சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

அவசரம்

29 செப்டம்பர், 2011அவசரக்காரர்களின் குறும்படம்

சித்தாந்தன்

ஈழத்துத் திரைப்படம் என்னும் தனியான அடையாளமிடல் இன்னும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றது. ஈழத்துப்படங்கள் என்று எடுக்கப்படுகின்ற படங்கள் பலவும் தென்னிந்திய தமிழ் சினமாவின் தாக்கத்துடனேயே வெளிவருகின்றன. அந்தளவிற்கு தென்னிந்தியப்படங்கள் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன. என்ற போதும் அவ்வப்போது ஈழத்து தமிழ் சினிமாவுக்கான எத்தன முயற்சிகள் பலவும் நடந்து வந்திருக்கின்றன. விடுதலைப்புலிகள் தமது நிதர்சனம் அமைப்பின் மூலமாக நல்ல பல நீளப்படங்களையும் குறும்படங்களையும் உருவாக்கியிருந்தார்கள். எனினும் அவற்றில் பலவும் அவர்களது தேவைகளின் பொருட்டாக எடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தைப் பொறுத்த வரையில் வெகுசன ஊடகங்கள் பலவும் இந்திய தமிழ் சினமாவின் வணிக நிலைப்பட்ட அம்சங்களை உள்வாங்குவதிலேயே தீவிரம் காட்டுகின்றன. வானொலிகளாயினும் சரி தொலைக்காட்சிகளாயினும் சரி இந்த வணிக மாயைக்குள் விழுந்தே கிடக்கின்றன.. செய்திகள் வாசிப்பதிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்புகள் வரை இந்த நிலைதான் தொடருகின்றது. தமக்கான தனித்தன்மையான அடையாளத்தை நிறுவியவர்கள் என்று சிலரைத்தான் குறிப்பிட முடியும். ஈழத்து தமிழ்ப்பாடல்கள் என்று தனியார் வானொலிகளில் போட்டிக்கு ஒலிபரப்பப்படும் பாடல்கள் எந்தளவிற்கு ஈழத்துக்கான அடையாளத்தைக் கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குரியதே. இந்த தனியார் வானொலிகள் பாடகர்களை இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு மறைமுகமாக ஈழத்துக்கான பாடல், இசைமரபுகளைப் புறந்தள்ளியவாறிருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். தனித்தன்மையோடு வெளிவரும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவற்றை பழைய மரபுப்பாடல்கள் என புறமொதுக்கும் நிலையும் காணப்படுகின்றது.


இத்தகைய பின்னணியில் தற்போதைய சூழ்நிலையில் நல்ல முயற்சிகள் சில முனைப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் 3யு அழஎநை என்ற அமைப்பு குறும்படப் போட்டி ஒன்றினை நடாத்தி பரிசில்களை வழங்கியிருந்தது. இதுவொரு பாராட்டத்தக்க முயற்சியாகும். அண்மைக்காலமாக இளைஞர்களிடம் குறும்படங்கள் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டுவருகின்றது. சிலர் நல்ல படங்கள் சிலதைத் தயாரித்திருக்கின்றனர்.
இன்று (29.09.2011) ‘அவசரம்’ என்ற குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இக்குறும்;பட அறிமுக விழா மாலை 4.30 மணிக்கு யாழ் கொசி உணவக மண்டபத்தில் நடை பெற்றது. இலக்கிய ஆர்வலர்களும் சினமா ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் சிலரின் முயற்சியினாலும் ஆர்வத்தினாலும் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். பல்வகையான குறைபாடுகளை இக் குறும்படம் கொண்டிருந்தாலும் அவர்களின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. காதலை முதன்மையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டாலும் இக்குறும்படம் சொல்லும் செய்தி கவனிக்கத்தக்கது.

