சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

கவிஞர் ந.சத்தியபாலனுடன் ஒரு சந்திப்பு

23 ஆகஸ்ட், 2011

விமர்சனம் என்பது ஒரு படைப்புப் பற்றிய இன்னொரு படைப்பே

சந்திப்பு-தாமிரன்

கல்வியங்காட்டை வசிப்பிடமாகக் கொண்ட நடராஜா சத்தியபாலன் எண்பதுகளில் இருந்து கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். ஆங்கில ஆசிரியரான இவர் யுத்தகால வாழ்வு அனுபவங்களையும் வாழ்க்கை பற்றிய பல்வேறு தருணங்களையும் தன்னுடைய படைப்புக்களில் பிரதிபலிக்கின்றார். இவருடைய “இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்” கவிதைத் தொகுப்பு 2009 இல் வெளிவந்திருக்கிறது. சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்களை தொகுத்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.


இலக்கிய ஆர்வம் உங்களுக்கு ஏற்றபட ஏதுவாக எவை அமைந்தன?

நான் சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் உடையவனாக இருந்தேன். எங்கள் வீட்டிலும் அதனை ஊக்குவித்தார்கள். விளையாட்டுத்துறைசார்ந்த ஈடுபாடற்றவனாக நான் இருந்ததனால் எனது பெரும்பாலான பொழுதுகள் புத்தகங்கள் வாசிப்பதிலேயே கழிந்தன. பதினைந்து வயதிற்குப் பிறகு எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனை இனங்கண்டு ஊக்குவித்தவர்; எனது தமிழ் ஆசிரியர் திருமதி சண்முகராஜா. எனது எழுத்து நன்றாக இருக்கிறது என என்னைத் தூண்டியவர் அவர்தான். எனது முதலாவது சிறுகதை பி.எச்.அப்துல்ஹமீத் தொகுத்துவழங்கிய ஒலி மஞ்சரி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது.

உங்களுடைய படைப்புக்களைப் படிக்கின்றபோது மென்னுணர்வு சார்ந்ததான அனுபவத்தையே பெற முடிகிறது.அநேகமானோரும் இவ்வாறுதான் கூறுகிறார்கள் இதற்கான அடிப்படை எதுவென அறிந்து கொள்ளலாமா?

நீங்கள் கூறுவது சரி. நான் மென்னுணர்வு கொண்டவன். ஏனக்கு ஒரு வரி ஞாபகமிருக்கிறது. நான் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் இருக்கின்றபோது எழுதிய கவிதை ஒன்றில் “புப்போல மனமிருந்தால் பெரிய துன்பம்” என்று எழுதியிருந்தேன். இப்போதும் அதை எனது நண்பி ஒருவர் குறிப்பிட்டு கதைப்பதுண்டு. எந்த ஒரு சிறியவிடையத்தாலும் தாக்கத்திற்கு உள்ளாகும் இயல்பு என்னிடத்தில் இருக்கிறது. அதை குறை என்று சொல்வதா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடுகின்றதுபோல புறத்தில் நிகழும் சம்பவங்கள் என்னை அதிகம் தாக்குவதுண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் ஜெயமோகனின் ஏழாவது உலகம் படித்துவிட்டு நான்கைந்து நாட்கள் தூங்காமல் சிரமப்பட்டிருக்கிறேன். அப்படியான ஒரு இயல்பு எனக்குள் இருந்ததுதான் நீங்கள் குறிப்பிட்ட மெல்லியல்பிற்கு காரணம் என நினைக்கிறேன்.

பொதுவாக ஈழக்கவிதைகள் யுத்தகாலத்தின் பிரச்சனைகள் பற்றியே அதிகம் பேசின. தற்போது யுத்தம் முடிந்துவிட்ட சூழலில் இதன் பின்னரான கவிதைகள் எவ்வாறு அமையப்போகின்றன. பொதுவாக ஈழக்கவிதைகளின் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்.?

