும்பலில்
காத்திருந்தன மண்பொம்மைகள்

அந்தமற்று வரிகிற அதட்டுச் சிரிப்புகளுக்குள்
அழுந்திப்போய்விடுகிறது குழந்தைப்புன்னகை

மிஞ்சியிருக்கும் வலியை
தவிர்த்துவிட முடிவதில்லை
நீ பசியாறும் இலையோர மடிப்புக்களில்
எனது இரத்தத்தை மீதமாக்கிவிட்டு
நான் உறங்கப்போகிறேன்
பொம்மை வழிகளை மூடிக்கொண்டு

எனக்குத்தெரியும்
நீதான் என்னை
அவதானித்துக்கொண்டிருக்கிறாய்

கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

13 ஜூலை, 2008

சித்தாந்தன்
............................................................................

விடை பெறுதலின் அவசரத்தில்
கைமறதியாய் எடுத்துவந்த
உனது மூக்குக்கண்ணாடி
சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை

இன்றைய இரவை
உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன்
இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய்
சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே
வால் குழைந்து கால்களை நக்கும்
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ
எத்தணித்து தோற்றபடியிருப்பாயா
செல்லமகளின் குறும்புத்தனங்களை
ரசிக்கமுடியாப் பொழுதுகளை நொந்து கொள்வாயா

தூக்கத்தின் இருட்டுக்கும்
பொழுதின் இருளுக்கும்
வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன்
குழந்தையின் கன்னங்களில்
இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன
இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன

ஒளிநிரம்பிய அறையிலிருந்துகொண்டு
புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன்
சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி
ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன்

கைத்தடியில்லாத இந்த இரவுக்கு
தெருக்களுமில்லை

நண்ப,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன்
உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு
எனது பகலை என்னிடமிருந்து பெறுவதற்கு

[ரமேஸிற்கு] 22.09.2007

கனவினது உயிர்முகம்

06 ஜூலை, 2008

சித்தாந்தன்
----------------------------------------------------------------------------------

திரும்பியே வராத ஒரு இரவினது
கனவின்
குளம்பொலியை கேட்கநேர்கிறது

மனிதர்களின் புன்னகை சுடர்ந்த
அந்தக்கனவில்
நீயும் நானும் பேசினோம்
எமக்கென்ற நிலம்
வீடு
நிலவின் ஒளிபடர்ந்த முற்றம்
எல்லாமே இருந்தன

காலத்தின் வலையிலிருந்து
தப்பித்துக்கொண்டிருக்கிற
அந்த அழகிய கனவில்தான்
நீயும் நானும்
ஓவியங்களாக வாழமுடிந்தது

தசையும் ரணமும்
குருதியும் இல்லாத
கனவின் உணர் ஓரங்களில்


யுத்தம் பொய்த்துப்போனதென்பது
விசித்திரமானதுதான்.
----------------------------------------------------------------------------------------------

தணற்காலம்

சித்தாந்தன்
------------------------------------------------------------------------
நகரத்திலிருந்து எடுத்துச்செல்வதற்கு
என்ன இருக்கிறது

வருஸாந்திரங்களின் மாயவிழிகளிடை
புரளும் வர்ணங்களின்
அந்தகார ஒலியில்
மூச்சுத்திணறகிடக்கின்ற சூரியனின்
ஓளியலைகளை
விழுங்கித்தொலைத்திருக்கிறது நகரம்

இந்த நகரத்திலிருந்து
எதை எடுத்துச்செல்லமுடியும்

இலைக்கணுக்களில் தெறித்த
மரங்களின் கனவுகளையும்
காற்றில் அவிழ்ந்து அலைகிற
பறவைகளின் குரல்களையும்
வழிதவறிச்சென்ற மேய்ப்பர்கள்
அள்ளிப்போய்விட்டனர்
தெருக்களெங்கும்
அவர்களின் வீரச்சொற்களும்
இசைமுறிந்த பாடல்களும் ஏராளம்

இந்த நாற்றச்சகதியிடை
எப்படி வாழ முடியும் அமைதியாய்

நகரத்தில் வாழுகிற
ஒவ்வொரு மனிதனின் தலையின் மேலும்
சுருக்குக் கயிறுகள் தொங்குகின்றன
தூக்கம்
துர்க்கனவுகள் மிக்கது
சில்வண்டின் ஒலியில் கூட
வன்மம் எரிவதான
சலனம் நிரம்பிய இரவுகள்

