சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

தபினின் ”கூத்தாடி“

31 ஜனவரி, 2016


பாரம்பரிய கலைகளின் மீதான பேரவாவும்-சமூக ஊடாட்டத்தின் மீதான சில கேள்விகளும்
சித்தாந்தன் சபாபதி

ன்னிலையான இயங்குநிலையை உடைய சமூகம் காலத்தின் தேவை கருதிய கலை வடிவங்களை உருவாக்குகின்றது. அந்தக் கலைகள் காலத்தின் இயங்கு நிலைக்கு ஏற்பவும் மாறுநிலைக்கு ஏற்பவும் மாற்றமுறவும் புதிய வெளிகளை நோக்கி விரிவடையவும் தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட கலை, இலக்கிய வடிவங்கள் பின்னான காலங்களில் வழக்கிழந்து போவதும் பிறிதான கலையாக அல்லது இலக்கியமாக மாற்றமுறுவதும் அல்லது புதிய வெளிகளை அவை திறந்துவிடுவதும் இயல்பாக நிகழ்பவை.

இழந்துபோனவை பற்றிய மனித மனத்தினது ஏக்கம் ஒரு சமூகத்தினது ஏக்கமாக , பண்பாட்டின் சரிவாக கருதப்படும்போது அவை பற்றிய பிரக்ஞை இயல்பாக எழுவதென்பது புதியதல்ல. தமிழா் பண்பாட்டின் உயா்ந்த கலை வடிவமாக கோலோச்சிய கூத்துக்கலை பின்னய காலங்களில், மேடை நாடகத்தினதும் சினிமாவினதும் வருகையோடு பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. கூத்தென்பது ஒரு சமூகத்தின் இருப்பியலோடு சோ்ந்தியங்கிய கலையாகும். அக்கலைக்கு ஒரு சமூக பொறுப்புணா்வும் அக்கறையும் இருந்ததாகவே கூத்துக் கலையோடு தங்கள் வாழ்க்கையினை இணைத்துக் கொண்டவா்கள் சொல்வதுண்டு. ஆகவே இத்தகைய கலைகள் நவீன விஞ்ஞான வளா்ச்சியினால் விளைந்த பல்வேறு மாற்றநிலைகளால் அடுத்த தலைமுறையை நோக்கிச் செல்வதிலும் தொடா்ந்து தம் இருப்புநிலையைப் பேணுவதிலும் தடைகளைச் சந்தித்துவருகின்றன. கூத்துகள் பரம்பரைக் கையளிப்புக்களாவே பெரும்பாலும் அமைந்திருந்தன. தந்தை அவரின் பின் மகன் அவரின் பின் அவரது மகன் என இது தொடா்வதுண்டு.

ஆனால் இன்றைய இளையதலைமுறை கூத்துப் போன்ற பாரம்பரியமான கலை வடிவங்களில் அக்கறை கொள்ளாதிருப்பதும். பொருள் மையமான சிந்தனைப் போக்கில் எல்லாமே வருமானத்தை எதிர்பார்க்கும் ஒன்றாக மாற்றமடைந்த பின்னா், எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்காது என்ற நோக்கில் கூத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன என்ற தோற்றநிலை உருவாகியிருக்கின்றது.

இந்தப் பின்னணியிற்றான் வடமராட்சிக் கிழக்கு கலாசார பேரவையின் தயாரிப்பில் அம்பலம் திரைக்கூடத்தின் வெளியீடாக தபினின் எழுத்து,இயக்கத்தில் “கூத்தாடி“ குறும்படம் வெளியாகியிருக்கின்றது. ஏலவே எமது பண்டைய கலை வடிவங்கள், வாழ்க்கை முறைகள் பேணப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து பல சினிமாக்களும் குறும்படங்களும் வெளிவந்திருந்தாலும், தபினின் “கூத்தாடி“ கவனிப்புக்குரிய குறும்படமாக அமைவதற்கும் காரணங்கள் உள்ளன. போருக்குப் பின்னரான ஈழத்தமிழா்களின் வாழ்வில் சடுதியான மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருக்கின்றன. போராட்ட வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த வாழ்வு, போருக்குப் பின்னராக ஏற்பட்ட சமூக பொருளாதார கலாசார மற்றும் அரசியல் மாற்றங்களினால் பல நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இது இயல்பாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்தான். எனினும் போரினால் சூழ்திருந்த மனவெளிகளை நிரப்பும் இந்த இதர நிலைமைகள் எமது பாரம்பரியங்களின் வோ்களைக் களையவும் தொடங்கியிருக்கின்றன. இன்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே கூத்துக்கலை உயிர்ப்புடன் பேணப்பட்டுவருகின்றது. இதனைவிட தமிழ்த்தின விழாக்களில் போட்டிக்குரிய கலையாகவும் மாற்றமடைந்திருக்கின்றது. உண்மையில் இது ஒரு வீழ்ச்சியா அல்லது சமூகமாற்றத்தில் இவை எல்லாம் இயல்பாக நடைபெறுபவைதான். இதனால் இந்தப் புரிதலோடு இவற்றைத் தாண்டிச் செல்வதுதான் பொருத்தமானது எனக் கருதிக் கொள்ளலாமா?