யுத்தகாலம், யுத்தத்தின் பாதிப்புக்கள் என்றவாறு கவிதைகள் போக தற்போதும் அதன் தொடர்ச்சியையே அவதானிக்க முடிகிறது. யுத்தம் முடிந்துவிட்டாலும் கூட அதன் பாதிப்புக்கள், யுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள் தருகின்ற தாக்கங்கள், யுத்தத்தில் நாம் அனுபவித்த வாழ்க்கையின் வலிகள் பற்றி கவிதைகள் பேசும். யுத்தத்தின் பின்னர் அதனோடு தொடர்புபட்டதான பல்வேறு தாக்கங்களிற்கு மக்கள் உள்ளாகிறார்கள். சமூகச் சீரழிவுகள், பாலியல் சீரழிவுகள், கலாச்சாரச் சீரழிவுகள் வன்முறைகள் என பலவற்றை நாம் கேட்கின்றோம். யுத்தகாலத்தில் இல்லாதனவாக இவை காணப்படுகின்றன. அவையுத்தத்தின் விளைவோடு தொடர்புபட்டு வந்தவை. இவைகளைப் பாடுபொருளாகக் கொண்டு கவிதைகள் தொடர்ந்து பேசும் என நினைக்கிறேன். வேறு விடையங்களும் கவிதைகளில் பேசப்படும் என நினைக்கிறேன். வேறு விடையங்கள் எனில் வாழ்க்கை பற்றிய தரிசனங்கள் பார்வவைகள் விருத்தியாக வேண்டிய சூழல் இருக்கிறது. இனி எழுதுகிறவர்களின் சிந்தனையைச் சார்ந்ததாக அவை அமையும் என நினைக்கிறேன்.

‘கவிதைகள் புரிவதில்லை’ என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?

கவிதையைப் புரிந்துகொள்வது என்பதை நான் எப்படி கருதுகிறேன் என்றால் படைப்பாளன் எத்தகைய உட்தாக்கத்திற்கு உட்பட்டதன் விளைவாக அந்தக் கவிதையைப் படைத்திருப்பான் என்ற அனுபவத்துடனான புரிதலோடு அந்தக் கவிதையை நாம் விளங்க எத்தணிக்கவேண்டும். குறிப்பாக பாருங்கள் நகுலனுடைய ஒரு கவிதை “என்னுடையதென்று ஏதுமில்லை நான் உட்பட” அந்தக் கவிதை புரியவில்லை என்கிற சிந்தனை எங்கே நிற்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும். கவிதை புரியவிலை என்று கூறுவதைவிட முதலில் புரிந்துகொள்ளுதல் என்றால் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். பா.அகிலன் சொல்லுவார் “கவிதையை விளங்கிக்கொள்வது என்பது பதவுரை கொள்வது அல்ல” என்று கவிதைக்கு ஒரு சொல்லைச் சொல்லி விளங்க வைப்பது அல்ல கவிதை. கவிதை ஒரு அனுபவம். என்னைப் பொறுத்தவரை கவிதையை விளங்கப்படுத்துவது என்பதே ஒரு பாவனைதான். ஓர் அனுபவத்தை முடிந்தவரை சொல்லிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்ற ஒரு எத்தனம்தான் கவிதை. இதைப் புரிந்துகொள்வது என்பது இன்னொருவர் பெறுகின்ற அனுபவம். பொதுவாக ஒருவருடைய கவிதையை வாசிக்கின்றபோது அவா; எதைக் கூறவந்தார் என்பதை நான் விளங்கிக்கொள்கின்றபோதே அதை அவர் கண்டு கொள்கின்றார். அவரும் நானும் அந்த உணர்வைப் பகிர்ந்துகொள்கின்றோம். இவ்வாறு கவிதைகளை வாசிக்கின்றபோது அதைப்புரிந்துகொள்வது என்னவென்றால் அதன் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது. ஏந்த நிலையில் இருந்துகொண்டு அவர் சொன்னாரோ அதை அடையாளம் காணும்போதுதான் அந்தப் புரிதல் நிலவும். “அன்பிலார் எல்லாம் தமக்குரியா” என்பதை வைத்துக்கொண்டு நாள் முழுக்கக் கதைக்கலாம். அது திருக்குறளின் பதவுரை அல்ல. அது வள்ளுவன் சொல்லிய அனுபவம் பற்றிய என்னுடைய அனுபவ வெளிப்பாடு.