நகரத்தை தூங்க வைப்பதற்கு
மௌனப்பாட்டுக்களை இசைப்பவர்களே
மனிதர்களின் தூக்கத்தையும்
இரவுகளில் களவாடிச் செல்கின்றனர்

நகரம்
ரகசியத்தீயில் மிதக்கிறது
பூக்களைச் சாபமிட்டு
தீ வளர்க்கும் மகாயாகத்தை
தீ வைத்திருப்போர் செய்கிறார்கள்
ரகசியத் தீயில்
வீடுகளுக்குள் புழுக்கமெடுக்கிறது
வெம்மை வியர்வை
மனங்களுக்குள் வழிகிறது

தீயின் பல முகங்களிலிருந்தும்
பாழடைந்த ஒரு நகரத்தின்
தடயங்களை வரைகிறார்கள்
தீ வளர்ப்போர்

அவர்களிடம் அழிவிலிருந்து பெருகும்
இசைச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் கொடியவை
குழந்தைகளின் பூக்களை பறித்துவிட்டு
எரியும் கனவுகளை வளர்த்துச் செல்லும்
சொற்கள்
தணற்காலச் சொற்கள்

சிலுவைகளால் நிரம்பிய நகரம்
தனது
பூர்வீககாலப் பெருமையின் பாடலை
அவலக்குரலில் பாடிக்கொண்டிருக்கிறது
நகரத்தின் மனிதர்களுக்கு
பாடல் கேட்பதேயில்லை
தீ பற்றிய ரகஸியம்
அவர்களின் காதுகளை அடைத்துவிட்டிருக்கிறது

மனிதர்கள் மனிதர்கள்
காலத்தை உறங்க வைத்துக்கொண்டு
விழிகள் முட்டிய பயங்களோடு
இரவுகளை கனவுகளால்
தூங்கும் மனிதர்கள்
தூங்கும் மனிதர்கள்

காலப்பெருவெளியில்
நிழல்களில் தீப்பிடித்து அவலமாகிப்போகிற
மனிதர்களை
யார் மன்னிக்க முடியும்

அவர்கள் புலம்பினார்கள்
தங்கள் கனவாயிருந்த பறவையின் நிழலில்
தீயின் நிழல்கள் உறுத்தக்கிடப்பதாகவும்
பறவைக்கனவை
அகாலத்தீ அள்ளி வைத்திருப்பதை
தங்கள் சந்ததியால் தாங்கமுடியுமா என்றும்

நான் நகரத்து மனிதர்களின்
பறவைக்கனவை
எடுத்துச் செல்கிறேன்

மகா காலத்தின்
அற்ப மனிதர்களிடமிருந்தும்
நாற்றமெடுக்கும் நகரத்திலிருந்தும்
அதை எடுத்துச் செல்கிறேன்
-----------------------------------------------------------------
2002

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

22 ஜூன், 2008

சித்தாந்தன்
---------------------------------------------------------


அழகிய எமது நகரத்தில்
பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில்
அவனது ஒளிரும் கண்களில்
உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள்

பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பிடாரன் முதலில் வாழ்ந்தானென
கதைகள் வளர்ந்தென ஊர்கள் முழுவதும்

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்

எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது

எனது அழகிய குடிசையில்
ஒரு முறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்

சபிக்கப்பட்ட காலங்களில்
நான் வாழ்ந்தேன்
நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக
எனக்குள் பெருகியபடியிருந்தது

பிறகு வந்த நாட்களிலெல்லாம்
பிடாரனின் புதல்வர்களின்
காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்துகிடந்தன
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன

பிடாரன் நகரம் முழுவதும்
சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு
துர்நெடியோடிருந்தது

அவனின் வாசகங்களாக
“இந்தப் பூமியில் தானும்
தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல
துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்”
எழுதப்பட்டிருந்தது

சனங்கள் முதலில் நம்பவில்லை
நகரில் பிணங்கள் திடீர் திடீரென முளைத்தபோது
அதிர்ந்து போயினர்

பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை
"பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை"
கிழித்தெறிந்தனர்

மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்

பிடாரனின்
திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து
நான் தப்பிச்செல்கிறேன்
---------------------------------------------

நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்

சித்தாந்தன்

----------------------------------------------------------


துயர்ப் பயணக்குறிப்புகள் 1

நான் யுகங்களின் முடிவிலிருந்து
திரும்பி வந்திருக்கிறேன்
எறும்பூரும் பாதைகளும்
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை
எனது வழித்தடங்கள்

இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்
புகைமண்டிய புன்னகைகளை
எனக்காக விட்டுச்சென்ற
எல்லோரையும் நானறிவேன்

இடியதிர்வின் மின்னல் ஒளியில்
பாதியான என் பாலிய பிராயத்தை
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்
தவற விட்டுவிட்டேன்

குறிகளும் முகங்களுமில்லாத
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்
நான் திரும்பி வருவேனென
யாரும் நினைத்திருக்க முடியாது

நான் வந்தேன்
மௌனகாலத்தில் மிதந்த கடல்
முதல் முறை அலையெழுப்பிற்று
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்
நான் அதைக்கேட்டேன்

கிரகங்களின் ஒளிமுகங்களிலும்
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது

தூக்கு மேடைகளும் கயிறுகளும்
நிறைந்த பொழுதுகளில்
ஒரு அந்நியனின் பார்வையழிந்து
இன்னொரு அந்நியன்
தெருக்களில் உலாவந்த நாட்களில்
நான் தெருக்களில் வதைபட்டேன்
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை

இன்று நான் வந்தேன்
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு
நான் வந்தேன்
தெருவில் சயணித்த மனிதர்களின்
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்
நான் கழுத்தைத் திருகியெறிந்த
கனவுகளுடன் வந்தேன்
ஆனால்
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை
இலைச்சஞ்சாரம்
காற்றில் இல்லாமலே போய்விட்டது
நானே தெருக்களில் அலைகிறேன்
நான் மட்டும் ஒருவனாக
தனி ஒருவனாக

துயர்ப் பயணக்குறிப்புகள் 2

நண்பனே
சர்வசாதாரணமாக வார்த்தைகளை
உதிர்க்கப்பழகிவிட்டாய்

மொழி தெரியாத ஒரு நகரத்தில்
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்

வாகனங்களின் நெரிசலுள்ளும்
மனித இடிபாடுகளிலுள்ளும்
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்

உனது வார்த்தைகளை
இயல்பானதென நீ வாதாடுகிறாய்

நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்

எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்

நீ அவதானமாக இருக்க வேண்டும்
உன் இயல்புகளை
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்

இந்த வீதிகளில் இயல்பில்லை
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்
உடைந்து நொருங்குகின்றன

இதனையும்
நீ இயல்பெனக்கருதலாம்
அது நல்லது

ஒரு சிறிய இடைவெளி கொடு
நான் வெளியேறி விடுகிறேன்

தேநீர்க் கடைகளையும்
புத்தகக் கடைகளையும்
நினைவில் வைத்துக்கொள்கிறேன்

என்னைப்போலவே
இன்னும் சில மனிதர்களும்
இங்கு அலைவுறலாம்

பஸ் இலக்கங்களை மறந்துபோய்
அவர்களுக்குத் தெரிந்த
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு
அலையலாம்

இங்கு வாழப்பழகிவிட்ட
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
எல்லா மனிதர்களுக்கும்
எனது அனுதாபங்கள்

நண்பனே
எந்த இயல்பும் நிரந்தரமில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்

---------------------------------------------------------------

மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்

15 ஜூன், 2008

சித்தாந்தன்
----------------------------------------------------------

மகா ஜனங்கள் அழுதார்கள்
அரசின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்

அனோஜ்
எனது அழகிய சின்னஞ்சிறு நண்பியே
வெண்கொற்றக்குடை
சிம்மாசனம்
ஆயுதங்கள்
படைவீரர்கள் என எல்லாமே அரசர்களுடையன
எனக்கென்றோ
உனக்கென்றோ எதுவுமேயில்லை

அரசர்கள் வருவார்கள் போவார்கள்
ஒரு அரசன் விட்ட இடத்திலிருந்து
மற்ற அரசன் தொடங்குவான்

இது அரசர்களின் காலம்
மகா ஜனங்களின் கண்ணீர் எவர்க்கு வேண்டும்

அனோஜ்
கனவுகளின் வர்ணங்களால் வாழ்க்கையை வரையாதே
நம்பிக்கையீனங்களின் காலமாகிறது நமது காலம்
நம்பிக்கை தரக்கூடிய
எந்த வார்த்தையும் என்னிடமில்லை

