
.......................................................................................
மிகத்தாமதமானது உனதழைப்பு
கண்ணாடிக் குவளைகள் சிதறியுடையவில்லை
சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களிலிருந்து
எமது விம்பங்கள் இறங்கி நடக்கவில்லை
நீர் வற்றிய நிலத்துப் பூஞ்செடியின்
அகால முகத்தல்
மழையின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது
வரிசையாச் செல்லும் எறும்புகளின்
உணர் முனைகளில்
புரியாத மொழியின் அரூப அசைவுகள்
எதன் பொருட்டு
உன் குரல் தாகத்தின் சுனைகளை மூடிவிட்டிருக்கிறது
உன் பிரார்த்தனைக் காலத்தில்
பெயரறியாத் தெய்வங்களும் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன
எம் படுக்கையிலிருந்தவாறே
வசிய மந்திரங்களை உச்சரிக்கின்றன
அதிதீகளாகவும்
அழையா விருந்தாளிகளாகவும் வரும் தெய்வங்களுக்கு
நீ படையலிட்டுப் பூஜிக்கும் நாட்களில்
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எமது புகைப்படத்தில் குத்தி நிற்கின்றன தெய்வங்கள் எறிந்த கத்திகள்
தெய்வங்களின்
புகைப்படங்களுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் புதையுண்டிருக்கிறது
எமது வாழ்வு பற்றிய இரண்டொரு சொற்களும்
உனதழைப்பு
தெய்வங்களை நோக்கி எனையீர்க்கும்
தந்திரமாய்க் கவிகிறது வீடெங்கும்