பொதுவாக படைப்பாளியின் அனுபவத்தைத்தான் வாசகனும் பெறவேண்டும் என்று கூறப்படுகின்ற கருத்துப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?

படைப்பாளியின் அனுபவத்தை அச்சொட்டாக வாசகன் பெறமுடியாது. ஆனால் அதை அண்மிக்கமுடியும். அல்லாவிடின் அதை ஒத்த வேறு ஒரு அனுபவத்தைப் பெற முடியும். ஏனக்கு அந்த அனுபவம் வந்திருக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் ஒரு கவிதையைச் சொல்லியிருப்பேன் படிப்பவர் வேறு ஒரு நிலையில் இருந்துகொண்டு அதைப் புரிந்திருப்பார். என்னைவிட அவரது விளக்கம் நன்றாக இருக்கும். கவிதைக்கு பல்பரிமானத் தன்மை இருக்கிறது என்று கூறுவார்கள். பல்பரிமானத் தன்மைகொண்ட கவிதைகளின் புரிதல் என்பது அப்படிப்பட்டதுதான். அது ஒரு கோணத்தில் மட்டும் புரிந்துகொள்வதல்ல. மிகச்சிறந்த ஆழமான கவிதை பல்பரிமானத் தன்மையுடையதாக இருக்கும் என்பதுதான் உண்மை.

யுத்தம் முடிந்தபின் சில மூத்த எழுத்தாளர்கள் கூறிக்கொள்கிறார்கள் ‘போர்க்கால இலக்கியங்கள் தோற்றுப்போய்விட்டன’ என்று இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இலக்கியங்கள் தோற்பது, இலக்கியங்கள் வெற்றிபெறுவது என்பது குறிப்பிட்ட ஒரு வரைவிலக்கணத்துக்குள் அமைவதா என்பது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. போர்க்கால அனுபவங்கள், அதன் வலிகள், துன்பங்கள் என்பவை எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன உண்மையானவை. போர்க்கால இலக்கியங்கள் தோற்றுப்போய்விட்டன என்று ஏகோபித்த முறையில் கூறிவிடுவது முற்றுமுடிவான விடையமாக இருக்க முடியாது. இலக்கியத்தின் வெற்றியை ஒரு நூலாக அல்லது படைப்பாக வைத்துப்பார்ப்பது அந்த இலக்கியத்தின் தன்மையைப் பொறுத்தது. போர்க்கால இலக்கியங்கள் என்று ஒரு வட்டத்துக்குள் எல்லா இலக்கியங்களையும் கொண்டுவந்துவிட்டு அவை தோற்றுப்போய்விட்டன என்று கூறுவது சட்டம்பித்தனமானது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போரின் வெற்றி பற்றிப் பாடிய இலக்கியங்களின் நிலை?

போரின் வெற்றி பற்றிப் பாடினார்கள். வெல்லவேண்டும் என்று பாடினாH;கள், வென்றதைப் பாடினார்கள், போர் ஒரு வாழ்வைக் கொண்டு வரும் என்று பாடினார்கள் அந்தக் கனவு சிதைந்துபோய்விட்டது. அந்தக் கற்பனைகளும் எதிர்பார்ப்புக்களும் நிகழாது போய்விட்டது. அதை எப்படி இலக்கியத்தின் தோல்வியாக பார்ப்பது? இலக்கியப் படைப்பாக அவை தம்முடைய நிலையில் நின்றுகொண்டிருக்கின்றன. இலக்கியம் தோற்றுவிட்டது என்று கூறுவதாயின் இலக்கியம் வெல்வது என்றால் என்ன? ஒரு படைப்பாளி அந்தக்காலத்தில் அனுபவித்ததும் கண்ட கனவுகளும் வாழ்ந்ததும் தோற்றுவிட்டதாக அH;த்தமில்லை.

