
................................................................
ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது
பூர்வத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்களைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை
நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது
நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது
ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்
நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது
வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது
நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)