சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

வெயிலை அமர்த்த ஒரு மரநிழலைத் தர மறந்துபோனேன்

03 ஏப்ரல், 2024

லலிதகோபன் கவிதைகள்.

-சித்தாந்தன்

            ல்லாக் காலங்களிலும் ஒரு பிரதி ஒரே தன்மையான வாசிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. ஒரு பிரதி தன்னளவில் நெகிழும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. அது திண்மப் பொருள் அல்ல. நாங்கள் ஒரு பிரதியைப் படிக்கின்றபோது. குறித்த பிரதியாளன் கருதிக்கொண்டதை நாமும் அடையவேணடும் என்ற கட்டாயமில்லை. அதை அந்தப்பிரதியாளனே வலியுறுத்தவும் முடியாது. ஒரு பிரதி காலங்கடந்தும் வாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது அல்லது காலம் கடந்தும் புதியவிதமான பார்வைகளைத் தோற்றுவிக்கின்றது என்றால் அந்தப் பிரதி கொண்டுள்ள நெகிழ்வுநிலையே காரணம் எனலாம். அதாவது அந்தப் பிரதி ஒற்றைத் தனமான கருத்தேற்றத்தை திணிக்காது பன்முகத்தளப் புரிதலுக்கான வாசிப்புக்கு இடமளிக்கின்றது. எமது செவ்வியல் இலக்கியங்கள் பலவும் இத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. பல சந்தர்பங்களில் மறுவாசிப்புக்கு அவை உட்படுத்தப்படுகின்றபோது அவை எழுந்த காலச்சூழலையும் மீறி அவை சமகாலத்தன்மை பெறுகின்றன.

இலக்கியம் என்பது வெறும் வடிவச்சங்கதியல்ல என்பது முக்கியமானது. ஒரு வடிவம் ஒரு பிரதிக்கு இலக்கிய பெறுமானத்தை வழங்கிவிடாது. ஒரு பிரதியாளனைவிடவும் அதனை வாசிக்கின்ற வாசகர்களே அப்பிரதிக்கு பெறுமானத்தை வழங்கிவிடுகின்றார். வெறும் புறநிலைக் கருத்தேற்றங்கள் அந்தப் பிரதியின் மீது கட்டமைக்கப்படுகின்ற மாயத்தோற்றங்களே. எதைக் கொண்டாடுவது எதை நிராகரிப்பது என்ற அதிகார மையங்கள் இலக்கியப் பரப்பில் உருவாகத்தொடங்கிவிட்டன. இவை வலிந்து சில இலக்கியப் பிரதிகளை கொண்டாடுவதற்கான யுத்திகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றன. இவை குழுநிலை சார்ந்து வலிந்த கருத்தேற்றங்களை செய்துவிடுவதோடு அவற்றை பொதுக் கருத்துநிலையாக மாற்றவும் முயல்கின்றன. ஆனால் இவை யதார்த்தமற்ற செயல்நிலைகள். ஒரு படைப்பு அதன் மீது கட்டமைக்கப்படுகின்ற கருத்தேற்றங்களால் மட்டும் நிலைநிறுத்திவிட முடியாது. அதற்கு இயங்குநிலைத் தன்மை இருக்கவேண்டும். வெறும் சொற்களை ஒரு கோவை நிரலொழுங்கில் அடுக்கிவிட்டு அதன் மீது இலக்கிய சாயத்தைப் தடவ முடியாது. ஏனெனில் சாயம் கரைந்துபோகக்கூடியது. வார்த்தைகள் மட்டுமே எஞ்சிக்கிடக்கக்கூடியன. இலக்கியம் சொற்களால் எழுதப்படுவதாக இருந்தாலும் வெறும் சொற்கள் மட்டும் இலக்கியமல்ல. அப்படியென்றால் அதற்கு இலக்கியப் பெறுமானம் எப்படி வந்தடைகின்றது என்ற கேள்வி எஞ்சுகின்றது. இலக்கியம் மட்டுமல்ல கலைகளுக்கும் இது பொருந்தும். கலை என்பது அதன் புறத்தோற்றமல்ல. கலையிலும் இலக்கியத்திலும் மரபார்ந்த எல்லைகள் மீறப்பட்டுவருகின்றன. நிர்ணயமயப்படுத்தப்பட்ட கலை, இலக்கியக் கோட்பாடுகள் மீது எண்ணற்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. நிகழ்த்தப்படுவதால் மட்டும் நிகழ்த்துகலைகள் எல்லாம் அவற்றுக்கான பெறுமானத்தை எய்திவிடுவதில்லை. அதைத்தாண்டிய புரிதல் பார்வையாளனிடம் ஏற்படுத்தும் புரிதலிருந்துதான் அது கலைக்கான பெறுமானத்தை அடைகின்றது.