இந்தியக் கவிஞர் ஒருவர், ஈழத்துக் கவிதைகளை ‘தீபாவளித்தின்பண்டங்கள்’ என்று கூறியதாக அறிந்திருந்தோம். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

மென்போக்காகக் கருத்துக் கூறுபவா;களை நான் கணக்கில் எடுப்பதில்லை. இந்தியக் கவிஞர்களில் ஈழத்துக் கவிதைபற்றி புரிதல் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை தூர தள்ளிநின்று ஐந்தாம் வகுப்பு மாணவனின் கருத்தை உயர்தரமாணவன் விமார்சிப்பபோல கதைத்துவிட்டுப்போகிறவர்களும் இருக்கிறார்கள். அன்றிலிருந்து சிறந்த கவிதைகளை முன்வைக்கும் ஈழத்துக் கவிஞர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆதலால் இத்தகையவர்களின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

உங்களுடைய மொழிபெயா;ப்பு முயற்சிகள் பற்றிக் கூறுங்களேன்?

நான் ஆங்கில ஆசிரியன். தமிழ் ஈடுபாடு என்னை ஆங்கிலத்துக்குள்ளும் ஈடுபடுத்தியது. எனக்கு கற்பித்த ஆங்கில ஆசிரியர் மிஸ்ரர் றஹீம். மன்னாரைச் சேர்ந்தவர். அவர் காலமாகிவிட்டார். அவர்தான் எனக்கு ஆங்கில இலக்கியத்தின் ருசியைக் காட்டியவர். மனதை நெகிழ்த்தும் ஒருகவிதையை அவர் சொல்லும்போது கண்கள் கசியும். ஆங்கிலத்தில் படிக்கவேண்டும் என்ற ஆசையை அவர்தான் எனக்கு ஊட்டினார். அதனுடைய தொடர்ச்சியாக ஒருகட்டத்தில் கவிதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். நான் மொழிபெயர்த்து வெற்றிகரமாக அமைந்தது ஆன்ரணசிங்கவின் பிளீற்மேபி. மொழிபெயர்ப்பு பலசந்தர்ப்பங்களில் எனக்கு சந்தோசத்தைத் தருகிறது. அதேவேளை சிலசமயங்களில் சவாலாகவும் அமைந்துள்ளது. கவிதைகள் தவிர சிறுகதைகளும் மொழிபெயர்த்துள்ளேன்.

கவிதை மொழிபெயர்ப்பிற்கும் சிறுகதை மொழிபெயர்ப்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடு?

கவிதை மொழிபெயர்ப்பு கொஞ்சம் சிரமமான காரியம். கவிதையின் உள்ளிட்டைப் புரிந்துகொண்டு கவிஞன் எதைச் சொல்லவந்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டு அவரது கருத்து சிதையாவண்ணம் ஒரு மொழிபெயர்ப்பைக் கொடுப்பதற்கு ஒரு உள்ளார்ந்த உழைப்பு தேவைப்படுகிறது. சிறுகதைக்கும் உள்ளரர்ந்த உழைப்பு தேவைப்படினும் அது பரந்த தளத்தில் அமைவதால் அதற்கு ஒரு அடிப்படையான மொழிபுரிதல் இருந்தால் போதும். அதைப் படைப்பாற்றலாகக் கொண்டுவரும்போது உயிர்த்துவம் கெடாமல் எழுதுவது சொந்த மொழியின் படைப்பாற்றலைப்பொறுத்தது.

சிறுகதையின் அண்மைக்காலப்போக்கில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது அந்த மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ?