ஒரு சமூகத்தின் இருப்பு, அதன் மரபார்ந்த வாழ்க்கையையும் கலை வடிவங்களையும் பாதுகாத்தலை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்துநிலையைச் சமூகம் கொண்டிருந்தாலும் பரம்பரைத் தொழிலையும் பரம்பரைக் கலைவடிவங்களையும் பேணுகின்ற சமூகங்கள் அவற்றைத்தான் தங்களுடைய அடையாளங்களாக பேணிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி வருகின்றது. மற்றைய சமூகங்கள் தங்கள் இருப்பை மாற்றியமைத்துக் கொண்டு சமூக நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை ஏற்றவாறு முன்னேற்றத்துக்குரிய சமூகங்களாக மாற்றுகின்றனவோ அவ்வாறே குறித்த கலைகளைப் பேணும் சமூகங்களும் முன்னேற்றமடைய வேண்டும். ஆனால் நிலைமை தொழில் சார்ந்த அடையாளங்களையும் கலை சார்ந்த அடையாளங்களையும் இழிவு நிலைப் பொருளில் வழங்குவதன் மூலம் சமூகத்தின் புறநிலை மனிதா்களாக குறித்த சமூகங்களை அடையாளப்படுத்த விளைகின்றது. கூத்தாடி குறும்படத்தில் வரும் இளைஞனின் தந்தை ஒரு கூத்தாடி. அவன் ஆங்கிலம் கற்பதற்காக தனியார் வகுப்புக்குச் செல்கின்றான். அங்கே ஆசிரியா், அவனைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லுமாறு கேட்கின்றார். அதற்கு அவன் தனது பெயரைச் சொல்லிவிட்டு தந்தையின் தொழிலை சொல்லும் போது தயங்குகின்றான் மற்றைய மாணவா்கள் எல்லோரும் சிரிக்கின்றார்கள். அவன் தந்தையின் தொழிலை ”றாமா அக்ரா்” எனக் குறிப்பிடும் போது, ஆசிரியரும் சிரித்து விட்டு “உனது அப்பா அக்ரா் இல்லை சிவாஜி கமலைத்தான் அக்ரா் என்பது உனது அப்பாவின் தொழில் ”கூத்தாடி” என்று சொல்லு” என கேலி செய்கிறார்.
தபின் கூத்துக்கலை தொடா்பான எமது சமூகத்தின் பார்வை இளந்தலைமுறையினரிடம் எந்த வகையில் உள்ளது என்பதை இந்தக் காட்சிப்பதிவின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கூத்துக்கலை பற்றிய பிரக்ஞையை மையமாகக் கொண்டு இக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எமது வழக்கிழந்து போன அடையாளங்களும், புழங்கு பொருட்களும் பதிவாக்கப்பட்டிருக்கின்றமையும் இக் குறும்படத்தின் முக்கியத்துவத்துக்குக் காரணமாகின்றது. குறிப்பாக மூக்குப்பேணி, தாம்பாளம் என்பவை மீள் நினைவாக வருகின்றன. அதிலும் தந்தை மூக்குப்பேணியில் தேநீா் அருந்துவதையும் மகன் தம்ளரில் தேநீா் அருந்துவதையும் குறியீடாகக் கொண்டு தலைமுறை இடைவெளிகளை பதிவு செய்திருக்கின்றார். இதற்கு அப்பால் நிகழும் உரையடால்களில் காணக்கிடைக்காத வலுவை இத்தகைய காட்சிப்பதிவுகளில் காணமுடிகின்றது.