இலக்கியத்தில் ஏலவே இருந்த சட்டாம்பித்தனமான விமர்சனமுறைமைகள் மாற்றம் அடைந்துவிட்டன. தனிநபர் விருப்பு வெறுப்புக்களால் கட்டமைக்கப்படும் இத்தகைய மையங்கள் இலக்கியச்சூழலைப் பொறுத்தவரை ஆபத்துக்குரியவை. இலக்கியத்தின் பொதுவான இயங்கியலை மறுதலிப்பவை. கலையோ இலக்கியமோ தன் வாசிப்பை அதை வாசிப்பவனின் அனுபவங்களின் வழிதான் அணுகப்படுகின்றது அல்லது வாசிப்பவனிடம் தன் அனுபவத்தைப் பொருத்திப் பார்ப்பதற்கான ஏதோவொரு வகையில் வாசலைத்திறந்துவிடுகின்றது. தமிழ்ச்சூழலில் இலக்கியம் பற்றிய கருத்துச் சொல்லல்கள்தான் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. சிந்தனைமுறை வளர்ச்சியடையவில்லை. பெரும்பாலான கருத்துச்சொல்லிகள்   மேற்கின் வழிப்பட்டே இலக்கியத்தை அணுகுகின்றார்கள். சுயமான அணுகுமுறை இவர்களிடம் இல்லை. தாம் கற்றுக்கொண்ட கோட்பாடுகளின் வழி இலக்கியத்தை அணுகுகின்றார்கள். அல்லது கோட்பாடுகளை இலக்கியத்துடன் பொருத்திப் பார்க்கின்றார்கள். இது முற்றிலும் அபாயகரமானதும் அபத்தமானதும்கூட. எல்லா மொழிகளிலும் அவற்றுக்கான தனித்துவமான அம்சங்கள் காணப்படுகின்றன. மொழி என்பது கட்டமிடப்பட்ட அல்லது நிர்ணயகரமான ஒன்றல்ல. மொழியை வெறும் தட்டையான விதத்தில் அணுகமுடியாது. அது எப்போதும் இயக்கமுடைய ஒன்று. பொதுவாக மொழிவழியான அடையாளப்படுத்தப்படுகின்ற சமூகங்கள் தமக்கான செவ்வியல் மரபைக்கொண்டதாகத்தானிருக்கும். ஆனாலும் காலத்தின் இயங்குநிலைக்கு ஏற்ப அவை மாற்றங்களை உள்வாங்கக்கூடிய நெகிழ்ச்சியத்தன்மையையும் கொண்டிருக்கும். தமிழில் ஏலவே இருந்த கவிதை கூறும் மரபு நவீன கவிதை கூறல் மரபாக மாற்றம் அடைந்திருக்கின்றது. நவீன கவிதைகளுக்கும் பல்வேறு தளமாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இவை வெறும் பொருண்மை சார்ந்துமட்டுமல்ல. வடிவம் சார்ந்தும் ஏற்பட்டிருக்கின்றன. மரபிலக்கிய வடிவங்களுக்குள்ளேயே வடிவமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ் செய்யுள் மரபே காலத்துக்கு காலம் மீறல்களைச் செய்துகொண்டுதான் வந்திருக்கின்றது. ஒரே வகையான சொல்லல் முறையையோ வடிவ முறையையோ கொண்டிருக்கவில்லை. வெண்பா, விருத்தம் என காலத்துக்கு காலம் ஏற்றபட்ட வடிவமாற்றங்கள் ஒன்றின் போதாமையில் இருந்து மற்றது தோற்றம் பெற்றது என்பதற்கான சான்றுகள்தான். இந்த வழியில்தான் நவீன கவிதைகளிலும் தளமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நவீன கவிதை நிலைபெறத்தொடங்கியதிலிருந்து காலத்துக்குக்காலம் வடிவப்பரிசோதனைகளுக்குள்ளும் வடிவமாற்றங்களுக்குள்ளும் உள்ளாகிவந்திருக்கின்றது. அதன் வளர்ச்சிப்போக்கை அவதானிக்கின்றபோது இதைப்புரிந்துகொள்ள முடியும்.