உனது தூக்கங்களில்
துவக்கு மனிதர்கள் வந்து
அச்சமூட்டுவதாய் அழுகிறாய்

இவை
யுத்தத்தினுடைய நாட்கள்
நாட்களை மகாஜனங்கள்
யுத்தத்திற்கு பரிசளித்திருக்கிறார்கள்
நீ
தெளிவாக இருந்தால் போதும்
எல்லலாமே அரசர்களுடையன

உனக்கும் எனக்கும் மரநிழல்கள் போதும்
நிலவின் ஒளிபோதும்
நாம் புலம்பித்திரிய வேண்டாம்

இன்னும் நான் நம்புகிறேன்
எங்களது கண்ணீர் மிகவும் வலிமையானது

அரசர்களுக்கு துப்பாக்கிகளைப்பற்றியும்
பீரங்கிகளைப்பற்றியுமே அதிகமாகத் தெரியும்
மகாஜனங்களின் அழுகைகளையோ
துயரம் முற்றிய முகங்களையோ
அவர்கள் அறிந்ததில்லை

நீ இடப்பெயர்வுகளில் தவறிய
பொம்மைகளுக்காக அழுதாய்
அவை உனது பொம்மைகள்
நீ யாருமற்ற பொழுதுகளில்
அவற்றுடன் பேசியிருக்கலாம்
அவற்றிற்கு கற்பித்திருக்கலாம்

நான் அவற்றை பொம்மைகளென்பது
உனக்கு எரிச்சலூட்டும்
அனோஜ்
நான் அறிவேன்
இவை உனது நண்பர்களாயிருந்தன
நீ எனக்கிருப்பது போலவே

நாம் கலங்கத்தேவையில்லை

யுத்தம் எமக்கு பழக்கப்பட்டதாயிற்று
கண்ணீர்
குருதி
துயரம்
மகாஜனங்களின் மொழிகளாகிவிட்டன
சமாதானம் பற்றியெல்லாம்
தெருக்களில் பேச்செழுகிறது
நான் சமாதானம் பற்றியறியேன்

அது ஒரு கனியா
அது ஒரு மலரா
அது ஒரு பறவையா
அது ஒரு நட்சத்திரமா
யாரிடம் கேட்டறிய முடியும்
இல்லை
வெறும் வார்த்தை மட்டுந்தானா

மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பிப்பழகிவிட்டார்கள்

தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும்
நம்பிக்கையூட்டலுக்குரிய வார்த்தைகள்

அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே

2002
-----------------------------------------

உரையாடலில் தவறிய சொற்கள்

சித்தாந்தன்
----------------------------------------------------------

மிகத்தாமதமான குரலில்தான்
உரையாடல் தொடங்கியது
மழை தூறலிட்டு பெருமாரியாகி ஓய்கையில்
ஓராயிரம் சொற்களைப்பேசிக் களைத்திருந்தோம்

மாயப்புன்னகையில் மலர்ந்து
கத்திகளாய் நீண்ட சொற்கள் வரையிலும்
தந்திரமான மௌனத்தோடு கடல் கூடவந்தது
நிழல் பிரிந்த உருவங்களின் மிதப்பில்
வெளியின் மர்மங்கள் அவிழ்ந்தன
காற்று
சொற்களின் வெற்றிடங்களிலிருந்து திரும்பி
கண்ணாடிக்குவளையுள் நிரம்பித்ததும்பியது

பேசாத சொற்கள் குறித்துக்கவலையில்லை
பேசிய சொற்களிலோ
கண்ணீரோ துயரமோ இருக்கவில்லை
வெறும் புழுதி
வசவுகளாய் படிந்துபோனது

குரல் இறங்கி சரிவுகளில் உருண்டு
தடுமாறிய தருணத்தில்
சில வார்த்தைகளை
அவசரமாக என்கைகளில் வைத்துப்
பொத்தியபடி நீ வெளியேறினாய்
ஒளியும் நிழலுமற்ற வார்த்தைகள் அவை
அர்த்தங்கள் நிறைந்த
ஒரு சோடிச்சொற்களையாயினும்
சாத்தப்பட்ட நகரத்தின் சுவர்களில் எழுதியிருக்கலாம்
ஒருவேளை அவற்றில்
பறவைகள் சில கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம்

