சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

அம்ருதா வரைந்த சிங்கங்களின் புனைவுருக்கள்

13 ஜூலை, 2010


சித்தாந்தன்

நீளமான இரவின் மையத்தில் தலை நீட்டிப்
படுத்திருக்கும் சிங்கங்களைத்
தன் பாலியப் பருவத்திலிருந்து
அம்ருதா வரைந்திருக்கிறாள்

அம்ருதா தன் சிங்கங்களிற்கு
குறிகளை வரைவதில்லை

முன்பனிக் காலத்தில் அவள் வரைந்த
எண்ணற்ற சிங்கங்களும்
புணர்ச்சியைக் கண்டு முகம் சுழிப்பவை

அவளின் நூறாவது சிங்கம்
குறியை வரையக் கேட்டு அடம்பிடித்தபோது
இருநூறாவது தடவை வரைவதற்கிடையில்
குறியை வரையும் நுட்பங்களைக்
கற்று முடிப்பதாகக் கூறினாள்

அம்ருதாவின் வனத்தில்
சிங்கங்களின் கர்ச்சனைகளில்லை
வனத்தின் புதிரும் அடர்வதில்லை

வனங்களைப் புறக்கணிக்கும் சிங்கங்கள்
அவளுக்கு நண்பர்களாயுள்ளன

தன் சூட்சும புத்தியால்
சிங்கங்களின் நகங்களை வெட்டிவிடுகிறாள்
பற்களை பிடுங்கிவிடுகிறாள்

அவள் வனங்களை விட்டு வெளியேறிய
சிங்கங்களின் இராணியாகத் தன்னைப்
பிரகடனப்படுத்தியபடியிருக்கிறாள்

விழிமுட்டும் தூக்கத்தை
அநேகமும் தூங்கியே கழிக்குமவள்
தான் சிங்கங்களை வரைந்த வரைவேட்டை
தலையணைக்கடியில் பத்திரப்படுத்தியிருக்கிறாள்

அம்ருதாவின்
மிருதுவான மூச்சொலியில் தம் பொழுதுகளைத்
தூங்கிக் கழிக்கின்றன சிங்கங்கள்

மண்சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறாய்

11 ஜூலை, 2010


சித்தாந்தன்

பிரதிபலிப்புக்களின் கூடமான கலைவெளியில்
இப்போது நீ
யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய்

சிறகுடைந்த தும்பியொன்றின்
அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய்
இன்னும் கேட்கின்றது

நீ மண்சிலைகளை
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில்
பிசுபிசுக்கும் இரத்தம்
எனது மண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சுகின்றேன்

சற்றும் அயராத உனதுடலில்
வழியும் வியர்வை
ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது

மங்கியுதிரும் பொழுதில்
நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது
பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது
ஆனாலும்
கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்

கால்களின் கீழ்
உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை
அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன்
செய்யத் தொடங்கியிருக்கின்றான்
யாரோ எவரினதோ பிரதிபலிப்பான
மண்சிலையை

பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம்

05 ஜூலை, 2010

சித்தாந்தன்

ஒளிக்குப் புறம்பாக
கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தை
சாத்திக் கொண்டிருக்கிறான்
இரவின் சூத்திரதாரி

மண்ணகழ்ந்து வெளியெடுத்த
பெருங்கோயிற் சிதைந்த சிற்பம்
அதன் மூலையில்
சிதிலங்களாகக் குவிக்கப்பட்டிருக்கிறது

முரண்கள் விருட்சங்களாய்
கிளை விரிக்கையில்
மண்டபச் சுவர்களில் மோதிக்
கலைகின்றன புறாக்கள்

மாமிசம் நாறும் வெளியில்
விக்கிரகப் புனைவு விதிகளைக்
கட்டவிழ்க்கிறான் சிற்பி

எல்லாச் சிலைகளிலும்
மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன

மந்திரங்களால் ஆக்கப்பட்ட
பெருங்கோயில்
புதையுண்ட காலச்சரிவில்
நிரைநிரையாக முளைக்கின்றன
புத்தம் புதிய விக்கிரகங்கள்

பாதி விழி மூடிய விக்கிரகங்களில்
சாவைச் சூடிய மகா வாக்கியங்கள்

எல்லாக் கதவுகளையும்
சாத்திவிடுங்கள்
புலன் மேய வந்திருக்கிறது
கற்களாலாய காலம்

பெருங்கோயில்
புதையுண்ட மணற்கரையில்
ஓயாப் பெருங்குரலில்
யாரோ கதறியழுகிறார்கள்

நிர்க்கதியாக்கப்பட்ட
கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்

நன்றி- மறுபாதி (சித்திரை-ஆனி,2010)

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்