
சிதறுண்ட காலக்கடிகாரம்
-தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு-
அமரர் தங்கம்மா சரவணை நினைவு வெளியீடு,
புலோலி தென்மேற்கு, புலோலி.
முதற்பதிப்பு – 23.08.2011
தொகுப்பாளர் – சித்தாந்தன்
சி.ரமேஷ்
மருதம் கேதீஸ்
பதிப்புரிமை – தி.ஜீவரட்ணம்
தொடர்புக்கு – sroobanjeeva@ymail.com
siththanthan@gmail.com
தொகுப்பில் பங்களித்துள்ள கவிஞர்கள் -ந.சத்தியபாலன், பெண்ணியா, எஸ்போஸ், றஷ்மி, அபார், தானா விஷ்ணு, சித்தாந்தன், பஹீமா ஜஹான், ஒட்டமாவடி அறபாத், வினோதினி,நவாஸ் சௌபி, மைதிலி,அஜந்தகுமார், மருதம் கேதீஸ், கருணாகரன், அலறி, துவாரகன், மலரா, ரகுமான் ஏ.ஜமீல், பா.அகிலன், தீபச்செல்வன், அனார், கனக ரமேஷ், யாத்திரிகன், கோகுலராகவன், மலர்ச்செல்வன், முல்லை முஸ்ரிபா, தபின்,ஆழியாள், ரிஷான் ஷெரிப்.
சில வார்த்தைகள்
வாழ்வும் வாழ்பனுபவங்களுமே இலக்கியப்படைப்புக்களின் மையமாக எப்போதும் இருந்துவருகின்றன. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையின் முக்கியமான காலங்களைக் கடந்து கையறுநிலையில் நிற்கின்ற இந்தக் காலகட்டத்தில், கடந்த காலங்களின் மீதான மீள் உரையாடல்களும் மீள் வாசிப்பும் தேவைப்படுகின்றன. தமிழ் பேசும் சமூகங்களின் துயர்படிந்த வாழ்கையை அச் சமூகங்களிலிருந்து வந்த படைப்பாளிகள் பலரும் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பல படைப்பாளிகளின் வெளிப்பாட்டு வடிவமாக கவிதையே இருக்கின்றது. கவிதைகள் பதிவு செய்த அளவுக்கு போர்க்கால வாழ்வை வேறு எந்த இலக்கியப்பிரதிகளும் வெளிடப்படுத்தவில்லை என்பது வெளிப்படை.
தமிழ் கவிதைகளின் தீவிரம் எண்பதுகளில் கூர்மையடைந்தது எனலாம். இனப்பிரச்சினையின் தாக்கம் இலக்கியப்படைப்புக்களிலும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே பின்வந்த காலகட்டத்துக் கவிதைகள் இருந்த போதிலும் கவிதையின் நவீன கூறுகளை அவை பெரிதும் உள்வாங்கியிருக்கின்றன எனலாம். புலப் பெயர்வுகள், இடப்பெயர்வுகள் என யுத்தத்தின் பல்வேறு அவலங்களும் இந்தத் தொடர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது.
இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவே இக்கவிதைத் தொகுப்பு வெளிவருகின்றது. இதில் பங்களித்துள்ள கவிஞர்கள் பலரும் தொண்ணூறுகளிலிருந்து அல்லது அதற்குப் பின்னரான காலப் பகுதியிலழருந்து எழுதி வருபவர்களாவர்.இத் தொகுதியிலுள்ள கவிதைகளில் அநேகமானவை யுத்தத்தின் வலியை, அது ஏற்படுத்தியிருக்கின்ற வடுக்களையே பேசுகின்றன. இன்னும் மனித மனங்களுக்குள் படர்ந்திருக்கும் மென்னுணர்வுகளின் தடங்களையும், கனவுகள், ஏக்கங்களையும் பேசுகின்றன. யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்திருக்கின்றது. மக்களை அலைவுறச் செய்திருக்கின்றது.கடந்த காலம் பற்றிய மீள் வாசிப்புக்கான எத்தன முயற்சியாகவே இத் தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மீள் வாசிப்பானது அனைத்து நிலைகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது விருப்பாகும். வலிகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் நிலையான சமாதான வாழ்வுக்கும் இத்தகைய மீள் வாசிப்பு உறுதுணையாக அமையுமென நம்புகின்றோம்.
இது ஒரு முழுமையான தொகுப்பல்ல என்பது வாசிக்கும் அனைவராலும் இனங்காணத்தக்கதே. பலருடைய கவிதைகள் தவறவிடப்பட்டிருக்கின்றன. தவறவிடப்பட்டவை தரமற்ற கவிதைகள் என்ற கணிப்பீட்டை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இத் தொகுப்பு அமரர் தங்கம்மா சரவணையின் நினைவாகவே அவரது குடும்பத்தினரால் வெளியிடப்படுகின்றது. கால அவகாசம் போதாமையும் வரையறுக்கப்பட்ட பக்கத்துக்குள்ளேயே செய்ய வேண்டி இருந்தமையுமே பல நல்ல கவிதைகள் தவிர்க்கப்படக் காரணமாக அமைந்து விட்டது என்பதனை வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றோம். ஆயினும் பறிதொரு சந்தர்ப்பம் வாய்க்கப் பெறும்போது இன்னும் பல கவிஞர்களின் காத்திரமான கவிதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாக இதனைக் கொண்டுவர முடியும். ஈழத்தின் நவீன தமிழ்க் கவிதையின் மொழிதலின் மாற்றங்களையும் வளர்ச்சி நிலையையும் இத் தொகுப்பு ஓரளவுக்கேனும் எடுத்துரைக்கும் என நம்புகின்றோம்.
இறந்தவர்களின் நினைவுகளுக்காக கல்வெட்டுக்கள் வெளியிடப்படும் எமது சமூகத்தில் அமரர் தங்கம்மா சரவணையின் குடும்பத்தினர் ஒரு கவிதைத் தொகுப்பை அவர் நினைவாக வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியதே. அமரரின் குடும்பத்தினருக்கும் குறிப்பாக நண்பர் தி.ஜீவரட்ணம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். மற்றும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கவிதைகளுக்காக அக்கவிஞர்களுக்கும். இத் தொகுப்பின் அட்டைப்படம் இணைய தளத்திலிருந்து பெறப்பட்டதாகும். அத்தளத்திற்கும், இதனை அச்சிட்ட அன்ரா அச்சகத்தினருக்கும் எமது நன்றிகள்.
இத்தொகுப்புப் பற்றிய அனைவரதும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
-தொகுப்பாளர்கள்
20.08.2011
1 comments:
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
17 செப்டம்பர், 2011 அன்று முற்பகல் 4:34www.cineikons.com
கருத்துரையிடுக