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்று கூறுவார்கள். மாற்றங்கள் வரவேற்கக்கூடியது. நாங்கள் பழகிப்;போன தடத்திலேயே இருக்கவேண்டும் என்பதில்லை. இலக்கியம் அப்படி இருப்பதுமில்லை. நாம் ஆரம்பததில் படித்த கவிதைக்கும் தற்போதுள்ள கவிதைக்குமிடையில் மாற்றம் இருக்கிறது. அதுபோல சிறுகதையிலும் மாற்றம்வர சாத்தியம் இருக்கிறது. அதேநேரத்தில் புதிதாக வருகின்ற பின்நவீனத்துவத்தின் பெயரால் வருகின்ற எழுத்துக்கள் பற்றி விமர்சனங்களும் உண்டு வரவேற்புக்களும் உண்டு. ஒருவர் தனது மொழியில் தனக்கு கைவருகிற முறையினை ஒரு படைப்பிற்கு பயன்படுத்த முடியும் நவீன போக்கில் ஈடுபாடு காட்டும் ஒருவர் அந்த முறையில் சிறுகதையை ,கவிதையைப் படைத்துக்கொள்வதில் தவறில்லை. வரவேற்கப்படவேண்டியது. அதில் ஈடுபட முடியாதவர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஒன்றைக் கூறலாம் புதிதாக வருகின்ற போக்கு வில்லங்கத்திற்கு வருமாயின் அது யோசிக்கப்படவேண்டியதுதான். சிலர் பாண்டித்துவத்தைக் காட்டுவதற்காக புதுமை எனும் பெயரில் செய்யும்போது கொஞ்சம் யோசிக்கவேண்டித்தான் இருக்கிறது. நான் நவீனத்துவத்தில் முயற்சிக்கவில்லை. என்னைப்பொறுத்தவரை பழகிப்போன முறையிலேயே அழகாகக் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஈழத்தில் படைப்புக்களின் தரத்திற்கு ஏற்ற விமா;சனம் இருக்Pறதா? படைப்பாளிகளை வெறுமனே தடவிக்கொடுப்பது போல பலரின் விமா;சனங்கள் இருப்பதாக உணரமுடிகிறதே?

விமர்சனங்கள் வெறுமனே தடவிக்கொடுப்பதாகவும் இருக்கக்கூடாது.அதேவேளை ஒரேயடியாக அடித்து விழுத்துவதுபோலவும் இருக்கக்கூடாது. விமர்சனம் என்பது ஒரு படைப்பு என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு படைப்புப் பற்றிய இன்னொரு படைப்பாகத்தான் விமர்சனம் என்பது இருக்கும். நான் விமா;சனம் என்று ரசித்துப் படித்தபல விடையங்கள் இன்னொரு இலக்கியமாகத்தான் எனக்குப் பட்டிருக்கிறது. சில கவிதைகள் பற்றி விக்கிரமாதித்தியனின் கட்டுரைகள் படித்திருக்கிறேன். அவருடைய விமா;சனம் கவிதையில் காணப்படும் உச்சமான சிறப்புக்களை அழகாகச் சொல்லும். அதில் வரும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இவற்றைத் தவிர்த்தால் மிகச்சிறப்பாக இருக்கும் என முடிப்பார். அது ஒரு விதமான வகை என்று நினைக்கிறேன். அதேவேளை ஒரு படைப்பை விமர்சிப்பவர் ஒரேயடியாககப் புகழ்கிறார் என்றால் அது எழுதிய விதத்திலேயே விளங்கும் அது விமர்சனமா? புகழச்சியா? என்று. விமா;சனம் தேவையானது. ஆனால் நேர்மையானதாக இருக்கவேண்டும். காய்தல் உவத்தலற்று இலக்கியத்தின் மீதான விமர்சனமாக அமையவேண்டும். விமா;சனங்களைக் கண்டு ஒதுங்கிப்போய்விடவேண்டியதில்லை. எழுதுவதற்கு எழுத்;தாளனுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை வாசகன் விமா;சிப்பதற்கும் இருக்கிறது. வாசகன் ஒரு படைப்புப் பற்றிய தாக்கத்தை விதந்துரைக்கவும் முடியும் கண்டிக்கவும் முடியும்.