லலிதகோபனின் முதலாவது கவிதைத் தொகுதி “காலாறப்போனவள்” தாயதி வெளியீடாக வந்திருக்கின்றது. லலிதகோபனின் கவிதைகள் நவீன கவிதையில் ஏற்பட்டிருக்கின்ற தளமாற்றங்களுகளின் வழி இயங்குகின்றன. நிர்ணயகரமான கவிதை சொல்லும் முறையைப் புறக்கணித்து புதிய வழிகளில் செல்கின்றன. ஏற்கனவே இருந்த போக்குகளை உள்வாங்கிக்கொண்டும் புதிய வழிகளை உருவாக்கிக்கொள்ளும் யுத்தியை லலிதகோபன் பயன்படுத்துகின்றார். பல கவிதைகளில் வடிவ உடைப்பு நிகழ்ந்திருக்கின்றது. இந்த வடிவ உடைப்புக்கள் ஏலவே கவிதைகளில் ஏற்பட்டிருக்கின்ற உடைப்புக்களின் வழி நிகழ்ந்தவைதான் எனினும் புதிதுபுனைவதான உத்தியை அவை கொண்டிருக்கின்றன. அவரின் கவிதைகள் ஒற்றைத்தனமான புரிதலுக்குரியவை அல்ல. பிரதியின் பன்முகத்தன்மையான நிகழ்த்துதலை ஏற்படுத்தவல்லன.

கதை கூறுவதைப் போலவும் காட்சிச் சித்தரிப்புக்களாயும் உள்முகத்தனமான வாசிப்புக்குரியவையாகவும் அவை காணப்படுகின்றன. லலிதகோபனின் கவிதைகளில் உட்படிந்துகிடக்கின்ற மந்திரத் தருணங்களும் மாயங்களும் சராசரியான புரிதல்களுக்கு உரியவையல்ல. அவை இன்னொரு தளத்துக்கு உரியவை. கவிஞனாக அவர் தந்திருக்கின்றவை வெறுமனே கருத்துக்களையல்ல. காட்சிகளை திரித்துத்திரித்து சொற்களினால் அவர் எல்லாவற்றையும் வரைந்து செல்கின்றார். பல இடங்களில் சொற்கள் குழந்தைகளின் லாவகமான கிறுக்கல்கள் போல இயல்பாக அமைந்துவிடுகின்றன. பல இடங்களில் ஒரு ஞானியின் புதிர் அவிழாச் சொற்களால் கவிதைகள் நிரம்புகின்றன. லலிதகோபனின் கவிதைகளின் பலமே அவை கட்டடமைக்கின்ற புறக்காட்சிச் சித்திரிப்புக்கள்தான். ஆனால் அவை புறத்தே தோன்றும் காட்சிகள் என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ளலை நிகழ்த்தவில்லை. அவற்றை உள்ளிழையாகத் தொடர்ந்து செல்லும் ஒருமைப்பட்ட அல்லது ஒருமையைக் குலைக்கின்ற சித்திரிப்புக்கள். அவை வெறும் காட்சிகளல்ல என்ற சித்திரத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும். அநேக கவிதைகள் அவர் தான் வாழுகின்ற நடைமுறை உலகை வெறும் சம்பவங்கள் நிகழ்வுகளின் கோர்வையாகக் காணாது அவற்றினுள்ளே நிகழ்கின்ற இரசாயன மாற்றங்களை நோக்கிச் செல்பவையாகக் காணப்படுகின்றன. சமூகம் கட்டமைத்து வைத்திருக்கின்ற பலவற்றையும் இன்னொரு விதமாக காட்சிப்படுத்துபவை. கவிதைகளைப் படிக்கின்றபோது இந்த மறுவளமான அணுகுமுறை கவிதையில் தேவையா என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. உள்ளதை உள்ளதாக சொல்லவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? உள்ளதை உள்ளதாக சொல்வது கவிதையின் வேலையல்ல. கவிதை இருப்பதில் இல்லாததை புனைவதாகவும் இல்லாததில் இருப்பதைப் புனைவதாகவும் அமைகின்றபோதுதான் புதுமையும் அர்த்தச் செறிவும் நிரம்பியதாக இருக்க முடியும். நவீன கவிதைகளில் மட்டுமல்ல எமது மரவு இலக்கியங்களிலும் இந்தப் புனைவு உத்திதான் அதிகமும் காணப்படுகின்றது. அதுதான் அவற்றை ஒற்றைப் புரிதலுக்குள்ளும் காலவரண்முறைகளுக்குள் சிக்கவைக்காது பரந்த தன்மையிலான புரிதலை,வாசிப்பை ஏற்படுத்திவிடுகின்றது. கவிதையைப் புரிதல் என்பது வெறும் நேர்கோட்டுமுறையிலமைந்த பொருள்கொள்ளலல்ல. கவிதையோடு இயைந்தும் விலகியும் பயணிப்பது. இந்தப் பயணிப்பை லலிதகோபனின் கவிதைகள் தந்துவிடுகின்றன.

