சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

யேசுராசாவுக்கு ஓர் எதிர்வினை

11 ஜூலை, 2011


சித்தாந்தன்

‘கலைமுகம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் ஐம்பத்தோராவது இதழ் வெளிவந்திருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்புடனும் கனதியான படைப்புக்களுடனும் இந்த இதழ் வெளிவந்திருக்கிறது. யாழ்ப்பாணம் மிகவும் நெருக்கடி மிக்கதாக இருந்த காலத்திலும் தொடர்ச்சியாக வெளிவந்து கலை இலக்கியச்செயற்பாட்டுக்குக் கலைமுகம் பங்களித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைமுகத்தின் கடந்த இதழ் ஐம்பதாவது சிறப்பிதழாக வெளிவந்திருந்தது. அவ்விதழில் அலறியின் கவிதைகளை முன்வைத்து ‘மாலினோஸ்க்னா’ என்பவர் எழுதிய விமர்சனத்துக்கு எதிர்வினையாக பயணி (யேசுராசா) எழுதிய கடிதம் ஐம்பத்தோராவது இதழில் பிரசுரமாகியிருக்கின்றது. அக்கடிதம் தொடர்பாக சில கருத்துக்களை முன்வைப்பதே இக் குறிப்பின் நோக்கமாகும்.

பயணி, கடிதத்தில் முன்வைத்துள்ள கருத்துக்களில் ஒன்று “ வாசிப்பு சந்தோசத்தையும் நிறைவையுந்தான் தர வேண்டும்” என்பதாகும். வாசிப்பு சந்தோசத்தையும் நிறைவையுந்தான் தர வேண்டும் எனப் பயணி எந்த அடிப்படையில் அழுத்திக்கூறுகின்றார் என்பதுதான் விளங்கவில்லை. ஒரு படைப்பு அனுபவத்தொற்றுதலை ஏற்படுத்த முடியுமே தவிர சந்தோசத்தை கட்டாயம் தரத்தான் வேண்டும் என்பது எந்தவகையில் பொருத்தமாக அமையமுடியும். அனுபவத் தொற்றலால் நிகழ்வது சந்தோசமாகவோ துக்கமாகவோ எதுவாகவும் அமையலாம். ஆகவே படைப்பின் மூலம் பெறப்படுவது அனுபவம் என்ற பொதுமைதான் அதற்குப் பொருத்தமாக அமையும். அதைவிடுத்து சந்தோசத்தை மட்டுந்தான் தரவேண்டும் என அழுத்திக் கூறுவது யேசுராசா போன்ற பரந்த வாசிப்பு அனுவமுடையவர்களுக்குப் பொருத்தமாக அமையாது என்பதே என் தாழ்மையான கருத்தாகும்.

இன்னுமொரு விடயம் “படைப்பாளியின் அனுபவத்தை வாசிப்பில் பெறுவதே முதன்மையானது. அந்த அனுபவ வெளிப்பாடு வேறு தளங்களுக்கும் வாசகரைப் பயணிக்க வைக்கும் சாத்தியப்பாடுகளும் உண்டு” எனக்குறிப்பிடுகின்றார். ஒரு படைப்பாளியின் அனுபவத்தைத்தான் வாசனும் வாசிப்பில் பெறுவதே முதன்மையானது என்பது ஏற்புடையதல்ல. படைப்பாளி; கருதியதைவிடவும் ஒரு வாசகன் மேலான அனுபவத்தைப் பெறும் சாத்தியங்கள் நிறையவும் இருக்கின்றன. யேசுராசாவுடன் நானும் நண்பர் கேதீசும் ஒரு முறை உரையாடும் போது மேற்படி கருத்தை ஆணித்தரமாக அவர் வலியுறுத்தினார். அப்போது கேதீஸின் ‘கெல்மரும் நானும்+மட்டைத்தேளும் நோறாவும் = ஒன்றுமேயில்லை’ என்ற கதை கலைமுகத்தில் வெளிவந்திருந்தது. அது குறித்து யேசுராசா சொன்னபோது அக்கதை தனக்கு விளங்கவில்லை என்றார். அதற்கான விளக்கங்களை கேதீஸிடமும் என்னிடமும் விளங்கப்படுத்துமாறு கேட்டார். நான் அந்தக் கதையின் வாசிப்பு அனுபவத்தையும் அதன் வாசிப்பு பற்றிய என் பார்வைக்கோணத்தையும் கூறினேன். அந்த இடத்தில் கேதீஸ் கூறியதும் நான் கூறியதும் மாறுபாடாக இருந்தமையால் “வாசிப்பில் படைப்பாளி கருதியதைத்தான் வாசகனும் பெற முடியும்” என அழுத்த முற்பட்டார். ஆனால் நான் ஒரு பிரதி ஒற்றைத் தன்மையான வாசிப்பை மட்டுமல்லாது பல்தன்மையான அர்த்தப் பரிமாணத்தையும் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டேன். அதனை யேசுராசா மறுத்திருந்தார். அப்போது படைப்பாளியின் அனுபவத்தைத்தான் வாசகனும் பெற வேண்டும் என ஆணித்தரமாக வாதிட்ட அவர், இப்போது “அந்த அனுபவ வெளிப்பாடு வேறு தளங்களுக்கும் வாசகரைப் பயணிக்க வைக்கும் சாத்தியப்பாடுகளும் உண்டு” எனக் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கின்றது.