(இவ் நேர்காணல் “இருக்கிறம்“ இதழுக்காகச் செய்யப்பட்டது. அவ்விதழில் -22.08.2011- இதன் சுருக்கமான வடிவமே பிரசுரிக்கப்பட்டிருப்பதால் முழுமையான வடிவம் இங்கு பகிரப்படுகிறது)

கடல்வெளி

21 ஆகஸ்ட், 2011



தீரா அலையெழுப்புகிறது கடல்வெளி

சாத்தானும் கடவுளும்
அறியாத் தொலைவில் செல்கிறது
திசையற்றவர்களின் படகு

கடவுளே சாத்தானாகவும்
சாத்தானே கடவுளாகவும்
உருமாறிய தருணங்களை
அலையுமிழும் கடல்
அறிந்திருக்க நியாயமில்லை

தன் மடிநிறைந்திருக்கும்
குழந்தைகளை அது
அழைத்திருக்கவுமில்லை

அறியா முகங்ளை
அறியா தரையை
சென்றடையும் ஒரு நாளில்
அது தன் வயிற்றிலிருந்து
உதிர்க்கக் கூடும்
எண்ணற்ற பிணங்களை

சாத்தானோ கடவுளோ
கடலைத்தான் நம்பியிருக்கின்றனர்

கடலே சாத்தான்
கடலே கடவுள்

கடவுளும் சாத்தானும் உறங்கிய பின்னர்
கடலே காவு கொள்கிறது
கைவிடப்பட்டவர்களை

கடவுளோ சாத்தானோ
இல்லா பிரபஞ்ச வெளியை
கடல் வெளியே உட்கொள்ளும்

கவனம்
கடவுளும் சாத்தானும்
சபிக்கப்பட்டவர்களும்

மறுபாதி-கவிதைக்கான காலாண்டிதழ்

19 ஆகஸ்ட், 2011

தாமதமும் சில விளக்கங்களும்

சித்தாந்தன்

‘மறுபாதி’-கவிதைக்கான காலாண்டிதழ்- இது வரை ஐந்து இதழ்கள் வெளிவந்துள்ளன.ஐந்தாவது இதழ் ஆண்டுச் சிறப்பிதழாக கொண்டுவந்திருந்தோம்.

ஒரு இதழைத் தொடர்ந்து வெளிக் கொண்டுவருவதிலுள்ள அனைத்து நெருக்கடிகளையும் சந்தித்தோம். முதல் இரு இதழ்களிலும் இருந்த நிதி ரீதியிலான நெருக்கடியை மூன்றாவது இதழில் கடந்தோம். தொடர்ச்சியாக இதழைக் கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஐந்தாவது இதழ் வேலை நடந்து கொண்டிருந்த போது நாம் பதிப்புச் செய்யும் அச்சகம் மூடப்பட்டது. இதனால் இதழை கொண்டுவருவதில் தாமதங்களைச் சந்தித்த போதும் அதனை வெளிக்கொணர்ந்தோம்.

‘மறுபாதி’யை நாம் கொண்டு வருவதற்கான பிரதான நோக்கம் நவீன கவிதை சார்ந்த உரையாடலை வரிந்த தளத்தில் நிகழ்த்த வேண்டும் என்பதே. ஆயினும் அது முழுமையான அளவுக்கு சாத்தியமில்லாது போய்விட்டது. நேரிலே கவிதைகள் சம்மந்தமாகவும் இதழ் சம்மந்தமாகவும் விமர்சனம் செய்பவர்கள் அதனை எழுத்துவடிவாகத் தருவதில் பின்னடித்தார்கள். மூத்த படைப்பாளிகளில் பலரும் குறைகளைச் சொல்பவர்களாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்து இதழில் பங்களிக்க மறுத்தனர். இந்தப் பின்னணியில் எம்மால் முடிந்த அளவுக்கு முயற்சித்து படைப்புக்களைத் திரட்டி இதழ்களைக் கொண்டுவந்தோம். பல படைப்பாளிகள் படைப்புக்களைத் தருவதாக கூறி காலங்கடத்தினார்கள். அவர்களுக்குத் தொலைபேசி எடுத்த பணமும் செலவிட்ட நேரமும் இன்னொரு இதழைக் கொண்டுவருவதற்குப் போதுமானதாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். ஐந்தாவது இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கின்றது. பல படைப்பாளிகளுடன் தொடர்பு கொண்டு மொழி பெயர்ப்புக் கவிதைகளையும் மொழி பெயர்ப்பு சம்மந்தமான கட்டுரைகளையும் பெற்றோம். பலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். சிலரிடம் படைப்புக்களுக்காக காத்திருக்க வேண்டியுமிருந்தது. ஆயினும் அவர்களின் பங்களிப்பு எமக்குப் பெரிதும் உதவியது.

