சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

செத்தவனின் விம்பமான நான்

26 ஜூன், 2010


சித்தாந்தன்

நான் கனவு காணத் தொடங்கியிருக்கிறேன்
வானத்தின் நிழலாய்
எனது முகம் வியாபித்துக்கிடப்பதாய்

இந்தக் காற்றின் தொடுகையை
முறித்துவிட்டால் போதும்
மூச்சுக் குழாய்கள் வெடித்து
ஆசுவாசமாய் தூங்கிவிடலாம்

காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெரும் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை

முகங்களின் உலகத்தில்
தனித்தலையும் எனது முகத்தை
புராதன மனிதச்சாயல் விழுந்திருப்பதாய்
நண்பன் ஒருவன் சொன்னான்
அப்போதே நம்பியிருக்க வேண்டும்
நான் செத்தவனின் விம்பம் என்பதை

தலைக்குப் பின்புறம்
வலியெடுத்து மூளையும் குழம்பி
சாவுக் கயிற்று வலையில்
எல்லாக் கற்பனைகளும் மொய்த்திருக்க
நிழலெனத் தொடரும்
காலவானத்தின் உச்சியிலிருந்து
சூரியன் சிரிக்கிறது

சந்நதம்

16 ஜூன், 2010


சித்தாந்தன்

நிதானம் தப்பிய மழையின்
பேரிரைச்சலுடன் சந்நதம் நிகழ்கிறது

கோடுகளால் கிறுக்கப்பட்ட முகத்துடன்
உங்கள் முன் மண்டியிட்டிருக்கின்றேன்
சுடுகாட்டின் சாம்பல்
என்மீது படிந்திருக்கிறது

ஈனத்துடன் ஊர்ந்தூர்ந்து
கடலிலிருந்து கரையேறுகிறது
சிறு புழுவளவான சூரியன்

உங்கள் கனமேறிய கால்களின் ஒலி
விரட்டிச் சென்று குதறும்
என் தனிமைக்கு
காலபேதமும் ஜீவனுமில்லை
பயணவெளியின் காற்றில்
அச்சத்தின் பேருருவாக விழுந்து புலம்புகிறது

என் நண்பனின் ஒரு நூறு கவிதைகளிலும்
மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்
நீங்கள்
அவனைக் கொன்று களித்திருந்த நாளில்
விலங்குகள் மாட்டப்பட்ட வார்த்தைகள்
காற்றில் சுழன்றடித்தன

எல்லாச் சந்நதங்களின் முடிவிலும்
காற்றின் ரகசியப் புலன்களில்
சீழ் கட்டி மணக்கும் மரணங்களின் வலி

பிறகு
மிக இயல்பான புன்னகையுடன்
தேநீர் பருகுவீர்கள்
கொலையுண்டவனின் கதறலையும் கெஞ்சலையும்
வேடிக்கைச் சொற்களால் பேசுவீர்கள்

கொலைக் கருவிகளின் முனைக்கத்திகளால்
குற்றப்பட்டிருக்கின்றன எமது வார்த்தைகள்

பனி பெய்தபடியிருக்கும் இந்த ராத்திரியில்
என் மூச்சில் அலைந்தசைகிற
இந்த கைவிளக்குச் சுடரினடியில்
கடவுளுக்காக என் கதறல்கள் முழுவதையும்
கொட்டிவைத்திருக்கிறேன்
என் கடவுளுக்காக

நன்றி- பொங்குதமிழ்

பூட்டப்பட்டிருக்கும் வெளிகள்

14 ஜூன், 2010

சித்தாந்தன்

அநேகமும் நான் செல்லும் வீடுகள்
பூட்டியேயிருக்கின்றன

கதவுகளுக்குப் பின்னால் உதிர்ந்திருக்கும்
சம்பாஷனைகள்
கதவினைத் தட்டும்போது சிதறிக்கலைகின்றன

சில வீடுகளுக்குள்ளிருந்து
வீணையினதோ வயலினினதோ இசை
மாயமாய்க் கசிந்துகொண்டேயிருக்கின்றன