தந்தை, தான்  கடந்தகாலத்தில் கூத்தாடிய இடத்தை இரவுப் பொழுதில் தனிமையில் இருந்து பார்த்து ஏங்குகின்றார். கடந்த காலத்தின் இதமான நினைவுகள் அவரை வருடுகின்றன. தபின் இதனை ஒரு பின்னணிக் காட்சியாகக் காட்டுகின்றார். கூத்தின் ஒரு பகுதி நிகழ்த்திக் காட்டப்படுவதாக அக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் அக்காட்சியில் கூத்தின் பார்வையாளராக வெறும் மூன்று பேரே அமா்ந்திருப்பதாகக் காட்டப்படுகின்றது. இது நடிகா்களுக்கான பஞ்சத்தினால் அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் வளமாக இருந்த கலையை வெறும் மூன்றுபேர்தானா? இரசித்தார்கள் என்ற தோற்றத்தையும் கொண்டுவருகின்றது. பார்வையாளா்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டியிருக்கும் போதே தந்தையான அண்ணாவியாரின் ஏக்கமும் படத்தினது நோக்கமும் நிறைவேறியதாக இருக்கும். மாறாக இக்காட்சி படத்தின் நோக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.

கூத்தாட்ட இடமெங்கும் “பியா் ரின்“ கள் காணப்படுகின்றன. ஒரு புனித இடமாக அண்ணாவியாரால் கருதப்பட்ட இடம். இப்படி காணப்படுவது. கால மாற்றம் புனித இடங்களைக்கூட களியாட்டக் கூடங்களாகவும் கழிப்பிடங்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது என்பதனை நுட்பமாகப் பதிவு செய்திருக்கின்றார். அண்ணாவியார் கோபத்தோடு பியர்ரின் ஒன்றினை உதைப்பது கலையை போற்றிக் காக்காத சமூகத்தின் மீதான வெறுப்பின் வெளிப்பாடா என எண்ணவைக்கின்றது. இவ்வாறாக பல இடங்கள் நுட்பமான உட்கருத்துக்களோடு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தந்தை தனக்குப் பின்னா் கூத்தை மகன் வளா்த்தெடுப்பான் என நம்புகின்றார். அதற்காக மகனிடம் இறைஞ்சுவது போல கேட்கின்றார். மகன் தந்தை கூத்தாடியாக இருப்பதனால் தான் எதிர்கொள்ளும் அவமானங்களைக் காரணங்காட்டியே அதனை மறுக்கின்றான். அவனுக்கும் தங்கைக்குமான உரையாடல் இதனை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் மகன் தந்தையின் விருப்பையும் மீறி நண்பனின் துணையுடன் வெளிநாடு செல்கின்றான். அங்கு தொழில் தேடுகின்றான். ஒரு ஹொட்டலில் அவனது வேலைக்கான நோ்முகத் தேர்வு நடக்கிறது. அதன்போது அவனிடம் அவனது தந்தையின் பெயரைக் கேட்கப்படுகிறது. அவன் தயக்கத்தோடு சொல்கின்றான். ”அண்ணாவி இராமநாதன் மகனா நீ? அண்ணாவி இராமநாதன் மகனுக்கு இங்கு வேலை இல்லை.” அவனின் கண்கள் ஏமாற்றத்தால் விரிகின்றன. இதற்குப் பிறகான காட்சிகள்தான் படத்தின்  மையக்கருத்தை நோக்கிப் பார்வையாளனைக் கூா்மைப்படுத்தும் காட்சிகள்.