எந்தப் பிரகடனங்களுமற்று
தாகித்து அலைந்து சலிப்புறும் போது
இருளில் நச்சுப்புகையாய் சொற்கள் மேலெழுகையில்
நதியொன்றினது உள்ளுற்றிலிருந்து
சரித்திரத்தின் பிணங்கள்
நாம்பேசாத சொற்களைப் பேசத்தான் போகின்றன

அப்போது கடல்
கரையிலிருந்து எம்சுவடுகளை
உள்ளிழுத்துச் சென்றுவிடும்
----------------------------------------------

எரிதலின் வலி

சித்தாந்தன்

----------------------------------------------------------


நெருப்புப்போல எரிகிறது விளக்கு
இப்படித்தான் நீ சொன்னாய்
மாலைப்பிரார்த்தனையில் நீயேற்றும்
தீபங்களின் ஓளியை
தின்றுவிடும் என்ற பயம் எனக்கு
-----------------------------------

தருணம்/2

சித்தாந்தன்
----------------------------------------------------------
நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல
என்குரல் கிடக்கிறது

முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை
நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில்
பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்
ஈரலித்தது

உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில்
காதல் ததும்பும் நீர்ச்சுனை உள்ளடங்கியிருக்கிறது
மறுதலிப்பின் உதிர்நாழிகைகளில் வாசிக்கத்தொடங்கியிருந்தாய்
காமம் கிளர்ந்தூரும் வரிகளை

என் குறியிறங்கி தலையணைக்கடியில்
சர்ப்பமாய்ச் சுருண்டது
ஓரிரவில் குறியற்றவனாய் வாழ நேர்ந்தது

சுவர்கள் கடலாய்ப்பிரதிபலித்தன
மீன்கள் கலவி நட்சத்திரங்கள் பிறந்தன
நீ சுவர்க்கடலில் பிணமாய் மிதந்தபடியிருந்த என்சடலத்தை
பிய்த்துத்தின்னும் மீன்களை வருடிக்கொடுத்தாய்
அவற்றின் பற்கள் கிழித்த எனதுடலில் வழியும் குருதி
இன்னொரு கடலாவது தெரியாமல்

அலைகள் ஓய்ந்து கடல் வற்றத்தொடங்கிய பிறகு
அவசரத்தில் எழுந்து தலையணையடிலிருந்து
என்குறியை எடுத்தேன்
மீனாய்த்துள்ளி சுவர்க்கடலில் மூழ்கியது

இன்னும் நீ வாசித்தபடியிருக்கிறாய்
குறியற்றவனின் காமம் கிளர்ந்தூரும் சொற்களை.

இரவு 11.26 24.03.2008
------------------------------------------------------------

கருணை வேண்டிக் காத்திருத்தல்

சித்தாந்தன்

----------------------------------------------------------
வலி மிகு இரவுகளை
என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன்
ஆணிகளறையப்பட்;ட இதயத்திலிருந்துவழியும்
பச்சை இரத்தத்தின் வெம்மை
காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது

இரவைப்போல படியும் பனிப்புகாரை
விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத
கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது
அச்சத்தின் கருநிழல்

எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
ஒரு பயணியின் கைப்பிடிக்குள்ளிருந்து
வழிகின்றன கனவுகள்
மிதமிஞ்சியதான அகோரத்துடன்
வனங்களின் உட்பாதைகளில் மரணங்கள்
காற்றின் இயல்பாய் நடந்;தேறுகின்றன
கம்பிகள் அடித்திறுக்கப்பட்ட சிறைகளுக்குள்ளிருந்து
உயிர் கருகும் நெடி

கையாலாகாதவனின் கண்ணீர் வீழ்ந்து
சமுத்திரங்களில் மூழ்கிறது தீ
மூடுண்ட நகரத்தின் சாட்சியாய் சுவர்களில்
மோதிச்சிதறுகிறது வெளவால்களின் குரல்

இரட்சிப்பின் வார்த்தைகளில் ஈரமுலர்ந்த பின்னும்
சிறைக்கதவை உதைத்து
முகத்தில் எச்சில் உமிழ்பவனிடமிருந்து
இன்னும்
கருணை வேண்டிக்காத்திருக்கிறது மனசு

10.03.2008 இரவு 11.55
------------------------------------------------

தருணம்/1

சித்தாந்தன்
----------------------------------------------------------
யாருமற்ற வீட்டை
அவசரமாக பூட்டிவிட்டு நடக்கிறேன்
உள்ளேயிருந்து யாரும்
அழைத்துவிடுவார்களோ என்ற பதட்டத்துடன்