உண்மையில் ‘மறுபாதி’யை கொண்டுவருவதில் எமக்கு எந்தவகையிலும் நிதிரீதியான பிரச்சினை இப்பொழுது இல்லை. படைப்புக்கள்தான் பிரச்சினையாக இருக்கின்றது. ஈழத்திலிருந்து வருகின்ற பிற இதழ்களைப் போல எம்மாலும் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியும். ஆனால் நாம் இதழின் காத்திரத்தையே முதன்மைப்படுத்துகின்றோம். கவிதை பற்றிய உரையாடலை ஓரளவுக்கேனும் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றோம். கவிதை எழுதும் அல்லது கவிதைசார்ந்த படைப்புக்களை எழுதும் அனைத்துப்; படைப்பாளிகளுக்கும் அவர்களின் படைப்பு வெளிவந்த இதழ்களை இலவசமாகவே அனுப்பி வருகின்றோம். இதனை அடிப்படை அறமாக நாங்கள் கருதுகின்றோம். உண்மையில் மறுபாதியின் விலை 30.00 ரூபாய் மட்டுமே ஆனால் இதழை பிற இடங்களுக்கு அனுப்பும் போது இதழின் விலையிலும் அதிகமான செலவுக்கே அனுப்புகின்றோம். ஆனால் இங்கிருந்து வெளிவரும் இதழ்கள் சில படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக கொடுப்பதில்லை. படைப்பையும் கொடுத்து படைப்பு வெளிவந்த இதழையும் பணத்துக்கே வாங்கி படிக்க வேண்டிய நிலைதானிருக்கின்றது. ஒரு படைப்பாளி படைப்பை எழுதுவதற்கும் அதனை சஞ்சிகைகளுக்கு அனுப்புவதற்கும் ஏற்படும் செலவை சஞ்சிகைகள் நடத்துவோர் சிலர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. பல படைப்பாளிகள் எம்மோடு இது பற்றிக் கதைத்துக் குறைப்பட்டிருக்கின்றார்கள். நண்பர் யேசுராசா அவர்கள் ‘தெரிதல்’ என்ற இதழை நடத்திய போது அதில் எழுதுவோருக்கு பிரதியை இலவசமாக வழங்கியதோடு ஒரு தொகைப் பணத்தினையும் கொடுத்திருந்தார். இது எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது. ஆதலால் பணம் எங்களால் கொடுக்க முடியாதவிடத்தும் படைப்பாளிகளுக்குரிய இதழ்களை இலவசமாக அனுப்பினோம்.

