
செவிகளின் கூர்மை மங்கத்தொடங்கிய பிறகு
நீ கூவியழைக்கத் தொடங்கினாய்
இளஞ்சிவப்பு மலர்ச் செடிகளில்
கள்ளிமுட்கள் மலருகையில்
அதை அற்புதமென பறைசாற்றினாய்
இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலாவிலிருந்து வடிகிறது ஒளியாய்
மமதையில் முறுக்கேறிய உனது சொற்களை
நகைத்திடமுடியாமலும்
புறங்கையால் விலக்கிடமுடியாமலும்
மணிக்கட்டின் கடிகாரம் மவுனமாய்க் கரைகிறது
எதையெதைச் சொல்லி உரித்தெறிய கணங்களை
அம்மணமாய் அலையும் சிறுவனின்
சலனமற்ற முகத்தை
பல தடவையும் பொருத்த வேண்டியிருக்கின்றது
எறும்புகளின் இரையாய்
என் சரீரத்தைத் தின்று மெல்லும்
இந்த யுகம் போகட்டும்
வேறென்ன
தோழமையின் நித்தியத்தை
பாசாங்காய் அறிவிக்கும் காலைகளின் ஆரவாரத்தை
‘சூ’ வெனத் துரத்தவியலாது
உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்கள்
0 comments:
கருத்துரையிடுக