எப்படியோ ஒரு கடலை உள்விட்டுவந்த பதட்டம்
வந்துவிடுகிறது

நீ கைகளைப்பிசைந்து பாவனைகளுக்குள்
காதலை மூழ்கடித்துக்கொண்டிருந்தாய்
எனது பதட்டம்
யாருமற்ற வீட்டின் கதவுகளுக்குப் பின்னால்
கேட்டுக்கொண்டிருக்கும்
அருபங்களின் உரையாடலில் குவிந்திருந்தது

வீடு திரும்புகையில்
மதுப்புட்டிகள் காலியாகிக்கிடக்கின்றன
கவிதைகளில் ப+ச்சிகள்
காதல் ததும்பும் சொற்களை அரித்துவிட்டிருக்கின்றன
என் தலையணை உறைகளில்
எண்ணை பிசுபிசுப்பு ஒட்டிக்கிடக்கிறது
சமையலறை நீர்க்குழாய் திறந்து விடப்பட்டிருக்கிறது
ஆடைகள் கலைந்துகிடக்கின்றன
சாப்பிட்டுவிட்டு கழுவாமலே கிடக்கும் கோப்பைகளில்
ஈக்கள் மொய்த்தபடியிருக்கின்றன

எனது காலடி மட்டும் கேட்கும் நடையின் பின்னே
மேலுமொருவரின் காலடியோசை
கடலின் அலையடித்தலாய் கேட்டுக்கொண்டிருக்கிறது

துயில் முட்டபடுக்கையில் சரிகையில்
என் போர்வையை யாரோ இழுத்துப்போகிறார்கள்.

காலை 5.51 26.03.2008
------------------------------------------------------

காற்றில் இசைப்பவனின் கனவு இசை

சித்தாந்தன்
----------------------------------------------------------
காற்றுக்கு புல்லாங்குழல் வாசிப்பவன்
இசையின் உச்சக்கதவுகளைத் திறந்து
அம்மணமாய் தெருவில் ஓடுகிறான்

அவன் கையில் காலவதியான கபாலத்தினது
தாறுமாறான ரேகைகள்

புதிர்க்கோடுகளாலான அவனது கோட்டு;ப்படத்தில்
பிறாண்டும் புனைகளின் கால்த்தடங்கள்

காற்றை பொருட்டாக கொள்ளாத விரல்களில்
இசையின் நரம்புகள் விம்மி முறுகுகின்றன

இசையின் பொருக்கு வெடித்திருக்கும்
அவனது உதடுகளில்
ப+த்திருக்கின்றன மலர்கள்
சொர்ப்பனத்தில் வெளியேறிய
ஸ்கலிதத்தின் பிசுபிசுப்போடு
--------------------------------------------------

சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின் குரல்

சித்தாந்தன்
---------------------------------------------------------------

இலைகளையிழந்த வனத்தின் புதிர்ப்பாதைகளிலும்
சுவடுகளை உறிஞ்சும் பெரும் பாலையிலுமாக
பயணிக்க நேரிட்டது.

கழுதைகளை விடவும் அதிகம் சுமக்கப்பழகிவிட்டோம்
அல்லது அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்
நண்ப,
துப்பாக்கிச் சன்னங்கள் அலையும் தெருக்களில்
கத்திகளாய்முளைத்திருக்கும் பார்வைகளுக்குமிடையிலும்
நீ பேசிக்கொண்டிருந்தாய்
கைதுகளை
சித்திரவதைகளை
காலத்திற்கும் அகாலத்திற்குமிடையில்
ஒளி அவிந்து உருகும் வாழ்வை
சலனமற்ற இரவுகள்
நாய்களின் ஊளையால் நடுங்குவதை
தெருவின் கடைசிப்பயணியாய்
வீடு திரும்புதலின் நிச்சயமின்மையை

உன்னை சிலந்தி வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சியாய் உணர்ந்தபோதும்
பாறையின் வேர்ஆழத்துள்ளிருந்து
உனது சொற்களை உருவாக்கினாய்