“பகுதியாக விளங்கினாலும் முழுமையாகப் பார்க்கையில் மயக்கம் தருமொன்றை ஏற்க வேண்டுமா?” என்ற கேள்வியைத் தன்கடிதத்தில் எழுப்புகின்றார். புரிதல் என்பதே பகுதி பகுதியாக புரிதலிலிருந்துதான் தொடங்குகின்றது. அடுத்தது முழுமையாகப் புரிதல் என்பது சாத்தியமான ஒன்றா? ஒரு மனிதனை விளங்கிக் கொள்ளுதல் என்பதிலிருந்து உலகத்தை விளங்கிக் கொள்வது வரை பகுதி பகுதியாக நிகழ்வதுதான். இவ்வாறுதான் ஒரு படைப்புப் பற்றிய புரிதலும் இருக்க முடியும் என நான் நினைக்கின்றேன். பகுதிபகுதியான புரிதலிலிருந்து இன்னும் புரிதலை அகலமாக்க முடியுமே தவிர வாசித்த உடனேயே முழுமையும் புரிந்துவிடும் எனக் கருதி விட முடியாது. ஒரு படைப்பை ஏற்பதா இல்லையா? என்பது பயணியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அனுபவ நிலை சார்ந்தது. அதற்காக “ஏற்க வேண்டுமா?” என இதனை பொதுமைப்படுத்திக் கேள்வி எழுப்புவதிலுள்ள தர்க்கம் என்னவாக இருக்கும்.

“நாளேடுகளில் வரும் குறிப்பிட்ட விடயத்தை மையப்படுத்திய வௌ;வேறு செய்தி நறுக்குகளை ஒன்றின் பின் ஒன்றாக இணைத்து, நூற்றுக்கணக்கான “படைப்புக்களை” யாரும் தயாரிக்க முடியும்; இவற்றுக்குத் அனுபவத்தாக்கம் தேவையில்லைத்தான்! ஆனால் இவையெல்லாவற்றுக்கும் “கலை மதிப்பை” வழங்க வேண்டுமா?” என தன் கருத்தைப் பதிவு செய்கிறார் பயணி. முதலில் அவர் கலை மதிப்பு என்பதற்கான அளவுகோல் யாது? அதை அளவிடத் தகுதியானவர்கள் யாவர். அளவிடுவதற்கு என்னவென்ன தகுதிகள் வேண்டும் என்பவற்றையும் தருதல் வேண்டும். பயணியின் மேற்படிக் கருத்து இராகவனின் சிறுகதைகளை முன்வைத்தே குறிப்பிடப்படுகின்றது என்பது வெளிப்படை. இராகவனின் கதைகளின் ஊடாக யாரேனும் அனுபவத்தைப் பெறுகிறார்களா? இல்லையா? அவர் கதைகள் அனுபவத் தொற்றுதலை ஏற்படுத்துகின்றனவா என்பதை ஆராய்ந்த பின்தான் தகுதியுள்ளதா? தகுதியற்றதா? ஏன வல்லுநர்கள் சொல்ல வேண்டும். என்னுடைய வாசிப்பில் இராகவனின் கதைகள் புதியதான வாசிப்புப் பிரதிகள் அவற்றிற்கான வாசிப்பும் புதியவகைமை ஒன்றைக் கோருகின்றது என்பதாகும். இதற்கு வாசகனும் தன் எல்லைகளைத் தாண்டிவர வேண்டியிருக்கின்றது. கலைமுகத்தின் இந்த இதழில் குப்பிழான் ஐ. சண்முகன் எழுதிய இராகவனின் கதைககள் பற்றிய அனுபவப்பகிர்வு முக்கியமானது. அது சண்முகனின் வாசிப்பு அனுபவத்தையும் புதியமுறையான வாசிப்பின் அணுகுமுறையையும் காட்டி நிற்கின்றது. மரபார்ந்த கதை கூறும் மரபுதான் இலக்கியத்தில் தொடர்ச்சியாகப் பேணப்பட வேண்டும் என்னும் சட்டம் இருப்பதாக நான் கருதவில்லை.

அலறியின் கவிதைகளில் கவனத்தை கோரும் கவிதையாக மாலினோஸ்க்னா ‘இனந்தெரியாத சடலங்கள்’ என்ற கவிதையைக் குறிப்பிடுகின்றார். அதனை மறுத்துக் கருத்துக் கூறும் பயணி ( அவரின் கருத்துக் கூறும் சுதந்திரத்தில் நான் தலையிடவில்லை) அதற்குக் கூறும் காரணந்தான் ஏற்புடையதாக இல்லை.