கூத்துக்கலையை பேண வேண்டும் என்ற எண்ணத்தை சமூகத்தில் வேரூன்ற வைக்க வேண்டும் என்பதே இயக்குநரின் எதிபார்க்கையாக இருக்கின்றது. ஆனால் ஒரு பண்பாட்டின் கலை அந்தப் பண்பாட்டை அந்த நிலத்திலேயே பேணிக்கொண்டிருக்கிற மக்களால் ஏன் பேணப்படாமல் இருக்கிறது என்பதற்கான விளக்கங்களை ”கூத்தாடி“யில் காணமுடியவில்லை என்பதும், கூத்துக் கலையைப் புலம்பெயா்ந்து வாழும் சமூகங்கள் அதற்கான கலைக்குரிய தகைமையோடு விளங்கிக் கொள்வார்களா?  அவா்களின் ஒரு தலைமுறை விளங்கிக் கொண்டாலும் அடுத்துவரும் தலைமுறையைச் சோ்ந்தவா்கள் எந்த வகையில் அதனை நோக்குவார்கள் என்பதும் தவிர்க்க முடியாதபடி எழும் கேள்விகள்.
காலமாற்றத்துக்கு ஏற்ப கலை உட்பட அனைத்துமே தம்மை புதுப்பிக்க வேண்டிய தேவையிருக்கின்றது. கூத்துக் கலை ஒரு காலகட்டத்தில் மேடைக்கானதாகச் சுருக்கப்பட்ட போது அது சமூகத்தின் அனைத்துமட்டத்தினராலும் ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் பின்வந்த மாற்றங்கள் சமூகத்தில் பல்வேறு தாக்கங்ககள ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே மாற்றங்களுக்கு அமைவானதாக அளிக்கை முறைகளையும் நவீன வெளிகளுக்கு அமைவாக விருத்திசெய்ய வேண்டியிருக்கின்றது. ஈழத்தில் அது நடந்திருக்கிறதா? அல்லது அவ்வாறு மாற்றங்களை எதிர்பார்ப்பதென்பது கூத்தின் அடிப்படையான பெறுமானத்தை சிதைத்துவிடுமா? இத்தகைய கேள்விகளும் இந்தக் குறும்படம் சார்ந்து எழுகின்றன.

ஒரு குறும்படமாக இவ்வாறான கேள்விகளுக்கு இடமளித்தாலும், கலையாக்க முறையில் “கூத்தாடி“ நல்லதொரு குறும்படத்திற்கான தகைமைகளையும் கொண்டிருக்கின்றது. வழக்கமாக ஈழத்தின் திரைப்படங்களில் காணக்கிடைக்கின்ற நாடகப் பாங்கான உரையாடல் மொழி பெருமளவுக்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றமை பாராட்டுக்குரியது. முக்கியமான பாத்திரங்களான தந்தை மகன், மகள் ஆகியோரின் நடிப்பில் வழமையான சினிமாத் தனத்தை கொண்டுவராது யதார்த்தமான நடிப்பாற்றலைக் கொண்டுவருவதற்கு தபின் சிரத்தை எடுத்திருக்கின்றார் என்பதைக் காணமுடிகின்றது. அதிலும் தங்கையாக நடிப்பவா் இயல்பான நடிப்பை வெளிப்டுத்தியிருக்கின்றார். எனினும் தந்தை மகன் போன்றோரின் நடிப்புத்திறன் போதுமான உணா்வுத் தன்மையோடு வெளிப்படவில்லை என்ற கூறலாம்.  கமராவின் ஆரம்பக் கோணம் ஒரு தோ்ந்த ஒளிப்பதிவாளனின் நோ்த்தியுடன் பதிவாகியிருக்கின்றது. ஆனால் பின்வந்த காட்சிகளில் இன்னும் கூடுதலான கவனத்தை ஒளிப்பதிவில் செலுத்தியிருந்தால் படத்தின் காட்சியமைப்புக்கள் மேலும் வலுமிக்கதாக அமைந்திருக்கும். குறிப்பாக கூத்தாட்டக் களத்தைக் காட்டும் அந்த நினைவுக் காட்சியில் இயைபற்றதான செயற்கையான ஒளியுட்டல் காட்சியின் இயல்பைக் குலைத்துவிட்டிருக்கின்றது. இசையின் அதிரடி அலறல்கள் இல்லாமல் இயல்பான பின்னணி இசை பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கும் விதம் என்பன பாராட்டுக்குரியன. பாடத்தொகுப்பு இசைவாக பொருந்தியிருக்கின்றது. அதிலும் இறுதிக் காட்சிகளைக் குறிப்பிட்டுக் கூறலாம். மொத்தத்தில் ”கூத்தாடி” பல்வேறு விதமான கேள்விகளைப் பார்வையாளனிடத்தில் எழுப்பினாலும், நல்லதொரு குறும்படத்தை பார்த்து இரசித்த அனுபவத்தையும் தருகின்றது.
00











மாயத் திரைகளின் வரைபடம்.