வன்முறையையையும் அதிகாரத்தையும்
கடைசிவரையிலும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
நண்பனே
உனது பயணத்தின் சாட்சியாய் நீயே இருந்தாய்
உனது கவிதைகளின் அர்த்தமாய் நீயே இருந்தாய்
கடைசியில்
எரியும் காலத்தின் புகை உன்மீது படிந்தது
அவர்கள் வன்முறையின் உச்சக்குரலில் பேசினார்கள்
நீயோ
அதிகாரத்தின் குருதி முகத்தில் காறி உமிழ்ந்தாய்
முடிவில் உன்னைக் கொன்றார்கள்

ஓரு பறவையின் குரலை இழந்த துயரம்
எங்களில் படிந்து போனது
நீ அற்பமான காலத்தின் மகா கவிஞன்
அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
நண்ப,
உன் சொற்களுக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநதியில்
வாழ்வின் துர்க்கனவுகளுடன் கவிதைகள் மிதக்கின்றன.

---------------------------------------------------------------------


00குறிப்பு: சந்திரபோஸ் சுதாகர்

எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

நிகழ்கணத்தின் வலி

13 மே, 2008


சித்தாந்தன்
----------------------------------------------------------
எங்களுக்கிடையில் பொம்மை
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்
அதன்கண்கள்
சூரியனிலிருந்து வந்திறங்குகின்றன

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

மேலும் புதிய புதிய பொம்மைகளால்
எமதுஅறையை அலங்கரிக்க விரும்பினோம்
எமது உலகத்தினது அற்புதங்களை
பொம்மைகளிலிருந்து ஆரம்பிக்கலானோம்

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வதிலும் கொடிது
மனிதர்களுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வது

இன்றைய விருந்தினர்கள்
பொம்மைகளையே பரிசளிக்கின்றனர்

ஒரு பொம்மை பற்றிய கவிதையை
பொம்மையிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்
எம்மிலிருந்து தொடங்குவதே நல்லது

நீண்டோடிய நாட்களின் பின்
இன்றுதெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச்சூழ்ந்து கொண்டு
கற்களை வீசினர் தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்

எமது அழுகையை
பொம்மைகளினது அழுகை என்றனர்
எமது கண்ணீரை
பொம்மைகளினது கண்ணீர் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்
------------------------------------------------------------------

பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு

சித்தாந்தன்

---------------------------------------------------------------
இந்த இரவு
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது
காற்று உருகி இலைகளில் வழிகிறது
மழை இருளிலேறித் தாண்டவமாடுகிறது
உறங்கும் தீக்குச்சியை உரச மூண்ட தீ
பெருங்காடாய் எரிகிறது

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
ரூபங்களின் இணைவில்
பொங்கிய பாலிமையின் உச்சத்திலிருந்து
வடிந்து வற்றத்தொடங்கியது பசி

நீயற்ற வெளி என்மீது கவிகையில்
எம் அந்தரங்கங்களில்
இதழுதிர்ந்த காதல் சருகின் படபடப்பு

மழை தாண்டவமாடுகிறது
இரகசியக் கால்வாய்களில் பெருகும் வெள்ளம்
பாறைகளை இழுத்துச் சுழிக்கிறது
எம் படுக்கையின் கீழ் கடல்
நீ உன் கடலில் இறங்கி நடக்கலானாய்
நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்
வெறும் படுக்கைதான்
தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது
----------------------------------------------------------------------------

மெய் உறங்கும் நாட்களின் கோடை

சித்தாந்தன்
-----------------------------------
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு
இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய்
ததும்பி வழிந்த மதுவில்
என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய்
நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்

இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று
காலாற நிழலற்ற பெருந்தெருவில்
கானலில் ஈர்ப்புற்று அலையும்
நாய்களின் இளைப்பின் அதிர்வு
சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.

இனி இரவுகள் தொங்கும் கயிற்றில்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
நீ செல்லப் போகிறாய்
எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள்
மழையற்ற நெடுங்காலமிது
பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து
சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய்
இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல்
வெளவால்களை துரத்திச் செல்கிறது
அவற்றின் பறப்பெல்லைவரை.

நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய்
மீதமிருக்கும் போதையையும்
அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்
பின்னும்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய்
எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும்.
நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்

வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம்
கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு
நீ செல்லப்போகிறாய்
காரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும்
நான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்.

உனக்கு வழிவிடப்போகும் கடலை
விசமாக்கிற்று உனது பார்வை.

மீன்கள் செத்து மிதக்கின்றன
கடல் நாறி மணக்கிறது
இன்னும் நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.

27-05-2007 இரவு- 11.51
------------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்