சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துக்கத்தைச் சொல்பவனின் கவிதை

27 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

இப்போது நான் விழித்திருக்கின்றேன்
என் பிடுங்கப்பட்ட மூளையில் விசித்திரமான
முட்செடி நாட்டப்பட்டிருக்கிறது
தயை கூர்ந்து என்னைக் கடப்பவர்கள் அனுதாபம் கொள்ளாதீர்கள்
கொலைக்கருவிகளை விடவும் கூரியன
உங்கள் பார்வைகள்
நீங்களே நிதானிக்க முடியாத இரவை உங்களுக்கு தந்துவிட
விரும்புகின்றேன்
மற்றும் சிறியதான ஒரு துக்கத்தையும் தூக்கத்தையும்

இளமையின் கருகியமணம்
என் பாலிய சித்திரங்களின் மீது
அடர்ந்த வர்ணமாகச் சிதறிக்கிடக்கிறது
புணர்ச்சியின் பின் களற்றி உலரவிட்ட ஆடையாய்
தொங்கவிடப்பட்டிருக்கிறேன் எல்லோர் முன்னும்

மழையின் ஈரித்த திவலைகள்
என் கனவுகளின் சூட்சும அடுக்குகளில் தேங்குகின்றன

நான் ஒரு விறைத்த ஆண்குறி
ஒரு பிளந்த பெண்குறி
இதனைவிட
ஒரு துப்பாக்கி
ஒரு தூக்குக் கயிறு

நீங்கள் கொலைகளைப் பிரகடணப்படுத்துகையில்
நான் கொலையாளியாகவும்
கொலையுண்டவனாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றேன்
இதற்கு மேல் ஒன்றுமில்லை சொல்வதற்கு
வனத்திலிலிருந்து வழி தவறிய விலங்கிடம்
மேலும் சொல்வதற்கு என்னதான் இருக்க முடியும்

உன் இருதயத்தில் கவிந்திருக்கிறது விலக்க முடியாத இருள்

20 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

எண்ணற்ற கால்கள் முளைத்திருக்கின்றன
இந்தச் சுடரிற்கு
ஈரம் வடியும் காற்று உறைந்து பனிக்கட்டியாகியிருக்கிறது

விரைவாய்ப் பறக்கின்றன தொலைவுப் பறவைகள்

நட்பின் கதைகளைப் புறக்கணிப்பவன்
அணிந்திருக்கிறான்
பாதாளச் சிதைவின் முகத்தை

நீ பேசு
முடிச்சுக்களிடப்பட்ட அகாலக் கயிறு
யாரிடமும் இல்லை
எனினும் அவ்வாறு கருதவேண்டியிருக்கிறது

நீ சனங்களைத் தூற்றுகிறாய்
மரணம் முற்றுகையிட்ட வெளியிலிருந்து
தப்பித்தவர்களை வெறுக்கின்றாய்

மேய்ப்பனின் திருநாமம் பூண்ட நீ
சாகசக்காரரின் சதுரங்க ஆட்டத்தின் புதிரை
அவிழ்க்கத் தயங்குகிறாய்

நீயே சொல்
மந்தைகளாய் ஆக்கப்பட்ட சனங்களால்
என்னதான் செய்ய முடியும்
வனாந்தரமெங்கும் நிறைந்துபோயுள்ளது
யுகம் யுகமாய் எழுப்பிய அழுகுரல்

நீ உணரவில்லையா
காலம் சிதைந்து கல்லாயிற்று
கட்டியெழுப்பப்பட்ட மணற்கோபுரம் உடைந்து
பறவைகளையும் மூடிற்று

தீ சூழும் வெறும் வெளியில்
ஒரு குழந்தையின் நொருங்கிய குரல்
பறவைகளையும் துக்கிக்கச் செய்தது

யன்னலினூடாய் யுத்தத்தின் சாகசங்களை
படித்துக் கொண்டிருக்கும் உன்னிடம்
அதன் கோரத்தையும் அவலத்தையும்
ஜீரணிக்க முடிவதில்லை

விசுவாசத்தின் கண்ணாடியில் உன் புன்னகை
சுடரிழந்து தொங்குகிறது

யுத்தச் செய்திகள் உலர்ந்த பத்திரிகைகளில்
நீ தேடிக்கொண்டிருக்கிறாய் சாவுகளை

நீ கொண்டாடும் நிலத்தின் பாளப் பிளவுகள்
காயங்களைச் சேமித்து வைத்திருக்கின்றன

நீ நம்பித்தானாக வேண்டும்
வானத்தைச் தூக்கிச் சென்வர்களே
அதைப் போட்டுடைத்தார்கள் என்பதையும்
பறவைகள் அந்தரித்தபடியே திரிகின்றன

உன் யன்னலை மூடும் இரவை விரட்ட
உன் ஒற்றை மெழுகுதிரியாலாகாது
உன் இருதயத்தின் இருளையும் கூட

ஓளிமங்கும் வட்டங்கள்

10 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

சலனம் முற்றிய மனிதமுகங்கள்
இன்றைய நாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும்
கனவுகளின் இழைகளில் தொங்கும்
சுடரின் திரியை
இழுத்துச் சென்று கொத்துகிறது
ஆட்காட்டிப் பறவை

இரவைப் புணர்ந்த குளிரை
கடித்துக் குதறுகின்றன நாய்கள்

வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய்
சாவைத் தாங்கிச் சலிப்புற்றவர்களின்
முகங்களின் பின்
ஒளிமங்கும் வட்டங்கள் சூழல்கின்றன

எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து
வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக் காற்று

இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத்
திரும்பும் மனிதர்கள்
உரசி வீசிய தீக்குச்சிகளிருந்து
புகை கருகி எழுகிறது
உக்கிய சரிரங்களின் மணம்

நினைவுகளைத் திருகி
எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன
எண்ணற்ற முகங்கள்

எங்கோ
யாருடையதோ அடிவயிற்றில்
பற்றியெரிகிறது நெருப்பு

வலியுணர்தல் -2

03 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

மீந்திருக்கும் சொற்களையும்
மௌனம் தின்று தொலைக்கிறது
ஈரம் கசியும் பால் வெளியில்
இன்னும் பறந்தபடியிருக்கின்றன
இரண்டு பட்டங்கள்
காற்றின் அசைவுகளில் சூழன்று
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றையொன்று முத்தமிடுகின்றன

பாலையாய் எரிகிறது பகல்
புறக்கணிப்பின் உச்சப் பொழுதுகளில்
மணிக்கட்டில் ஊருகிற எறும்பைத்
தட்டுவதைப் போலாகிறது அன்பூறும் கணங்கள்
மோகித்துச் சுடரும் வானத்தின் கீழ்
நிலவைப் புசிக்கிறது இரவு

மூச்சின் அனல் எறிக்கும் தூரம் கூட இல்லை
பாதைகள் தூர்ந்து போயின
சுனைகள் வற்றிவிட்டன
பிணைப்பு நூலின் கடைசி இழையில்
விரல்கள் ஊசலிடுகின்றன
எது மீதமாயிருக்கிறது
நீயும் நானும் பருக

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்