26 ஜனவரி, 2016


-சித்தாந்தன்

இந்த சிதிலமான கனவை நான் மீட்டுக்கொண்டிருக்கும் இக்கணம். வெளியே நாய் குரைத்தபடியிருக்கின்றது. ஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவினால் காற்றில் சலனம் மீந்தபடியிருக்கின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது.
00

காற்றின் திரையில் அசையும் நிழலுருக்கள்
இரவு உறைந்து
பூச்சியமாக காலடியில் கிடக்கின்றது.
ஒரு முதியவன்
பாதாளங்களைத் தாண்டும் தன் மந்திரக்கோலால்
சாய்த்தபடியிருக்கிறான் நாட்சத்திரங்களை.
…………………………………………………………………………………………………………………………………………………………
இது எத்தனையாவது நட்சத்திரம்?” நான் கேட்கிறேன்.   என் குரலின் மீது படிந்த கருமையை அவன் ஊதிக்கொண்டே

நட்சத்திரங்கள் முளைத்துக்கொண்டேயிருக்கின்றன. என் முதுமை எண்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டது. நான் திரும்பத் திரும்ப பூச்சியத்திலிருந்தே எண்ணத் தொடங்குகின்றேன்.” என்கிறான்.

அவனின் குரலில் வெண்மை படா்கிறது. நான் அதை ஊதுகின்றேன். அது வா்ணங்களாய் விரிகின்றது. ஒருவித மாயத்தனத்துடன், முதியவன் சிரிக்கின்றான். அந்தப் பொழுது, நுாறாயிரம் பட்ஷிகளால் நிறைகிறது. அவன் பட்ஷிகளின் அரசனாகி அவற்றைத் தன் மந்திரக் கோலால் அடிமைப்படுத்துகின்றான். இரவின் கரிய திசைகளிலிருந்து, காற்று எழுந்து வருவதை நான் பார்க்கிறேன். அது எரிந்த யுகம் ஒன்றின் சாம்பலை அள்ளி வருகின்றது. முதியவனின் குரல் கீதமாகின்றது. இரவின் கனத்த திசைகளில் அது நீா்த்துளியென விழுந்து நீா்ப்பெருக்காகின்றது.

இரவின் ஆழத்தின் புதிரில்
நான் மிதக்கிறேன்
கனவின் விளிம்பில் எரியும்
திரியாய்ச் சுடா்கிறேன்……………….”

அவனது பாடல் பறவைகளின் சிறகுகளைக் குத்திக்கிழிக்கின்றது. திடுமென திசைகள் அழிந்துபோகின்றன. மாபெரும் மவுனத்தை கையிலேந்திய அவன், தன் மந்திரக்கோலை ஒரு கணப்பொழுதில் குழந்தையாக்குகின்றான். குழந்தை சினுங்குகிறது. அதன் சினுங்கல் ஒரு இளைய பாடலாகி அக்கணத்தை உறையச் செய்கிறது. நான் என் கைகளில் பருத்த சொற்களைச் சுமந்து நிற்கிறேன். வானம் ஒரு கணத்தில் வெண்மையாகின்றது. பின் அது பூமியைப் போல மரங்களால் சிலிர்கின்றது. தலைகீழாக அந்தரத்தில் மனிதா்கள் நடந்தபடியிருக்கிறார்கள். நட்சத்திரங்கள் சிலந்திகளாய் நூலிழைகளில் தொங்குகின்றன. ஒரு பேரழகி வானத்திலிருந்து பூமிக்குக் குதிக்கின்றாள். பேரழகின் வசீகரத்தில் கிழவன் குழந்தையை இளைஞனாக்குகின்றான். இளமை ததும்பும் பாடல் அக்கணம் ஒலிக்கின்றது.