“யாருடைய சடலங்கள் கடலில் மிதக்கிறதென்று
சடலங்களுக்குத் தெரியாதது போலவே
கடலில் மிதக்கும் சடலங்கள் யாருடையதென்று
கடலுக்கும் தெரியாது”

இதுதான் அலறியின் கவிதை.
இது பற்றிப் பயணி “மிதக்கிறதென்று- மிதக்கின்றனவென்று, யாருடையதென்று- யாருடையனவென்று வர வேண்டும். ஒருமை- பன்மைத் தவறுகளுடனுள்ள இக்கவிதையை “கவனத்தைக் கோரும் கவிதைகளில் ஒன்றாக” கட்டுரையாளர் மதிப்பிடுவது வேடிக்கையானது!” எனக் குறிப்பிடுகின்றார். ஒரு படைப்பில் ஒருமை பன்மைத் தவறுகள், எழுத்துப் பிழைகள் இருக்குமாக இருந்தால் அந்தப் படைப்பு மோசமானது என ஒதுக்கி விடமுடியுமா? இவற்றை வைத்துத்தான் ஒரு படைப்பை மதிப்பிடுவதாக இருந்தால் நாங்கள் பலரின் நூல்களை நிராகரிக்க வேண்டியிருக்கும். இத்தகைய தவறுகள் வாசிப்புக்கு இடையூறாக அமையும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு படைப்பை நிராகரிப்பதற்கு இத்தகைய காரணங்கள் ஏற்புடையன. என்பதில் எனக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.
“…..இத்தகைய கவிதைகள் எழுதும் கவிஞர் சிலரிடம் கேட்கும் வேளைகளில், விளக்க முடியாத நிலையில் அவர்களிருப்பதையும் காணநேர்கிறது” என இன்னொரு குற்றச்சாட்டை பயணி குறிப்பிடுகின்றார். பூடகமாக எழுதப்படும் கவிதைகள் தொடர்பாகவே பயணியின் இந்தக் கூற்றும் குற்றச்சாட்டும் இருக்கின்றது. கவிதையின் பூடகத்தன்மை பற்றி தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ கவிதைத் தொகுப்புக்கு( காலம்- இதழ் 35 யூலை- செப்டம்பர்) நான் எழுதிய விமர்சனத்தில் சில கருத்துக்களைக் குறிப்பிட்டிருக்கின்றேன். என்னிடமும் இத்தகைய விளக்கங்களை யேசுராசா கேட்டிருக்கின்றார். அந்தச் சந்தர்ப்பங்களில் அவருக்கு விளக்கமளிப்பதை நான் விரும்புவதில்லை. அவர் ஏற்கனவே முன்முடிவுகளுடன் இருப்பவர். நாங்கள் அதை விளக்க முனையும்போது அப்படியா? அப்படிக் கொள்ளலாமா? திரும்ப வாசித்துவிட்டுச் சொல்கிறேன் என்பார். பின்னர் அது பற்றி கதைக்கமாட்டார். இது பலருக்கும் ஏற்பட்டிருக்கிற அனுபவம். மொழி காலத்துக் காலம் வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்று. ஆகவே மொழியில் புதிய சொற்கள் தோன்றுவது ஒன்றும் தவறானதாக இருக்கும் என நான் கருதவில்லை. படைப்பாளி சொற்களை உருவாக்குகின்றான் புதிய அர்த்தங்களைக் கண்டடைகின்றான். இது ஒன்றும் தவறானதல்ல. வாசகனும் தன்னை அதற்குத் தயார்ப்படுத்த வேண்டிய தேவையுமிருக்கின்றது.

00

நினைவையுறுத்தும் ஒற்றைச்சொல்

09 ஜூலை, 2011



சித்தாந்தன்

விலக்கப்பட்டவனின் இரவு
முட்களில் வீழ்ந்துகிடக்கிறது
அவன்
தனது நூறாவது கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்

பறவைகளின் தாகம்
அதில் வற்றிப்போயிருக்கிறது
பிளவுண்ட ஆறுகளின் சுனைகள்
அடைபட்டிருக்கின்றன

அவன் எழுதிக்கொண்டேயிருக்கிறான்
பகலின் நிர்வானம்
கவிதையில் மிதக்கின்றது
ஆயிரக்கணக்கான பிணங்களை
இழுத்துக் கொண்டு
ஒரு காலம் ஊர்ந்து கடக்கிறது

அவனின் நூறாவது கவிதை
மௌனங்களைத் தின்று
ஒரு சொல்லடுக்காய் நீள்கின்றது

கருணைகூர மறந்த நாட்களை
இன்னும் நினைவுகளில் தேக்கிக்கொண்டு
ஒரு சருகைப் போல
வெளி முழுதும் படர்கிறது
கவிதையிலிருந்து தவறிய ஒற்றைச்சொல்

00

நன்றி-கலைமுகம்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்