லலிதகோபன் காட்சிகளின் வழி முரண்நிலைலைகளைத் தோற்றுவித்துக்கொண்டே கவிதைகளில் சாகசத்தை நிகழ்த்துகின்றார். சிறிய நிகழ்வுகளுக்குள் கூட ஒரு பெருங்காவியத்தைப் புனைந்துவிடுகின்ற நுட்பமான மொழிதல் அவரின் உடையது. அவரின் “புத்தனும் காமனும்” என்ற கவிதை நுண்ணியதான வெளிப்பாட்டு முறையுடன் கூடியது. நீரில் விழுந்து கரைகின்ற சவர்க்காரத்தின் மூலமாகப் ஒரு தரிசனவெளியை அவர் புனைந்துவிடுகின்றார். சவர்க்காரத்தின் கரைதலின் மூலம் இருத்தலையும் இன்மையையும் ஒருங்குசேர நிகழ்த்துகின்றார். மோகம் கனக்கும் சலனத்தையும் ஞானத்தின் உறைநிலையையும் கவிதை கொண்டுதருகின்றபோது, வாழ்க்கை என்பது இவை இரண்டுமா? இவற்றில் ஏதாவது ஒன்றா என்ற பிரிநிலைத்தன்மையை ஏற்படுத்தி விடுகின்றது.

”நீருள் இருக்கும்

சவர்க்காரத்தின் கிறக்கம்

முதல் புணர்வின் போதான

உச்சத்தின் தேடல்.

கரைதலை அனுபவிக்கும்

அதன் தியானநிலை

புத்தனின் படிமம்.

சவர்க்காரத்திற்கு மட்டுமே

சாத்தியமாகிறது

புத்தனாயிருத்தலும்

காமனாயிருத்தலும்

சமகாலத்தில்”

 காமத்தையும் தியானத்தையும் சமமான ஞானநிலையாக கவிஞர் கொண்டுவருகின்ற இந்த முரணிலைதான் இந்தக் கவிதையின் முக்கியமான அம்சம். இத்தகைய பார்வை அவரின் பல கவிதைகளிலும் காணப்படுகின்றன.

கவிதை ஒரு வகையில் கொந்தளிக்கின்ற மனத்தின் குரல் என்றே சொல்லலாம். அருவமாய் ஊர்ந்து செல்லும் காற்றைப் போல அதை பல இடங்களில் உணரமுடிகின்றது. லலிதகோபனின் கவிதைகளில் பெரும்பாலானவை இந்த வகைக்குரியனவே. அதிகமும் அவரது கவிதைகள் ஆழ்ந்த வாசிப்பைக் கோரிநிற்பவை. ஒரு வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாத கவிதைகளே இந்தத் தொகுதிக் கவிதைகளில் அதிகமும் காணப்படுகின்றன. பல கவிதைகளில் பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கின்றார். நவீன கவிதைகள் தரக்கூடியதான பன்முகத்தளத்திலான வடிவச் சோதனைகளை நிகழ்த்தியிருக்கின்றார். பலருடைய கவிதையைப் போல ஒரு அச்சில் வார்க்கப்பட்ட வெவ்வேறு நிறங்களிலான உருவங்களைப் போல அவரது கவிதைகள் இல்லை. ஒரே வகையான பொருள்கோடலுக்குரிய கவிதைகளிலும் அவற்றின் இயங்குநிலை அவரது கவிதைகளை புதிய தளமாற்றங்களுக்குட் உட்படுத்துகின்றது. தமிழில் நவீன கவிதைகள் மீதான வடிவப் பரிசோதனைகள் தொடர்ந்து வருகின்றவைதான். ஆயினும் ஒன்றை அழித்து இன்னொன்றாக இத்தகைய முயற்சிகள் இருந்ததில்லை. அது சாத்தியமும் இல்லை. ஏனெனில் கவிதை மற்றைய இலக்கியப் பிரதிகளோடு ஒப்பிடும் போதும் தனக்கான தனித்துவமான இயல்புகளை கொண்டிருக்கின்றது. மற்றைய இலக்கியப் பிரதிகள் கவிதைகளின் இயல்புகளைத் தம்முள் உள்வாங்கக்கூடியவை. கவிதைகளின் சாயலைப்பெறக்கூடியவை. ஆனால் கவிதை அவ்வாறில்லை. அதனால்த்தான் பிற இலக்கிய வடிவங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகளை விடவும் கவிதைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகள் அதிகமாக இருக்கின்றன. அவை ஒரு போக்கையும் உருவாக்கக்கூடியனவாக உள்ளன.