தசைகளின் வாய் திறந்து
தவிப்பு மேலெழுகிறது- அன்பே
இலைகளா மரத்தின் ஆடை
இதயமே சொல் சொல்.
கனிகளைப் புசித்திடவே
காலத்துக்கு குறியேது
பனியினில் நனைகையில்
பாறையில் தகிப்பு ஏது?
உருகிடும் மெழுகுபோலாகி
என்னை நீ தழுவு
பருகிடும் அமிர்தத்தில்
பாட்டு நீ எழுது.

00

நான் ஒரு துண்டு மேகத்தைப் போல மிதக்கின்றேன்.
காற்று தன் நியமங்களைத் தாண்டி என்னை எடுத்துச் செல்கிறது. அது ஒரு அழகிய தருணமாகின்றது. தருணங்களிலிருந்து விடுவிக்க முடியாத அந்தப் பொழுதில் சிலுவைகளோடு மனிதா்கள் அலைகிறார்கள். அவா்களின் தோள்களில் சிறகுகள் துண்டிக்கப்பட்ட தடயங்களைக் காண்கின்றேன். எனக்கு ஓலமிடவேண்டும் போலத் தோன்றுகின்றது. என் உதடுகளில் யுகங்களாய் மிதக்கும் சந்நதப் பாடல்கள் பீறிடுகின்றன. ஓலத்தின் குரலில் என் பாடல்கள் பிறக்கின்றன. தனித்த யுகத்தின் சாம்பலாய்ப் படரும் அந்தப் பாடல்களில் துயரங்களால் நிர்வாணமான மனிதா்கள் அலைந்து திரிகிறார்கள். ஒரு பொழுதும் வெட்கத்தை உணராத மனித முகங்களிடை சேகுவேராவைச் சந்திக்கிறேன்.

அவா் புரட்சியின் இரத்தம் படிந்த தன் நாட்குறிப்பை. தன் நினைவுகளிலிருந்து வாசித்துக் காட்டுகின்றார். காலாவதியான அந்தச் சொற்களை இன்னும் இன்னுமாக அவா் நினைவில் வைத்திருப்பது எனக்கு எரிச்சலூட்டுகிறது. அவா் புரட்சியின் மகத்துவம் பற்றிய தன் கவிதைகள் சிலவற்றை என்னிடம் கையளித்துவிட்டுப் புன்னகைக்கிறார்.
நான் அப்பாவித்தனமாக அவரிடம் கேட்கிறேன்.

”’சேஇந்தப் பூமியில் புனிதமான ஒரு புரட்சி சாத்தியமாகுமா?”
எனது கேள்வி அவருக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. பூமியைக் குனிந்து பார்க்கிறார். சில நகரங்கள் பற்றி எரிந்தவண்ணமிருக்கின்றன. குண்டுகள் இடிமுழக்கமாய் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அகதிகள் சுமைகளோடு செல்கிறார். புதிய புதிய கூடாரங்கள் முளைக்கின்றன. மீளவும் மீளவும் பழைய வாழ்க்கை. எனக்கு சலிப்பு ஏற்படுகின்றது. அவா் அதைப் புரிந்து கொள்கின்றார்.

புரட்சியில்லாக் காலமேது தோழா?” என் தோள்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டு கேட்கின்றார்.

நான் அவருக்காக இரக்கங் கொள்கின்றேன்.

என் வார்தைகள் உலா்ந்த மரத்தினது கிளைகளாகின்றன. முன்னிருந்த பசுமையின் கடைசிச் சொட்டு ஈரத்தில் புரட்சியின் மகத்துவத்துடன்சேசிரித்துக்கொண்டிருக்கின்றார். ஆழ்ந்த துக்கத்தின் கனத்தோடு அந்த நினைவை நான் புதைக்கத் தொடங்குகின்றேன். என் வார்த்தைகளில் வன்மம் ஒரு புதைமேடாகிறது.

அந்தப் பொழுதை கசக்கி காகிதத்தை எறிவது போல அந்தரத்தில் எறிகின்றேன். அது தீப்பிடித்தபடி பறந்து இறுதியில் அணைகிறது. ’சேயின் நீண்ட சுருட்டில் இன்னும் புகை கிளம்பிவாறேயிருக்கின்றது. அவா் தனது தாடியை இரண்டு தடவைகள் தடவிக்கொள்கின்றார். நரைத்த மயிர்கள் விரல் இடுக்குகளுக்குள் கறள் ஏறிய கம்பிகளாக நெளிகின்றன. மேலும் நான் சலிப்படைகிறேன்.