வழமையான தமிழ்சினமாவினைப் போலவே, ஒரு இளைஞன் பெண்ணொருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவள்தான் தன் வாழ்வு என அலைகின்றான். தன் காதலை வெளிப்படுத்துகின்றான். அவள் மௌனமாகப் போய்விடுகின்றாள். பின்னர் அவளைக் கோயில் ஒன்றில் சந்தித்து தன் காதலை ஏற்குமாறு மீண்டும் கேட்கின்றான். அவள் அவனின் காதலை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக பூ வினைக் கொடுக்கின்றாள். பின்னர் காதல் தொடர்கிறது. இடையில் ஒரு பாடலும் வருகின்றது. நல்ல வேளை தென்னிந்திய தமிழ் சினமாவைப் போல காதலனும் காதலியும் ஆட ஒரு கூட்டமும் சேர்ந்து ஆடவில்லை. மென்மையான பாடலாக அது இருக்கின்றது. பின்னர் ஒரு வில்லன் வருகின்றான். கதாநாயகனை எச்சரிப்பதோடு அவன் போய்விடுகின்றான. பிறகு காதலிக்கு லண்டன் மாப்பிள்ளையினை வீட்டார் பார்க்கின்றனர். இதனால் கதாநாயகியை நாயகன் வீட்டிலிருந்து கூட்டிவந்துவிடுகின்றான். நண்பர்கள் சேர்ந்து எங்கே தங்க வைப்பது என்று ஆராய்கின்றனர். கடைசியில் ஒரு நண்பன் தன் பாட்டியின் வீட்டினைப் பரிந்துரை செய்கின்றான். இதோடு ஒரு கட்டம் முடிந்து விடுகின்றது. அடுத்த கட்டத்தில் காதலி வீட்டில் குந்தியிருந்து அழுதபடியிருக்கின்றாள். கதாநாயகன் அவளை ஏசுகின்றான் அவளைத்திருமணம் செய்ததால் தன்னால் நண்பர்களுடன் சுத்த முடியவில்லை, தண்ணியடிக்க முடியவில்லை என்றும் விருப்பமில்லாவிட்டால் அவளை வீட்டைவிட்டு போகுமாறு கூறுகின்றான். புpன்னணியில் போத்தல்கள் உடைந்து நொருங்கும் சத்தம் கேட்கின்றது. படம் முடிகின்றது. இதுதான் அவசரம் குறும்படத்தின் கதை.

இக்குறும்படத்தை கஜதீபன் கதை திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கின்றார். அபிராமன் இசையமைத்திருக்கின்றார். சித்தார்த் கதாநாயகனாகவும் யாழினி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் அச்சுதன், சிவா, சௌஜி, கெனெத், செந்தியன் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
திரைக்கதையை பொறுத்தவரையில் பழகிப்போன கதைதான். ஏன்றாலும் முடிவில் சொல்லப்படும் செய்தி முகியமான ஒன்றாக இருக்கின்றது. காதலுக்கு அப்பால் அது குடும்ப வாழ்க்கை என்ற நிலைக்குவருகின்ற போது- அதிலும் இளம் வயதினர் அவசரத்தில் எடுக்கும் முடிவு எத்தகைய விளைவினை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சொல்லியிருக்கின்றார். முதற்படம் என்ற வகையில் பல குறைபாடுகளும் இடர்பாடுகளும் இருக்கின்ற போதும். இளைஞர்கள் இவ்வாறும் சிந்திக்கிறார்கள் என்ற வகையில் பாராட்டுக்குரியதாகப்படுகின்றது.

இசை அபிராமன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் சில தமிழ் சினமாப் படங்களின் பின்னணி இசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் பாடலின் இசையும் பின்னணி இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுவொரு குறைபாடாகவேபடுகின்றது. உரையாடல் மொழியும் பின்னணியில் கதைசொல்லப்படும் குரலும் சேர்க்கைத்தனமாக அமைந்திருக்கின்றன. ஒரு திரைப்படம் திரைமொழியையும் காட்சியமைவுகளையும் கொண்டமையும் போதே இயல்பானதாக அமையும் நிறைந்த உரையாடல்கள் சலிப்புத் தன்மையினையே ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் பரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்டசம் உரையாடல்களிலாவது கவனமெடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

காட்சிகள் சில தத்ருவமாகப் படமாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் நில அமைவுகளும் தெருக்களும் வயல்களும் சில காட்சிகளில் கஜதீபன் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றார்.

எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். அடுத்தடுத்து வரும் காட்சிகளுக்கிடையிலான இடைவெளி சரியான முறையில் பொருத்தப்படவில்லை. சில இடங்களில் துருத்திக் கொண்டு காட்சிகள் நிற்கின்றன.

அவசரம் குழுவினரே தங்களின் இத்தகைய குறைபாடுகளை ஏற்றுக் கொள்கின்றனர். இதனைத் தங்களின் கன்னி முயற்சி எனத் தெரிவிக்கின்றனர். தமது அடுத்தடுத்த முயற்சிகளில் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக அதன் இயக்குநர் கஜதீபன் அறிமுக நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார்.

இக்குழுவினரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கலாம் போலத் தோன்றுகின்றது.

2 comments:

Kiruthigan சொன்னது…

அருமையா விமர்சனம். தொடரட்டும் எம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தங்கள் பணிகள் :)

29 செப்டம்பர், 2011 அன்று PM 9:36
சித்தாந்தன் சொன்னது…

நன்றி கிருத்திகன்

1 அக்டோபர், 2011 அன்று AM 10:19

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்