வடிவங்களைக் கடந்து செல்வது என்பது கவிதைகளின் பொதுவான இயங்குதன்மை. கவிஞர்கள் தமக்குள்ளேயே மீறல்களை நிகழ்த்துகின்றார்கள். தமது கவிதை வடிவங்களை தாமே கடந்துகொண்டிருக்கின்றார்கள். லலிதகோபனின் கவிதைகளில் அவர் தன் வடிவங்களைத் தானே கடந்துகொண்டிருக்கின்றார். “மூன்றுபிரதிகள், பல்தேர்வு வினாத்தாள், அச்சச்சோ” போன்ற கவிதைகள் வடிவமீறல்களுக்கு உதாரணமாகக் கொள்ளக்கூடியவை. இந்தக் கவிதைகள் கொண்டுள்ள பொருண்மையை விடவும் அவற்றைக் கூறுகின்ற முறைமை கவிதை மீதான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. தேர்ந்த கவிதை சொல்லிகள் மிகச் சாதாண விடயங்களையும் பெரும் அனுபவமாக மாற்றிவிடுகின்றார்கள். லலிதகோபனிடம் கவிதையைப் புதிவிதமான முறைகளில் வெளிப்படுத்துவதற்கான யுத்திகள் காணப்படுகின்றன. எனினும் இவற்றை மட்டுமே கவிதையின் இயங்குநிலையாக கருதிவிட முடியாது. லலிதகோபனின் கவிதைகளில் அதித சொற்சேர்க்கைத்தனம் இல்லை. அவர் மொழியை பிரக்ஞைபுர்வமாகப் பயன்படுத்துகின்றார். கடந்துசெல்லும் வாழ்க்கையில் தான் தரித்துச் சென்ற எல்லாவற்றையும் அல்லது எல்லா இடங்களையும் கவிதைகளில் கொண்டு வருகின்றார். மௌனமாகக் கரைந்து ஒளியேற்றுகின்ற விளக்கைப் போல அவரது கவிதைகள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. ”கால்களின் கவிதை“ இவ்வகையில் குறிப்பிடத்தக்க கவிதை.

”மணலுக்குள் மூழ்குவதும்

அலைகளிடையே மீள்வதுவும்

அந்த ஒற்றைக் காற்சுவடே.

தூரத்தே கழற்றி வைக்கப்பட்ட

பாதணிகள்தான் பாவமான பிறவிகள்.

ஒன்றைத் தொலைத்தும்

இன்னொன்றுக்கான

பிரார்த்தனையுமாய் நகரும் கணங்கள்.

கால்களுக்கென்ன இன்னும் தூரமாய்

யாரோடோ விளையாடியபடியும் ஓடியபடியும்

உன்னை ஒரு விளையாட்டாயும்

என்னை ஓர் கடலாகவும்

புனைந்த கால்களின் கவிதையை

இவ்விதம்தான் எடுத்துரைப்பேன்”

 கவிதை என்னத்தைப் பேசுகின்றது என்பது அவரவர்களின் அனுபவங்களின் வழி அணுகப்படவேண்டியது. கால்களின் கவிதை கால்களின் கவிதையாக மட்டுமல்ல என்பதுதான் இங்கு நினைவுறுத்தவேண்டியது. கவிதையில் லலிதகோபன் கொண்டுவரும் சித்திரம் மனுஸ்யபுத்திரன் தன் கவிதைகளில் கொண்டுவருகின்ற சித்திரத்தைப் போன்று காட்சிகளின் தளமாக விரிகின்றது. ஆயினும் கவிதையின் செறிவு வெறும் காட்சிநிலைக்குரியதாக அன்றி கருத்துநிலைச் செறிவையும் கவிதைக்கு ஏற்படுத்திவிடுகின்றது. இந்தத் தன்மை ”பறவை தேர்ந்ததிசை, இரவுக்குள் நுழைதல்,தொன்மை மிகு துயரங்கள்” போன்ற கவிதைகளிலும் காணப்படுகின்றன.

 ஈழத்து நவீன கவிதைகள் புதிய வழியில் புதிய திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. லலிதகோபனின் காலாறப்போனவள் கவிதைத் தொகுதி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கன்றது. வடிவநிலையில் மட்டும் கவனம் கொள்ளாது கவிதையின் பொருண்மை சார்ந்தும் நுண்ணிதான வெளிப்பாடுகளை இத்தொகுதி கொண்டுள்ளது. கவனம் கொள்ளத் தக்க பிரதியாக இத்தொகுதி இருக்கின்றது.

00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்