மவுனமே அடா்த்தியான பதிலாகிறது.
சேயை தனிக்கவிட்டு மீண்டும் மிதக்கத் தொடங்குகின்றேன்.

என் திசை
யாரறிவார் என்திசையை
தென்திசைப் பறவைகள் அறியுமா?
மேற்கில் வீழ்ந்தணையும் சூரியன்தான் அறியுமா?
என் திசைக்கு யார் பெயரிடுவார்?
பெயரற்ற திசைகளில்
பறவைகளிருக்குமா?
பசிய மரங்கள் வளருமா?
சொல்!
சொல்!
சொல்!
யாருமற்ற வெளியிலிருந்து அவிழ்கின்றன சில வார்த்தைகள். சாரமற்ற காலத்தின் வார்த்தைகள்.

சொல் இருக்கிறது, சொல்தான் வளா்கிறது

அவை கடவுளின் வார்த்தைகள்.

யார் கடவுள்?’

புரட்சியின் கடவுள் யார்?’

சரித்திரத்தின் சுவடுகளில் இரகசியமாக உருவியெடுக்கப்பட்ட வார்த்தைகளின் பிளவுகளில் துருவேறிய இரும்புத் துண்டைப் போல இன்னும் காலங்காலமாய்க் கிடக்கின்றன கடவுள் குறித்த அத்தனை கேள்விகளும். வேறுவேறான கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் ஒன்று போலவே இருக்கின்றன. ”கடவுள்

கடவுள் பற்றிய புனைவுகளால் ஆகர்ஷிக்கப்பட்ட இடையன், அந்தரத்தில் மந்தைகளை மேய்த்துச் செல்கின்றான். அவனது கைத்தடி பாம்பின் நெளிவுகளோடு அசைகிறது. தீா்க்கமான ஒரு சொல்லை நான் இடையனைத் தொடா்ந்து சென்று கண்டெடுக்கிறேன். ”மேய்ப்பன்

நானே மேய்ப்பனானால் என்ன?’ இதயத்தின் மேற்பரப்பில் ஆசையின் துளிர் மெல்ல விரிகிறது.

எத்தனை கடவுள்கள் பூவுலகில். நேற்றும் ஒரு கடவுள் பூத்திருந்தார். பூமியில் பூக்கும் பூக்களை விட கடவுள்கள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் கடவுள். அரிசிக்குக் கடவுள், களவுக்குக் கடவுள், கடவுச்சீட்டுக்குக் கடவுள், சாரதி அனுமதிப்பத்திரத்துக்குக் கடவுள். மருந்துக்குக் கடவுள், மருத்துவத்துக்குக் கடவுள், காசுக்குக் கடவுள், கடவுளுக்குக் காசு. எல்லாம் கடவுளின் பெயரால் உருவான கடவுள்கள்.

கடவுள் என்னும் தூசு படிந்த சொல் அருவருப்பைத் தருகிறது.
நானும் கடவுள், ஆனால் வித்தியாசமான கடவுள். கனவுலகின் கடவுள். அல்ல நான் கனவுலகின் மேய்ப்பன். வித்தியாசனமான மேய்ப்பன். நானும் மேய்ப்பன்.

எனக்கு பக்தா்கள் தேவையில்லை. படையல் தேவையில்லை. பசியும் தேவையில்லை. பகட்டும் தேவையில்லை. பறப்பும் தேவையில்லை, பிறப்பும் தேவையில்லை, மறுபிறப்பும் தேவையில்லை ஏனென்றால் நானும் கடவுள். அல்ல மேய்ப்பன்.

என் சிந்தனை என்னைத் துரத்துகிறது. நான் கடவுளைப் போல வானத்தில் பறக்கிறேன். அந்த மந்திரக்கோல் கிழவன், எனக்கு மேலாக பறந்தபடியிருக்கிறான். அவனுக்கு மேலாக பேரழகியும் இளைஞனும் பறந்தபடியிருக்கின்றனா்.

நான் கிழவனை அழைக்கிறேன்.
ஏய்……….. மந்திரக் கிழவா

அவன் தலை தாழ்த்தி என்னைப் பார்க்கிறான். அவனின் பார்வையில் ஒரு கழுகுத்தனம் தென்படுகின்றது. ஒரு நெருப்பைப் போல அவனின் நிறம் மாறுகிறது.

நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?“

அவன் உதடுகளில் ஏளனம் ததும்புகிறது. பின் அது சிரிப்பாகிறது. பிறகு அது ஒரு பேரிரைச்சலாகிறது.

என்ன கேட்கப் போகிறாய்?“

குரலின் அதட்டலில் நான் முதல் முறை அச்சம் கொள்கிறேன். புராதனமான நகரம் ஒன்றின் சிதிலங்களுக்கிடையில் தனித்திருக்கும் ஒரு மனிதனைப் போல முதல்முறை அச்சத்தை உணா்கிறேன். என் அச்சம் தயக்கங்களைச் சிதறடிக்கிறது.

உனக்குசேயைத் தெரியுமா?“ நான் கேட்கிறேன்.
எந்தச்சே’?“
அவனுக்கு நிறைய சேகுவேராக்களைத் தெரிந்திருக்கிறது.
புரட்சியாளன்சே’.“
அவரையா? ம் ..எனக்கு அவரைத் தெரியாது.“
அப்ப உனக்கு எந்தசேயைத் தெரியும்.
நிறையப்பேரைத் தெரியும். அவா்களின் முகங்கள் எல்லாமே ஒன்று போலத்தான் இருக்கின்றன. ஆனால் ஆடைகளின் நிறங்கள்தான் வேறு.“
அவா்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.“
யாரை?“
அப்பாவிச் சனங்களை.“
கிழவன் மூச்சைத் திரட்டி காற்றைக் கிழித்துக்கொண்டு மேலெழுந்து பறக்கிறான். அவனது வேகம் என்னைத் தலைகுனிய வைக்கின்றது. நான் இன்னும் ஒரு சருகுபோலாகி மிதந்துகொண்டிருக்கிறேன்.
நான் என் வழியையும் திசையையும் மாற்றிக் கொள்கிறேன். அதுசேஎதிர்ப்படாத திசை. ’சேஎதிர்ப்படாத வழி.

நான் எனக்குள்ளேயே சில கேள்விகளைக் கேட்கிறேன்.

புரட்சி என்றால் என்ன?
புரட்சிகள் ஏன் உருவாகின்றன?
புரட்சிகள் யார் பொருட்டு எழுகின்றன?
புரட்சியாளன் என்பவன் யார்?
துாய புரட்சி என்ற ஒன்று உள்ளதா?
புரட்சிகள் எவ்வாறு வெல்கின்றன?
புரட்சிகள் எவ்வாறு தோற்கடிக்கப்படுகின்றன?
புரட்சியின் நிறம் என்ன?
புரட்சியின் குணங்கள் எவை?
புரட்சியாளன் என்ன செய்ய வேண்டும்?
புரட்சியின் பெயரால் மக்கள் ஏன் கொல்லப்படுகின்றார்கள்?

இத்தனை கேள்விகள் போதும் எனக்கு. பதில்களை யாரிடம் கேட்பது. உண்மையில்சேயைச் சந்தித்தால் நன்றாகத்தானிருக்கும். அவரிடம் இத்தனை கேள்விகளுக்கும் பதில்களிருக்கக்கூடும். பழைய பதில்கள். ஆனால் காலம் மாறிவிட்டது. புரட்சிகளின் நோக்கங்களும் மாறிவிட்டன. புரட்சிகளும் மாறிவிட்டன. பழைய பதில்களை வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்துவிடமுடியும்.

நான் திரும்பவும் ஒரு தடவை புரட்சியை மறுதலிக்கிறேன்.
புரட்சியாவது பூசணிக்காயாவது
எனக்கொரு மந்திரக்கோல் கிடைத்தாற்போதும்.
ஏய்கிழவா……………..அஅஅ…………….…..
வானம் கிழியக் கத்துகிறேன்
என் குரல் வானத்தில் பட்டு உதிர்கிறது.

00

என் சிதிலமான கனவு குலைகிறது. நாய்கள் களைத்து வாலைச் சுருட்டிக்கொண்டு மதகுகளுக்குள் சுருண்டு கொள்கின்றனஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவு காற்றில் நிர்ச்சலனமாகின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது.
00


சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்