மறுபாதியின் சிறப்பிதழ் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது. நண்பர்கள் பலரும் இதழின் தாமதம் பற்றிக் கேட்கின்றார்கள். அதற்கான பிரதான காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று படைப்புக்கள்தான். இங்கிருந்து எழுதுகின்ற கவிஞர்களில் சிலர் இங்கிருந்து வெளிவரும் இதழ்களுக்கு படைப்புக்களை அனுப்புவதில்லை. தமிழக, புலம் பெயர் சஞ்சிகைகளில் இவர்கள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கின்றார். அவர்களிடம் மீளமீளத் தொடர்புகொண்டு கேட்க வேண்டிய நிலையே இருக்கின்றது. அவர்கள் பங்களிக்காமைக்கான காரணம் என்ன என்பது புரியாமலிருக்கின்றது. உண்மையில் தாங்கள் வாழும் நிலத்திலிருந்து வெளிவரும் இதழ்களின் தொடர்ச்சியான வருகைக்கு பங்களிப்பது என்பது தார்மீகமானது என நினைக்கின்றேன். தம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தம்மோடு வாழும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானது. ஆனால் பலரும் தமிழ்நாட்டு, புலம் பெயர் சஞ்சிகைகளுக்கு மட்டும் தொடர்ச்சியாக படைப்பை அனுப்பித் தங்களுக்கான அங்கிகாரத்தை அல்லது பிரபல்யத்தை தேட முனைகின்றனர் என்று நம் நண்பர்கள் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லாமலில்லை போலத்தான் தோன்றுகின்றது. கருத்துநிலை சார்ந்து மாறுபாடுகள் இருப்பின் அதை தெரிவிப்பதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் எந்தக் காரணங்களையும் சொல்லாது இவ்வாறு புறக்கணிப்பது வேதனைக்குரியதே.

ஐந்து இதழ்கள் வரையிலும் மீள மீள நினைப்பு+ட்டித்தான் பலரிடம் படைப்புக்களைப் பெற முடிந்தது. இந்த நிலையை தொடர்ந்து பின்பற்ற முடியுமா? ஒருவருக்கு எத்தனை முறை தொலைபேசி எடுப்பது,மின்னஞ்சல் அனுப்புவது. இவ்வாறு தொலைபேசி எடுப்பதை,மின்னஞ்சல் அனுப்புவதை அவர்கள் பெருமையாகக் கருதுகிறார்களோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் மனநெருக்கடிக்குள்ளாகின்றோம். தொடர்ச்சியாக இதனைப் பேணமுடியாது. இந்த நிலையைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு, புலம்பெயர் சஞ்சிகைகளுக்கு படைப்புக்கள் அனுப்புவதில்லை பிரச்சினை அதே போல் இங்கிருந்து வரும் இதழ்களுக்கும் பங்களிக்க வேண்டும் என்பதையே நாங்கள் சொல்ல வருகின்றோம்.

ஈழத்தில் சிற்றிதழ்களின் வருகையும் தொடர்ச்சியும் மிகக் குறைவான நிலையிலேயே இருக்கின்றது. வாரப் பத்திரிகைளில் வரும் துணுக்குகளைக் கவிதையாகக் கொண்டாடும் நிலையொன்று திரும்பவும் தலையெடுக்கின்றது. எனவே கவிதைக்கான இதழின் தேவை இன்னும் இருப்பதாகவே தோன்றுகின்றது. அதற்கு கவிஞர்கள் படைப்பாளிகளின் ஆதரவு மிக அவசியமானது.

0



ஆளற்றுத் தொங்கும் சிலுவை

15 ஆகஸ்ட், 2011

சித்தாந்தன்

பௌர்னமிக்கு அடுத்தநாள்
தேவாலயத்தின் சிலுவை
வெறுமையாகத் தொங்கிக்கொண்டிருந்தது

கர்த்தரைக் காணவில்லை

எல்லோரும் கதறியழுதவாறிருந்தார்கள்
பங்குத் தந்தை தேவகீதங்களைக் கூவியவாறு
கடவுளை அழைத்தபடியிருந்தார்.

முழந்தாளிட்ட பெண்கள்
மரியைப் போலவே கதறியழுதனர்

முதிய பெண்கள் தேவாலய வாசலில்
குந்தியிருந்து ஓப்பாரி சொல்லினர்

ஆண்கள் கூடி
துயரத்தை சொல்லி முறையிட இருந்த ஒருவரும்
தொலைந்து போய்விட்டார் என பேசிக்கொண்டிருந்தனர்

நடந்தது யாதென யாவரும் குழம்பிக் கிடக்கையில்
ஒரு சிறுவன்தான்
உரத்துச் சொன்னான்
நள்ளிரவில் வௌ்ளைவானின் உறுமல் கேட்டதாய்


சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்