எல்லா வீடுகளின் முற்றங்களிலும்
காற்றில் உலராமலிருக்கின்றன பாதச்சுவடுகள்

அவசரத்தில் காலுதறிய செருப்புக்கள்
கலைந்துகிடக்கின்றன படிக்கட்டுகளில்

உட்புறமாகத் பூட்டப்பட்ட
கதவுகளின் அதிர்வொலி துக்கத்தை வரவழைக்கிறது

உடமையாளர்களைத் தொலைத்த
வீடுகளின் முன்
தனித்திருக்கின்றன திறப்புக்கோர்வைகள்
ஆயினும் அவை
கதவுகளுக்குப் பொருந்திவருவதில்லை

திறப்புத் துவாரத்தினூடு
கண் சொருகிப் பார்க்கையில்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது பதட்டம்

பலமுறையும்
என் வீட்டினுள்ளேயே பூட்டப்பட்டிருக்கின்றன
என்னுடையதான வீடுகள்

நன்றி - உயிர்நிழல்

அந்திமத்தின் சாபம்

10 ஜூன், 2010

சித்தாந்தன்

பூதங்களை வரைபவனின் கனவுகளுக்குள்
நுழைந்துகொண்டன தேவதைகள்

கடற்கரையில் மணல்வீடு கட்டிய அவன்
தேவதைகளுக்கான அறைகளை
வர்ணமடித்துச் செப்பனிட்டான்

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்ட குளியலறைகளுக்குள்ளும்
படுக்கையறைகளுக்குள்ளும்
உள்ளாடைகளைக் காயவிடும்
கொடிகளைக் கட்டினான்

அந்திமத்தில் வந்திறங்கிய தேவதைகள்
வானளவு அறைகளை அவனிடம் கேட்டன

அவன் கைகளை அகட்டி
பூதங்களைப் போல் விரிந்த வானங்களை
வரைந்து காட்டினான்

திருப்தியுறாத தேவதைகள்
அவனை மலடாகும்படி சாபமிட்டன

அவனின் மணல் வீட்டை
இழுத்துச் சென்றுவிட்டது அலை

சபிக்கப்பட்ட அவனின் குறியினுள்
இரைந்துகொண்டிருக்கிறது கடல்

அந்திமத்தின் வர்ணங்களில்
கரைந்துருகுகிறது வானம்

நன்றி- உயிர் நிழல்

புனிதத்தின் உன்னத இசையை வேட்டையாடும் நாய்

07 ஜூன், 2010

சித்தாந்தன்

என்னுடலின் நெளிவுகளுக்கிடையில்
அவிழ்கிறது ஆடை
புலன்களைத் திறந்தவனின் நிர்வாணத்தை
காற்றின் கண்கள் மேய்கின்றன

கறுத்த இலைகளுடன் சடைத்திருக்கும்
பெரு மரத்தின் கீழ்
விக்கிரகமாய் இறுகியுள்ள கடவுளின் சிலை மேல்
சிறுநீர் கழிக்கும் நாய்
புனிதத்தின் அதியுன்னத இசையை வேட்டையாடுகிறது

பாதையெல்லாம்
தங்கள் முகங்களின் நிர்வாணத்தை
முகமூடிகளால் மறைத்திருக்கும் மனிதரின்
வார்த்தைகளின் அசிங்கம்
உரோமக் கால்களில் எச்சிலாய் வழிகிறது

எதையும் ஜீரணிக்க முடியாது
வீடு திரும்பும் என்னிடமிருந்து
ஆடையை உருவிப் போகிறது எதிர் வீட்டு நாய்

நான் நாயாகவும்
நாய் நானாகவுமாக இருக்கும்
மிகப்பிந்திய நிமிடங்களில்
நாய்களின் அதியுன்னத இசையை
என் புலன்களால் வேட்டையாடத் தொடங்கினேன்

நாய்களைப் போலவே அலைகிறது
என் அதியுன்னத இசை

00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்